எதிரிக்கு சவால்
“அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்’’ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 1:19).
வாழ்க்கையே போர்க்களம் என்று
சொல்லுவார்கள். இது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு
மிகவும் பொருந்தும், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது போர்க்களம், போர்களத்தில் என்ன
நடக்கும் போர்கள்தான் நடக்கும். போர்க்களத்தில் இறங்கி விட்டால் எதிரியை வீழ்த்த
வேண்டும் அல்லது நாம் வீழ்த்தப்படுவோம்.
கிறிஸ்தவ வாழ்க்கை போர்க்களம்
என்றதும் பயந்து வேண்டவே, வேண்டாம் எனக்கு போர்க்களமே
வேண்டாம் என்று நாம் ஓடி விட முடியாது. இந்த உலகத்தில் இரண்டு விதமான போர்க்களம்
உண்டு, ஒன்று கிறிஸதுவை அறிந்து
இரட்சிக்கப்பட்டவர்களுக்கான போர்க்களம், இரண்டாவது
கிறிஸ்துவை அறியாமல் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான போர்க்களம்.
இயேசுவை அறிந்து, விசுவாசித்து இரட்சிக்கப்பட்டவர்களின் போர்க்களத்தில்
இயேசு கூட இருக்கிறார். ஜெயிக்க பெலன் கொடுக்கிறார். தேவ பிள்ளைகளின் வாழ்வில், விரோதமாக எழும்பி
யுத்தம் செய்கிறவர்கள் வருவார்கள், ஆனால்
அவர்கள் நம்மை மேற்கொள்ள மாட்டார்கள், நாம்
அவர்களை மேற்கொள்வோம்.
இயேசுவை அறியாமல், விசுவாசிக்காமல், இரட்சிக்கப்படாதவர்களுக்கு
இயேசு கூட இல்லாதபடியால் அவர்களுக்கு வேண்டிய பெலன் இல்லாமல் போகிறது. அவர்களுக்கு
விரோதமாக யுத்தம் செய்கிறவர்கள் அவர்களை மேற்கொள்கிறார்கள்.
இரண்டுமே போர்க்களம்தான். இயேசுவோடு
நாம் இருந்தால், இயேசு நம்மோடு இருந்தால்
வெற்றி நமக்குதான். தோல்வி சத்துருவுக்கு.
ஆகையால் யுத்தங்களைக்கண்டு நாம் கலங்கவோ, பயப்படவோ வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு விரோதமாக
எழும்புகிற கூட்டம் எழும்பிக்கொண்டேதான் இருக்கும். நமக்கு விரோதமாக
பேசிக்கொண்டேதான் இருக்கும். அதை எல்லாம் நாம் கவனித்துக்கொண்டிருந்தால் தேவன்
நமக்கு வைத்திருக்கும் இலக்கை நோக்கி நம்மால் போக முடியாது.
ஆகையால் எப்போதும் நாம்
கவலையோடும், வேதனையோடும் இருக்க
வேண்டிய அவசியம் இல்லை.
நல்ல போர்வீரர்களாக கிறிஸ்துவின்
படையில் நாம் இணைந்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் எதிரியை பந்தாடுங்கள்.
கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறேன் என்று வாக்கு பண்ணியிருக்கிறார்.
போர் ஆயுதங்களை தந்து வெற்றியை
தருவார்
இன்றைக்கு இந்த யுத்தங்களை
குறித்துப் பார்க்கும் போது, யுத்தங்கள் எல்லாம்
சரீரத்திற்கு எதிராக இல்லை, நம்முடைய ஆத்துமாவுக்கு
விரோதமாகவே இருக்கிறது. இது ஆவிக்குரிய யுத்தம். இந்த யுத்தத்தில் நாம் எடுக்க
வேண்டிய ஆயுதமும், சரீரத்திற்கு
ஏதுவானவைகளாக இல்லாமல், ஆவிக்குரிய ஆயுதங்களையே
நாம் எடுக்க வேண்டும்.
“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு
தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா
மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும்
கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்’’ ( 2 கொரிந்தியர் 10:4,5).
நமக்கு எதிராக வருகிற
சத்துருவானவன் நமக்கு எதிராக பயன்படுத்தும்
போர் ஆயுதங்கள், நமது ஆவிக்குரிய
வாழ்க்கைக்கு எதிராகவே அவன் செயல்படுத்துகிறான்,. விசுவாச
வாழ்க்கையை விட்டு விலகச் செய்ய தந்திரமாக செயல்படுகிறான்.
பிசாசின் எல்லா தந்திரங்களையும்
நாம் முறிய அடிக்க வேண்டுமானால்,
நாம் தேவ
பெலன் பெற்றுக்கொண்டவர்களாக தேவ ஆவியானவராலே நடத்தப்பட வேண்டும்.
தேவ ஆவியானவராலே நடத்தப்படும்
போது, நமக்கு எதிராக யார் எழும்பினாலும், அவர்கள் நம்மை மேற்கொள்ள தேவன் விட மாட்டார். நாம்
அவர்களை மேற்கொள்ள உதவி செய்வார்.
எனவே நம்முடைய ஜெபத்தில் யுத்தமே
வேண்டாம் என்று கேட்க கூடாது, யுத்தத்தில் என்னோடு கூட இருந்து வெற்றியை தாரும்
என்று கேட்க வேண்டும்.
