சவாலுக்கு சவால்
வாழ்க்கையில் போராட்டம் என்பது
தவிர்க்க முடியாதது. நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற போராட்டங்கள் நம்மைத் தேவனோடு
இன்னும் ஐக்கியப்படவும், நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவுமே தேவன்
அனுமதிக்கிறார். ஆனால் போராட்டமான சூழ்நிலையில் நாம் சோர்ந்து போகிறோம், கலங்குகிறோம். என்ன செய்வது என்று
தெரியாமல் கவலைப்படுகிறோம்.
நம்முடைய வாழ்வில் போராட்டங்களை
அனுமதிக்கிற தேவன் நம்மைத் தனியாக விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறவர் அல்ல, அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்
நமக்கு உதவி செய்து, நம்மை
உயர்த்துகிறவராக இருக்கிறார்.
ஆகையால் என்னுடைய வாழ்க்கையில்
நான் மிகுந்த போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே, என்று கலக்கத்துடன் இருக்கும் தேவ
பிள்ளைகளுக்கு “உன்னோடே
போராடினவர்களைத்தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல்
இல்பொருளாவார்கள் (ஏசாயா 41:12) என்று இந்த மாதத்தில் கர்த்தர் வாக்குத்தத்ததைக்
கொடுக்கிறார்.
சத்துருவானவன் பல விதங்களில்
நம்க்கு எதிராகப் போராட்டங்களைக் கொண்டு வருகிறான். இதல் பல வேளைகளில் மனிதர்களையே
பயன் படுத்தி நம்க்கு எதிராகச் செயல்பட முயற்சிக்கிறான். அப்படிப்பட்ட வேளையில்
நாம் சத்துருவின் தந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
நம்மைச் சோர்வடையச் செய்யவும், செயல்படாமல் தடுக்கவும்
சத்துருவானவன் நமக்கு எதிராகச் செயல்படும் வேளையில் நாம் அவனுடைய தந்திரங்களை
அறிந்து, தேவனைச் சார்ந்து கொள்ள
வேண்டும். நாம் தேவனைச் சார்ந்து கொள்ளும் போது கர்த்தர் நாம் எவ்விதம் நடந்து
கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தந்து சத்துரு கொண்டுவருகிற போராட்டங்களை முறிய
அடிக்கப் பெலன் கொடுக்கிறார்.
“என் சத்துரு என்மேல்
ஜெயங்கொள்ளாததினால், நீர்
என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்’’ (சங் 41:11) நமக்கு எதிராக வரும் சத்துரு நம்மை ஜெயிக்க
முடியாதபடிக்கு, தோற்றுப்போகிறான், ஏன் என்றால் கர்த்தர் நம்மேல்
பிரியமாக இருந்து நம்மை எல்லாப் போராட்டங்களிலும் ஜெயிக்க வைக்கிறார்.
அப்படியானால் நம்முடைய வாழ்க்கை தேவனுக்குப்
பிரியமானதாக இருக்க வேண்டும். நாம் தேவனுக்குப் பிரியமாக வாழும் பொழுது,சத்துரு கொண்டு வருகிற எந்தப்
போராட்டத்தையும் எளிதாக நம்மால் மேற்கொள்ள முடியும். நமக்கு எதிராகப் போரிட்ட
சத்துருவை நாம் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குச் சத்துருவை இருந்த இடம்
தெரியாமல் கர்த்தர் நம்முடைய எல்லையை விட்டு அகற்றி விடுகிறார்.
நமக்குப் போராட்டங்கள் வரும் போது
நாம் சோர்ந்து போய் “ஐயோ, ஏன் என்னுடைய வாழ்க்கையில்
போராட்டம் வந்தது,? தேவன் ஏன் இதை அனுமதித்தார்,’’ ?என்று கலங்கி நிற்க
வேண்டாம், தேவன் என்மேல் பிரியமாக
இல்லையோ,! ஆகையால்தான் எனக்கு எதிராகப்
போராட்டம் வந்ததோ என்று பயப்படவும் வேண்டாம், நமக்கு எதிராகப் போராட்டம் வரும் போது, போராட்டத்தில் ஆண்டவர் நம்மோடு
கூட இருந்து போராட்டத்தில் நமக்கு ஜெயத்தைக் கொடுத்து, கர்த்தர் நம்மேல் பிரியமாக
இருக்கிறார் என்பதை அநேகர் காண விளங்கப்பண்ணுகிறார்.
