Bread of Life Church India

மனு குலத்தின் முதற்கொலை




சூரியன் மறைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் உலகத்தின் முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் பாலை நிலத்தில் நடந்து கொண்டிருந்தனர். இருவருடைய முகத்திலும் பயமும், திகிலும் நிறைந்திருந்தது, சோகத்தால் மிகவும் வாடிப் போன நிலையில் இருந்தனர். "எப்படி இருந்த நமது வாழ்க்கை இப்படி ஆகி விட்டது. நாம் செய்த முட்டாள் தனமான செயலால்தானே நாம் இந்த நிலைக்கு ஆளானோம். ஒரு நிமிடம் யோசித்து இருந்தால் கடவுளின் தோட்டமான ஏதேனை விட்டு வெளியே துரத்தப்பட்டிருக்க மாட்டோமே. கடவுளோடு கூட சந்தோஷமாக இருந்திருப்போமே. வஞ்சக சாத்தான் தந்திரமாக நம்மை ஏமாற்றி விட்டானே’’ என்று ஆதாம் ஏவாளிடம், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே  நடந்தான்.

இனி  நாம் என்ன செய்வது. எங்கே தங்குவது என நினைக்கும்போதே எனக்கு பயமாக இருக்கிறது’’ என்று ஏவாள் சொல்லும் போதே அவளின் குரல் தழு தழுத்தது. “என்ன செய்வது நம்முடைய தவறுக்கும், கீழ்ப்படியாமைக்கும் தண்டனையை அனுபவித்துதானே ஆகவேண்டும். இனி மேல் இந்த வறட்சியான பூமியில்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்.’’ என்று சொல்லி, தங்குவதற்காக ஒரு இடத்தை தேடி ஆயத்தப்படுத்தி, தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடர ஆரம்பித்தனர். 
நாட்கள் உருண்டோடின, ஒரு குடிலில் ஆண் பெண் உறவால் பிறந்த முதல் குழந்தையின் அழுகுரலோசை கேட்டது. உள்ளே, ஏவாள் தனது முதல் குழந்தையைப் பெற்று, “கர்த்தரால் இக்குழந்தையைப் பெற்றெடுத்தேன்’’ என்று சொல்லி மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது கணவன் ஆதாமிடம் சொன்னாள். இருவரும் இக்குழந்தையின் வழியாக பாவ அடிமைத்தனத்திலிருந்து மனுகுலம் விடுவிக்கப்படும் என்று எண்ணி, “சுதந்திரம்’’ எனும் அர்த்தத்துடன் கூடிய “காயீன்’’ என்ற பெயரை அக்குழந்தைக்குச் சூட்டி, கர்த்தருக்கு நன்றி சொல்லி  போற்றித் துதித்தார்கள்.
அவர்கள் வாழ்க்கை பயணம் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும்பொழுது, கர்த்தர் அவர்களுக்கு இரண்டாவதாக ஒரு மகனைக் கொடுத்தார். இந்த பிள்ளை மனு குலத்தின் உயிர் மூச்சாக இருப்பான் என்று எண்ணி, “சுவாசம்’’ என்ற அர்த்தத்துடன் கூடிய “ஆபேல்’’ என்ற பெயரை அவனுக்குச் சூட்டி மகிழ்ந்தார்கள்.
ஏற்கனவே மூத்தவனைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போயிருந்த அவர்களுக்கு  இன்னொரு பிள்ளையையும் கர்த்தர் கொடுத்ததால் இளையவனை விட்டுக் கண்களை அகற்றாமல் பார்த்து மகிழ்ந்தனர். அப்படி அவர்கள் மகிழ்ந்திருக்கும் தருணங்களில், தங்களுக்குக் குழந்தைகள் பிறந்ததற்கு கடவுளின் அருள் தான் காரணம் என்று பேசி மகிழ்ந்தார்கள்.
