Bread of Life Church India

ஐயோ! யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்!


காலை முதல் அந்த ஊரே பரபரப்பாக இருந்தது. அரண்மனை பெரியவரின் பிறந்த நாள் என்பதால் ஊரில் உள்ள அனைவரும் அரண்மனையில் குவிய ஆரம்பித்தனர். சிறுவர்களும், சிறுமிகளும் அங்கும் இங்கும் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். குதிரை வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும், வெளி ஊர்களில் இருந்தும் மக்கள் வந்த வண்ணமாக இருந்தனர். “சிறு விஷயமாக இருந்தாலும் விழா எடுத்து அமர்களப்படுத்தும் பெரியவர், தனது பிறந்த நாளை சாதாரணமாக கொண்டாடுவாரா? அதுதான் இந்த பரபரப்புக்கு காரணம்’’ என்று இருவர் பேசிக்கொண்டனர்.
தன்னுடைய மனைவி பிள்ளைகள், ஐந்து சகோதரர்கள் சூழ்ந்து நிற்க சுற்று வட்டாரத்தில் ஒருவரும் அணிந்திராத விலை உயர்ந்த உடை அணிந்து, கம்பீரத் தோற்றத்துடன்  காட்சியளித்தார் அப்பெரியவர். கொண்டாட்டம் உச்சகட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது. எல்லோரும் விருந்து சாலைக்கு செல்ல ஆரம்பித்தனர். சிலர் மதுபான சாலைக்கு சென்று கொண்டிருந்தனர். விருந்து பலவகை பலகாரங்களுடன், எல்லாவகை உணவுகளும் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது.
இந்த வேளையில் அரண்மனை வாசலின் வெளியே, லாசரு என்னும் பெயர் கொண்ட மனிதன் வந்து நின்றான். அவனது தலைமுதல் கால் வரை, உடல் முழுவதும் புண்ணாக இருந்ததால், அரண்மனை காவலாளி அவனை வாயில் அருகில் கூட நெருங்க விடாதபடி துரத்தி விட்டான். குப்பைகள் கொட்டும் இடத்தில் அமர்ந்து கொண்டு,  ஈக்கள் மொய்க்காமலும், நாய்கள் நக்காமலும் இருக்க, போர்வையால் தனது உடல் முழுவதும் போர்த்திக்கொண்டான். அரண்மனையில் இருந்து வரும் உணவு வாசனை மூச்சை அடைக்க, பசியாய் இருந்த வயிறு இன்னும் துடிக்க, எப்படியும் சிலர் வைக்கும் மிச்ச உணவு இங்கே வந்து விழும். அதில் தன்னுடைய பசியை ஆற்றிவிடலாம் என்ற நினைவில் அவன் அங்கே ஆவலோடு அமர்ந்திருந்தான். 'ஆனால் இந்த நாய்கள் விடாது போல இருக்கிறதே. பரவாயில்லை. இன்று இந்த நாய்களா? அல்லது நானா? என்று ஒரு கை பார்த்து விடலாம். முதல் பந்தி முடிந்து விட்டது போல் தெரிகிறதே. அதோ மீதியானவைகளை எடுத்து வருகிறார்கள். விடக்கூடாது.  பசி வயிற்றை கிள்ளுகிறது. இதே போன்று சென்ற முறை நடந்த விருந்தில், இந்த நாய்கள் முந்திக்கொண்ட.' ஆனால் இன்று விடக்கூடாது என்று நினைத்து கொண்டே தயாராக நின்று கொண்டிருந்தான்.
விருந்து முடித்த சிலர், பெரியவரிடம் சென்று பரிசு பொருள்களை கொடுக்க சென்ற போது, “எனக்கு ஏன் பரிசு பொருள்களை கொண்டு வந்தீர்கள். எனக்கு இருக்கும் பொருள்களையும் சொத்துக்களையும் வைக்கவே இடம் இல்லை. நான் தான் முன்பதாகவே சொல்லி இருக்கிறேனே, எந்த ஒரு பரிசு பொருள்களும் கொண்டுவரக்கூடாது என்று, பின்பு ஏன் கொண்டு வந்தீர்கள்’’ என்று கேட்டுக்கொண்டே தன்னைப்போல அரண்மனைவாசிகள் கொடுத்ததை வாங்கி தன் அருகில் இருக்கும் உதவியாளனிடம் கொடுத்தார்.
