நேரம் நல்ல நேரம்
நேரங்களை பயன்படுத்துவதில் அநேகர் குறையுள்ளவர்களாகவே
இருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் சரியாக செயல்படுவதில் வேகம் காட்டுவதை விட அந்த நேரத்தை அலட்சியப்படுத்துவது நம்முடைய சுபாவமாகவே
இருப்பது தான் வேதனை.
காலத்தையும் நேரத்தையும் படைத்த தேவன் நேரத்தில்
கவனமுள்ளவராகவே இருக்கிறார். எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் மிகவும் சரியாக செய்கிறவர்,
அதே வேளையில் அந்த நேரத்தை தன்னுடைய பிள்ளைகளும் சரியாக மதித்து செயல்பட வேண்டும் என்றும்
விரும்புகிறார்.
மனிதர்கள் நல்ல நேரம் என்றும், கெட்ட நேரம்
என்றும் மணித்துளிகளை பிரித்து விட்டு, செயல்பட வேண்டிய நேரத்தில் இது கெட்ட நேரம்
என்று செயல்படாமல் இருந்து கொண்டு, என்னுடைய வாழ்வில் உயர்வே இல்லை எனக்கு நேரமே சரியில்லை
என்று காலத்தின் மீதும், நேரத்தின் மீதும் பழி சுமத்திக்கொண்டிருப்பவர்கள். நான் தான்
நேரத்தை சரியாக பயன்படுத்த வில்லை என்ற குற்றமே
தெரியாமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.
சரியாக நேரத்தை பயன்படுத்தாமல் இருப்பதே
குற்றம் என்பதை ஒரு மனிதன் அறிந்து விட்டாலே அவன் மாற்றம் அடைகிறான். அவன் வாழ்க்கை மாற்றத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறது. அவனுடைய வாழ்வில் அவனுக்கு எதிராக
தோல்வியாக இருந்தவைகள் எல்லாம் அவனை விட்டு விலக ஆரம்பிக்கிறது. அவனுக்கு எல்லா நேரமும்
நல்ல நேரங்களாகிறது.
ஆனால் சரியாக நேரத்தைப் பயன்படுத்தாத மனிதன்
தன் வாழ்வில் பின்தங்குகிறான். தோல்வியை மட்டுமே சந்திக்கிறான். நேரமும், காலமும் யாருக்காகவும்,
எதற்காகவும் காத்திருப்பது இல்லை. நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்கிறவர்களே, நேரத்திற்கு
இணையாக தங்கள் வாழ்க்கை பயணத்தில் சரியான விகிதத்தில் செல்கிறார்கள்.
“எனக்கு நேரமே சரியில்லை’’ என்று சொல்லுகிறவர்கள்
அந்த நேரத்தை சரியாக பயன்படுத்துகிறோமா? என்பதை பரிசோதித்துப்பார்ப்பது நல்லது.
நேரத்தை அசட்டை செய்கிறவன், நேரத்தை படைத்த
தேவனை அசட்டை செய்கிறான் என்பதை மறந்து விடக்கூடாது. இந்த நேரத்தை விட அந்த நேரம் நல்ல
நேரம், அந்த நேரத்தை விட இந்த நேரம் கெட்ட நேரம் என்று நேரத்தைப் பிரித்து செயல்படுகிறவர்கள்
நேரத்தை படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு கனத்தை கொடுக்க தவறுகிறார்கள்.
நேரத்தை தவற விடுவது சாதாரண விஷயம்தானே என்று
எண்ணிக்கொள்கிறவர்கள் ஒன்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும், தவற விட்ட நேரம் வாழ்வில்
திரும்பவும் வராது. தவற விட்ட நேரத்தில் கிடைக்க வேண்டிய நன்மை மறுபடியும் கிடைக்காது
என்பதை உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.
வேதாகமத்தில் அநேக இடங்களில் “ஏற்ற காலத்தில்’’
என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடியும். சரியாக குறித்த நேரத்தில் கர்த்தர்
எல்லாவற்றையும் செய்கிறார் என்று பொருள் படும் வகையிலேயே இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் என்ன? நேரத்தை நாமும் சரியாகப்
பயன்படுத்த வேண்டும் என்பதுதானே.
மத்தேயு 25:1-13 வரை உள்ள வேதபகுதியை வாசித்துப்பார்க்கும்
போது இரண்டு விதமான கூட்டத்தினரை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ஒன்று புத்தியுள்ளவர்கள்,
மற்றவர்கள் புத்தியில்லாதவர்கள்.
யார் புத்தியுள்ளவர்கள்? நேரத்தை அசட்டை
செய்யாமல் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்கள். புத்தியில்லாதவர்கள் நேரத்தை அசட்டை
செய்து அதைக்குறித்த கரிசனை அற்றவர்களாக சரியாகப் பயன்படுத்த தவறியவர்கள்.