“நாம் கர்த்தருக்கு விரோதமாக அவருடைய பேச்சை கேட்காமல், அவருக்கு எதிரான காரியத்தைச் செய்திருந்தாலும், அவர் நம்மை மன்னித்து, பிள்ளைகளைக் கொடுத்து, ஆசீர்வதித்திருக்கிறாரே’’ என்று அடிக்கடி நினைவு கூருவான் ஆதாம். இதைக் குறித்து ஏவாளிடமும் அடிக்கடி பேசுவான். “நாம் இனிமேலாவது கர்த்தருக்கு உண்மையாக இருக்க வேண்டும்’’ என்றும் சொல்லுவான்.
தாயும் தகப்பனும் இப்படிப் பேசிக் கொண்டிருப்பதை கண் கொட்டாமல் ஆபேல் பார்த்துக் கொண்டே இருப்பான். பெரியவன் காயீன் தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்தாலும், ஆபேல் தனது பெற்றோர் அருகில் இருந்து கர்த்தரைக் குறித்து அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவனாக இருந்தான். மேலும் கடவுளைக்குறித்து அதிகமாக கேட்டும் தெரிந்து கொள்வான். 
ஆதாம் கடவுள்  தங்களோடு பேசியதையும், கடவுள் கூடவே கை கோர்த்து நடந்ததையும், ஆபேலுக்கு விவரித்து சொல்லுவான். அதைக்கேட்கும் போது எல்லாம், ஆபேல். “இப்போது மட்டும் ஏன் அப்படி இல்லை, நானும் கர்த்தரோடு கை கோர்த்து நடக்க ஆசைப்படுகிறேன். அது முடியுமா?’’ என்று தன் தாய், தந்தையிடம் கேட்பான். "முடியும் ஆபேல் நீ கர்த்தருக்கு உண்மையாக இருந்து, அவர் சொல்லும் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, செயல்படும் போது கட்டாயமாக கடவுள் உன்னை ஏற்றுக்கொள்வார். உன்னோடு பேசுவார், உன்னோடு கூட வருவார், நீ எப்போதும் கர்த்தரை மட்டும் சார்ந்து இருக்க வேண்டும்’’ என்று ஆதாம் சொல்வான். சிறு வயதில் இருந்தே ஆபேல் கர்த்தர் மேல் பற்று உள்ளவனாகவும், பக்தியுடன் கடவுளுக்கு  பயந்து நல்ல ஒழுக்கத்துடனும் இருந்தான். 
காயீனும், ஆபேலும் வளரத் துவங்கினார்கள். ஆதாமுக்கும், ஏவாளுக்கும் இன்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். ஆதாமும் ஏவாளும் பிள்ளைகள் வளர்ந்து வருவதை, பிரமிப்புடன் பார்த்தார்கள். உலகின் முதல் தந்தை ஆதாமுக்கும் முதல் தாயான ஏவாளுக்கும் எல்லாமே புதுமையானதாகவும், முதல் அனுபவமாகவும் இருந்தன.
ஆதாமும், ஏவாளும் தங்கள் பிள்ளைகளை மிகவும் பாசத்துடன் பராமரித்தனர். ஆதாம் கடுமையாக உழைத்துக் குடும்பத்திற்குத் தேவையான உணவைக் கொண்டு வந்தான். ஏவாள் பொறுப்பாக பிள்ளைகளை கவனித்துக்கொண்டாள்.
ஆனால் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வளர ஆரம்பித்தனர். 
காயீன் சிறு பிள்ளையாக இருக்கும் போதே, தனது தாய், தந்தையின் பேச்சை கேட்காதவனாக, எது சொன்னாலும் எதிர் மறையாகவே எப்பொழுதும் செயல்படுகிறவனாகவே இருந்தான்.  இதை எல்லாம் கவனித்து வந்த ஆதாம் சில நேரங்களில் அதையே நினைத்து, மிகுந்த வேதனைப்படுவான். 
