Bread of Life Church India

அடிமைத்தனமா? சுயாதீனமா?



பரிசுத்தமாக வாழவேண்டும், வெற்றி வாழ்க்கை வாழ வேண்டும் என்று அநேகர் விரும்பினாலும் ஏன் அநேகரால் வாழ முடிய வில்லை என்பதை குறித்து பார்த்து விட்டு, எப்படி வாழலாம் என்பதைக்குறித்தும் வேத வசனத்தின் அடிப்படையில் கவனிப்போம்.
கிறிஸ்தவ பெயரோடு, இருப்பதால் உலகத்தினர் பார்வையில் கிறிஸ்தவர் என்று அறியப்பட்டாலும், கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு என்பது கிறிஸ்துவைப்போல் வாழும் வாழ்வாகும்.
கிறிஸ்துவைப்போல் வாழும் வாழ்வு மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கும், தேவன் நம்மை கிறிஸ்துவின் சாயலாக மாற்றி, கிறிஸ்துவினால் உண்டாகும் ஆசீர்வாதங்களுக்கு நம்மை உடன் சுதந்திரராக வைக்கிறார்.

இந்த வாழ்வானது, இரட்சிப்பில் ஆரம்பமாகிறது, தொடர்ந்து இந்த வாழ்க்கை வாழ்வதற்கு தேவ ஆவியானவர் நம்மை நடத்துகிறார். பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கு உட்பட்டு வாழும் வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக இருக்கும்.
எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்’’ (ரோமர் 8:14-16)
தேவனுடைய பிள்ளைகளின் வழியானது தேவனால் வகுத்து கொடுக்கப்படுகிறது. அந்த வழியில் நாம் நடப்பதற்கு ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார்.
உலகத்திலுள்ள பல வித அசுத்தங்களுக்குள்ளும், பொல்லாப்புக்குள்ளும் நாம் சிக்கிக்கொள்ளாதபடிக்கு ஒவ்வொரு நாளும் நம்மை கட்டுப்பாட்டுடன் ஆவியானவர்  நடத்துகிறார்.
கட்டுப்பாடு இன்று அநேகருக்கு கடினமாகவும், கஷ்டமாகவும் இருக்கிறது, கட்டுப்பாட்டை உதாசீனப்படுத்துகிறவர், வாழ்வில் உலக இன்பத்தை மட்டும் பெற்றுக்கொள்ளலாமே தவிர, தேவனால் உண்டாகும், ஆசீர்வாதமான வெற்றிவாழ்வை பெற்றுக்கொள்ள முடியாது.
வெற்றி வாழ்க்கைக்கு கட்டுப்பாடு, என்பது மிகவும் முக்கியமாகும், கட்டுப்பாடில்லா வாழ்க்கையே தோல்வியின் வாழ்வாகும், உலகம் இழுக்கும் திசையெல்லாம் செல்வது சுயாதீன வாழ்வு, அதுவே இன்பபான வாழ்வு என்று தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்கிறவர்களே, அடிமைத்தனத்திற்குள் சிக்கி, அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் தத்தளிக்கின்றனர்.
சுயாதீனன் பாவத்திற்குள் வாழ்வதில்லை, பாவம் செய்கிறவன் சுயாதீனனாக இருப்பது இல்லை.
சுயாதீன வாழ்வே வெற்றியின் வாழ்வு, ஆனால் இது கட்டுப்பாட்டுடன் ஆவியானவரின் ஆளுகைக்குள் இருக்கும் வாழ்வு. ஆவியானவரின் நடத்துதலுக்கு தன்னை அர்ப்பணிக்கும் போது, பாவத்தின் கட்டளைகளை மீறி, பாவ அடிமைத்தனத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் வாழும்படியாகவே ஆவியானவர் நடத்துகிறார்.
கண்காணிப்பும், கட்டுபாடும், ஒரு போதும் சுயாதீனத்தை சிதைப்பதில்லை. காட்டுப்பாடற்ற வாழ்வே, சுயாதீனத்தை சின்னாபின்னாமாக்கி, அடிமையாக்கி விடுகிறது.
ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்’’ (கலாத்தியர் 5:1).
கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் சுயாதீனர்களாக, பாவத்தை வெறுத்து, பரிசுத்தத்தையும், நீதியையும் சிநேகிக்கிறவர்களாக  உலகமும், பிசாசும் விதிக்கும் பொல்லாத செயல்களுக்கு கட்டுப்படாமல், சுயாதீன ஒழுக்கத்துடன், நிறைவான வாழ்வு வாழ்வதற்காகவே, நீதியின் கட்டளைகளையும், பரிசுத்தத்தின் ஒழுங்குகளையும் ஆவியானவர் நமக்கு போதித்து நடத்துகிறார்.
