Bread of Life Church India

உன் எல்லையில் சத்துரு இல்லை



தேவனுடைய வாக்குத்தத்த வசனத்தை தியானித்து, தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.
“யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்’’  (ஆதி 49:8)
நம்மை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்காத தேவன், சத்துருவை ஜெயிக்கவும், நமக்கு விரோதமாக எழும்பும் சத்துருவை முறியடிக்கும் பெலத்தையும் கொடுப்பேன் என்று வாக்குத்தத்தமாக இந்த வார்த்தைகளை இந்த மாதத்தில் நமக்கு கொடுக்கிறார்.
நமக்கு எதிரிடையாக செயல்படும் சத்துரு, நம்மை பெலவீனப்படுத்தும்படியாகவும், நமது நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் திருடும் படியாகவும் செயல்பட நினைக்கிறான், அது மட்டும் அல்ல, தேவ சமூகத்தில் இருந்து நம்மை பிரிக்கும் படியாகவும், தேவனோடு உள்ள ஐக்கியத்தை உடைக்கும் படியாகவும் தந்திரமாக செயல்படப் பார்க்கிறான்.

ஆனால் கர்த்தர் இந்த மாதத்தில் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம், விரோதமாக செயல்படும் சத்துருவின் பிடரியை பிடித்து நமது எல்லையை விட்டே துரத்தி அடிக்கும் படியான வல்லமையை நமக்கு தருவேன் என்றும், சத்துருவின் பிடரியில் நமது கரம் இருக்கும் என்றும் கர்த்தர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.
தேவ ஆவியால் நிரப்பப்பட்டு, பலமுள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதே தேவன் விரும்புகிறார். நாம் பெலவீனத்துடனும், சோர்வுடனும், பயத்துடனும் இருப்பது தேவனுக்கு விருப்பம் இல்லை. பலமுள்ளவர்களாய் எப்போதும் தேவனுடைய நாமத்திற்கு மகிமையாக வாழ வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம்.
பிரியமானவர்களே, கடந்த நாட்களில், கடந்த மாதங்களில் நீங்கள் மிகவும் சோர்ந்து போன நிலையில் இருந்திருக்கலாம்.ஆவிக்குரிய வாழ்வில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டுக் கொண்டிருந்திருக்கலாம். எதை செய்தாலும் என் வாழ்வில் உயர்வும், மேன்மையும் இல்லையே என்று கலங்கிப்போய் இருந்திருக்கலாம்.
ஆனால் இந்த நாளிலே கர்த்தர் உங்களைப்பார்த்து சொல்லுகிறார். உனது கலக்கம், சோர்வுகள் எல்லாவற்றிலும் இருந்து உன்னை விடுவித்து, உன்னை கலங்கடிக்கும் படியாக வந்த சத்துருவை உனது கரங்களில் கொடுக்கிறேன் என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார்.
சத்துருவை நமது எல்லையை விட்டே நாம் துரத்த வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதைக்குறித்து வேத வசனங்களின் வழியாகப் பார்க்கலாம்.
சத்துருவுக்கு இடம் கொடுக்க கூடாது
சத்துரு நமது எல்லையில் கிரியை செய்வதற்கு இடங்கொடுக்கவே கூடாது. சத்துரு நம்மூலமாகவே செயல்பட முயற்சி செய்வான். எனவே அவனுடைய தந்திரங்களை அறிந்து அவனுக்கு இடங்கொடுக்கவே கூடாது.
 கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக’’ ( எண் 10:35) என்று மோசே ஜெபித்ததைப் போல, ஒவ்வொரு நாளும் தேவ சமூகத்தில் அமர்ந்து, தேவன் கொடுக்கும் வாக்குத்தத்த வசனங்களை சொல்லி ஜெபியுங்கள். 
தேவனுடைய நன்மைகளுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் சுதந்திரவாளியாக இருக்கும் தேவ ஜனமே, நீ சோர்ந்து போய் இருந்தது போதும். சத்துருவின் தந்திரங்களை அறியாமல் பயந்திருந்தது போதும். கர்த்தருக்காக நீ எழும்பி, தேவனுடைய நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டும் பொறுப்பைப் பெற்று இருக்கிறாய் என்பதை அறிந்து செயல்படு, கர்த்தர் உன்னை நடத்துவார்.
