நீ மேன்மையடைவாய்
தேவனுடைய வார்த்தைகள் வல்லமையுள்ளது. தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம் நிறைவானது. ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய வார்த்தை களினாலே நம்மை நிறைந்து நடத்தி வருகிறார். தேவன் நமக்கு தரும் வார்த்தைகளை தியானித்து, ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.
”எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்’’ (1 நாளாகமம் 29:12) இந்த வார்த்தையானது ஜெபமாகவும், துதியாகவும் தேவ சமூகத்திலே, தாவீது மூலமாக ஏறெடுக்கப்படுகிறது.
”எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்’’ (1 நாளாகமம் 29:12) இந்த வார்த்தையானது ஜெபமாகவும், துதியாகவும் தேவ சமூகத்திலே, தாவீது மூலமாக ஏறெடுக்கப்படுகிறது.
தேவன் நம்மை கீழாக அல்ல, மேலாக்கவே விரும்புகிறார். நம்மை உயர்த்தி அழகு பார்ப்பதே தேவனுக்கு மிகவும் விருப்பம். தேவ பிள்ளைகள் யாராக இருந்தாலும் தேவன் அவர்களை மேன்மைப்படுத்தவே சித்தமாக இருக்கிறார்.
எது தேவனுடைய சித்தம்? நீங்களும், நானும் நன்றாக இருப்பதுதான். பெற்றவர்களுக்கு பிள்ளைகள் எப்போதும் உயர்வாக, எல்லாவற்றிலும் கனம் பெற்று, மேன்மையாக இருக்க வேண்டும் என்று விருப்புவார்களோ, அதை விட நம்முடைய தகப்பனாகிய தேவன் நம்மை எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக, நாம் மேன்மையாக வாழவே விரும்புகிறார்.
நாம் மிகவும் தாழ்ந்த நிலையிலே இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை தாழ்வாக பார்க்கிறவர் அல்ல, தேவன் நம்மை மேன்மைப்படுத்தி பார்க்கிறவர்.
அன்பான தேவ ஜனமே, ஆண்டவர் உங்களை மேன்மைப்படுத்த விரும்புகிறார். பொல்லாத செயல்களை செய்கிற மனிதர்கள் மூலமாக நீங்கள் கனவீனப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு வாழ்த்து வந்தது போதும் கர்த்தர் உங்களை உயர்த்தி எல்லா கண்களும் காண உயர்வாக வைக்கப்போகிறார்.
தேவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கிற யாராக இருந்தாலும் சரி, தேவனால் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்படுவது நிச்சயம்.
தேவனால் வரும் மேன்மை
தேவனுடைய வாக்குத்தத்தங்களிலே மிகவும் பிரதானமானது. “உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்’’ (உபாகமம் 28:1) எல்லா மக்கள் கூட்டத்தின் மத்தியிலும் தேவனுடைய பிள்ளைகள் மேன்மையானவர்களாக இருக்கும்படி தேவன் கனப்படுத்தி வைக்கிறார்.
ஆனால் இந்த வாக்குத்தத்தமானது தேவனுடைய கட்டளைகளுக்கு உட்பட்டதாகும்,
தேவனுடைய கட்டளைகளுக்கும், வார்த்தைகளுக்கும், உண்மையாக செவிகொடுத்து, அதன்படி செய்வதற்கு ஒப்புக்கொடுத்து நடக்கும் போது தேவன் தம்முடைய வார்த்தையின்படியே மேன்மை அடையச்செய்கிறார்.
தேவன் உன்னை மேன்மைப்படுத்தும்படியாக தீர்மானித்து விட்டால் எந்த ஒரு மனிதனும் உன்னை சிறுமைப்படுத்த முடியாது, பொறாமையோடும், எரிச்சலோடும் எழும்பி, உன்னைக்குறித்து இல்லாதவைகளையும், பொல்லாதவைகளையும் பேசினாலும் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிற நீதியின் தேவன் விட்டுவிட மாட்டார்.
“கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்’’ (யோசுவா 3:7) என்றார்.
எல்லா மக்களும் காணும்படி உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று வாக்குபண்ணின தேவன் தாம் சொன்னபடி செய்து முடிக்கவும் வல்லமை உள்ளவர் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது.
“அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்’’ (யோசுவா 4:14). என்று வேதம் சொல்கிறது. தேவன் சொன்னதை செய்கிறவர்கள் என்பதையும் பதிவு செய்து, நம்முடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும், பலப்படுத்துகிறது. தேவன் கூட இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி, உற்சாகமாக செயல்பட தேவனுடைய வார்த்தைகள் நம்மை உந்தி தள்ளுகிறது.
மேன்மை என்பது தேவனுக்கு பயந்து செய்யப்படும் செயல்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், யோசுவா தேவனுக்கு பயந்து தேவனுடைய வார்த்தைகளுக்கு செவி சாய்த்து, உண்மையும், நேர்மையுமாக செயல்பட்ட போது, தேவன் அதை எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அங்கீகரித்தார் என்பதே, இஸ்ரவேல் மக்களின் கண்களுக்கு முன்பாக மேன்மைப்படுத்தினார் என்று எழுதப்பட்டிருக்கிறது.
தேவ ஐனமே, உன்னுடைய செயல்கள் உண்மையும் செம்மையுமாக இருக்குமானால் கட்டாயம் தேவன் அவைகளை அங்கீகரிப்பார், தேவன் அங்கீகரிக்கும் போது, அதை எந்த மனிதன் எதிர்க்க முடியும், ஒருவேளை அப்படி எதிர்ந்து நின்றாலும், அந்த எதிரிப்பு, உனக்கு எதிரானது அல்ல, அது தேவனுக்கு எதிராக எழும்புவதற்கு சமமாக மாறிவிடும். அப்பொழுது கர்த்தர் யுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார். யார் எதிராக எழும்பினார்களோ, அவர்கள் வெட்கப்பட்டு சிறுமையடைவார்கள்.
ஆகையால் நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் விதத்தில் இருக்க வேண்டும். மனிதனால் நமக்கு கிடைக்கும் அங்கிகாரம் தற்காலிகமானது. தேவனால் கிடைக்கும் அங்கீகாரமோ, நிரந்தரமானது.
தேவனுடைய அங்கீகாரமே, நமக்கு மேன்மையையும் கனத்தையும் உண்டாக்கும்,
“கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை’’ (நீதிமொழிகள் 15:33) என்று வேதம் சுட்டிக்காட்டுவதை கவனிக்காமல் விட்டு விடக்கூடாது.
எந்த செயலையும் ஞானமாய் செய்கிறவர்களே, கனவான்களாக இருக்க தகுதியானவர்கள், ஞானமானது பரத்திலிருந்து வருகிறது. கர்த்தருக்கு பயந்து நடப்பதுவே ஞானத்தை கொண்டுக்கும், ஞானமாய் நடப்பவர்கள் தாழ்மையை தரித்திருக்கிறார்கள், தாழ்மையே தேவனிடத்திலிருந்து அங்கீகாரத்தைக்கொண்டு வருகிறது, தேவ அங்கீகாரமே, நம்மை மேன்மைப்படுத்துகிறது.
நமக்கு கிடைக்கும் மேன்மைகள் அனைத்தும் தேவனால் வருகிறது. நம்மிலே எந்த தகுதியும் இல்லை. தகுதி படுத்தி, உயர்த்துகிறவர் கர்த்தரே, கர்த்தரை மட்டும் நாம் சார்ந்து நின்று விட்டால் நமக்கு வேண்டிய சகல நன்மைகளை தேவனே நமக்கு கிடைக்க செய்கிறார்.
“நீ எனக்கு பிரியமாக நடந்து கொள், நான் உன்னை உயர்த்துவேன், நீ எனக்கு பிரியமாக நடக்காவிட்டால் உன் மீது பழி சாட்டி உன்னை சிறுமைப்படுத்துவேன்’’ என்று மனிதர்கள் உன்னைப்பார்த்து சொல்லலாம், அதைக்கண்டு பயப்படாதே, எந்த சூழ்நிலையிலும், பொல்லாத சிந்தையுள்ள மனிதர்களின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து விடாதே, மனிதன் உன்னை உயர்த்தவும் முடியாது, தாழ்த்தவும் முடியாது. உயர்வும் தாழ்வும் தேவனுடைய கரத்தில் இருக்கிறது.