அப்பொழுது ஒரு நபர் “எல்லாம் கடவுள் உங்களுக்கு கொடுத்தது, இன்னும் உங்களுக்கு கொடுப்பார். ஆயுசு நாட்களையும் கடவுள் உங்களுக்கு கூட்டி தருவார். உங்களை ஆசீர்வதிப்பார்’’ என்று வாழ்த்த, பலத்த சிரிப்புடன் “என்ன கடவுள் எனக்கு கொடுத்ததா?  எனக்கு இருக்கும் வசதிக்கு நான் ஆயிரம் கடவுள்களை உருவாக்குவேன். என்னைக் கடவுள் ஆசீர்வதிப்பதா? ’’ என்று மதுவின் போதை அதிகமானதால் தள்ளாடிக்கொண்டே தனது உதவியாளனின் துணையுடன் படுக்கைக்கு சென்றார்.
விருந்து முடிந்து ஒவ்வொருவராக கலைந்து செல்ல, காலைமுதல் இருந்த பரபரப்பு சற்று அடங்க ஆரம்பித்தது. வெளியே லாசரு, நாய்களோடு சண்டையிட்டு சேகரித்த மிச்ச உணவுகளை எடுத்துக்கொண்டு, மறுபடியும் நாய்கள் வந்து தனக்கு தொல்லை கொடுக்காத படிக்கு சற்று தூரத்தில் அமர்ந்து, இன்றைக்கு இந்த உணவை கிடைக்கச் செய்த கடவுளுக்கு உள்ளத்துக்குள்ளாக நன்றி செலுத்திக்கொண்டே "என்னைப்போல எத்தனையோபேர் உணவு இல்லாமல் கஷ்டபடுவார்கள். அவர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும்’’என்று கடவுளிடம் பிராத்தனை செய்து விட்டு, பசியால் அலறிக்கொண்டிருந்த தனது வயிற்றை ஆற்ற ஆரம்பித்தான்.
நாட்கள் வேகமாக சுழல ஆரம்பித்த. அரண்மனைப் பெரியவர் வியாதிப்பட்டு, உடல் மெலிந்து காணப்பட்டார். எத்தனையோ வைத்தியர்கள், எவ்வளவோ மருந்து கொடுத்தும் ஒன்றும் பலன் அளிக்கவில்லை. பெரியவர் இறந்து போனார். அந்த செய்தி காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மிட்டா மிராசுகளும், அரண்மனைக்காரர்களும். ஊர் பெரியவர்கள் முதல் சாதாரண குடிமகன்வரை எல்லோராலும் அரண்மனை முழுவதும் நிறைந்து, கண்ணுக்கு தெரிந்த தூரம் மட்டும் மக்கள் தலைகளாக இருந்தன. அழுகை ஓலங்கள் ஒரு பக்கம் இருக்க, பெரியவருக்கு மிகவும் நெருங்கியவர்கள் இறுதி ஊர்வலத்திற்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர். “எப்படி இருந்த மனுஷன் இப்படி பொசுக்குன்னு போய்ட்டாரே’’ என்று ஒருவர் சொல்ல “ஆங் மனுஷனுடைய ஆயுசு அம்புட்டுத்தேன். எல்லாம் கடவுள் கையில் இருக்கு’’ என்று இன்னொருவர் சொல்ல, ஆங்காங்கே நின்று ஊர் பெரியவர்களில் சிலர் இப்படியாக கிசு கிசுத்துக்கொண்டிருந்தனர்.
அதே நாளில் மிகுந்த ஏழையாய், பல வருடங்கள் தன் சரீரத்தில் கொடிய பருக்களால் நிறைந்து, உடல் முழுவதும் புண்ணாகி இருந்த லாசருவும் இறந்து போனான். ஊர் முழுவதும் அரண்மணை பெரியவரின் இறப்பில் இருந்ததால், ஒருவராலும் கவனிக்கப்படாதபடிக்கு, லாசரின் உடல் தன்னந் தனியே ஊருக்கு ஒதுக்குப்புற சாலையில் கிடந்தது.
பொழுது அடைந்து கொண்டிருந்த நேரம். “என்னப்பா ஆகவேண்டியத பாருங்க, பொழுது போய்க்கொண்டிருக்கிறது என்று முக்கியமான நபர் சொல்ல, இறுதி ஊர்வலத்திற்கு தயாரானது, அரண்மனை பெரியவரின்  உடல், மிகப்பெரிய ஊர்தியில் பூக்களால் அலங்கரித்து, மேளதாள முழக்கத்துடன் உறவினர் முன் செல்ல, ஊரே பின் செல்ல, இறுதி ஊர்வலம் செல்ல ஆரம்பித்தது.