போராடியவர்கள் காணாமல் போவார்கள்
எஸ்தரின் சரித்திரப்புத்தகத்தில், மொர்தெகாய்க்கு எதிராக எழும்பி, அவனையும் அவனோடு தேவனுடைய
மக்களையும். அழித்து விட வேண்டும் என்று செயல்பட்ட ஆமானைக்குறித்து வாசிக்கிறோம். “ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி
நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.
ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது
அவனுக்கு அற்பக்காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு
அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய
யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்’’ (எஸ்தர் 3:5,6)
ஒன்றுமில்லாத விசயங்களுக்கும்
நமக்கு எதிராகப் பிசாசானவன் எப்படிப்பட்ட போராட்டங்களைக்கொண்டு வருவான்
என்பதைத்தான் இந்தப் பகுதி நமக்குக் காண்பிக்கிறது.
வேலை செய்கிற இடங்களில், வீடுகளில் நம்முடைய வளர்ச்சியைக்
கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையில் பொங்கி எழுகிறவர்கள், எந்த வகையிலாவது
நம்முடைய வளர்ச்சியைத் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல விதங்களிலும் நமக்கு
எதிராக எழும்பி போராடலாம்.
ஆனால் அன்றைக்கு மொர்தெகாய்க்கு
எதிராக எழும்பி, அவனை
எப்படியாகிலும் அழித்து விட வேண்டும் என்று தீர்மானித்துத் தந்திரமான வேலைகளைச்
செய்து அவனுக்காகத் தூக்கு மரத்தை தயார் செய்த ஆமானின் தந்திரங்கள்
முறியடிக்கப்பட்டு, “அப்பொழுது
ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின
மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின்
வீட்டண்டையில் நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு
ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம்
தணிந்தது’’
(எஸ்தர்
7:10) அவன் செய்த தூக்கு மரத்திலேயே அவன் தூக்கிப்போடப்பட்டான்.
பிரியமானவர்களே, என்றைக்குமே துஷ்ட ஆமான்
ஜெயிக்கவே முடியாது. ஒருவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான். இதுதான் தேவனின் நியதி. துஷ்ட ஆமானின் தந்திரங்களை
முறியடித்து அவனால் செய்யப்பட்ட தூக்கு மரத்திலேயே அவன் தூக்கப்பட்டான் என்று
வேதம் சொல்லுகிறது.
அது போல இன்றைக்கும் தேவ
பிள்ளைகளுக்கு விரோதமாகப் பொல்லாப்பை பிணைத்து, பொய்களை ஜோடித்து அழித்து விட வேண்டும் என்று
தீர்மானிக்கிறவர்களின் செயல்களின் முடிவு, அந்த ஆமானுக்கு நடந்ததைப்போல்தான் இருக்கும்.
தனக்கு இணங்க வில்லை என்ற ஒரே
காரணத்திற்காக மொர்தெகாயை பகைத்து, தன்னுடைய பலத்தைத் திரட்டி, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, குதர்க்கமான ஆலோசனைகளைச் செய்து, தன்னை மிகவும் பெரியவனாகக்
காண்பித்து அழித்து விடத் தீர்மானித்த ஆமான் ராஜாவுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டு, ராஜாவின் உத்தரவால் தூக்கில்
போடப்பட்டான்.
