Bread of Life Church India

அமாவாசை சிறப்பானதா?


எப்படியாகிலும் கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி உலகமெங்கும் செல்ல வேண்டும். எல்லா மக்களும் இயேசு கிறிஸ்துவின் விடுதலையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் துளி அளவும் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இன்று அறியாமையில் நடைபெறும் சில தவறுகளை அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டால், அதுவே அடுத்த தலைமுறையினருக்கு நாம் தவறான முன் உதாரணமாகவும், அவர்கள் கிறிஸ்துவை விட்டு வேறு எதையாவது பிடித்துக்கொள்வதற்கும் வழி அமைத்துக்கொடுப்பதாக இருந்து விடக்கூடாது.
இக்காலத்திலே கிறிஸ்தவத்தில் வேதத்தின் அடிப்படையை விட்டு, விரும்பத்தகாத காரியங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. காரணம். தன் சுய அனுபவங்களை முன் வைத்து செயல்படுவதால்தான். அவைகளில் ஒன்றுதான்அமாவாசை, பவுர்ணமி என்ற பெயரில் நடைபெறும் ஜெபங்கள். இது இந்நாட்களில் ஒருவரைப் பார்த்து, ஒருவர், அவரைப்பார்த்து இன்னொருவர் என்று பெருகிக் கொண்டிருக்கிறது.
ஜெபம் எந்த நாளிலும் வைக்கலாம்,எந்த நாளையும் சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்தலாம். சிலர் குறிப்பிடுவதுபோல் அமாவாசை நாளிலும் வைக்கலாம். ஆனால் அதற்கு “அமாவாசை ஆசீர்வாத ஜெபம் ?’’ “அமாவாசை விடுதலை ஜெபம்? ‘’ அமாவாசை அற்புத ஜெபம்?’’ என்று பெயர் சூட்ட வேண்டாம் என்பதே இந்த செய்தியின் சாரம்.
ஏன் பெயர் சூட்டக்கூடாது? என்று கேட்பவர்களுக்கு, அமாவாசைக்கும் கிறிஸ்துவுக்கும் என்ன சம்மந்தம். அதே போல் அமாவாசை பிரபலமாகும் அளவிற்கு, சுவிசேஷமோ, கிறிஸ்துவோ, அமாவாசையை தேடி வரும் மக்களுக்குள்ளாக பிரபலமாகாதிருப்பதுதான்.
அமாவாசையில் எதோ வித்தியாசம் நடக்கும் அதுதான் சிறப்பு,என்பதுதான் மக்களிடத்தில் இருக்கிறதே தவிர, கிறிஸ்துவிடத்தில்தான் எல்லாம் இருக்கிறது. அவரிடத்தில் எல்லா நாளும் சிறப்பு உண்டு என்பது மக்களிடத்தில் காணாமல் போகிறதே,
அமாவாசைக்கு சிறப்பு இருக்கிறதா? மற்ற மத நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் அமாவாசையைக் குறித்த சிறப்புகளும், பயங்களும் கலந்திருக்கிறது. ஆனால் மற்ற நாளுக்கும் அமாவாசைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே கிறிஸ்தவத்தின் விசுவாசம்.
அமாவாசைக்கு அர்த்தம் கற்பிக்க சிலர் பழைய ஏற்பாட்டில் வரும் சில வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். அந்த வசனங்களையும், அதன் பின்னணிகளையும், சம்பவத்தையும் வேதத்தின் வெளிச்சத்திலேயே ஆராய்வோம்.
இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான்’’  (2 இராஜாக்கள் 4:23) என்று சூனேமியாளின் கணவன் கேட்டதாக வேதம் நமக்கு காண்பிக்கிறது.
இந்த வார்த்தைகள் இங்கு பயன்படுத்தப்பட்ட நோக்கத்தை நேரடியாக நாம் அறிந்து கொள்ளுதல் நல்லது.
இஸ்ரவேல் மக்களுக்கு அமாவாசையே மாதத்தின் முதல் நாளாக இருந்தது. எனவே மாதத்தின் முதல் நாளிலேயே இஸ்ரவேலர்களின் பண்டிகைகள் ஆரம்பமாகும், அந்த  நாட்களிலேயே இஸ்ரவேலர்கள் தேவ சமூகத்திற்கு செல்வது உண்டு.
இதைக்குறித்து வேதாகமம் சொல்லுவதை கவனிப்போம்.
உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் ’’ (எண்ணாகமம் 10:10)
உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்’’ ( எண்ணாகமம் 28:11).
