Bread of Life Church India

கைவிடாத கர்த்தர்



    சில ஆண்டுகளுக்கு முன் சுவிசேஷம் அறியாத இடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக தேவனுடைய அழைப்பின்படி, தேவ ஊழியர் ஒருவர் தனது குடும்பத்துடன் சென்றார்.
குடிசை வீட்டில் தங்கி பொருளாதார நெருக்கடியின் மத்தியில் தேவனுடைய வார்த்தையை அறிவித்து, தனக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை செய்து வந்தார்.
இவ்வேளையில் சாப்பிட எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் மிகவும் கஷ்டப்பட்டு வந்தும், ஒருவரிடமும் தனது தேவையை குறித்து சொல்லாமல் ஊழியத்தை செய்தார்.
மதிய வேளை இரண்டு தினமாக சாப்பிடாமல் பசி மிகவும் வாட்ட குடும்பத்துடன் அமர்ந்து, கர்த்தரை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார்கள். “மனிதர்களிடம் சென்று எங்கள் தேவைகளை சொல்ல முடியாது, நீங்கள் தான் எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்’’ என்று ஜெபித்தார்கள்.
அவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிற அந்த வேளையில் வீட்டின் கூரைகளின் ஓட்டைகள் வழியாக பொட்டலங்கள் அவர்கள் இருந்த இடத்தில் விழுந்தது.

அவர்கள் அதை எடுத்து பிரித்து பார்த்த பொழுது, சுட சுட சுவையான உணவு இருந்தது. மிகுந்த ஆச்சரியத்துடன் வெளியில் வந்து பார்த்தார்கள் யாருமே இல்லை. கர்த்தரே இந்த உணவுகளை கொடுத்தார் என்று, தேவனின் மகத்துவங்களை சொல்லி, கர்த்தருக்கு நன்றி செலுத்தி,  ஸ்தோத்தரித்து சாப்பிட்டார்கள்.
மறுநாளும் அதே போல அதே நேரத்தில் சாப்பாடு வந்து விழுந்தது. ஆனால் வெளியில் வந்து பார்த்தால் ஒருவரும் இல்லை. இது மற்ற நாள்களிலும் தொடர்ந்ததால் இந்த உணவு பொட்டலத்தை யார் போடுகிறார்கள் கண்டு பிடிக்க வேண்டும் என்று, தனது மனைவியை ஜெபம் செய்ய சொல்லி விட்டு, ஊழியர் வீட்டிற்கு எதிரில் உள்ள மரத்திற்கு பின்னால் மறைந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
சரியாக அந்த நேரம் வந்த போது ஒரு பெண் வேகமாக ஓடி வந்து தனது கரங்களில் இருக்கும் பொட்டலங்களை வீட்டிற்குள் வீசி விட்டு வேகமாக ஓடினாள். அந்த வேளையில் மரத்தின் பின்னால் மறைந்து கொண்டிருந்த ஊழியர் ஓடிச்சென்று அந்த பெண்ணை பிடித்து விட்டார்.
அந்த பெண் அந்த ஊரில் உள்ள விக்கிரக ஆராதனையில் பக்தி வைராக்கியமுள்ள பெண் என்பது அந்த பெண்ணின் தோற்றத்தில் தெரிய, அதிர்ந்து போய், இந்த பெண் எதற்காக நம்முடைய வீட்டில் வந்து சாப்பாடு பொட்டலத்தை போட வேண்டும்? மேலும் இந்த பெண் போட்டு சென்ற சாப்பாட்டையா சாப்பிட்டோம் என்று நினைத்துக்கொண்டே, அந்த பெண்ணை பார்த்துநீ ஏன் அம்மா எங்கள் வீட்டில் சாப்பாட்டை போட்டாய்.? அதுவும் இல்லாமல் சாப்பாட்டை போட்டு விட்டு ஏன் ஓடுகிறாய்’’? என்று கேட்டார்.
அந்த பெண் பயத்துடன்ஐயா மூன்று தினங்களுக்கு முன் இந்த நேரத்தில் நான் சமையல் செய்து சாப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது, ஒருவர் என்னிடத்தில் நீங்கள் பசியாக இருப்பதாகவும் உடனே உங்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
நானும் உடனடியாக சாப்பாட்டை பொட்டலமாக கட்டி கொண்டு வந்தேன். உங்களிடத்தில் கொடுத்தால் நீங்கள் வாங்குவீர்களோ, வாங்க மாட்டீர்களோ, எனக்கு தெரிய வில்லை. அதனால்தான் உங்கள் வீட்டிற்குள்ளாக போட்டு விட்டு, நான்தான் போடுகிறேன் என்பது தெரியக்கூடாது என்பதற்காக தான் ஓடினேன் என்று சொன்னாள்.
வீட்டிற்குள் வந்த ஊழியர் கர்த்தரை நோக்கி, “ஆண்டவரே, எனது பசியை போக்கவும், எனக்கு உதவி செய்யவும், இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகளில் ஒருவரை எனக்கு அனுப்பி இருக்கலாமே’’ என்று  ஜெபித்தார்.
அப்பொழுதுஉனக்கு உணவு கொடுக்கவும், உதவி செய்யவும், இரட்சிக்கப்பட்ட எத்தனையோ பிள்ளைகளிடம் நான் பேசினேன், ஆனால் ஒருவரும் கொடுக்க முன் வரவில்லை. அந்த வேளையில்தான் இந்த பெண்ணிடம் பேசினேன். இந்த பெண் எனது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, உடனடியாக உங்களுக்கு உணவு கொடுத்தாள்’’ என்று கர்த்தர் சொன்னார்.
அந்த ஊழியர் கர்த்தருக்கு நன்றி சொல்லி, தொடர்ந்து அந்த பகுதியில் ஊழியம் செய்து அநேகம் ஆத்துமாக்களை ஆதாயம் செய்தார். அந்த பெண்ணும் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய இராஜ்யத்திற்கு உள்ளாகி தேவனை மகிமைப்படுத்தினாள்.

அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்’’ (எரேமியா 42:6)

0 comments:

Post a Comment