இந்த சம்பவங்கள் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம்
வருகைக்கு காத்திருப்பவர்களை குறித்து எழுதப்பட்ட
சம்பவமாக இருப்பினும் இதிலிருந்தும் நாம் நேரத்தை எவ்விதம் பயன்படுத்த வேண்டும் என்ற
உண்மைகளையும் அறிந்து கொள்ள ஏதுவாகவே எழுதப்பட்டிருக்கிறது.
நேரத்தை தவற விடுதல் வாழ்வில் முன்னேற்றத்தை
தடை செய்யும். நேரத்தை தவற விடுதல் தேவனோடு உள்ள ஐக்கியத்தை குறைக்கும். நேரத்தை தவற
விடுதல் உண்மையில் இருந்து விலக செய்யும். நேரத்தை தவற விடுதல் ஒழுங்கீனமான செயலுக்கு
நேராக நடத்திச்செல்லும். நேரத்தை தவற விடுதல் நன்மைகளை கெடுக்கும்.
இவ்விதமாக நாம் நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே
போகலாம். முதலாவது நமது மனதில் நேரத்தை தவற விடுவது குற்றம் என்பது பதிய வேண்டும்.
பொதுவாகவே நமது தேசத்தில் நேரத்திற்கு முக்கியத்துவம்
கொடுப்பவர்கள் குறைவு. இதைவிட வேதனையான காரியம், கிறிஸ்துவை அறிந்தவர்கள் என்றும்,
நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்று சொல்லும் நமக்குள்ளும் நேரத்தை குறித்த சரியான
அறிவு இல்லாமல் இருப்பதே மிகவும் மோசமான விஷயம்.
ஏன் இப்படிப்பட்ட அவல நிலை? நமக்கு முன்மாதிரியாக
இருக்க வேண்டியவர்களே, மரியாதை என்று நினைத்து, நேரம் தவறி செல்லவேண்டிய இடங்களுக்கும்,
ஆராதனைக்கும் செல்வதுதான். இவ்விதம் செயல்படுவதால்
அதைப்பார்க்கும் இளைய தலைமுறையும் அப்படியானால் இதுதான் சரியான பழக்கமோ? சரியான நேரத்திற்கு
செல்வது மரியாதை இல்லாமல் போய்விடுமோ? என்று சிந்திக்கும் அளவிற்கு பிசாசு தந்திரமாக
சிலர் மூலமாக விளையாடிக்கொண்டிருக்கிறான். இதை அறியாத இளைய தலைமுறையும் தவறான பாதையில்
பயணிக்க முடிவு செய்து தங்கள் நன்மைகளை கெடுத்துக்கொள்கிறது.
இந்நாட்களில் சபை ஆராதனைகளில் நேரத்தை சரியாக
பயன்படுத்துகிறவர்கள் மிக மிக குறைவானவர்களே, ஆராதனையில் முழுமையாக பங்குபெறாமல் ஏனோ
தானோவென்று ஆராதனையில், ஜெபக்கூடுகைகளில் பங்கு பெறுவது தேவனை கனவீனப்படுத்தும் செயல்
என்பதை முதலாவது அறிந்து கொள்ள வேண்டும்.
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள நேரத்தில் சரியான
நேரத்திற்கு சென்று ஆராதனையில் பங்கு பெறுவதே
ஆசீர்வாதங்களுக்கு நேராக நம்மை நடத்தும். தேவனுக்கு கொடுக்கும் நேரத்தை சரியாக கொடுத்து
கனப்படுத்தாததும் ஆசீர்வாதத்திற்கு தடையாகும் என்பதையும் மறந்து விடக்கூடாது. இவைகள் எல்லாம் தெரியாததினாலேயே மக்கள் ஏனோதானோவென்று
இருந்து கொண்டு ஆராதனை ஒழுங்குக்குள் வருவதற்கு
மிகவும் தயங்குகிறார்கள்.
மேலும் ஆறு நாட்களில் உலகத்தைப்படைத்த தேவன்,
ஏழாம் நாளிலோ ஓய்ந்திருந்தார் என்று வேதம் கூறுகிறது. எனவே ஆறுநாட்கள் தங்கள் வேலைக்கும்,
தொழிலுக்கும், வியாபாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தேவனை ஆராதிப்பதற்கும்,
தொழுது கொள்வதவற்கும், ஓய்வெடுக்கவும் வாரத்தில் ஒரு நாளை விட்டுவிடுவது நாட்களை படைத்த
தேவனை மகிமைப்படுத்துவதாகும். அப்படிப்பட்டவர்களின் வாழ்வில் அவர்கள் செய்யும் காரியங்களை
கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார். அவர்கள் காரியசித்தியுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு
காலம், நேரம், நாட்கள் எல்லாம் நன்றாகவே இருக்கும்.