அன்றும் அப்படித்தான் பொழுது சாய்ந்த வேளையில்  வீட்டிற்குள்ளாக வந்த ஆதாம். காயீன் ஆபேலிடம் சண்டையிட்டு, அவனை அடித்துக்கொண்டிருப்பதை பார்த்து, “ஏய் காயீன் காயீன் ஏன் தம்பியை அடிக்கிற’’ என்று ஓடி காயீனிடம் மாட்டிக்கொண்டிருந்த ஆபேலை விடுவித்து, "என்ன நடந்தது, ஏன் அவனை இப்படி அடித்துக்கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டான். “அவனையே கேளுங்க என்று சொல்லி விட்டு விருட் என்று வெளியே ஓடிப் போய் விட்டான் காயீன்.  ஆபேலிடம் “ஏன் அண்ணன் உன்னை அடித்தான். நீ என்ன செய்தாய்?’’ என்று ஆதாம் கேட்டதும் அடி வாங்கி அழுது கொண்டிருந்த ஆபேல், “எப்போதும் உன்னை மட்டும்தான் அப்பாவும் அம்மாவும் உயர்வாக பேசிக்கொள்கிறார்கள். என்னை கோபக்காரன், சொன்னதைக் கேட்காதவன் என்று சொல்லுகிறார்கள். நீ எப்போதும் நல்லவனைப்போல நடித்து, அவர்கள் உன்னை புகழும்படியாக நடந்து கொள்கிறாயா? என்று சொல்லி, என்னை அடிக்கிறான்’’ என்று அழுது கொண்டே சொன்னான்.
அதை கேட்டதில் இருந்து ஆதாமுக்கு, காயீனை குறித்து இன்னும் கவலை அதிகமாகி விட்டது. “முதற்பலனாக கர்த்தர் நமக்கு கொடுத்த பிள்ளை, முதலாவதாக பிறந்த மகன் இப்படி பொறாமை நிறைந்தவனாக, கீழ்ப்படிதல் இல்லாதவனாக இருக்கிறானே’’ என்ற நினைவோடு அமர்ந்திருந்தான். அதைக் கவனித்த ஏவாள். “ஏன் எப்போது பார்த்தாலும் ஏதாவது நினைத்துக்கொண்டு கவலையாக இருக்கிறீர்கள்’’ என்று கேட்டாள். 
ஆதாம் தனது எண்ணக்குமுறலை ஏவாளிடம் வெளிப்படுத்தினான்.
“எனக்கும் அதுதான் பயமாக இருக்கிறது, காயீன் செயல்களை பார்க்கும்பொழுது, அவனிடத்தில்  சமீபகாலமாக காணப்படும் மாற்றங்களும், அவன் நடந்து கொள்ளும் விதமும், மற்ற பிள்ளைகளை விட வித்தியாசமாகவே இருக்கிறது. ஆபேலைப்பார்த்தால் அவனுக்கு பிடிக்கவே இல்லை, அவனைப் பார்க்கும் போது எல்லாம் எதாவது ஒரு காரணத்தை வைத்து, அவனோடு சண்டையிட்டு  அவனை அடித்துவிடுகிறான். மற்ற பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்ள மாட்டேன் என்கிறான். அவன் வளர, வளர கெட்ட செயல்களும், அவனோடு சேர்ந்தே வளருகிறது போல இருக்கிறது.  என்றாள்.
காலங்கள் செல்ல ஆரம்பித்தன காயீன், ஆபேல் இருவரும் வளர்ந்து வாலிப வயதை அடைந்தார்கள்.
காயீனுக்கு உணவு வகைகளைக் கொடுக்கும் தோட்டவேலை செய்வதையும். நிலத்தை பக்குவப்படுத்துவதையும், கனிதரும் தாவரங்களை விதைத்து, அவற்றைப் பராமரிக்கும் கலையை ஆதாம் சொல்லிக் கொடுத்திருந்தான். காயீனும் தோட்ட வேலைகளைக் கவனித்து வந்தான்.
கடவுள் படைத்த விலங்குகளில், ஆட்டின் இறைச்சி சுவையானதாக இருப்பதை ஆதாம் அறிந்திருந்தான். எனவே  ஆட்டுமந்தையை உருவாக்கி, அதை மேய்க்கும் பொறுப்பை ஆபேலிடம் ஒப்படைத்தான். ஆபேல் தினமும் ஆட்டுமந்தைகளைக் கவனித்து வந்தான். அவை கூட்டத்தை விட்டு விலகிச் சென்று விடாமலும், வேறு விலங்குகள் எதுவும் வந்து மந்தையைச் சிதறடித்துவிடாமலும் பாதுகாத்து வந்தான்.