நல்ல படியாக அடக்கம் செய்து முடிந்து, அவரவர் தங்கள் வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். நாள் முழுவதும் அரண்மனையில் இருந்ததால் தங்கள் வேலைகளில் ஈடுபட ஆரம்பிக்கும் நேரம்.  ஏழை லாசரு இறந்து கிடக்கிறான் என்ற செய்தி கேட்டு, நமக்கு ஏன் வீண் வேலை என்று சிலர், தெரிந்தும் தெரியாதது போல் தங்கள் வேலைகளை கவனிக்க, சிலர் “ஏப்பா செத்த பொணத்த அப்படியே போட்டா, நாய்கள் அங்க இங்க இழுத்துப்போட்டு, நாறிக்கிட்டு கிடக்கும். அவனுக்குன்னு யார் இருக்கா, என்ன பாவம் பண்ணினானோ, படுபாவிப்பய அவன தொட்டாக்கூட அந்த பாவம் நம்மையும் பிடித்துக்கொள்ளும், ம் என்ன செய்ய வாங்க, ஊரத்தாண்டி ஒரு குழியவெட்டி பொதைப்போம்’’ என்று அழைக்க நான்கு, ஐந்து பேர் சேர்ந்து, ஊருக்கு வெளியே குழி வெட்டி புதைத்தார்கள்.
அங்கே அவ்விதமாக நடந்து கொண்டிருக்க, லாசரு இறந்ததும் கடவுளுடைய தூதர்களால் அவனுடைய ஆத்மா கொண்டு செல்லப்பட்டு, கடவுள் இறந்தவர்களுக்காக வைத்திருந்த இளைப்பாறுதல் ஸ்தலத்தில், ஆபிரகாமின் மடியில் போய் விடப்பட்டான்.
அந்த அரண்மனை பெரியவரின் ஆத்துமாவோ, பாதாளம் என்று சொல்லப்பட்ட, எப்போதும் எரிந்து கொண்டிருந்த அக்கினிஜூவாலையின் நடுவில் போடப்பட்டது. அக்கினியின் நடுவில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அந்தப் பெரியவர், தூரத்தில் ஆபிரகாமின் மடியில் இருக்கும் லாசருவைப் பார்த்தார். அவரால் நம்ப முடியவில்லை. மறுபடியும் உற்று பார்த்தார். இப்பொழுது தன்னுடைய சந்தேகம் நீங்க, “லாசருவேதான். எனது அரண்மனை வாசலில் அருவெறுப்பாக நாய்களோடு, நாயாக கிடந்தவன். ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தவன். ஊரே இவனைக் கண்டால் வெறுக்கும். நான் இவனை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன். இவன் எப்படி ஆபிரகாமின் மடியில் இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டே, “தகப்பனான ஆபிரகாமே, இந்த அக்கினி ஜூவாலையில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன். தயவு செய்து லாசருவின் கையில் கொஞ்சம் தண்ணீர் கொடுத்து விடுங்கள். தாகத்தால் என்னுடைய நாவு வறண்டு இருக்கிறது என்று அழுதுகொண்டே, சத்தமிட்டு கூப்பிட்டார்.
அதற்கு ஆபிரகாம் நீ பூமியில் இருந்த நாட்களில் உனக்கு இருந்த வசதி வாய்ப்புக்களை உனக்காகவே செலவு செய்தாய். தினந்தோறும் குடித்து வெறித்து ஆடம்பரமாக வாழ்ந்தாய். கடவுளை குறித்த எண்ணம் உனக்கு துளி அளவு கூட இருக்கவில்லை. உன்னைப்படைத்த தெய்வத்தை உதாசீன படுத்தினாய். உனது அரண்மனை வாசலிலேயே வியாதி உள்ளவனாக, பசியோடு ஆதரவற்ற நிலையில் இருந்த  இந்த லாசருவுக்கு நீ உதவி செய்ய வில்லை. அது மட்டுமா இவனை கேவலமாக எண்ணினாய். ஆனால் லாசரு ஏழையாக, மற்ற மனிதர்களால் மதிக்கப்படாதவனாக, எவ்வளவு கஷ்டத்தின் நடுவில் வாழ்ந்தான். அந்த வேதனையின் மத்தியிலும், தன்னைப் படைத்த கடவுளை அறிந்திருந்தான். கடவுளின் இரட்சிப்பை பெற்றுக்கொண்டான். பூமியில் வாழ்வது கொஞ்ச காலம்தான். ஆனால் நித்திய நித்தியமாக பரலோகத்தில் தான் வாழப்போகிறோம், என்பதை தெரிந்து அதன்படியாக கஷ்டத்திலும் கடவுள் என்னோடு இருக்கிறார் என்ற விசுவாசத்துடன் வாழ்ந்தான். இப்போது அதன்படியாக நன்மையை பெற்றிருக்கிறான். அதே போல நீயும் பூமியிலேயே கடவுளை அறிந்து, கடவுளின் வார்த்தையின் படி வாழ்ந்து, நித்திய பரலோக வாழ்வை எதிர்பார்த்து இருந்திருக்க வேண்டும். ஆனால் நீயோ இறந்த பின் இருக்கும் இந்த வாழ்வை குறித்தும் கடவுளை குறித்தும் அறிந்து கொள்ள வில்லை. இப்பொழுது நீ கதறி அழுது எந்த பயனும் இல்லை. இனி நீ பூமியில் வாழ்ந்த நாட்களையே நினைத்துக்கொள். இனி முடிவில்லா காலம் வேதனைதான் வேறு வழியில்லை. ஏன் என்றால் நீ இருக்கும் இடத்திற்கும், நாங்கள் இருக்கும் இடத்திற்கும் நடுவில் மிக பெரிய பிளவு உண்டு. இங்கு இருப்பவர்கள் அங்கேயோ, அங்கு இருப்பவர்கள் இங்கேயோ வரவோ, போகவோ முடியாது." என்று சொன்னார்.