சுயாதீன ஒழுக்கமும், கட்டுப்பாடும் அடிமைத்தனமல்ல, ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் மீறச்செய்வதே, பாவமும், அடிமைத்தனமுமாக இருக்கிறது.
சுயாதீன ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் உடைப்பதே பிசாசின் வேலை,  சுயாதீன ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கடினமாக காண்பிப்பதே பிசாசின் தந்திரம்.
கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்’’ (1 கொரி 7:22).
தங்கள் விருப்பம் போல் வாழ்வதற்காக சிலர் சொல்லிக்கொள்ளும் சுயாதீனம் என்பதே போலி வார்த்தை. ஒருவனும் இந்த உலகில் என்றும் சுயாதீனனாக இருக்க இயலாது. சுயாதீனமாக இருக்கப்போகிறேன் என்றால் எதற்கோ அடிமையாக இருக்கப்போகிறான் என்பதுதான் உண்மை.
நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்’’ (1 கொரி 7:23).
கிறிஸ்துவுக்குள் தன்னை ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் கொடுப்பவர் சுயாதீனராக இருக்கிறார். கிறிஸ்துவுக்குள் தன்னை ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க மறுப்பவர் பாவத்தின் அடிமைத்தனத்தில் சிக்கிக்கொள்கிறார்.
தேவன் கொடுத்திருக்கும் எல்லையை தாண்டி இது என் சுயாதீனம் என்று செல்பவர், பாவத்தின் அடிமைத்தனத்திற்குள் சிக்கவேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.
ஆவியானவரின் ஆளுகைக்கைக்குள் இருக்கும் போது, மனிதர்களுக்கு தேவனுடைய எல்லைகளையும், தேவன் மனிதனுக்கு தந்திருக்கும் சுயாதீனத்தையும், சரியாக விளக்கி காண்பித்து, வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி உயரே செல்வதற்கு வழி காண்பிக்கிறார்.
முதல் மனிதனாகிய ஆதாமுக்கு தேவன் எல்லாவித சுயாதீனத்தையும், கொடுத்து, முழு உலகத்தையும் ஆளும் உரிமையையும் கொடுத்து,  தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டவனாக இருந்து செயல்படவே தேவன் அவர்களுக்கு எல்லை வகுத்து கொடுத்தார். அந்த எல்லையை அவர்கள் மீறி சென்றபடியினாலேயே, அவர்கள் தங்கள் முழு சுயாதீனத்தையும், ஆளும் தன்மைகளையும் இழந்து, அடிமைத்தனத்திற்குள்ளாக செல்லவேண்டிய நிலை வந்தது.
தேவனிடத்தில் முழுமையாக நம்மை அர்ப்பணித்து, தேவனுடைய கட்டுப்பாட்டுக்கள் இருக்கும்படி, நாமாக நம்முடைய சுயாதீனத்தின் படி தேவனிடத்தில் நம்மை ஒப்படைக்கிறோம்.
ஆனால் பாவ அடிமைத்தனம் என்பது அப்படிப்பட்டது அல்ல, அது மனிதனை தன்னுடைய சூழ்ச்சியில் விழவைத்து, ஏமாற்றி, தன்வசப்படுத்தி, அடிமைத்தனத்திற்குள்ளாக சிக்க வைத்து, அதிலிருந்து வெளியில் வரமுடியாத அளவுக்கு சிறைப்படுத்தி, ஆளுகை செய்ய பார்க்கிறது.
இயேசு கிறிஸ்துவின் மூலமாக, அவைகளின் பிடியில் இருந்து விடுவித்து, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து, எப்போதும் சுயாதீனமாக முடிவெடுத்து செயல்படும்படியான வெற்றி வாழ்க்கைக்கு நம்மை வழி நடத்துகிறவர் ஆவியானவரே, 