விழுந்து போன நீ விழுந்த இடத்திலேயே இருக்காமல் தேவ பெலத்தால் எழுந்து நில். உன்னை தூக்கி எடுத்து, சத்துருவுக்கு முன்பாக சவால் விடும் சந்ததியாகவும், தேவனுக்கென்று வைராக்கியமாக எழும்பும்  படியாக கர்த்தர் உனக்கு துணையாக நிற்கிறார்.
“என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்’’ (மீகா 7:8) என்று அறிக்கையிடு.
சத்துரு. உன்னை விழத்தள்ளியது உண்மைதான், ஆனால் நீ மறுபடியுமாக எழுந்து நிற்பாய். உன்னை விழத்தள்ளி விட்டு, நீ விழுந்ததை பார்த்து  சந்தோஷப்படும் சத்துருவின் சந்தோஷம் நிலைத்திருக்காது. நீ மறுபடியுமாய் முன்பு இருந்ததை விட பல மடங்கு நன்மைகளைப் பெற்று எழும்புவாய்.
கடந்த நாட்களில் உனது பலத்திலும், உனது வைராக்கியத்திலும் நீ ஓடிக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இப்போது தேவன் உனக்கு பலமாகவும், உனக்கு துணையாகவும் இருந்து, சத்துரு உனக்கு முன்பாக நிற்கக் கூடாதபடிக்கு முறிந்து ஓடும்படியாகவும், மறுபடியும் எழும்பக்கூடாதபடிக்கு மடங்கடிப்பார்.
உன் தவறுகளை சிந்தித்துப்பார். நீ சத்துருவுக்கு இடங்கொடுத்த காரியங்களை யோசித்துப்பார். கர்த்தர் உன்னைச்சுற்றிலுமாக பாதுகாப்பை கொடுத்து உன்னை பாதுகாத்து வந்திருந்தாரே! உனது எந்த செயல் மூலமாக தேவனுடைய பாதுகாப்பை உடைத்தெறிந்தாய் என்பதை யோசித்துப்பார்.
சரியாக ஆராய்ந்து பார்த்து, உனது ஜீவியத்தில் பெலவீனமாக உள்ள பகுதியை தேவ பலத்துடன் மறுபடியுமாக சீர்படுத்திக்கொள். தேவனுடைய பாதுகாப்புக்குள் பத்திரமாக இருந்து செயல்படு.
சத்துருவுக்கு நாம் இடங்கொடுக்காமல் அவன் நமக்கு எதிராக செயல்பட்டு ஜெயிக்கவே முடியாது, ஏன் என்றால் நம்மோடு இருக்கும் தேவன் பெரியவர். அவர் ஒவ்வொரு வினாடிப்பொழுதிலும் நம்மை தமது கண்ணின் மணி போல பாதுகாத்து நடத்தி வருகிறார்.
சத்துருக்கு வழி விடக்கூடாது
“எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது’’ (சங்கீதம் 144:6) என்று வேதம் கூறுகிறது.
சத்துரு உள்ளே வருவதற்கு வழிவிடாமல் தேவ பலத்தினால் நாம் இருப்போம் என்றால் சத்துரு உட்புகவே முடியாது. பலவிதமான தந்திரங்களோடு சத்துரு உட்புக பார்ப்பான்.
சத்துருவினுடைய உட்புகுதல் எப்படி இருக்கும் என்பதை சரியானபடிக்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆகையால்தான் “பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்’’ (எபே 4:27) என்று வேதம் கூறுகிறது. அவனுக்கு இடம் கொடுக்காமல் அவனால் வர முடியாது. நம்முடைய சிந்தனைகள், பேச்சுக்கள், செயல்கள் இவைகளின் மூலமாகவே சத்துருவானவன் உட்புக முயற்சிப்பான்.
நமது சிந்தனையில் கூட நாம் கவனமுள்ளவர்களாகவே இருக்க வேண்டும், தேவையில்லாத சிந்தை, தேவை இல்லாத யோசனைகளை நாம் வைத்திருக்கவே கூடாது.
தேவை இல்லாத சிந்தனைகள் வேண்டாத பேச்சுக்களையும், வேண்டாத பேச்சுக்கள் தேவை இல்லாத செயல்களையும் கொண்டு வந்து விடும். இப்படியாகத்தான் சத்துரு தனது தந்திரங்களை செய்து, உள்ளே வரப் பார்க்கிறான்.