இவ்விதம் செய்யாதவர்கள் தங்கள் வாழ்வில்
எவ்வளவுதான் முயன்றாலும் குறைவுள்ளவர்களாகவே இருப்பார்கள். கர்த்தருடைய வார்த்தையின்படி
தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தையும் காலத்தையும், நாட்களையும் கொடுக்காமல் எவ்வளவு
பிரயாசப்பட்டு ஓடினாலும் அதில் முழுப்பலனையும் பெற்றுக்கொள்ள முடியாது.
அப்படிப்பட்டவர்கள் “எங்கள் தேவைகளுக்காகவே
நாங்கள் ஓய்வில்லாமல் ஓடுகிறோம்’’ என்று சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் தேவனுக்கு கொடுக்க
வேண்டிய நேரத்திலும் காலத்திலும், நாட்களிலும் தேவனைக்கனப்படுத்தாமல் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவே
முடியாது. தோல்விகள் மட்டுமே பரிசாக கிடைக்கும்.
சரியான நேரத்திற்கு ஆராதனையில் பங்கு பெறுகிறவர்களின்
சதவீதம் மிகவும் குறைந்து கொண்டே வருவது, நல்ல விஷயம் இல்லை. மேலும் அது தொடர்வது ஆவிக்குரிய
வாழ்வில் ஒழுங்கீனத்தையே காண்பிக்கும்.
சில இடங்களுக்கு செல்ல வேண்டிய நேரத்திற்கு
பல மணி நேரத்திற்கு முன்பாக சென்று காத்திருப்பதும், சில இடங்களுக்கு சரியான நேரத்திற்கு
செல்லாமல் பல மணி நேரங்கள் பின்தங்கி செல்வதும்தான் வாடிக்கையாகி விட்டது. குறித்த நேரத்திற்கு சரியாக செல்ல வேண்டும் என்ற
உணர்வே இல்லாமல் இருப்பதுவே இதற்கெல்லாம் காரணம்.
பல மணி நேரம் முன்பாக சென்று நேரத்தை வீணடிப்பதும்
தவறு, பல மணி நேரங்கள் தாமதமாக சென்று நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கனப்படுத்தாமல்
இருப்பதும் தவறு.
உண்மையை சொல்ல வேண்டுமானால் நானும் கூட நேரத்தின்
முக்கியத்துவத்தை அறியாதவனாகவும், உணராதவனாகவும்தான் இருந்தேன். அதை அறிந்து, உணர்ந்துகொள்ளும்
பொழுதுதான் நேரத்தின் முக்கியத்துவமும், நேரத்தை படைத்த தேவனுக்கு கனத்தை கொடுக்க வேண்டும்
என்பதும் புரிய ஆரம்பித்தது.
இதை நாம் அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும்
என்ற பாரத்துடனேயே இந்த செய்தியை எழுதுகிறேன். நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
ஆராதனை வேளைகள், ஜெப கூடுகைகள் எல்லாவற்றையும்
சரியான நேரத்தில் பயன்படுத்தி தேவனைக்கனப்படுத்த ஜெபத்துடன் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
கர்த்தர் தமது தயவுள்ள சித்தத்தின்படி நடத்துவாராக.
மற்றவர்கள் சரியாக நேரத்தைப் பயன்படுத்தாமல்
தாமதமாக ஒன்றை செய்கிறார்கள், நானும் அவ்விதமாகவே செயல்பட வேண்டும் என்ற எண்ணங்களை
உடைத்தெறிந்து விட்டு, நேரத்தை படைத்த தேவனுக்கு நாம் கனத்தை கொடுக்க வேண்டும் என்று
செயல்பட ஆரம்பித்து விட்டால் கர்த்தர் நமக்கு உதவி செய்து நாம் சரியாக நேரத்தை பயன்படுத்தி
ஆசீர்வதிக்கப்பட அதற்கு நேராக நடத்த ஆரம்பித்து விடுவார்.
நேரத்தை சரியாக பயன்படுத்துவதற்கு முன்,
“நான் நேரத்தை சரியாகப் பயன்படுத்தி தேவனுக்கு கனத்தை கொடுக்க வேண்டும்’’ என்ற எண்ணமே
நம்மை அந்த பாதையில் நடக்கச் செய்கிறது. அவ்விதம் நாம் நடக்கும் போது அதில் வெற்றியும்
பெற்று விடுவோம்.
நம்முடைய வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரங்களாக
மாறி விடும்.
0 comments:
Post a Comment