அப்பொழுது அரண்மனை பெரியவர், “ஐயோ! யாரும் இந்த இடத்திற்கு வந்து விடக்கூடாது. பூமியில் இருக்கும் எனது மனைவி பிள்ளைகள், மற்றும் எனது ஐந்து உடன் பிறந்த சகோதரர்களும் என்னைப்போலவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இந்த வேதனை உள்ள இடத்திற்கு வந்துவிடக்கூடாது. என் குடும்பத்தினர்களுக்கு இப்படிப்பட்ட வேதனை உள்ள இடத்தை குறித்து, சொல்லி எச்சரிக்க லாசருவை பூமிக்கு அனுப்பி விடுங்கள்.’’ என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.
ஆபிரகாம் பதிலுக்கு, “பூமியில் பாவத்தையும், நீதியையும் குறித்து கண்டித்து உணர்த்தி, பரலோகத்தையும், நரகத்தையும் சொல்லி, கர்த்தரின் இரட்சிப்பையும், பரலோகத்துக்கு வரும் வழியையும் சொல்ல, பரிசுத்த வேதாகமம் (பைபிள்) உண்டு. அதை எடுத்துச் சொல்ல கர்த்தரின்  ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை அவர்கள் கேட்கட்டும்’’ என்றார்.
அதற்கு அவர், “அப்படியல்ல என் தகப்பனே, மரித்தோரில் இருந்து ஒருவர் போய் சொன்னால் எல்லோரும் பயந்து, மனந்திரும்புவார்கள் அல்லவா? அதற்காகத்தான் சொன்னேன்’’ என்றார். “கர்த்தரின் இரட்சிப்பையும். பைபிள்  வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் பாவத்திலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னைப்போல உள்ள மனிதர்கள், மரித்தோரில் இருந்து ஒருவர் போய் சொன்னாலும், ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்பவும் மாட்டார்கள். நீ யோசித்து பார். உனது வாழ்நாளில் கர்த்தரின் ஊழியக்காரர்கள்  எத்தனை பேர் வந்து, உன்னை எச்சரித்து,  உனக்கு இரட்சிப்பின் வழியை குறித்து சொல்லி, கர்த்தரை ஏற்றுக்கொண்டு, உன் பாவம் நீங்க அவரை விசுவாசித்து, அவருடைய வார்த்தையின் படியாக வாழவேண்டும் என்று சொன்னார்கள். நீ கேட்டாயா? அல்லது கேட்கும் மனநிலையில் தான் இருந்தாயா? அது மட்டுமா? அப்படி சொன்னவர்களை நீ என்ன செய்திருக்கிறாய் நினைத்துபார். உனக்கு இருந்த செல்வ செழிப்பினாலும், அதிகாரத்தினாலும், என்னை விட மேலானவர் ஒருவரும் இல்லை என்ற கர்வத்தில் அல்லவா வாழ்ந்தாய்’’ என்று ஆபிரகாம் சொல்ல சொல்ல வேதனையில் கதறிக்கொண்டே தன் நினைவுகள் பின்னோக்கி சுழல “எல்லாம் முடிந்தது. இனி என்ன நினைத்து என்ன ஆக போகிறது, இந்த இடத்திற்கு இனி ஒருவரும் வரக்கூடாது. வரவேகூடாது'. என்று துடித்துக்கொண்டே, "இப்படி பாதாளக் குழியில் வந்து விழுந்து விட்டேனே ஐயோ! இனி யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்!’’ என்று கத்திக்கொண்டே, பாதாள தீயில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது  அரண்மனைக்காரனாய் பூமியில் செல்வ செழிப்போடு வாழ்ந்த ஆத்துமா.


 - லூக்கா 16:19 முதல் 31 ல் உள்ள வேத பகுதியில் இருந்து....கதை வடிவில்


PDF ல் பதிவிறக்கம் செய்து படிக்க


0 comments:

Post a Comment