ஆதாம், தன்னைப் படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்தும்படியாக,  தனது உழைப்பை ஆசீர்வதித்து தனக்கு கர்த்தர் கொடுக்கும் பொருள்களில் ஒருபகுதியைக் காணிக்கைப்பலியாக கர்த்தருக்கே திரும்பக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். தன்னுடைய பிள்ளைகள் உழைக்க ஆரம்பித்ததும் அவர்களை ஆதாம் அழைத்து,‘உங்கள் உழைப்பின் பயனைக் கர்த்தருக்கே முதலில் கொடுக்கவேண்டும். அவர்தான் நம்மைப் படைத்தவர். நமக்கு எல்லாம் கொடுப்பவரும் அவர்தான்.  எனவே அவருக்குத் தவறாமல் காணிக்கைப் பலியைச் செலுத்தவேண்டும். கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை சிறந்ததாக இருக்கவேண்டும்என்று அறிவுரை வழங்கியிருந்தான். 
அதன்படி ஆபேல்  கடவுளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக, கர்த்தருக்கு காணிக்கைப்பலியாக  தனது ஆட்டு மந்தையில் இருந்து கொழுமையான ஆடுகளைப் பிடித்துக்கொண்டு சென்றான். தைப் பார்த்த காயீன் வேகமாக ஓடி வந்து, "ஆபேல் ஆபேல் நில் எங்கே போகிறாய்’’ என்று கேட்டான். "அண்ணா கடவுள் நம்மை பாதுகாத்து, ஆசீர்வதித்து, வருகிறார் அல்லவா? நாம் கடவுளை வழிபடுவது நமது கடமை அல்லவா? அதனால் கடவுளுக்கு பலி செலுத்தி, வழிபடுவதற்காக இந்த ஆடுகளைக் கொண்டு செல்கிறேன்’’ என்றான். உடனே காயீன் “இரு இரு நானும் வருகிறேன்’’ என்று சொல்லி வீட்டிற்குள் ஓடி, தனது நிலத்தில் விளைந்த சில பழவகைகளை எடுத்துக்கொண்டு, “நாம் ஒன்றாக போகலாம்’’ என்று சொல்லி ஆபேலோடு கூட அவனும் சென்றான். போகும்பொழுதே தன்னுடைய கையில் இருக்கும் பழவகைகளைப் பார்த்து, ஆபேல் கொண்டுவரும் ஆடுகளையும் பார்க்கிறான். தன் கையில் இருப்பது கொஞ்சமாக தெரியவே, தனது தம்பியிடம் "ஆபேல், நாம் எனது தோட்டத்தின் வழியாக போகலாமா? கடவுளுக்கு காணிக்கையாக இன்னும் கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொள்கிறேன்’’ என்றான். “சரி அண்ணா அப்படியே போகலாம்’’ என்று ஆபேலும் அவனோடு கூட போனான்.
தோட்டம் வந்ததும் தனது கண்ணுக்கு தெரியும் எல்லா பழங்களையும் பறித்து எடுத்துக்கொண்டான். இப்பொழுது ஆபேலையும் அவன் கொண்டு வரும் ஆடுகளையும் பார்த்து, தனது கையில் வைத்திருக்கும் அதிகமான பழங்களையும் பார்த்தான். தான் அவனை விட அதிகமாக வைத்திருக்கிறோம் என்ற பெருமிதம் அவன் கண்களில் காணப்பட்டது.
வெகு தூரம் நடந்து வந்தபின் கடவுளை வழிபடும் இடம் வந்தது. அவர்கள் இருவரும் தனித்தனியே இரண்டு பலிபீடங்களைக் கட்டி, அவற்றின் மீது, தாங்கள் கொண்டு வந்த  காணிக்கைகளை வைத்து, வணங்கி வழிபட்டார்கள். 