மாதத்தின் முதலாம் நாளில் தேவ சமூகத்தில் வந்து பலி செலுத்த  தேவன் கட்டளை கொடுக்கிறதை மேலே உள்ள வசனங்கள் நமக்கு காண்பிக்கிறது.
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்’’ (1 நாளாகமம் 23:30) என்று மாதத்தின் முதலாம் நாளையே வேதம் அமாவாசை என்று சொல்லுவதை கவனிக்க வேண்டும். எனவே பழைய ஏற்பாட்டு வசனங்கள் முக்கியத்துவப்படுத்துவது அமாவாசையை அல்ல, மாதத்தின் முதலாம் நாளை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
எல்லா புறவின மக்களும் (இஸ்ரவேலர் அல்லாதோர்) சூரியனை வைத்து தங்கள் நாட்குறிப்புக்களை வைத்திருக்க, இஸ்ரவேல் மக்களின் நாட்குறிப்புக்கள் சந்திரனை வைத்தே குறிக்கப்படுவதால் இஸ்ரவேலர்களுக்கு அமாவாசை அன்றே மாதத்தின் முதல் நாளாக கணக்கிடப்பட்டு வந்ததாக அறிய முடிகிறது.
எனவே இஸ்ரவேலர்கள் ஓய்வு நாளை எப்படி கடைப்பிடித்தார்களோ, அதே போன்று, மாதத்தின் முதலாம் நாளிலும் தங்கள் பண்டிகை நாட்களை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
ஆகையால்தான் தன்னுடைய மகனை பிழைக்க வைக்கும் படி தேவ மனிதனாகிய எலிசாவிடத்திற்கு ஆள் அனுப்பி அவரை வரசொல்ல வேண்டும் என்று தன் கணவனிடத்தில் சொன்னபொழுது விஷயம் அறியாத சூனேமியாளின் கணவன், இன்று மாதத்தின் முதல்நாளும்(அமாவாசி) இல்லை. ஓய்வு நாளும் இல்லையே பின்பு ஏன் அவரிடத்திற்கு போக வேண்டும்? என்று காரணம் கேட்கிறான்.
மேலும் வருடத்தின் முதல் மாதத்தில் முதலாம் நாள் மிகவும் விஷேசமாக கருதப்பட்டிருக்கிறது, ஆகையால்தான்  1 சாமுவேல் 20: 5,6 ல்  “தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.
உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்’’  என்று தன்னை கொல்ல திட்டமிட்டிருக்கும் சவுலுக்கு முன்பாக போகாமல் தப்பித்துக்கொள்வதற்கு வருடத்தின் முதலாம் மாதத்தில் முதலாம் நாளில் குடும்பமாக பலி செலுத்த செல்ல வேண்டும் என்று சொல்லச்சொல்லி தாவீது சொல்லுவதைதான் மேலே உள்ள வசனங்களில் வாசிக்கிறோம்.
இவ்வசனங்கள் அமாவாசயை முக்கியத்துவப் படுத்த வில்லை.  எனவே இவ்வசனங்களை மேற்கோள்காட்டி, அமாவாசை பழைய ஏற்பாட்டில் முக்கியத்துவப் படுத்தப்பட்டதாக கருதக்கூடாது.
இந்த வசனங்கள் மாதத்தின் முதலாம் நாளில் கர்த்தருடைய சமூகத்தில் செலுத்தப்படும் பலிகளையே முக்கியத்துவப்படுத்துகிறது.
இதைத்தொடர்ந்து புறவினத்தவரின் செயல்களான ஜோசியம், நட்சத்திரம் பார்க்கும் செயலுடன் அமாவாசி நாளை கணிப்பதையும் சுட்டிக்காட்டி, தேவன் கடிந்து கொள்வதை ஏசாயா 47:13 ல் வாசிக்கலாம்.
தேவனால் அமாவாசையை கணிப்பவர்கள் கண்டிக்கப்படுவதின் மூலமாக அமாவாசைக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது.
இவைகள் மட்டுமல்ல, நமக்கு அமாவாசை மாதத்தின் முதலாம் நாள் அல்ல, நாம் இப்போது பயன்படுத்தி வரும் காலண்டர் முறைகள் சூரியனை வைத்தே கணிக்கப்பட்டு, அதைதான் நாம் நடை முறைப்படுத்தி வருகிறோம்.
மேலும் பழைய ஏற்பாட்டு, பலிகள் இயேசு கிறிஸ்தவின் மூலமாக நீக்கப்பட்டு, இன்று நம்மையே ஜீவ பலியாக தேவ சமூகத்தில் அர்ப்பணித்து தொழுது கொள்ள வேண்டும் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.
