Bread of Life Church India

இந்த நிலைமை வேண்டாமே


இரவு நன்றாக தூங்கி, காலை எழும்பினேன். எழுந்தது முதல் உள்ளத்தில் நின்ற நினைவுகள் வேறு எதையும் சிந்திக்க விடாமல் அந்த நினைவுகளிலேயே உள்ளம் நிறைந்திருந்தது.  அதிலிருந்து விடுபடமுடியாமல் அதையே சுற்றிக்கொண்டிருக்கிறது உள்மனம்.
ஏன் இந்த நினைவுகளின் தாக்கம். அந்த நினைவுக்குள் இருப்பது எது? மறுபடியும் தனிமையில் சிந்திக்கலானேன். இரவில் தூங்கும் போது கண்ட கனவு முன்பாக வர ஆரம்பித்தது. அந்த கனவில் நான் ஒரு திருச்சபையில் நிற்கிறேன். ஆராதனை துவங்கும் நேரம் எனது அருகில் ஆராதனையில் மிகவும் பிரபலமான ஒரு தேவ ஊழியர் நிற்கிறார். மக்கள் ஆராதனையில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். நேரம் சென்று கொண்டே இருக்கிறது.
அப்பொழுது ஆராதனைக்கு வேண்டிய எல்லாவித ஆயத்த வேலைகளையும் சில சகோதரர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். சிலர் திருச்சபை கட்டிடத்தை  மிகவும் அழகாக அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள். பேசுவதற்காக மைக் நன்றாக வேலை செய்கிறதா என்று பரிசோதித்து வைக்கப்படுகிறது. ஆராதனை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய கேமராக்கள் பொருத்தப்பட்டது. பிரபல ஊழியரால் தற்போது வெளியிடப்பட்ட பாடல் ஒலிபெருக்கியில்  ஒலித்துக்கொண்டிருந்தது. மக்கள் தற்போது திரள் கூட்டமாக கூடிவிட்டார்கள். எல்லோரும் ஆராதனை எப்போது துவங்கும் என்ற ஆவலில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆராதனை துவங்கும் நேரம் கடந்து கொண்டே இருந்தது. ஆராதனையை துவங்க ஒருவரும் முன் வரவில்லை என்பதை அறிந்த நான் “நாம் ஆராதனையை துவக்கலாம்’’ என்று கையில் மைக் எடுத்தேன். ஒரு சகோதரன் வேகமாக ஓடி வந்து “ஐயா  இது புதிதாக வந்திருக்கும் பாடல் CD இன்னும் இரண்டு பாடல் கேட்கலாம் அதன் பின் ஆராதனையை துவக்கலாம்’’ என்றார். உடனே நான் அருகில் இருந்த பிரபல ஆராதனை ஊழியரை பார்த்தேன். அவர் என்னை பார்த்து சிரித்து கொண்டே இன்னும் சிறிது நேரம் ஆகட்டும் என்றார்.
இன்னும் நேரம் கடந்து கொண்டே இருந்தது. இன்னும் திருச்சபையை அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள். மக்களுடைய முகத்தை பார்த்தேன். ஒவ்வொருவருடைய கண்களிலும் ஆராதனை எப்போது துவங்கும் என்ற கேள்வியும், கொஞ்சம் கோபமும் தெரிந்தது ஆனால் ஒருவரும் அதை வெளியில் காண்பித்துக்கொள்ளவில்லை.
சிறிது நேரம் கடந்ததும் எல்லா அலங்காரங்களும், ஆராதனையை படம்பிடிக்கவும், பதிவு செய்யவும் வேண்டிய எல்லா கருவிகளையும் பொருத்திவிட்டார்கள். நேரம் மிகவும் கடந்து போய்விட்டது. எல்லாம் தயாராக இருக்கிறது, இப்போது  ஆராதனையை ஆரம்பிக்கலாம் என்று கையில் மைக் எடுத்து ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பிக்கும் போது, அந்த வேளையில் மக்கள் ஒவ்வொருவராக திருச்சபையை விட்டு வெளியே போக ஆரம்பித்தார்கள். நான் திகைத்து நின்றேன். “தயவு செய்து யாரும் வெளியே போகவேண்டாம் ஆராதனை துவங்கிவிட்டது’’ என்று அறிவிப்பு செய்தும் மக்கள் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் கலைந்து சென்று கொண்டே இருந்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் கூடி இருந்த அனைவரும் சென்று விட்டனர். எனக்கு என்ன நடக்கிறது. நாம் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தேன்.
திருச்சபையை சுற்றி பார்த்தேன். நன்றாக அலங்கரிக்கப்பட்டு, எல்லாம் நிறைவாக இருந்தது. ஆனால் ஆவலோடு வந்த மக்கள் கூட்டம் இல்லை. சுற்று முற்றும் பார்த்தேன். எனது அருகில் இருந்த பிரபல ஊழியரையும் காணவில்லை. மக்கள் சென்றதும் அவரும் சென்று விட்டார். நான் அங்கும் இங்கும் ஓடினேன்.
கனவு கலைந்தது எனது இருதயம் கனத்திருக்கிறது. என்னவாக இருக்கும் ஏன் இப்படி நடந்தது. எது முக்கியமோ அதை விட்டு விட்டு முக்கியம் இல்லாததை முக்கியபடுத்திக்கொண்டிருக்கிறதோ? தற்கால கிறிஸ்தவ சமுதாயம். நானும் அதில் ஒருவனாக இருக்கிறேனா?  சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் மனம் வலிக்கிறது.  

0 comments:

Post a Comment