Bread of Life Church India

எதிரியின் அடையாளம்


நம்முடைய நண்பன் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பாக எதிரி யார்? என்பதை அறிந்திருக்க வேண்டும். எதிரியை இனம் கண்டு கொள்ளாதவன் போர்களத்தில் தோல்வியை சந்திப்பது நிச்சயம்.
இது யாருக்குதான் தெரியாது. புதிதாக எதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று சிலர் சொல்லுவது காதில் விழுகிறது. பொறுமையாக இருங்கள் அதைத்தான் சொல்லவருகிறேன். இன்றைக்கும் நம்மில் சிலர் நம்முடைய எதிரியை வெளியில் தேடிக்கொண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால் எதிரி நமக்கு வெளியில் இல்லை. ஆனால் நமக்கு உள்ளேதான் எதிரி தங்கி இருக்கிறான். அந்த எதிரியைத்தான் பரிசுத்த வேதாகமம் (பைபிள்) “பாவம்’’ என்று அடையாளப்படுத்தி காண்பிக்கிறது.

இருங்க, இருங்க உடனே பக்கத்தை மூடிவிடாதீங்க. உங்களை ஆய்வு செய்வதற்கும், நம்மை மறு ஆய்வு செய்வதற்கும்தான் இந்த பதிவு. “நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்’’ (ரோமர் 7:15). என்று வேதாகமம் மனிதனின் உள்ளத்தைக் குறித்து சொல்கிறது. வேதாகமம் சொல்கிறவைகள் நம்முடைய வாழ்க்கையைத்தான் படம் பிடித்து காண்பிக்கிறது. நமக்கே தெரியாமல் நம்முடைய உள்ளத்தையும், நம்முடைய வாழ்க்கை (யாருக்கும் தெரியாத அந்தரங்கம்) முழுவதையும் படம் பிடித்து காண்பித்தால் எப்படி இருக்குமோ, அதுதான் பரிசுத்த வேதாகமம். வேதாகமத்தில் நம்மை பார்க்கலாம்.
மனிதன் தான் பெற்ற வெற்றியை பறைசாற்றுவான். தன்னுடைய தோல்வியை யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடுவான். இது மனிதனின் இயற்கை குணம். இதில் ஒருவரையும் குற்றப்படுத்தி பயன் இல்லை. தோல்வியின் ஆரம்பம் எது என்று ஒருவன் கண்டு பிடித்து விட்டால் அவனை ஜெயிக்க ஒருவனாலும் முடியாது.
“நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது’’ (ரோமர் 7:18-20) என்று வேதாகமம் சொல்வதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் இதுதான் உண்மை. இப்பொழுது சிந்தித்து பாருங்கள். நீங்கள் உங்களை இயக்குகிறீர்களா? அல்லது உங்களுக்குள் இருந்து வேறு யாராவது இயக்குகிறார்களா?. நீங்க உள்ளத்தில் வேண்டாம் என்று நினைப்பவைகளை செயலில் செய்து விடுகிறீர்களா? உங்கள் இயக்கம் உங்களிடத்தில் இல்லை. நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று மனதில் தீர்மானிக்கிறீர்கள். ஆனால் செயல்படுத்த முடியவில்லையா? சந்தேகமே வேண்டாம். உங்கள் இயக்கம் உங்களிடத்தில் இல்லவே இல்லை. இந்த வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?. பரவாயில்லை தொடர்ந்து வாசியுங்கள்.  
எதிரி ஒருவன்தான். அந்த எதிரியின்செயல்பாடுகள் பல. அந்த  எதிரி பாவம் என்பதை அறிந்து கொண்டோம். அந்த பாவத்தின் செயல்பாடுகள் என்னென்ன அதின் செயல்பாடுகள் எப்படிப்பட்டது. அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.எதிரி எந்த வகையில் எல்லாம் செயல்படுகிறான் என்பதை முழுமையாக அறிந்தால்தான் வாழ்க்கையில் முழுவெற்றியை நம்மால் பெற்று அனுபவிக்கமுடியும். வாங்க சேர்ந்து தேடுவோம். எதற்கு என்று கேட்கிறீர்களா? அழிக்கத்தான்.
உணர்வுகளில் வெளிப்படும் எதிரி
     “மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனை தீட்டுப்படுத்தும்’’ (மாற்கு 7:20) என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். தீட்டுப்படுத்தும் என்ற வார்த்தைக்கு, வீழ்த்தும் அல்லது தோல்வியடைய செய்யும் என்பதுதான் நேரடி பொருள். எது எல்லாம் மனிதனுக்கு உள்ளாக இருந்து புறப்படுகிறது. கடுங்கோபம், (கண்டிக்கும் போது வெளிப்படுவது அல்ல) பொறாமை, கசப்பு, பொய், முறு முறுத்தல், எரிச்சல், சோம்பேறித்தனம், கோள்சொல்லுதல்., தற்பெருமை, தன்னலம், அவதூறு பேசுதல், பிறரை உதாசீனப்படுத்துதல், காம இச்சை, (தேவனின் நியமனத்துக்கு உட்பட்ட, குடும்ப வாழ்வில் ஈடுபடும் போது ஏற்படுவது அல்ல)  விரோதம். இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் உணர்வுகளில் இருந்து