Bread of Life Church India

மாற்றத்தின் மறுபக்கம்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான இணைய தள ஜீவ அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டில்  மூன்றாம் மாதத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
ஒருசில  காரணங்களால், கடந்த சில மாதங்களாக நமது ஜீவ அப்பம் மாத இதழ் வெளிவரவில்லை,  இணையத்திலும் செய்திகளை வெளியிட முடியவில்லை. அநேகர் விசாரித்தீர்கள், ஜெபித்தீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இந்த ஆண்டில் தொடர்ந்து நமது ஜீவ அப்பம் வெளியிட தேவன் நமக்கு உதவி செய்வாராக.
கடந்த ஆண்டு, தேவ கிருபையால் தேவனுடைய ஊழியத்தை செய்ய கர்த்தர் நமக்கு உதவி செய்தார்.  தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
தேவ பிள்ளைகளாகிய நம்முடைய ஒவ்வொருவருடைய செயல்களும், முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றே கர்த்தர் எதிர்பார்க்கிறார். தேவனோடு ஐக்கியப்பட்டு, மற்றவர்களை தேவனுடைய ஐக்கியத்துக்குள்ளாக கொண்டுவருவதும், விசுவாச வாழ்வில் நாம் வளர்ந்து, மற்றவர்களையும் விசுவாச வாழ்வில் வளர்வதற்கு வேண்டிய உதவிகளை செய்வதற்குமே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

சில வேளைகளில் கர்த்தருக்குள்ளாக நம்முடைய நோக்கங்கள் சிதறுவதற்கு ஏதுவான காரியங்கள் நம்மைச்சுற்றிலுமாக நடக்கிறது. நாம் மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய நோக்கம், திட்டம், நம்முடைய அழைப்பு இவைகளை மறந்து விடக்கூடாது.
எதைச்செய்தாலும், கட்டாயத்திற்காகவும், கடமைக்காகவும்  செய்யாமல், இரட்சிப்பின் அனுபவத்திலும், கிறிஸ்துவின் அன்பிலும் செய்யவேண்டும், ஒன்றைச்செய்தால் இன்னொன்று கிடைக்கும் என்பது வியாபாரம்.
இரட்சிப்பின் அனுபவமும், கிறிஸ்துவின் அன்பும் நமக்குள் இருந்தால் மட்டுமே எதையும் எதிர்பார்க்காமல் செயல்பட முடியும். இந்த அனுபவத்தையும், கிறிஸ்துவின் அன்பையும் அனுதினமும் தேவ சமூகத்தில் கேட்போம்.
மாற்றமும், மறுரூபமும் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் மட்டுமே உண்டு, அர்ப்பணிப்பு  இல்லாத வாழ்வில் மாற்றமும், மறுரூபமும், வெறும் வாய் பேச்சு மட்டுமே.
உலகம் பேசும் மாற்றம், மாய்மாலமான மாற்றமே, ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் உண்டாகாத மாற்றத்தை உலகத்தில் கொண்டுவருவது என்பது வேடிக்கை.  உண்மையான மாற்றம் மனதில் ஆரம்பித்து, வாழ்க்கையில் வெளிப்படும். தனக்குள் வந்த மாற்றத்தை மற்றவர்களுக்குள் கடத்தி விடுவதே உண்மையான மாற்றம். இந்த மாற்றமே வலிமையானது. வலிமையாக செயல்படக்கூடியது.
தவறுகளுக்கு காரணம் கற்பித்து, நியாயப்படுத்தி,, சூழ்நிலைகளைக் காண்பித்து, தப்பிக்கும் மனப்பான்மை முற்றிலும் தேவனுக்கு விரோதமானது. இவ்விதமான செயல்களை ஒரு போதும் தேவன் அங்கீகரிப்பதே இல்லை.
உலக மனிதர்கள் செல்லும் வழிகளில் சென்று, அதை முன் மாதிரியாக வைத்து செயல்படுதல் ஒரு போதும் தேவனுக்கு மகிமையை கொண்டு செல்லாது.
உலக கல்விக்கு, அதாவது வயிற்றுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள், வாழ்க்கைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
வாழ்வை வளப்படுத்துவதும், சரியான வாழ்வு வாழ வழிகாட்டுவதும், நல்வழிப்படுத்துவதும், தேவனுடைய வார்த்தைகளை சுமந்து கொண்டிருக்கும் பரிசுத்த வேதாகமமே.
கெட்டுப்போன மனுகுலத்தை, சரிபடுத்துவதும், சீர்கெட்டுப்போன வாழ்க்கை முறைகளை சீர் அமைப்பதும் தேவனுடையவார்த்தைகள்தான். எந்த அளவுக்கு தேவனுடைய வார்த்தைகளுக்கு ஒரு மனிதன் முக்கியத்துவம் கொடுக்கிறானோ, அந்த அளவு ஆசீர்வாதமும், முன்னேற்றமும், செழிப்பும் உண்டாகும்.
பிரியமான ஜீவ அப்பம் குடும்ப அங்கத்தினர்களே, கடைசி மணித்துளிகளில் நின்று கொண்டிருக்கும் நமக்கு மிகப்பெரிய பொறுப்புக்கள் உண்டு.
மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கும், மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சத்தியங்களை சத்தமாக சொல்லும், சத்தான சந்ததி தேவனுக்கு உடனடியாக தேவை. இவ்வித தரிசனங்களை முன்வைத்தே, ஜெபத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ஜீவ அப்பம் (ஊழியங்கள்) மாத இதழ்.
பெரிய அளவில் மற்றவர்களின் பார்வை நம்மேல் விழாமல் போகலாம், ஏன் நம்மை வீழ்த்துவதற்கு கூட வியூகம் அமைக்கப்படலாம். கலங்காமல் கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து, எடுக்கப்பட்ட நோக்கம் அறிந்து, அழைக்கப்பட்ட அழைப்பில் உறுதியுடன் முன்னேறிச்செல்லும் ஜீவனுள்ளவர்கள் மேல் கர்த்தருடைய கண்கள் பதிக்கப்பட்டிருக்கும், தாங்கும் படியான கிருபையின் கரங்கள் நமக்கு நேராக நீட்டப்பட்டிருக்கும்.
ஒருமனதுடன் தேவனுடைய இராஜ்யத்தின் பணியில் இணைந்து செயல்படுவோம்.  கர்த்தரின் பாதுகாப்பும், பராமரிப்பும் எப்போதும் நமக்கு உண்டு.
தொடர்ந்து ஜெபியுங்கள். உங்களுக்காக நாங்களும் ஜெபிக்கிறோம். ஜெயங்கொடுக்கும் கர்த்தர் நம்முடன் இருந்து நடத்துவார். உயர்த்துவார்.

0 comments:

Post a Comment