நாட்கள், முக்கியத்துவப்படுத்தப்படாமல், கிறிஸ்துவே முக்கியத்துவ படுத்தப்படுகிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எல்லா நாளும் நாம் தொழுது கொள்ளவே வேதம் நமக்கு கற்றுத்தருகிறது.
எங்கு தொழுது கொள்ள வேண்டும் என்று கேட்ட சமாரியா ஸ்திரீயிடம், இயேசு கிறிஸ்து எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்று கூறுவதை யோவான் சுவிசேஷத்தில் வாசிக்கிறோம்.
எனவே இந்நாட்களிலும் அமாவாசை பெயரால் பலவித தலைப்புகளில்  நடத்தப்படும் ஜெப ஆராதனைகள் அமாவாசையை மட்டும் முக்கியத்துவப்படுத்தி, அமாவாசையை சிறப்பு நாளாக்கிக்கொண்டிருப்பது போல் இருக்கிறது.
மற்ற ஆராதனை நாட்களை விட எந்த விதத்திலும் அமாவாசை நாளிலே நடத்தப்படும் ஆராதனைகள் சிறப்பு இல்லை. ஆனால் கிறிஸ்துவை அறியாத மக்களிடத்திலும், ஏன் கிறிஸ்தவர்களிடத்திலும் கூட மற்ற ஆராதனைகளை விட அமாவாசை ஆராதனைகள் சிறப்பு ஆராதனையாக கருதப்பட்டு வருவதற்கு என்ன காரணம்.? அமாவாசை பெயரால் நடத்தி, அதற்கு சிறப்பு விளம்பரம் கொடுப்பதால்தான்.
இது நாளடைவில், மக்களை கிறிஸ்துவை விட்டு விலக்கி, அமாவாசையோடு ஐக்கியமாக்கி, அமாவாசைக்கு அடிமைப்படுத்தி விடும் கவனம் தேவை.
நமது தேச மக்களிடத்தில் அமாவாசை பயம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அதை கிறிஸ்தவத்திற்குள்ளும் அனுமதிக்க வேண்டாம்.
தவறு செய்கிறவர்களுக்கும், திருடர்களுக்கும், மற்றவர்களுக்கு தீங்கு செய்கிறவர்களுக்கும், பிசாசின் ஆவிகளுடன் இணைந்து பில்லி சூனியம், மந்திரம், ஏவல் செய்கிறவர்களுக்கு இருட்டு மிகவும் வசதியாக இருக்கும் என்பதால்தான் கும் இருட்டான அமாவாசை நாளை தேர்ந்தெடுக்கிறார்களே தவிர அந்த நாளில் அவர்களுக்கும் சிறப்பு ஒன்றும் இல்லை.
எனவே  பிசாசுகளை விரட்டுவதற்கும், பிசாசின் கிரியைகளை அழிப்பதற்கும் நமக்கு அமாவாசை மட்டுமல்ல, இயேசுவின் நாமத்தில் எல்லா நாளும் சிறப்பான நாட்கள்தான். விடுதலை ஊழியமும், விடுதலை ஊழியரும் எல்லா நாட்களும் பிரகாசிப்பார்கள். இதுவே தேவன் அவர்களுக்கு தந்திருக்கும் சிறப்பு.
கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அன்றைய தினம் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நடத்தப்படுவதாக இருந்தாலும், அது நாளடைவில், அமாவாசையை முக்கியத்துவ படுத்துவதாகவே மக்கள் திருப்பி விடுகின்றனர்.
இந்த செய்தியின் வாயிலாக அறிவிக்கப்படும் செய்தியும், அறிந்து கொள்ள வேண்டிய செய்தியும் இதுதான். எந்த நாளிலும் ஆராதனை, ஜெபம் நடத்தலாம் நடத்தவே கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அமாவாசை ஜெபம், அமாவாசை ஆசீர்வாத ஜெபம், அமாவாசை விடுதலை ஜெபம், அமாவாசை சிறப்பு ஆராதனை என்ற தலைப்புக்களில் நடத்த வேண்டாம், இது அமாவாசையில் ஏதோ சிறப்பு இருக்கிறது என்பது போல் காண்பித்து விடும்.
எனவே விடுதலை ஆராதனை, ஆசீர்வாத ஆராதனை, நற்செய்தி ஆராதனை என்று பெயர் வைத்துக்கொள்ளலாம் அதற்கு முன்பாக இருக்கும் “அமாவாசை’’யை நீக்குவதே நல்லது. செய்வார்களா? அப்படி நடத்துகிறவர்கள். பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 comments:

Post a Comment