வெளிப்படுவது. இப்படிப்பட்ட பாவங்களை அறிந்து நாம் வீழ்த்தாவிட்டால் அது வேகமாக நம்மை அடிமைப்படுத்திவிடும் அல்லது வீழ்த்திவிடும். இது நுட்பமாக அறிந்து கொள்ள வேண்டியது. பிறரைப் பார்க்கும்போது நமக்கு “பளிச்’’ என்று தெரிந்து விடும் அல்லது கண்டுபிடித்து விடுவோம். இதில் ஆபத்து என்னவென்றால் நமக்குள் இருப்பது நமக்கு தெரியாமல் இருப்பதுதான். அதைவிட ஆபத்தானதும், தப்பிக்க முடியாததும் என்னவென்றால் இவை எல்லாம் நமக்குள் இருந்தும் “எனக்கு உள்ளே இதெல்லாம் இல்லை’’ என்ற எண்ணம்தான். இவ்வித எண்ணம் உள்ளவர்களுக்கு இயேசு கிறிஸ்து உதவி செய்ய முடியாது. பாவத்தை அறிக்கை செய்கிறவர்களுக்குதான் அவர் பாவங்களை மன்னித்து, அப்படிப்பட்ட பாவத்திலிருந்து தூக்கி விடுகிறார். “நான் மற்றவர்களைப் பார்த்து பாவிகள், என்று சொல்வதால் எனக்கு எந்த பயனும் இல்லை. எனக்குள் இருக்கும் பாவத்தை அறிந்து, அல்லது கண்டு பிடித்து அதிலிருந்து விடுபட இயேசு கிறிஸ்துவை நான் சார்ந்து கொள்ளும் போது, அதுதான் எனக்கு பலனை கொடுக்கும். இதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.
ஒழுக்கத்தை கெடுக்கும் எதிரி
     சிலர் வசதியாகமனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனை தீட்டுப்படுத்தும்’’ என்ற வார்த்தையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, குடிப்பது, சிகரெட், பீடி புகைப்பது, போதையூட்டும் லகரி பொருள்களைப் பயன்படுத்துவது, விரோதித்து சண்டையிடுதல், அடித்தல், களியாட்டுக்கள், தேவையற்ற வார்த்தைகளால் திட்டுதல், மற்றவர்களை முகம் சுருங்க செய்யும் வார்த்தைகள். (கெட்ட வார்த்தைகள்) இது போன்ற காரியங்களை நியாயப்படுத்தி பேசுவார்கள். தனி மனித ஒழுக்கத்தை தேவன் அதிகமாக எதிர்பார்க்கிறார். இது போன்ற செயல்களை நாகரீகம் என்றும், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் செயல் என்றும் சொல்லிக்கொண்டு, நமது ஒழுக்கத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது.
     ஒழுங்கீனமான செயல்கள் எல்லாம் பாவமே. இதில் சாட்டு போக்கு சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. தங்களை தலைவர்கள், முன்மாதிரி என்று காண்பிக்கிறவர்களையும் கெடுக்கும் எதிரிதான் இவைகள் எல்லாம். விளையாட்டாக ஆரம்பித்து, சிலருடைய வாழ்க்கையையே அழித்த பெருமை இவ்வித ஒழுங்கீனமான எதிரிக்கு உண்டு. தங்கள் பாரம்பரியங்களை காக்க போராடுகிறவர்களும், கலாச்சார சீர்கேட்டை பேசுகிறவர்களும், மக்களை முன்நின்று நடத்த முயற்சிப்பவர்களும் கூட இந்த பொல்லாத எதிரியின் தாக்குதலுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை தரக்கூடியதாக இருக்கிறது. இதெல்லாம் சட்டம் போட்டு திருத்தக் கூடியதோ, கண்டித்து திருத்தக்கூடியதோ அல்ல, ஒழுக்கம் தானாக வரக்கூடியது.
     ஒழுங்கீனமான இப்படிப்பட்ட செயல்களை செய்ய வைக்கும் இந்த பாவ அடிமைத்தனம் என்ற எதிரியையும் வீழ்த்த நமக்கு எல்லா விதத்திலும் உதவி செய்ய இயேசு கிறிஸ்து தயாராக இருக்கிறார். இதில் இருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணமும், அதற்குண்டான செயல்களும் இருந்தால் போதும். மற்றதை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பார்த்துக்கொள்வார். தனி மனித ஒழுக்கம் நம்மை மட்டும் அல்ல, நமது குடும்பத்தையும்,  நமது தேசத்தையும், முன்னேற்றப்பாதையில் நடத்தும். “நான் எல்லாம் முழு நேர குடிகாரனோ, புகைப்பிடிக்கிறவனோ, லகரி பொருள்களை பயன்படுத்துகிறவனோ, களியாட்டில் ஈடுபடுகிறவனோ இல்லை. எப்போதாவது, சில பண்டிகை நேரத்தில், நண்பர்களோடு இணைந்திருக்கும் சமயத்தில், சுற்றுலா செல்கிற வேளைகளில் மட்டும்தான். மற்ற படியெல்லாம் இல்லை’’ என்று தங்களை நியாயப்படுத்துகிறவர்களும் உண்டு. எப்படி பார்த்தாலும் எதிரி, எதிரிதான். அவன் வீழ்த்துவதற்கு தயாராக இருக்கிறான் என்பதை மறுக்க முடியாது. வீழ்த்துவதற்கு சரியான வேளையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. எதிரி என்று தெரிந்தால் முந்தி அடித்து வீழ்த்துவதே மிக மிக நல்லது.