பின்பு ஆபேல் ஆடுகளை பலியிட்டு கடவுளுக்கு தனது காணிக்கைகளை செலுத்தினான். அப்பொழுது கடவுள் காயீனையும், ஆபேலையும் பார்த்து, ஆபேல் விசுவாசத்துடனும் அன்புடனும், உண்மையான கீழ்ப்படிதலோடும் தனது காணிக்கையை செலுத்தியதால்,  அவனது காணிக்கைகளை அங்கிகரிக்க எண்ணங்கொண்டார். ஆனால் காயீனைப் பார்க்கும் போது அவனுடைய உள்ளத்தில், விசுவாசமோ, கீழ்ப்படிதலோ இல்லை. தன்னைக்குறித்த பெருமை மட்டுமே மேலோங்கி இருக்கிறது என்பதைக் கண்டு, அவனை கடவுளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவன் காணிக்கையையும், ஏற்றுக்கொள்ள வில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இருவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, வானத்திலிருந்து நெருப்பு இறங்கி வந்து, ஆபேல் வைத்திருந்த பலி காணிக்கையை மட்டும் எரித்தது. அது  அப்படியே புகைந்து, முழுவதும் காணாமல் போனது. இதை திகைப்போடு பார்த்துக்கொண்டிருந்த காயீன், தான் வைத்திருந்த காணிக்கை பொருள்கள் மட்டும் அப்படியே இருப்பதையும், தன்னையும், தன்னுடைய காணிக்கைகளை கடவுள் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதையும் அறிந்து, “எனது காணிக்கைகளை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லையே’’ என்று மிகுந்த கோபமும், எரிச்சலும் அடைந்தான். அவன் வைத்திருந்த காணிக்கைகளையும் பார்த்தான். ஆபேலையும் பார்த்தான். ஆபேல் முகத்தில் கடவுள் தனது காணிக்கைகளை ஏற்றுக்கொண்டார் என்ற சந்தோஷம் தெரிந்தது.  சந்தோஷமான தனது தம்பியின் முகத்தை பார்க்க பார்க்க காயீனின் முகம் கோபத்தால் சிவந்து, அவனுடைய முகமே வேறுபட்டது.
அதைக் கவனித்த கடவுள் “காயீன் ஏன் உனக்கு இவ்வளவு கோபமும் எரிச்சலும் வருகிறது, நீ நன்மை செய்கிறவனாக இருந்தால் உனக்கு மேன்மை கிடைக்காதோ? நீ நன்மை செய்கிறவனாக இல்லாததால், வஞ்சகன் உன் வாசற்படியில் அமர்ந்திருக்கிறான். அவனுடைய எண்ணங்களே உனக்குள்ளாக நிறைந்திருக்கிறது. உன்னை அவன் ஆண்டு கொள்ள இடம் கொடுக்காதே’’என்றார். ஆனாலும் காயீனுக்கு தனது கோபம் அடங்க வில்லை. கடவுள் சொன்னதை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. எதையும் கேட்கும் மன நிலையிலும் அவன் இல்லை. 
இதன் மூலமாக, ஆதாம், ஏவாள் ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்பட காரணமாக இருந்த வஞ்சகனுக்கு காயீன் இடம் கொடுத்தான். காயீனின் கோப மிகுதியால்,  அந்தக் கோபத்தின் ஊடாகவே அவனுக்குள் அந்த வஞ்சகனால் புக முடிந்தது. “உன்னுடைய காணிக்கையை கடவுள் ஏற்றுக்கொள்ளாததற்கு உனது தம்பி ஆபேல்தான் காரணம். அது மட்டுமல்ல “மூத்தவன் நீ இருக்கும் போது இளையவன் அவனுடைய காணிக்கைகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? அது உனக்கு அவமானமல்லவா?’ நீ எப்படிப்பட்ட காணிக்கைகளை கொடுத்தாய். அதை ஏற்றுக்கொள்ளாமல், கடவுள் உன்னை குறை சொல்லுகிறாரே, இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை இதெல்லாம் ஓர வஞ்சனை’’ என்று அவனுக்குள் வஞ்சகமாக தனது விஷ வார்த்தைகளை விதைத்தான்.