நீதிக்கு எதிராக எழும்பி, தேவ பிள்ளைகளுக்கு எதிராகப்
போராடுகிறவர்களின் முடிவு இப்படிதான் இருக்கும் என்பதைத் திருஷ்டாந்தப்படுத்திக்
காண்பிக்கவே இந்த வேதப்பகுதி எழுதப்பட்டிருக்கிறது. எனவே தேவ பிள்ளைகளுக்கு
எதிராகச் சத்துருவின் எந்தச் சூழ்ச்சிகளும் பலிக்காது. அவைகள் ஒன்றுக்கும் உதவாது.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நன்மை செய்தும், உங்களுக்கு எதிராகச் சிலர் எழும்பி, உங்களை வேதனைப்படுத்தும்
விதத்தில் பேசி, அவதூறு
செய்து வரலாம். கலங்காதிருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். எப்படி
ஆமான் இருந்த இடம் தெரியால் போனானோ, அது போல உங்களுக்கு எதிராக எழும்பின சத்துருக்களையும்
கர்த்தர் இருந்த இடம் தெரியாமல் போகச் செய்வார். இந்த மாதத்திலே கர்த்தர் நமக்குக்
கொடுத்திருக்கும் வாக்குத்தத்ததின் படி “உன்னோடே போராடின சத்துருக்களைத் தேடியும் காண மாட்டீர்கள்’’.
எப்படி ஒருவரும் அறியப்படாத
இடத்தில் இருந்த மொர்தெகாயை, விடுவித்து, அவனுக்கு ஏற்பட்ட ஆபத்தில் இருந்து பாதுகாத்து, எல்லாக் கண்களும் காண உயர்த்திக்
காண்பித்த தேவன் இன்றும் உங்களை உயர்த்த வல்லவராக இருக்கிறார்.
கடந்த நாட்களில் உங்களுக்கு நடந்த அவமானங்களும், வேதனையான சம்பவங்களும், உங்களை உயர்த்தி, உங்களுக்கு எதிராக எழும்பின
ஆமான்களைத் தாழ்த்துவதற்காகதான் என்பதை இந்தச் செய்தியின் மூலமாகக் கர்த்தர்
தம்முடைய வார்த்தையின் மூலம் திட்டமாகப் பேசுகிறார்..
இதுவரை உங்களோடு
போராடிக்கொண்டிருந்தவர்களை நீங்கள் தேடிப்பார்த்தாலும் காணமுடியாதபடிக்கு கர்த்தர்
விலக்கி விட்டார். “கர்த்தர்
உன் ஆக்கினைகளை அகற்றி, உன்
சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனி தீங்கைக் காணாதிருப்பாய்’’ (செப் 3:15) என்ற
வார்த்தையின்படியாக உங்களுக்கு எதிராகப் போரிட்டு வந்த சத்துருவை விலக்கி
விட்டார். கர்த்தர் உங்கள் நடுவில் வந்து விட்டார் நீங்கள் இனி தீங்கை காணப்போவது
இல்லை.
தேவனுக்கு நன்றி சொல்லி
கர்த்தரைத் துதியுங்கள். தேவனுடைய கிருபை இல்லா விட்டால் நம்முடைய சத்துரு
என்றைக்கோ நம்மை விழுங்கி இருப்பான். பொல்லாத சத்துருவின் தந்திரங்களுக்கு விலக்கி, பாதுகாத்து, நம்மை விடுவித்து நடத்திய
தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். கர்த்தர் இன்னும் நம்முடைய
வாழ்வில் பெரிய காரியங்களைச் செய்வார்.
போராடியவர்கள்
முறியடிக்கப்படுவார்கள்
“எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம்
வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல
பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்’’ (ஏசாயா 36:1).
யூதாவின் ராஜாவாகிய
எசேக்கியாவிற்கு எதிராகவும், அவன் அரசாண்ட யூதாவிற்கு எதிராகவும் அசீரியா ராஜா சனகெரிப்
தேவனுடைய மக்களுக்கு எதிராகப் போராட்டத்திற்கு வந்து, “அவனுடைய ஊழியக்காரர்
தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு
விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.
தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என்
கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத்
தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன்
நிருபங்களையும் எழுதினான்’’ (2 நாளா 32:16,17).
தேவ ஜனங்களுக்கு எதிராக வந்து
சமாதானத்தைக் கெடுக்கவும், பயத்தை ஏற்படுத்தி, அடிமைப்படுத்தும் படியாகவும் தந்திரமாகச் சனகெரிப்
பேசுகிறான்.