அது மட்டுமல்லாமல், சில நட்புக்கள் நமது ஆவிக்குரிய வாழ்வை பாழாக்கும் படியாக சத்துருவால் தந்திரமாக அனுப்பப்படுவதாக இருக்கும். அப்படிப்பட்ட வேண்டாத நபர்களின் நட்பை துண்டித்துக்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
வேண்டாத நட்புக்களின் மூலமாக சத்துரு உட்புகுந்து, கூக்குரல் இட வைத்து விடுவான். ஆகாப்புடன் நட்பு வைத்துக்கொண்ட யோசபாத் ஒரு சமயம் ஆபத்தில் சிக்கிக்கொண்டு கூக்குரலிட்டான். “ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்’’ (2நாளா 18:31) என்று வேதம் கூறுகிறது.
இப்படிதான் சில பொல்லாத நட்புக்களின் வழியாக சத்துரு நுழைந்து, ஆபத்து விளைவிக்க பார்ப்பான், இதில் நாம் கவனமில்லாமல் இருந்தால் நாம் கூக்குரலிட வேண்டிய நிலை உண்டாகிறது.
ஆனாலும் கர்த்தர் யோசபாத்துக்கு அநுசரனையாக இருந்து பாதுகாத்தார். தந்திரமாக செயல்பட்ட ஆகாப், தனது தந்திரத்தினாலேயே மாண்டு போனான்.
கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட இப்படிப்பட்ட சம்பவம் எனது வாழ்விலும் நடந்தது. பொல்லாத ஒருவன் தந்திரமாக எனது நட்பைப்பெற்று, ஒரு சமயத்தில் எனக்கு எதிராகவே செயல்படப்பார்த்தான்.
அந்த வேளையில் எந்த வித பொல்லாத செயல்களிலும் உடன்படாதிருந்த என்னையும் அதில் உடன்பட்டது போல் இணைத்து விட வேண்டும் என்று சத்துரு பல வித தந்திரங்களோடு செயல்பட்டான்.
ஒரு பக்கம் நண்பனைப்போல் இருந்த துரோகியான ஒருவன் முதுகில் குத்துகிறான். இன்னொருவன் எதிரியாக நின்று இதுதான் சமயம் என்று மார்பில் குத்துகிறான். என்ன செய்வது என்று அறியாமல் தேவ சமுகத்தில் கூக்குரல் எழுப்பியபோது எந்த பொல்லாத வழிக்கும் செல்லாத எனக்கு கர்த்தர் துணையாக இருந்து விடுவித்தார்.
அப்படிப்பட்ட சம்பவங்களின் மூலமாக தேவன்  யார் உண்மையான நட்புடன் இருக்கிறார்கள். யார் போலியான நட்புடன் பழகி வந்தார்கள். யார் தூற்றித்திரிகிறவர்கள் என்பதை கர்த்தர் காண்பித்துக்கொடுத்தார்.
இவ்விதமாக நமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் படியாகவும், நமது சாட்சியை கெடுக்கும் படியாகவும், சில பொல்லாத நட்புகளின் வழியாக சத்துரு உட்புக தந்திரம் செய்வான். எனவே நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பொல்லாத நபர்கள் என்று தெரிந்தும் அப்படிப்பட்டவர்களின் நட்பை நாம் தூக்கி எறிய தயங்கினால் அதுவே ஆபத்தாக வந்து நிற்கும். பொல்லாத வழிகளில் செல்லும் எந்த நபர்களின் நட்பையும் தயவு, தாட்சண்யம் பார்க்காமல், உடனே முறித்துக்கொள்வதே, நமது வாழ்க்கைக்கும், ஆவிக்குரிய ஜீவியத்திற்கும், தேவனோடு நாம் கொண்டிருக்கும் ஐக்கியத்திற்கும் மிகவும்  பாதுகாப்பானது.
எனவே, சத்துரு எவ்விதமான தந்திரத்தோடு வந்தாலும் அவைகளை முறியடிக்கும் வல்லமையை விசேஷமாக கர்த்தர் நமக்கு கொடுக்கிறார்.
சத்துருவுக்கு வழி விடாமல் அவனை உன் எல்லையை விட்டு துரத்துவாய். இனி துஷ்டன் உன் வழியாய் கடந்து வருவதில்லை என்ற தேவனுடைய வார்த்தையின்படியாக கர்த்தர் நம்மை நடத்துவார்.