அது முதல் காயீனுக்கு ஆபேல் மீதிருந்த வெறுப்பு முன்பை விட அதிகமாக அவனுக்குள் வளர்ந்து கொண்டே இருந்தது. “உனது தம்பி ஆபேல் இருக்கும் வரை  உன்னையும் உனது காணிக்கையையும் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார். நீ முதன்மையானவனாகவும், இருக்க முடியாது, உனக்கு போட்டியாக இருப்பவன் அவன்தான். அதனால் நீ எப்படியாவது ஆபேலை கொலை செய்து விடு. அப்பொழுதுதான் கடவுள் உனது காணிக்கைகளை ஏற்றுக்கொள்வார்.’’ என்று அவன் மனதுக்குள்ளாக கோபத்தை தூண்டிக்கொண்டே இருந்தான் காயீனுக்குள் இருந்த வஞ்சகன்.
இப்போது, காயீன் முழுமையாக கடவுளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட ஆரம்பித்தான். ஆபேலைக் கொலை செய்யத் தீர்மானித்து, அதற்காக சரியான நேரத்தை தேடிக்கொண்டிருந்தான். அதற்காகவே காத்திருந்தான்.
தனது காணிக்கையை கடவுள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து அவன் மனக் கண் முன் வருவதும் போவதுமாகவே இருந்தது. அப்பொதெல்லாம் அவன் வெறி பிடித்தவனைப்போல ஆகிவிடுவான். “இவன் இருக்கும் வரை எனக்கு உயர்வும் இல்லை, மதிப்பு இல்லை. எப்படியாது இவனை கொன்றுவிட வேண்டும்’’ என்று தானாகவே சிந்திக்கும் அளவுக்கு  அவனுடைய மனதை முழுவதுமாக மாற்றிவிட்டான் வஞ்சக சாத்தான். இவை எவற்றையும் அறிந்திராத ஆபேல் எப்போதும் போல தனது அண்ணனிடம் பேசிக் கொண்டு, அவனிடம் அன்பாகவே இருந்தான்.
ஒருநாள் காயீன், ஆபேலிடத்தில் சென்று “ஆபேலே, நான், எனது வயல்வெளிக்குச் சென்று இன்னும் என்ன வேலை செய்ய வேண்டும் என்று பார்த்து வரப் போகிறேன். நீயும் வருகிறாயா? அப்படியே இன்பமாக உலாவி விட்டு வருவோம்’’ என்று தந்திரமாக கூப்பிட்டான். அவனுடைய தந்திரத்தை அறியாத ஆபேல் “சரி அண்ணா போகலாம், நானும் உங்களோடு வருகிறேன்’’ என்று சொன்னான். உடனே 'வாடா, வா, இன்றோடு உனது கதை முடிந்தது". என்று காயீனுக்குள் இருந்த வஞ்சகன் திட்டம் தீட்டினான். “வேகமாக வா’’ என்று தனது அண்ணன் அழைத்ததும், வேக வேகமாக ஆபேல்  காயீனோடு சென்றான். இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டே சென்றனர்.

