உனக்குள்ளதை வெளிப்படுத்து..
கல்லூரி
ஆண்டு விழா துவங்குவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தன. மாணவர்கள் எல்லோரும் மிகுந்த உற்சாக வெள்ளத்தில்
மிதந்து கொண்டிருக்க, மனதில் படபடப்புடன் தான் எழுதிவைத்திருந்த கட்டுரையை மறுபடியும்
வாசித்து பார்த்து “நன்றாக எழுதி இருக்கிறேனா? இல்லை இதை நான் வாசிக்கும் போது மற்றவர்கள்
என்னைப்பார்த்து கிண்டல் செய்து சிரிப்பார்களா?’’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே
மனதிற்குள் கலவரம் மேலோங்க கரங்களில் இருக்கும் விரல்களை மடக்கி சொடுக்கிக்கொண்டிருந்தான்
ஜான்.
ஒவ்வொருவரும்
தங்கள் தங்கள் தனித்திறமைகளை காண்பிக்க வேண்டும் என்று கல்லூரி பேராசிரியர் சொல்லி
இருந்ததால் தன்னால் முடிந்த அளவு கட்டுரையை சொந்தமாக தயார் செய்து வைத்திருந்தான்.
விழா
ஆரம்பம் ஆனது ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை காண்பித்துக்கொண்டிருந்தனர். கரவொலி அரங்கத்தை
அதிரப்பண்ணியது. இதைப்பார்த்துக்கொண்டிருக்கையில் தன்னுடைய கரத்தில் இருக்கும் பேப்பரை
மறுபடியும் விரித்துப்பார்த்து விட்டு, தன்னைத்தானே நொந்து கொண்டவனாய், அவனுக்கே அவன்
மேல் வெறுப்பு இன்னும் அதிகமானது.
“எந்த
திறமையும் தன்னிடம் இல்லையே, மற்றவர்கள் பாராட்ட வேண்டாம், என்னை கிண்டல் செய்து சிரிக்காமல்
இருந்தாலே போதுமானது. கடவுளே, இவ்ளோ பேர் கூடி இருக்கிற இந்த இடத்தில் நான் அவமானப்பட்டு
விடாதபடிக்கு என்னை காப்பாற்றுங்கள்’’ என்று வேண்டிக்கொண்டான்.
இப்படி
அவன் வேண்டிக்கொண்டிருக்கும் போதே அவனுடைய
பெயர் அழைக்கப்பட படபடப்பு இன்னும் மேலோங்க வேகமாக மேடையை நோக்கி நடக்கலானான்.
தனக்கு
முன் இருக்கும் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்து, மைக் முன்னால் நின்று, தன்னுடைய
நாவுகளால் வறட்சியுடன் இருந்த தனது உதடுகளை நனைத்துக்கொண்டு, தான் எழுதிவைத்திருந்த
கட்டுரையை வாசித்து விட்டு எல்லோரையும் பார்த்தான். ஒரு சிலர் மட்டும் கரங்களை தட்ட
மற்றவர்கள் அனைவரும் அவனைப்பார்த்து சிரிப்பது போல் இருந்தது, இருந்தாலும் ஒருவழியாக
தன்னுடைய கடமை முடிந்தது என்று பெரு மூச்சு விட்டவனாய் மேடையை விட்டுக் கீழே இறங்கி
வந்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
மேலும்
சில மாணவர்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை கொடுத்தனர், விழாவும் இறுதி பகுதிக்கு வந்தது.
எல்லாக்
கண்களும் மேடையை நோக்கியே இருந்தன. சிலர் கட்டாயம் எனக்குதான் முதல் பரிசு என்று மிகவும்
நம்பிக்கையுடன் இருந்தனர்.
இப்படி
எல்லா கண்களும் பார்த்துக்கொண்டிருக்க “முதல் பரிசுபெறுபவர் முதலாமாண்டு மாணவர் ஜான்’’
என்று அறிவிப்பாளர் சொல்ல “என்ன நடக்கிறது,! நான் காண்பது கனவா? நிஜமா?’’ என்று தன்னையே
கிள்ளிப்பார்த்து, “இல்லை, இது கனவு இல்லை நிஜம்தான்’’. என்று மேடையை நோக்கி சந்தோஷத்துடன்
பரிசை பெறுவதற்கு நடக்கும் போதே, இது எப்படி நடந்தது.? எல்லோரையும் விட மிகவும் சுமாராக
இருந்தது எனது கட்டுரைதான். என்னை விட மிகவும் சிறப்பாக மற்றவர்களுடையது இருந்தது.
அரங்கமே அவர்களுக்குதான் கரகோஷத்தை கொடுத்தது, அப்படி இருக்க இது எப்படி சாத்தியமானது’’
என்று சிந்தித்தவனாக பரிசை பெற்றான்.
மற்ற
மாணவர்களும் அதிர்ச்சியை தாங்க முடியாதவர்களாய் ஏமாற்றமாக பார்த்துக்கொண்டிருக்க, நிகழ்ச்சியின்
நீதிபதி மைக் முன்பாக வந்து பேச ஆரம்பித்தார்.
“அன்பு
மாணவர்களே, உங்கள் அதிர்ச்சியை நான் நன்கு அறிவேன். முதல் பரிசு பெற்ற ஜான் கட்டுரை
சிறப்பாக இல்லையே பிறகு எப்படி முதல் பரிசு அவருக்கு கொடுக்கப்பட்டது? என்ற உங்கள்
எண்ண ஓட்டங்கள் எனக்கு நன்றாக தெரிகிறது.
இந்த
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஒவ்வொரு மணவர்களும் தன்னுடையது சிறப்பாக இருக்க வேண்டும்
என்று நினைத்து, பிரபலமானவர்களை காப்பியடித்து அதில் பாராட்டை பெற வேண்டும் என்று நினைத்தீர்கள்.
ஆனால் அதில் உங்கள் தனி தன்மையை இழந்து விட்டீர்கள்.
ஒரு
நிமிட பாராட்டுக்காக மற்ற பிரபலங்களின் நிழலில் ஒதுங்க நினைத்தால் எப்பொழுது உங்கள்
தனி திறன் வெளிப்படும்.? இங்குள்ள மாணவர்களில் தனித்தன்மையுடன் தனது கட்டுரையை அமைத்திருந்தது
ஜான் மட்டுமே, அவருடைய கட்டுரை எப்படி இருந்தது என்பதை விடவும், மற்றவர்களை காப்பி
செய்யாமல் தன்னுடைய தனித்திறமையை வளர்க்க வேண்டும் என்று முயற்சித்த அவருடைய முயற்சியை
ஊக்கப்படுத்தியே இந்த பரிசு கொடுக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, தனது தனித் தன்மையை
வெளிப்படுத்திய ஜான் தான் முதல் பரிசுக்கு தகுதியானவர்’’ என்று தன்னுடைய உரையை நிறைவு செய்ய அரங்கமே கரவொலியால்
அதிர்ந்தது.
“நீயோ
எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை
நிறைவேற்று’’ (2 தீமோத்தேயு 4:5)
0 comments:
Post a Comment