பாலியல் உறவில் செயல்படும் எதிரி
    
     தனிமனிதன், தேசம் கடந்து உலகம் முழுவதும் வேகமாக பரவிகொண்டிருக்கும் எதிரி. உணர்விலிருந்து வெளிப்பட்டு, செயலில் வெளிப்படும் எதிரி. இது ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற தேவனுடைய முறைமைகளை உடைத்து, விபச்சாரம், ஓரின சேர்க்கை, திருமணத்திற்கு முன் பாலியல் உறவில் ஈடுபடுதல், போன்ற இவ்வித வழிகளில் செயல்படும் எதிரியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
     இந்த எதிரி எதிரில் இருந்தும் தாக்குவான். மறைந்திருந்தும் தாக்குவான். இந்த எதிரியின் தாக்குதல் முதலில் உணர்வுகளில்தான் இருக்கும். அதனால்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லும் போது, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று’’ ( மத்தேயு 5:28). சிந்தையில் வரும் போதே நம் தாக்குதலுக்கு தயாராகி அவனை வீழ்த்தி விடவேண்டும். இல்லாவிட்டால் நம்மை செயல்படவைத்து வீழ்த்தி விடுவான் என்று கூறுகிறார்.
     போரிடுவதில் பல வகைகள் உண்டு. நேருக்கு நேர் நின்று போரிடுவதுதான் ஒரு போர்வீரனுக்கு பெருமை. ஒரு சில யுத்தத்தில் நிற்பதை விட ஓடி விடுவதுதான் தற்காப்பானது. போர் வீரன் வீரனாக இருப்பது மட்டும் எல்லா நேரமும் வெற்றியை கொடுக்காது. விவேகம் உள்ளவனாக இருப்பதும் அவசியம். இந்த எதிரியை நேருக்கு நேர் நின்று ஜெயித்தவர்களைவிட, விவேகமாக ஓடி தப்பித்தவர்களே அதிகமாக ஜெயித்திருக்கிறார்கள். நாமும் இந்த வழியில் சென்றுதான் வெற்றி பெற்றாக வேண்டும்.
சமுதாய முறையில் செயல்படும் எதிரி
     மற்றவரை ஏமாற்றுதல், திருடுதல், லஞ்சம் பெறுதல்,தன் கடமையை செய்ய மறுத்தல், சட்டத்தை மீறுதல், பயமுறுத்துதல், நியாயமாய் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டியதை தட்டிப்பறித்தல், மற்றவரை குற்றம் சாட்டுதல், உதவி செய்ய முடிந்தாலும் உதவி செய்யாமல் இருத்தல் இது போன்ற செயல்கள் எல்லாம், சமுதாய ரீதியில் செயல்படக்கூடிய எதிரி. இந்த வகையில் செயல்படும் எதிரி மிக மிக தந்திரமானவன். நம்முடைய சூழ்நிலைகளை காண்பித்தே நம்மை அதிகமாக இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட செய்து, வீழ்த்தப்பார்ப்பான். மேலும் “அவர்களை பார் அவர்களை விட நீ உத்தமனா? பிழைக்க தெரியாத முட்டாள். இது போன்ற வார்த்தைகளை சிலர் மூலமாக பேசவைத்து நம்மை தன்வசப்படுத்தவும் பார்ப்பான். இவன் விரிக்கும் வலை நமக்கு லாபத்தை கொடுப்பது போலவும், நம்மை