பொல்லாத செயல்களுக்கு ஒப்புக்கொடுத்துள்ள மனிதர்கள் வழியாக சத்துருவானவன் தேவ பிள்ளைகளை அவமானப்படுத்தும் விதமாக அவதூரான வார்த்தைகளை பேசி, அவமானப்படுத்தவும், வேதனைப்படுத்தவும், சிறுமைப்படுத்தவும் முற்படலாம் ஆனால் அவைகளுக்கு தக்க பதிலையும், அதற்கு தகுந்த பலனையும் தேவன் நமக்கு கொடுப்பது உறுதி, எனவே கலங்கவோ, கவலைப்படவோ வேண்டாம். உயர்த்துகிறவரும், கனப்படுத்துகிறவரும், மேன்மைப்படுத்துகிறவரும் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானவரே, அவரை மட்டும் விடாமல், அவரை மட்டுமே சார்ந்து நமது வாழ்க்கை பயணத்தை தொடர்வோம்.
செய்கைக்கு தக்க மேன்மை
“மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்’’ (எஸ்தர் 6:3).
அகாஸ்வேரு ராஜாவை கொலை செய்யும் படி தீர்மானித்த, ராஜாவின் பிரதானிகள் பிக்தான், தேரேஸ் இவர்களின் பொல்லாத செயல்களை ராஜாவிற்கு தெரியப்படுத்தி, ராஜாவை காப்பாற்றிய மொர்தெகாய் எல்லாராலும் மறக்கப்பட்டான். ஆனால் அவன் செய்த செயலுக்கு அவன் கனப்படுத்தப்பட வேண்டும், மேன்மைபட வேண்டும் என்று தேவன் தீர்மானித்தபடியினாலே, இரவிலே அகாஸ்வேரு ராஜாவிற்கு தூக்கம் வராதபடி செய்து, அவனை நடபடிகள் புஸ்தகத்தை வாசிக்க வைத்து, மொர்தெகாயின் செயல்களை நினைப்பூட்டி, அவன் செய்த நற்செயல்களுக்கு அவனுக்கு கனமும், மேன்மையும் கிடைக்கும்படி தேவன் செய்தார்.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே, உங்களின் நற்செயல்களை மனிதர்கள் மறந்து போகலாம், அல்லது நற்செயலுக்கு பதிலாக தீங்கானவைகளை செய்யலாம். ஆனால் தேவன் விட மாட்டார். நல்செய்கைகளுக்கு தக்க பலனை கட்டாயம் தந்து நடத்துவார்.
ஆகையால் நற்காரியங்கள் செய்வதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக, கனத்தை, மேன்மையை எதிர்பார்த்து எந்த நற்காரியங்களையும் நாம் செய்யவேண்டாம், அப்படி எதிர்பார்த்து நாம் எந்த செயலையும் செய்யாமல், நாம் செய்கிறசெயல்கள் நன்மையானதாக இருக்குமானால், நமது நன்மையான செயல்களுக்கு கர்த்தர் நிச்சயமாக நம்மை உயர்த்தி, ஆசீர்வதிப்பது நிச்சயம்.
“நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?’’ (ஆதியாகமம் 4:7) இதுதான் தேவனுடைய கேள்வி.
மனிதனுடைய எல்லா செயல்களும் மேன்மையாக இருக்காது. தேவனுக்கு பிரியமாகவும், தேவனுடைய வார்த்தைக்கு உட்பட்டு இருக்கும் போது மேன்மையும், கனமும் உண்டாகும்.
தேவனால் மேன்மைப்படுத்தப்பட்டு, கனப்படுத்தப்பட்டு, உயர்த்தப்படுதல் என்பது எண்ணில்லா ஆனந்தம், அதற்காக இந்த பூமியில் இருந்து வரும் எதையும் வேண்டாம் என்று சொல்ல மனம் எப்போதும் தயாராக வேண்டும்.
ஆனால் “அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்’’ (யோவான் 12:43) என்று சிலருடைய செயல்களை வேதம் அடையாளப்படுத்துகிறது, இது மிகவும் ஆபத்தானது.