வயல்வெளிக்கு வந்ததும் அதுவரை தனது கோபத்தை அடக்கி வைத்திருந்த காயீன். தனது தம்பி ஆபேலின் மீது பாய்ந்து, “உன்னால் தான் எனக்கு எங்கும் மதிப்பு இல்லை, வீட்டிலும் அம்மா அப்பாவிற்கு உன்னைத்தான் அதிகமாக பிடித்திருக்கிறது. எப்போதும் உன்னை குறித்துத்தான் பேசுகிறார்கள். நாம் இருவரும் கடவுளுக்கு காணிக்கை கொண்டு சென்றா,ல் உன்னுடைய காணிக்கையை மட்டுமே கடவுள் ஏற்றுக் கொள்கிறார். எல்லாவற்றிற்கும் நீ தான் காரணம். உன்னை விட மாட்டேன்’’ என்று சொல்லி, அருகில் இருந்த கூர்மையான மரத்துண்டை எடுத்து  அடித்து, குத்தினான். “அண்ணா அண்ணா ஏன் என்னை அடிக்கிறாய், என்னை விட்டு விடு, நீ வேறு நான் வேறா? நாம் இருவரும் ஒரு தாயின் பிள்ளைகள். நானும் நீயும் ஒரே இரத்தம் கொண்டவர்கள், 'நாம் வழிபடும் கடவுள் அன்புள்ளவர். ஒருவரையும் அவர் தள்ளிவிட மாட்டார்' என்று நமது தாயும் தந்தையும் கடவுளை குறித்து எப்படி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். உனது காணிக்கைகளையும் கர்த்தர் ஏற்றுக்கொள்வார், கொஞ்சம் பொறுமையாக இரு’’.  என்று அவன் சொல்ல, சொல்ல ஒன்றையும் காதில் வாங்கிக்கொள்ளும் மனநிலையில் காயீன் இல்லை. “எனக்கே நீ புத்திமதி சொல்கிறாயா?’’ என்று,  தனது பலத்தை எல்லாம் திரட்டி இன்னும் அதிகமாக அடித்தான். தனது ஆத்திரம் தீரும்வரை அடித்தான். ஆபேல் தனது உடம்பில் உள்ள இரத்தம் எல்லாம் சிந்தி, துடி துடித்து அப்படியே சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்து போகிறான். மனு குலத்தின் முதற்கொலை அங்கே நடந்தேறியது.

உடனே சுற்று முற்றும் பார்த்த காயீன், யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு, வேகமாக வீட்டை நோக்கி நடந்தான்.
அப்பொழுது “காயீன் காயீன்’’ என்று கடவுள் கூப்பிட்டார்.  கூப்பிடும் சத்தம் கேட்டதும், அங்கும் இங்கும் திரும்பி பார்த்தான் காயீன். யாரும் இல்லை. தன்னுடைய மனதில் தோன்றும் எண்ணம்தான் என்று நினைத்து, திரும்பவும் வேகமாக நடந்தான். மறுபடியும் அதே குரல், “காயீன் உன் தம்பி ஆபேல் எங்கே’’ என்று கேட்டது. அந்தக் குரலின் கம்பீரத்தைக் கேட்டு பயந்து நடுங்கி கொண்டு, பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் "எனக்கு தெரியாது, நான் பார்க்கவில்லை. எப்போதும் என் தம்பிக்கு நான் என்ன காவல்காரனா?’’ என்று பதில் கேள்வி கேட்டு விட்டு வேகமாக ஓடினான். மறுபடியும் கடவுள்  “உன் தம்பியை என்ன செய்தாய். அவனுடைய இரத்தத்தின் ஒலி பூமியில் இருந்து என்னை அழைக்கிறது’’.
இதைக் கேட்டதும் சற்று நின்று திரு திருவென விழித்து கீழும் மேலும் பார்த்தான். அவனது முகம் வேர்த்து ஊற்றியது. காயீன் நிலத்தைப் பார்த்துத் தலைகுனிந்து உறைந்து போய் நின்றுவிட்டான். அப்போது கர்த்தர் அவனைப் பார்த்து
"உனக்கு எத்தனை முறை உனது தவறை திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பு கொடுத்தேன்? ஆனாலும் நீ உன் தவறை திருத்திக்கொள்ளாமல், உன் தம்பியின் மேல் பொறாமைபட்டு, அவனை கொலை செய்தாய். அல்லவா? இதன் நிமித்தம் நீ சபிக்கப்பட்டிருப்பாய். இனி மேல் நீ விவசாயம் செய்து, பயிர் செய்தாலும் அது உனக்கு பலன் கொடுக்காது (நன்றாக விளைச்சல் இருக்காது) நீ ஒரு இடத்தில் நிலைத்திருக்காமல் நாடோடியைப்போல அங்கும் இங்கும் பயத்துடன் அலைந்து திரிகிறவனாகவே இருப்பாய். இனி மேல் என் சந்நிதானத்துக்கு நீ வரமுடியாது’’ என்று சபித்தார்.