உயர்த்துவது போலவும் தெரிந்தாலும், அது ஒரு மாய தோற்றமே தவிர உண்மை இல்லை. இந்த எதிரியையும் மிகவும் கவனமாக எதிர்கொள்ளவேண்டும். இல்லை என்றால் எதாவது ஒருவகையில் வீழ்த்திவிடுவான். இப்படிப்பட்ட பாவம் என்ற எதிரியை தலை தூக்கவிடாமல் தொடர் தாக்குதலால் அடித்து வீழ்த்தவேண்டும். அருகில் வராதபடி விரட்டி அடித்துக்கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் தப்பித்துக்கொள்ள முடியும். இதற்கு இயேசு கிறிஸ்து நமக்கு பாதுகாப்பாக இருக்கிறார். அவருடைய வார்த்தைகள் நமக்கு ஆயுதங்களாக இருக்கிறது.
வழிபாடுகள் மூலம் செயல்படும் எதிரி
சிலை வழிபாடு, இயற்கை வழிபாடு, குரு வழிபாடு, பய வழிபாடு, மனிதனை தெய்வமாக வழிபடுதல், இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை மறுதலித்தல், கடவுள் மறுப்பு, இப்படிப்பட்ட வகையில் செயல்படுவதும் பாவம்தான். இவ்வகை எதிரியையும் நாம் அடையாளம் கண்டு கொள்வது நல்லது. இவ்வகை எதிரி நமது உலக வாழ்க்கைக்கும், முடிவில்லா (நித்தியமான) வாழ்க்கைக்கும் எதிராக செயல்படக்கூடியவன். முக்கியமாக நாம் நித்திய வாழ்க்கைக்கு போகாமல் நம்மை தடுத்து, நித்திய அழிவுக்கு நேராக கொண்டு செல்வதே, இந்த எதிரியின் இலக்காகும்.
அதற்காக எப்படிப்பட்ட செயலை செய்யவும், இந்த எதிரி தயங்குவதில்லை. இவனுடைய தாக்குதல்கள் எல்லாம் நேரடியாக இருக்காது. எல்லாமே மறைமுக தாக்குதல்கள்தான். உதாரணமாக மோதல்கள், கலவரங்கள், மனிதர்களுக்கு, மனிதர் சகோதரத்துவத்தை கெடுத்தல், குழப்பத்தை ஏற்படுத்துதல், அதிகாரத்தை தன்வசப்படுத்துதல் என்று இவனின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே போகும். இந்த எதிரியோடு யுத்தம் செய்யும் போது நமக்கு எதிராக நம்முடைய நண்பர்களையும், நம்முடைய சகோதரர்களையும், நமது சொந்த பந்தங்களையும் கூட தனது ஆயுதமாக பயன்படுத்தி நமக்கு எதிராக திருப்பி விடுவான். இந்த எதிரியோடு தாக்குதல்களில் ஈடுபடும் முன் இயேசு கிறிஸ்துவின் துணை நமக்கு மிக மிக அவசியம். நம்முடைய சுயமான தாக்குதல்கள் நமக்கு பாதிப்பையும், பயங்கரத்தையும் ஏற்படுத்திவிடும்.
எனவே இப்படிப்பட்ட பலவகைகளில் தனி மனிதனாகிய நமக்குள் செயல்படும் எதிரிகளையும்
இதனுடைய செயல்பாடுகளையும் அறிந்து, வீரத்துடனும், விவேகத்துடனும் நாம் அணுகும் போது மட்டும்தான், உண்மையான வெற்றி வாழ்க்கை நமக்கு சாத்தியமாகும். நித்திய வாழ்க்கை உறுதியாகும்.

 
    

0 comments:

Post a Comment

விடை தேடும் கேள்விகள்