தேவ பிள்ளைகளுக்கு எதிராகப் போராட்டதைக்
கொண்டு வரும் சத்துரு முதலாவது பயத்தையே விதைக்கிறான். பயத்தை விதைத்துச்
சோர்வடையச் செய்யப்பார்க்கிறான். ஆனால் “நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும்
அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும்
நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.
அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய
யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா
சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்’’ (2 நாளா 32:7,8)
ஆகையால் கர்த்தர் அவர்களுக்குத்
துணையாக நின்று, எதிராக
வந்த சனகெரிப்பின் படைகளை ஒன்றுமில்லாமல் போகச்செய்தார்.
“அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை
அனுப்பினார்; அவன்
அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த்
தன்தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர்
அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்’’ (2 நாளா 32:21).
இதே சனகெரிப் பல தேசங்களுக்கு
எதிராகச் சென்று வெற்றியை பெற்ற பெருமையில்தான் தேவனுடைய மக்களுக்கு எதிராகப்
புறப்பட்டு வந்ததுமல்லாமல், மிகவும் ஏளனமாகப் பேசுகிறான்.
ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பயப்படாமலும்
கலங்காமலும் தேவனுக்கு முன்பாக “ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா
தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்’’( 2 நாளா 32:20). என்று
வேதம் கூறுகிறது.
பிரியமானவர்களே நமக்கு விரோதமாக
நம்மைப் பயமுறுத்தி, சமாதானத்தைக்
கெடுத்து, அடிமைப்படுத்த நினைக்கும்
சத்துருவின் திட்டங்கள் ஒன்றும் பலிக்காது. ஏன் என்றால் நம்மோடு இருக்கும் தேவன்
பெரியவர். தேவ பிள்ளைகளாகிய நமக்கு எதிராகப் போராட்டத்தைக் கொண்டுவருகிற சத்துரு
இருந்த இடம் தெரியாமல் போவான்.
பல தேசங்களுக்கு எதிராகச் சென்று, பயமுறுத்தி, அடிமைப்படுத்தின சனகெரிப் அதே
தைரியத்துடன் தேவ ஜனமாகிய யூதாவிற்கு விரோதமாகப் போருக்கு வந்தான் ஆனால் அவன்
இருந்த இடம் தெரியாமல் மாண்டு போனான் என்று வேதம் கூறுகிறது.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே
உங்களுக்கு எதிராக வந்து உங்கள், சமாதானத்தைக் கெடுக்கும்படியாகப் போராடிக்கொண்டிருக்கும்
சத்துருவைக்கண்டு பயப்பட வேண்டாம். உங்கள் சார்பில் நின்று கர்த்தர் உங்களுக்காகப்
போராடுவார். அப்பொழுது உங்களுக்கு எதிராகப் போராடியவர்களை நீங்கள் தேடியும்
காணமாட்டீர்கள்.
உங்களுக்குரியதை
அபகரிக்கும்படியாக, உங்களுக்குக்
கிடைக்க வேண்டிய நன்மைகளைத் தடுக்கும்படியாக, உங்களுக்குக் கிடைக்கும் உயர்வை தடுக்கும்படியாக இதுவரை
போராடிக்கொண்டிருந்த சத்துருவை கர்த்தர் முறியடிக்கிறார். இனி நீங்கள் தேடினாலும்
உங்களுக்கு எதிராகப் போராடியவர்களைக் காண முடியாது. கர்த்தர் உங்கள் எல்லையை
விட்டே துரத்தி விட்டார்.
இந்த வார்த்தைகளை விசுவாசித்து, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கும் தம்மை விசுவாசிக்கிற தம்முடைய
பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தோ, நாச மோசங்களோ அணுகாதபடிக்கு பாதுகாத்து, தம்முடைய பிள்ளைகளுக்கு எதிராகப்
போராட வரும் சத்துருக்களை இருந்த இடம் தெரியாமல் ஓட செய்வார்.
இந்த
வார்த்தையின் மூலமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக. உங்களைக்
கர்த்தருடைய நாமத்தில் ஆசீர்வதித்து உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
romba azhaga vilakkam koduthirgal,,, romba usefulla irunthichi
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு, மிக்க நன்றி.
Delete