தேவன் மூலமாக வருகிற மேன்மையே சிறந்தது, அதுவே மகிமையாக இருக்கும். எந்த நிலையிலும், மனிதனால் வருகிற மேன்மை, மனிதனுக்கு வலையாகவே இருக்கும், அதில் சிக்கிக்கொள்பவர்களின் நிலை மிகவும் பரிதாபமானதாக இருக்கும்.
“அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது’’ (லூக்கா 16:15) என்று சொல்லுவதை கவனித்து நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்தல் மிகவும் நல்லது.
மனிதர்கள் மூலமாக கிடைக்கும் மேன்மையும், கனமும் மட்டுமே நோக்கமாக இருக்குமானால், ஏமாற்றப்படுவது நிச்சயம், வாழ்க்கையில் சமாதானத்தையும் இழப்பதும் நிச்சயம், தேவனுக்கு பிரியமாக, தேவனுடைய வழிநடத்துதலின்படி செய்கின்ற நன்மையான செயல்கள் ஒருவருக்குள் இருக்குமானால் தேவனால் உண்டாகும், மேன்மையும், கனமும் கட்டாயம் உண்டு, இதை தேடி எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவைகள் தேடிவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
“சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்’’ (சங்கீதம் 20:7)
எப்போதும் தங்களைக்குறித்தும், தங்களுக்கு இருக்கும் பணம், சொத்து, பதவிகளை சொல்லி, சொல்லி மேன்மைப்படுத்தி, பெருமைப்பட்டுக் கொண்டிருப்பார்கள் அப்படிப்பட்டவர்களையே இந்த வசனம் சுட்டிக்காட்டுகின்றது.
ஒரு மனதனோடு கர்த்தர் இருப்பதே அவனுக்கு மேன்மையும், கனமுமாக இருக்கும், அழிந்து போகும் வெறும், பதவிகளும், பணமும், சொத்தும் ஒருவரை மேன்மைப்படுத்தாது.
“ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்’’ (எரேமியா 9:23).
இப்படிப்பட்ட காரியங்களை தேவன் வெறுக்கிறார். இப்படிச்செய்கிறவர்களை தூரத்தில் இருந்து அறிகிறார்.
இந்த உலகமும், உலக மனிதர்களும் வேண்டுமானால் இவைகளை தலையில் வைத்து கொண்டாடலாம், ஆனால் இவைகள் தேவனுக்கு முன்பாக செல்லாகாசாக இருக்கிறது. அப்படிப்பட்ட மனிதனும், மதிப்பிழந்து நிற்க்கிறான்.
“மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’’ (எரேமியா 9:24).
தேவ ஜனமே சிறிய வித்தியாசம்தான், தேவனால் வருகிறவைகள், மதிப்பாகவும், உயர்வாகவும், இருக்கும், நாம் தேவனை மட்டுமே உயர்வாக, மேன்மை பாராட்டுகிறவர்களாக இருப்போம். மற்றவைகள் எல்லாம் நமக்கு வேண்டாதவைகளே, நமக்கு வேண்டியவைகளை கர்த்தர் நித்தம் நமக்கு தந்து, திருப்த்தியாக்கி நம்மை நடத்திடுவார்.
அன்பானவர்களே, தேவன் உங்களை மேன்மைப்படுத்துவார், இத்தனை காலமாக நீங்கள் தேவனுக்காக அர்ப்பணித்து வாழ்வதை தேவன் மறக்க வில்லை. உங்கள் வாழ்வு தேவனால் உயர்த்தப்படும், மேன்மையும் கனமும் உண்டாகும்.
உங்களை பரியாசம் பண்ணி, அவமானப்படுத்தி, இகழ்ந்து, சிறுமைப்படுத்தி, வேதனைப்படுத்தியவர்கள் கண்களுக்கு முன்பாக தேவன் உங்களை மேன்மைப்படுத்துவார்.
தேவனுடைய கரமே, உயர்த்தப்போகிறது, தேவனுடைய இந்த வார்த்தைகளை விசுவாசித்து, தேவனுக்கு நன்றி சொல்லி, தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வாதித்து, பாதுகாத்து, சமாதானத்தினால் நிறைத்து நடத்துவாராக ஆமென்.
0 comments:
Post a Comment