Bread of Life Church India

நண்பனா? எதிரியா?




பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப் படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே’’ (எபி 12:4).
பாவத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. பாவம் செய்கிறவனாக இருந்தால் அவன் கிறிஸ்தவன் இல்லை. கிறிஸ்தவனாக இருந்தால் அவன் பாவம் செய்வது இல்லை.
பாவத்தை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் முதலாவது பாவத்தை எதிரியாகப் பார்க்க வேண்டும், பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பவர்கள் பாவத்தை வெறுக்க வேண்டும்.
பாவத்திற்கு நண்பனாக இருந்து கொண்டு, பாவத்தை ஜெயிக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எல்லாம் வெறும் மாய்மாலங்களாகவே இருக்கும்.
பாவத்தை வெறுக்காமல் பரிசுத்த வாழ்வை விரும்புவது எவ்விதம் சாத்தியமாகும். பரிசுத்த வாழ்வை விரும்புகிறவர்கள் பாவத்தை வெறுக்க வேண்டும். பாவத்துடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்து பாவத்தின் அடிமைத்தனத்தில் இருக்கும் மனிதனை விடுவித்து, பரிசுத்தமாக்குகிறார். அனுதினமும் பாவத்தை ஜெயிக்க பெலன் தருகிறார்.

பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவர், பாவத்தை முழுமையாக வெறுத்து, பாவத்தை விட்டு ஓட வேண்டும். பாவத்தை வெறுக்காமல், பாவத்தை விட்டு ஓடாமல் பாவத்திற்கு நண்பனாக இருப்பவர்கள் பாவத்தை எவ்விதமாக ஜெயிக்க முடியும். ?
இயேசு கிறிஸ்துவினால் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், பாவத்தை விரோதியாகப் பார்க்க வேண்டும், அப்பொழுதுதான்  இயேசு கிறிஸ்துவினால் நமக்கு கிடைத்த விடுதலையின் வாழ்க்கையை வாழ முடியும். பாவம் நம்மை மேற்கொள்ளாதபடி, நாம் பாவத்தை  மேற்கொண்டு, அனுதினமும் வெற்றி வாழ்க்கை வாழ முடியும்.
பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையில் இன்னும் முழுமையான பரிசுத்த வாழ்வு இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்.? இக்கால கிறிஸ்தவ உலகம் பாவத்தை தனது நண்பனாக்கிக் கொண்டு, அதை தழுவிக்கொண்டிருப்பதினால்தான்.
பரிசுத்த வாழ்வைக்குறித்து வார்த்தையில் பேசிக்கொண்டு, வாழ்க்கையில் இல்லாமல் வெறும் மாய்மாலத்தில் உலாவிக்கொண்டிருப்பதினால் யாருக்கு என்ன பயன்?
பாவத்துடன் சமரசம் செய்து கொண்டு, பாவ இன்பத்தில் விருப்பம் கொண்டு, பாவ செயல்களை செய்து கொண்டு, சத்திய வார்த்தைகளை வெறும் மூளை அறிவுக்கு மட்டும் பயன்படுத்தி, இயேசு கிறிஸ்துவினால் நான் விடுவிக்கப்பட்டு விட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால்,  அறியாமை இருளுக்குள் தான் இருக்கிறார்கள், அதில் எந்த மாற்றமும் இல்லை.
                கிறிஸ்தவத்தின் நோக்கம், கிறிஸ்தவத்தின் சாராம்சம், கிறிஸ்தவத்தின் மேன்மை, கிறிஸ்தவத்தின் புனிதம் அறிந்து கொள்ள இயேசு கிறிஸ்து மனக்கண்களைத் திறக்க விரும்புகிறார்.
எனது மனக்கண் திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களின் கண்கள் மட்டுமே திறக்கும், பாவத்தை வெறுக்கும், பாவத்தை எதிரியாக பாவிக்கும்.
பாவம் பரிசுத்த தேவனை நெருங்கி செல்ல விடாமல் கடுமையாக போராடும் பொல்லாத எதிரி, இந்த எதிரியின் தந்திரங்களை அறிந்து விலகியே இருக்க வேண்டும்.  பொல்லாத எதிரியுடன் எவ்விதம் நண்பனாக இருக்க முடியும்.?
இயேசுவை உண்மையாக நேசிக்கும் ஒருவரால், பாவத்தை நேசிப்பது கடினம். பாவத்தை நேசிக்கும் ஒருவரால் உண்மையாக இயேசுவை நேசிப்பது கடினம்.
என்னால் பாவத்தை விட முடியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் நபர்கள், பாவத்தை எந்த அளவுக்கு வெறுக்கிறோம், என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். பாவத்தை மேற்கொள்ள முடியவில்லை என்று சொல்வோர், பாவத்தை எந்த அளவுக்கு எதிரியாக நினைக்கிறோம் என்றும் பார்க்க வேண்டும்.
பாவத்தை ஜெயிக்க எந்த அளவுக்கு போராட மனம் துணிவு கொண்டுள்ளது  என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பாவம் எனக்கு வேண்டாம், அவைகளில் இருந்து நான் முழுமையாக விடுதலைப் பெற வேண்டும், பாவத்தைக் கொண்டு வருகிற பிசாசை நான் எதிர்த்து நிற்கிறேன் என்று, எந்த அளவுக்கு உறுதி உள்ளவர்களாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கே இயேசு கிறிஸ்துவினால் நமக்கு  வெற்றி கிடைக்கிறது.
பாவத்தின் பளபளப்புக்கு மயங்கி, பாவத்தின் வலையில் விழுந்து, “நான் பரிசுத்தமாகவே இருக்கிறேன், இயேசு கிறிஸ்து என்னை பாவத்திலிருந்து விடுவித்து விட்டார். நான் பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறேன் என்று மாய்மால பேச்சுக்களுடன், மாய்மால வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்.?
இயேசு கிறிஸ்து பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தது உண்மைதான். அவர் பாவத்தை ஜெயிக்க பெலன் கொடுக்கிறார்  உண்மைதான். ஆனால் நீ பாவத்தை வெறுத்து விட்டாயா? பாவத்தை விட்டு விலக விரும்புகிறாயா? பாவத்தை விட்டு விலகி ஓடுகிறாயா?
கிருபை என்னை பாவத்தில் இருந்து விடுவிக்கும் என்று வெறும் வார்த்தையாக மட்டும் சொல்லிக்கொண்டிருக்காமல், “கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும்’’ என்ற சத்தியத்தை அறிந்து, “கிருபைக்கு கீழ் வரவேண்டும்.
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே’’ (ரோமர் 6:14,15) என்று வேதம் மிக தெளிவாக சொல்கிறதை கவனிக்க வேண்டும்.
தேவன் வேண்டாம் என்று சொல்லுகிறவைகள் எனக்கு வேண்டாம். தேவன் விரும்பாத எதுவும் எனக்கு தேவை இல்லை என்பதே தேவன் மேல் நாம் வைத்திருக்கும் அன்பு.
தேவனை என் உள்ளம் மிகவும் நேசிக்கிறது, எனது சரீரமோ, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் இருக்கிறது என்றால், என் பாவ ஆசை இச்சைகளை இன்னும் நான் வெறுக்க வில்லை  என்பதுதானே பொருள். பாவத்தை வெறுக்கும் ஒருவரால் பாவத்தை எப்படி செய்து கொண்டிருக்க முடியும்?.
அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக’’ (ரோமர் 6:11,12). பாவத்திற்கு மரித்த பின், பாவத்துடன் நட்பு வைத்துக் கொள்வது ஏன்?
பாவத்தில் இருந்து இயேசு கிறிஸ்துவினாலே விடுதலையாக்கப்பட்டிருக்கும் நாம், பாவம் நம்மை ஆளுகை செய்வதற்கு இடம் கொடுக்கவே கூடாது. பாவம் நம்மில் பெலன் செய்ய வாய்ப்புக்களை கொடுக்கவே கூடாது.
பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவர், பாவத்தை நேரடியாக செய்வது இல்லை. முதலாவது பாவத்தை நண்பனாக்குகிறார். பாவத்தோடு உறவாடுகிறார். பாவத்தை தனது சிந்தையில் ஒத்திகை பார்க்கிறார், பின்பு பாவத்தை செய்வதற்கு சமயம், சந்தர்ப்பத்தை உருவாக்குகிறார். அதற்கு பின்புதான் பாவத்தை செயல்படுத்துகிறார்.
பாவத்தை விட்டு, உண்மையாக விலக வேண்டும் என்ற மனதை உடையவர்கள் பாவத்தை வெறுக்கிறார்கள். பாவத்தை எதிரியாக பாவிக்கிறார்கள். தேவனோடு உள்ள உறவை பலப்படுத்துகிறார்கள். பாவத்தின் எண்ணங்கள் வரும்பொழுதே, பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுகிறார்கள், தங்கள் பரிசுத்த வாழ்வை காத்துக்கொள்ள தேவனுடைய ஆளுகைக்குள் இருக்கிறார்கள்.
                உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்’’ (லூக்கா 14:33)  என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
                வெறுத்து விடுதல்’’ என்ற பதம்,  பொல்லாப்பையும், பாவமான எல்லாவற்றையும் விட்டு  விடும். அப்படிப்பட்ட மன நிலையில் இருக்கும் ஒருவரால் மட்டும் தான் தன்னை பின்பற்ற முடியும், அப்படிப்பட்ட ஒருவன்தான் தனக்கு சீஷனாக இருக்க முடியும் என்று இயேசு கிறிஸ்து உணர்த்துவிக்கிறார்.
                பாவத்தை விட்டு வெளியில் வர விரும்பாத ஒருவர் பாவத்தை எப்படி மேற்கொள்ள முடியும்.? பாவத்தை வெறுக்காத ஒருவர் இயேசுகிறிஸ்துவை எப்படி பின்பற்ற முடியும்.?
                பாவத்தை வெறுத்து, பாவத்தில் இருந்து முழுவதுமாக நான் வெளியில் வர வேண்டும் என்று விரும்பும் ஒருவருக்கு இயேசு கிறிஸ்து உதவி செய்கிறார்.
                இயேசு கிறிஸ்துவின் உதவியுடன் பாவத்தை அனுதினமும் ஜெயித்து வெற்றியுடன் இயேசு கிறிஸ்துவைப்  பின்பற்ற முடியும்.
                ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்’’ (எபிரெயர் 12:1) என்று வேதம் கூறுகிறது.
                யோசேப்பு, பாவத்தை வெறுத்தபடியால்தான் பாவத்தை விட்டு விலகி ஓட அவரால் முடிந்தது, பாவம் பொல்லாததுதான், அதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் பாவத்தை வெறுக்க என்னால் முடியவில்லை என்று யோசேப்பு சொல்ல வில்லை.
                அனுதினமும் பாவம் அவரை நெருக்கிக்கொண்டே இருந்தது. தேவனுடைய நல்ல வழிகளை விட்டு அவரை எப்படியாவது விலகச் செய்ய வேண்டும் என்று பாவம் போராடியது.
                அவர் அதற்கு இசைந்து கொடுக்க வில்லை. பாவத்தினால் வரும் இன்பங்கள் எனக்கு வேண்டாம் என்றும், பாவத்தினால் வரும் உயர்வு தேவை இல்லை என்றும் விலகி ஓடுகிறார்.
                பாவத்துடன் சமரசம் செய்து கொள்ளவோ, பாவத்தை நண்பனாக்கி கொள்ளவோ, யோசேப்பு விரும்ப வில்லை. பாவத்தை எதிரியாக எண்ணினார். தன் வாழ்க்கையை அது அழித்து விடும் என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அது மட்டுமல்ல தேவனுடைய ஐக்கியத்தில் இருந்து பிரித்து விடும் என்றும் பயந்தார், ஆகையால் அவைகளை விட்டு ஓடினார்.
                அதனால் தான் தேவனால் அவருக்கு வைக்கப்பட்டிருந்த ஆசீர்வாதங்களைப் பெற்று, உயர்ந்த ஸ்தானத்திற்கு வர முடிந்தது. எல்லோருக்கும் முன்மாதிரியாக நிற்க முடிந்தது.
                பொல்லாதவைகளை வெறுக்க வேண்டும், அவைகளை விட்டு ஓட வேண்டும். பழைய ஏற்பாட்டு நாட்களில் வாழ்ந்த யோசேப்பு பாவத்தை வெறுத்து, விலகி ஓடுவார் என்றால் புதிய உடன்படிக்கையின் கீழ் இருக்கும் நமக்கு ஏன் அவைகள் சாத்தியமாகாது?
                கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்துவிட்டார்.
                சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிற ஆவியானவரை நாம் பெற்று இருக்கிறோம், அவருடைய அபிஷேகத்தினால் நிரப்பப்பட்டிருக்கிறோம்.
                அப்படி இருக்க ஏன் பாவத்தை மேற்கொள்ள முடியவில்லை.? பாவத்துடன் நட்பு பாராட்டுவதினால்தான். எனவே, பாவத்தை எதிரியாக பார்த்தால், பாவத்தை வெறுத்தால் நிச்சயமாக பாவத்தை ஜெயிக்க முடியும்.
                இந்த காலத்தில், அல்லது இந்த நாட்களில் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வது என்பது கூடாத காரியம் என்ற எண்ணங்களை பிசாசு தந்திரமாக அநேகருடைய சிந்தையில் புகுத்த பார்க்கிறான்.
                எல்லா காலங்களிலும் தேவனை விட்டும், தேவனுடைய ஆளுகையை விட்டும் பிரித்து, பாவம் மனிதனை ஆட்கொள்ளவே விரும்புகிறது.
                ஆனால் பாவத்தின் கூர் உடைத்து, பாதாளத்தின் வெற்றியை தடுத்து, பரிசுத்த வாழ்வுக்கும், பரலோக ராஜ்யத்திற்கும் நம்மை தகுதி படுத்தின இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.!
                எனவே, பாவத்துடன் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல், பாவத்தை எதிரியாக்கி, பாவத்தை வெறுத்து, இயேசுகிறிஸ்துவை உறுதியாக பற்றிக்கொண்டு, பரிசுத்தத்தை நண்பனாக்கி பரிசுத்தரோடு உறவாடுவோம்.
                பரிசுத்த வாழ்வே இன்பமானது, அதற்கு இணையாக இந்த பூமியில் வேறு எதுவுமே இல்லை. பரிசுத்தத்தை வாஞ்சிப்போம். அனுதினமும் பரிசுத்தத்தில் வளர்வோம்.
               

0 comments:

Post a Comment