“ஐயோ எனக்கு கொடுத்த தண்டனையை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லையே, என்று சொல்லி  கடவுளிடத்தில் “இன்று என்னை உம்முடைய சமுகத்தை விட்டு துரத்தி விடுகிறீர். நான் சந்தோஷம் இல்லாமல், சமாதானம் இல்லாமல்  நாடோடியைப்போல சுற்றி திரிகிறவனாக இருப்பேன். என்னையும், என்னுடைய இந்த செயலையும் கண்டு பிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே, என்று கதறி அழுதான். அப்பொழுதும் தனது தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்க அவன் மனம் ஒப்புக்கொள்ள வில்லை.
கர்த்தர் அவனிடத்தில் காயீனைக் கொல்லுகிற எவனுக்கும் ஏழு மடங்கு பழி உண்டாகும்’’ என்று சொல்லி அவன் மேல் ஒரு அடையாளத்தை போட்டு தமது சந்நிதானத்தை விட்டு துரத்தி விட்டார். ஒற்றுமையாய் ஒரு இடத்தில் இருக்க வேண்டிய ஆதாமின்  குடும்பம் சிதறியது.

கடவுள் தனது சந்நிதானத்தை விட்டு துரத்தி விட்டதால் காயீன் கடவுளின் சந்நிதானத்தை விட்டு புறப்பட்டு, தனது மனைவியுடன்  கால் போன திசையில் நடந்து போய், நோத் என்னும் இடத்தில் குடியிருந்து, பிள்ளைகள் பெற்றான். அவனுடைய பரம்பரை கடவுளின் சந்நிதானத்துக்கு போக முடியாமல் கடவுளை குறித்த அறிவில்லாமல் பெருக ஆரம்பித்தது. காயீனின் பரம்பரையினர் தங்கள் விருப்பம் போல் நீதி நெறி இல்லாமல் கடவுள் பயம் இல்லாமல், தங்கள் மனம் போல வாழ ஆரம்பித்தார்கள்.
நாட்கள் வெகு வேகமாக உருண்டோடியது. காயீன் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளின் பேரர்களையும் கண்டான். அவர்கள் அனைவரும் கடவுளுக்கு விரோதமாகவே இருந்தார்கள்.
காயீனுக்கு ஐந்தாவது தலைமுறையாக வரும் லாமேக்கு என்பவன் முதல் முதலாக கடவுளின் “ஒருவனுக்கு ஒருத்தி’’ என்ற திட்டத்தை உடைத்து, ஆதாள், சில்லாள் என்ற இரண்டு பெண்களை திருமணம்  செய்திருந்தான்.
ஒருநாள் லாமேக் தனது மனைவிகளை அழைத்து ஆதாளே, சில்லாளே நான் சொல்வதை கேளுங்கள், “எனக்கு காயம் ஏற்படும் விதத்தில் ஒருவனை கொன்றேன், எனது வாழ்நாள் முழுவதும் அந்த தழும்பின் வடு இருக்கும் படியாக ஒரு மனிதனை கொலை செய்தேன், காயீனைக்கொன்றவனுக்கு ஏழு மடங்கு தண்டனை என்று கடவுள் சொல்லியிருக்கிறார். என்னை கொல்பவனுக்கோ, எழுபத்தேழு மடங்கு தண்டனை உண்டாகும்’’ என்று சொன்னான்.
அதை கேட்ட ஆதாளும், சில்லாளும் “நமது முப்பாட்டன் காயீனை வேறு காணவில்லை. நமது கணவன் சொல்லுவதைப்பார்த்தால் ஒரு வேளை இவர்தான் காயீனை கொலை செய்திருப்பாரோ? என்று பேசிக்கொண்டார்கள். ஆனாலும் அதை குறித்து லாமேக்கிடம் கேட்க பயந்ததினால் பதிலுக்கு அவர்கள் ஒன்றும் பேசவில்லை.


ஆதியாகமம் 4ம் அதிகாரத்திலிருந்து.........கதை வடிவில்





PDF ல் பதிவிறக்கம் செய்து படிக்க

0 comments:

Post a Comment