சத்துருவின் தந்திரங்களை அறிய வேண்டும்
சத்துருவுக்கு இடங்கொடுக்காமல், அவன் உள்ளே வருவதற்கு வழி விடாமல் இருந்து நமது எல்லையை விட்டே சத்துருவை விரட்ட வேண்டுமானால் அவனுடைய தந்திரங்களை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
“இந்த  உலகத்தின் அதிபதி  வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை’’ (யோவான் 14:30) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
வெல்லம் இருக்கிற இடத்தில்தான் எறும்பு இருக்கும் என்று சொல்லுவது போல, பாவம் உள்ள இடத்தில்தான் சத்துரு கிரியை செய்ய முடியும். எனவே, சத்துரு உள்ளே வருவதற்கு தனது தந்திரங்களின் மூலமாக இடம் உண்டாக்கி, வழியை ஏற்படுத்தி வருவதற்கு முயற்சி செய்வான்.
ஒருவருடைய வாழ்வில் சத்துரு உள்ளே நுழைந்து கிரியை செய்ய வேண்டுமானால், தேவனுடைய வார்த்தைகளை மீறும்படியாக செய்து, தேவனுடைய ஐக்கியத்தில் இருந்து பிரித்து, தனது செயல்களை செய்ய வைத்து, அதன் பின்பாகத்தான் சத்துரு தனது வேலையை காண்பிக்க ஆரம்பிப்பான்.
எனவே, தேவனுடைய வார்த்தைகளை மீறி செயல்பட வைக்கிற எந்த காரியங்களுக்கும் நாம் வழி திறக்கவே கூடாது. சிலர் சத்துருவின் தந்திரங்களை அறியாதவர்களாக, முழுவதும் பொல்லாத வழிகளில், நடந்து பாவத்தில் திழைத்து, தங்கள் வாழ்வில் சத்துருவுக்கு முழுவதுமாக வழியை திறந்து விட்டு விட்டு பின்நாட்களில் கதறி துடிப்பதைக் காண முடியும்.
அப்படிப்பட்ட நேரத்தில் கடவுள் என்னைக் கைவிட்டு விட்டாரே, என்று கண்ணீர்விட்டு அழுவார்கள். கர்த்தரையும் அவருடைய வார்த்தைகளையும் விட்டு, விலகி, பொல்லாத வழிகளுக்குள் சென்றதால்தான் இவ்விதமான நிலை உண்டானது என்று அப்படிப்பட்டவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, சத்துருவுக்கு உண்டான எந்த செயல்களும், நமக்குள்ளும், நமது குடும்பத்திற்குள்ளும் நமது வாழ்க்கைக்குள்ளும் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
சத்துருவின் எந்த பொருளும் நம்மிடம் இல்லை என்றால் தைரியமாக சத்துருவை நமது எல்லையை விட்டே துரத்தி அடிக்கலாம்.
கடந்த நாட்களில் சத்துருவுக்கு இடம் கொடுத்து, அவனுடைய பொல்லாத வழிகளில் நடந்து, தேவனை விட்டு விலகி இருந்ததினால் ஏற்பட்ட பாதிப்பில் ஒரு வேளை இருப்பீர்கள் என்றால் உடனடியாக தேவ சமூகத்தில் உங்களை ஒப்புக்கொடுத்து, மனந்திரும்பி, அறிக்கையிட்டு, எல்லாவற்றையும் விட்டு விடுங்கள்.
“கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்’’ (செப்பனியா 3:15)’ என்ற தேவனுடைய நல்ல வார்த்தையின்படியாக உங்களை ஆக்கினைக்கு அகற்றி, சத்துருக்களை விலக்கி, தேவன் உங்கள் நடுவில் வந்து விடுவார். நீங்கள் தீங்கை காணமாட்டீர்கள்.
தேவனாகிய கர்த்தர் உங்கள் நடுவில் வந்து விட்டால், சத்துரு உங்கள் எல்லைகளை விட்டே ஓடி விடுவான். தீங்கு உங்களை அணுகாது, பொல்லாப்பு உங்களுக்கு நேரிடாது.
சமாதானமும், சந்தோஷமும் நிறைவாக உண்டாகும். தினமும் இரட்சிப்பின் கெம்பீரச்சத்தம் உங்கள் குடும்பங்களில் தொனிக்கும்.
இன்றே உங்களை மனந்திரும்புதலோடு, கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புக்கொடுங்கள்.
சத்துரு உங்கள் எல்லைகளில் கூட இருக்க முடியாது. கர்த்தர் உங்களை ஆளுகை செய்து நடத்துவார்.

0 comments:

Post a Comment