பறவைகளை பிடிக்க வேடன் கண்ணி வைக்கிறான். வேடனுடைய திட்டத்தையும், அவனுடைய செயல்களையும் நன்றாக அறிந்திருக்கும் தாய் பறவைவலை விரித்திருக்கும் இடத்தில் நீ இரையை தேடாதே, அதில் உன் கால் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து உன்னால் விடுபட முடியாது, பிறகு நீ வேடனுக்கு அடிமையாவாய். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று கட்டுப்பாடுகளை விதித்து, தன் குஞ்சுகளை பாதுகாத்து பராமரித்து வந்தது.
தாயின் வார்த்தைகளை கேட்டுஅப்படியே செய்கிறோம்’’ என்று சில குஞ்சுகள் கேட்டு அதன்படி செய்வதற்கு சம்மதிக்க மற்ற குஞ்சுகளுக்கோ, தன் தாய் பறவை மீது அதிகமான கோபம் ஏற்படுகிறது.
இந்த அம்மாவிற்கு வேறு வேலையே இல்லை. எப்போது பார்த்தாலும் எதாவது ஒரு கட்டுப்பாடு விதித்துக்கொண்டே இருக்கிறார்கள். நம்மை சுயாதீனமாக இருக்கவே விடுகிறது இல்லை. இதை செய்யாதே, அதை செய்யாதே என்று எப்போது பார்த்தாலும், எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்’’ என்று சலிப்படைந்து கொள்ளும்.
அன்றும் அப்படிதான் வெளியில் செல்லும் போது, தன் குஞ்சுகளுக்கு எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து வெளியில் அனுப்பியது.
ஆனால் வழக்கம் போல கட்டுப்பாட்டை மீறி, தான் சுயாதீனமாக செயல்பட வேண்டும், இந்த கட்டுப்பாடு என்பது அடிமைத்தனம் என்று நினைத்த சில குஞ்சுகள் தன் தாய் பறவையின் கட்டுப்பாட்டை மீறி, வேடன் விரித்து வைத்திருந்த வலையில் கிடந்த தானியங்களை கண்டு, அவைகள் மிகவும் நன்றாக இருக்கிறதே,! அதை எப்படியாகிலும் எடுத்து விட வேண்டும் என்று விரிக்கப்பட்ட வலைகளை கவனிக்காமல், சென்று தானியங்களை சேகரிக்கையில், கால்கள் வலையில் சிக்கி வெளியேவரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கையில் இதற்காகவே காத்திருந்த வேடனோ, தன்னுடைய வேலை முடிந்தது என்ற திருப்தியில் பறவைகளை பிடித்துச்சென்றான்.
இதைக்குறித்துதான்வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்’’ (நீதி 6:5), “விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்’’ (நீதி 6:26) என்று வேதம் சொல்லுகிறது.
கட்டுப்பாட்டை மீறி, சுயாதீனத்திற்கு ஆசைப்பட்ட பறவைகளின் நிலை  சுயாதீனத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு, அடிமைத்தனம்.
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தேவன் விதித்திருக்கும் கட்டுப்பாடான வாழ்வுதான் சுயாதீனம் என்று அறியாத மனிதர்களின் நிலையும் இப்படிதான் இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் மூலமாகவேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்’’  (சங்கீதம் 124:7) அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள், ஆவியானவருடைய வழிநடத்துதலின் படி செல்லும் போதே வெற்றி வாழ்க்கை அனுதினமும் சாத்தியமாகிறது.
பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் இருந்து அவருடைய கட்டுப்பாட்டின் படி செயல்படுவதே சுயாதீனம்அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார் ‘’ (சங்கீதம் 91:3). நம்முடைய வாழ்க்கை எதற்கும் அடிமைப்படாதபடிக்கு ஆவியானவரே பாதுகாத்து நடத்துகிறார்.
எனவே நாம் முழுமையாக ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை ஒப்புக்கொடுத்து, ஆவியானவரின் வழிநடத்துதலின்படி செல்லும் போது, பிசாசு கொண்டு வருகிற எல்லா வலைகளையும், கிழித்தெறிந்து, சுயாதீனமுள்ளவர்களாக வெற்றி வாழ்க்கை வாழ்வோம்.

0 comments:

Post a Comment