எதை நோக்கி பயணிக்கிறது?
சில நாட்களுக்கு முன் ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழா விற்கு இன்னொரு மதத்தை சார்ந்த என்னுடைய நண்பர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப் பட்டிருந்தார். அந்த பாராட்டு விழாவிற்கு நண்பர் மூலமாக நானும் அழைக்கப்பட்டு, அவருடன் சென்றிருந்தேன்.
அங்கு நடைபெற்ற விஷயங்கள் முற்றிலும் மாறுபட்டவைகளாக இருப்பினும் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு விஷயங்களையும் அமர்ந்தபடியே என் மனதில் உள்வாங்கி,சிந்திக்கலானேன்.
எழுத்துலகில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட புராணத்தை நாவல் வடிவமாக்கிக் கொண்டிருக்கிறார், அந்த நூல்களின் வெளியீட்டு விழா, அந்த நூல் வரிசைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு பிரபலங்கள் பலர் அழைக்கப்பட்டிருக்க அதில் என்னைக் கவர்ந்த விஷயங்கள் என்னவென்றால் தான் எந்த புராணத்தை நாவல் வடிவமாக்கிக் கொண்டிருக்கிறாறோ, அதே புராணத்தை தங்கள் சொற்பொழிவுகளிலும், மொழியாக்கத்திலும், ஒவியங்களிலும் பிரபலப்படுத்திக்கொண்டிருக்கும் தன் சகாக்களைக் கண்டறிந்து அவர்களை அழைத்து, சிறப்பித்து, வாழ்த்தி, கனப்படுத்தி, உற்சாகப்படுத்தி, கௌரவித்து, பாராட்டி, மெமோண்டோ கொடுத்தார் அந்த எழுத்தாளர்.
அதில் எனது நண்பரும் ஒருவர், அவர் அந்த புராணத்தை மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறார்.
அந்த விழா முழுவதும் அந்த எழுத்தாளருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அந்த இடத்தில் இவர்களை அழைக்கவும் கனப்படுத்தி, உற்சாகப்படுத்தவும் வேண்டிய அவசிமே இல்லை. தான் மறுவாசிப்பு செய்யும் புராணத்தை தன்னுடைய கால கட்டத்தில் இன்னொருவர் வேறுவழியில் மக்களிடம் கொண்டு சென்று கொண்டிருக்க தன்னுடைய பெயருக்கும், தன்னுடைய நாவலுக்கும் சிறிது தோய்வு ஏற்ப்பட்டு விடுமோ, என்ற சந்தேகம் துளி கூட இல்லாமல். தான் பாராட்டப்பட வேண்டிய மேடையில் தன் சகாக்கள் பாராட்டப்பட வேண்டும், தான் எடுத்திருக்கும் அதே புராணத்தை அவர்களும் தனது கால கட்டத்தில் எடுத்திருக்கிறார்கள், அவர்களை பாராட்டி, உற்சாகப்படுத்தியே ஆக வேண்டும் என்று நினைத்ததே பெரிய விஷயம், பாராட்டியது அதை விட பெரிய விஷயம்.
தான் செய்து கொண்டிருக்கும் ஒன்றை இன்னொருவர் செய்யும் போது அது எந்த வகையிலாவது தனது படைப்புக்கும், பெயருக்கும், புகழுக்கும் இரக்கத்தை கொண்டுவந்து விடக்கூடாது என்பதற்காக அப்படிப்பட்டவர்களை குறைத்து பேசி, மட்டம் தட்டி, அவர்களுக்கு எல்லாம் என்ன தெரியும், நான் செய்வது மட்டும்தான் சரியானது என்று மார் தட்டிக்கொள்பவர்களே அதிகம், இவைகள்தான் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது.
அந்த புராணமும், அதை மறு வாசிப்பு செய்வதும், மொழியாக்கம் செய்வதும், அதை வாசிப்பது எல்லாம் நித்தியமானது அல்ல, அநித்தியமானது தான். இருப்பினும், அநித்தியமான விஷயங்களுக்கே இப்பிரபஞ்ச மனிதன் மேன்மையை கொடுத்து, அதை எப்படியாகிலும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தன்னை அர்ப்பணிப்பான் என்றால், நித்தியமான சுவிசேஷ அறிவிப்பாளர்களும், தேவ பிள்ளைகளும் எந்த அளவுக்கு உற்சாகப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது.
பாராட்ட வேண்டாம், குறை பேசாமல் இருந்தால் போதும், கௌரவ படுத்தவும் வேண்டாம். அசிங்கப்படுத்தாமல் இருந்தால் நல்லது. உற்சாகப்படுத்தவும், வேண்டாம். விரட்டி விடாமல் இருந்தால் போதும்.
பொறாமையும், எரிச்சலும், தான்என்ற அகங்காரமும் அதிகமாக தலைவிரித்தாடுவதற்கு இடம் கொடுத்து, வேறொரு பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டவர்கள் அதிகமாகிக் கொண்டிருப்பது ஆரோக்கியமான கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. இத்தலைமுறை கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய முன்னோடிகள் எப்படிப்பட்ட முன்மாதிரிகளை வைக்கப்போகிறார்கள் என்பது தெரிய வில்லை.
எதையும் வேதாகமத்தின் அடிப்படையில் பேச வேண்டும், இதுதான் ஆதிநாட்களில் நடந்தது,
இக்காலத்தில் அதுவா நடை பெறுகிறது. தனக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகு பாடுகள் அடிப்படையில் அல்லவா எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது. இதைத்தான் தவறு என்று சுட்டிக்காட்டவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
இப்போது இருக்கும் சபைகள் போதாது, இப்போது இருக்கும் ஊழியர்கள் போதாது. ஊழியங்கள் இன்னும் பெருக வேண்டும், ஊழியர்கள் இன்னும் பெருக வேண்டும்.
பெரியவன், சிறியவன் என்ற பாகுபாடுகள் நீங்க வேண்டும். ஒற்றுமையும் ஒருமனமும் இணக்கமும் இல்லாமல் தேவனுடைய ராஜ்யத்தை கட்ட முடியாது.
ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தி, ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொண்டிருப்பதால் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு எப்படி கொடுக்க முடியும். கிறிஸ்துவின் வார்த்தைகள் அல்லவா, ஒரு மனிதனை மறுரூபப்படுத்தும், இயேசு இல்லாமல் ஒரு மனிதன் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியாதே,
சுவிசேஷமே மனிதனை மாற்றுகிறது, மனந்திரும்புதல் அல்லவா, பரலோக ராஜ்யத்திற்கு சமீபமாக கொண்டு செல்லும்.
வெறும் எழுத்தைக் மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஒரு கூட்டு முயற்சியுடன் செயல்படுவார்கள் என்றால் ஜீவனுள்ள தேவனின், ஜீவனுள்ள வார்த்தைகளை மக்களிடம் கொண்டு செல்லுவதற்கு ஒரு மனமும் ஒற்றுமையும் மிகவும் அவசியம் அல்லவா!!
புரிந்து செயல்படுவார்களா? ஆவிக்குரிய தலைவர்களும், விசுவாச மக்களும்?
ஜெபிப்போம். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை மிகவும் கவலை அழிப்பதாக உள்ளது. ஒருவருடைய நற்செயல்களை பாராட்டுவதை விட எந்த விதத்தில் குறை கண்டு பிடித்து விரட்டி விடலாம் என்று மிகுந்த கவனமுடன் செயல் படுவதை சமீப காலமாக அதிகமாக காண முடிகிறது.
0 comments:
Post a Comment