நீதியோடும் நேர்மையோடும்
எழும்புகிறவர்களுக்கு விரோதமாகதான் யுத்தங்கள் வரும், காரணம் இந்த உலகத்தை எதிர்ப்பது அதுதானே. உலகத்துடன்
இணைந்து செல்கிறவர்கள் யுத்தத்தை விட்டு பின்வாங்குகிறவர்கள்.
. “உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல
அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக
யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை
மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே
இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’’ (எரே 15:20).
தேவன் நம்மை மற்ற மக்களுக்கு
முன்மாதிரியாகவே வைத்திருக்கிறார். தேவன் நம்மை தெரிந்துகொண்டது, எல்லா மக்களுக்கும் பாதுகாப்பாக இருந்து தேவ நீதியை
வெளிப்படுத்தும்படிதான், என்பதை முதலாவது நாம்
அறிந்து கொண்டால் நம்முடைய பொறுப்பு நமக்கு தெரிந்து விடும், நமக்கு எதிராக ஏன் யுத்தம் வருகிறது என்பது புரிந்து
விடும்.
எதிராக எழும்பும் ஆயுதத்தை
முறித்து போடுவார்
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; (ஏசாயா 54:17).
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு விரோதமாக எத்தனையோ
விதமான ஆயுதங்கள் நமக்கு எதிராக வருகிறது.
சமாதானத்தை கெடுக்கும்படியும், முன்னேற்றத்தை தடுக்கும் படியும், வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு விரோதமாக எத்தனை விதமான
எதிரான ஆயுதம் வந்தாலும் தேவன் அவைகளை ஒன்றுமில்லாமல் போகச் செய்வார்.
கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும்
நமக்கு தேவன் கொடுத்திருக்கும் மிகப்பெரிய சிலாக்கியம் என்னவென்றால், போர்களத்தில் நிற்பதுதான் நாம், யுத்தம் செய்வது கர்த்தர்.
இன்றைக்கு நம்மில் அநேகர் “ஐயோ நான் போர்களத்தில் நிற்கிறேனே’’ என்று புலம்பி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் நாம் நன்றாக அறிந்துகொள்ள வேண்டிய உண்மை
என்னவென்றால் நம்மை முன்நிறுத்தி வெற்றியை நமக்கு கொடுக்க தேவன் விரும்புகிறார்.
இந்த இரகசியத்தை அறியாத சிலர்
போர்க்களம் எனக்கு வேண்டாம் என்று திரும்பி ஓட பார்க்கிறார்கள், திரும்பி ஓட நினைக்கிறவர்களையே சத்துருவானவன்
விரைவில் வீழ்த்தி விடுகிறான். காரணம் என்னவென்றால் போர்க்களத்தில்
பின்வாங்குகிறவர்களுக்கு தேவன் உதவி செய்ய முடியாது.
உனக்கு விரோதமாக உருவாக்கப்படும்
ஆயுதம் வாய்க்காது என்று தேவனுடைய வார்த்தை நமக்கு தெளிவாகச் சொல்லுகிறது. எனவே
இந்த வார்த்தைகளை விசுவாசித்து, தேவனை சார்ந்து
கொள்கிறவர்களுக்கு தேவன் உதவி செய்கிறார். பெலன் கொடுக்கிறார். வெற்றியைத்
தருகிறார்.
நீங்கள் இப்போது என்ன நிலையில்
இருந்தாலும் சரி, இயேசு கிறிஸ்துவை
சார்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் தாங்க முடியாத வேதனையோடும்
நெருக்கத்தோடும் நீங்கள் இருக்கலாம், உங்களுக்கு விரோதமாக உருவான
ஆயுதத்தை முறித்து போடுவார். நீங்களே
அவைகளை மேற்கொள்ளும் படி உங்களுக்கு பெலன் தருவார்.
“கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்’’ (யாத் 14:14).
சூழ்நிலைகள் எதிராகவும், பாதகமாகவும் இருக்கலாம் ஆனால் நம்முடைய வாழ்க்கை
கர்த்தருக்குள் இருந்தால், கர்த்தர் நம்மை
நடத்தினால் நாம் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் சும்மா இருப்பீர்கள்
என்று வேதம் சொல்லுகிறது என்று நாம் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல, செயல்பட வேண்டியது நாம்தான், யுத்தம் செய்வது கர்த்தர். அதாவது நமக்குள் இருந்தே
தேவன் கிரியை செய்கிறார்.
“குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்’’ (நீதி 21:31)
கிறிஸ்தவ வாழ்க்கை என்ற யுத்த
களத்தில் தேவன் நமக்கு பயிற்சியை கொடுக்கிறார், வெற்றியையும்
கொடுக்கிறார். பயிற்சி இல்லாமல் நம்மால் ஜெயத்தை பெற்றுக்கொள்ள முடியாது. பயிற்சி
மிக மிக அவசியம்.
“என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும்
படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’’(சங்கீதம் 144:1).
எதிர்த்து வருகிறவர்களை ஓட
செய்வார்
“உனக்கு விரோதமாய் எழும்பும் உன்
சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்’’ (உபா 28:7).
நமக்கு எதிராக வரும் சத்துருவை
தேவன் நமது கையிலே ஒப்புக்கொடுப்பார். நமக்கு எதிராக வருகிறவைகளை குறித்து நாம்
பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நமக்கு எதிராக வருகிற சத்துரு
பயந்து திரும்பி ஓடும்படி கர்த்தர் செய்வார், அதுவும்
ஒருவழியாக அல்ல, ஏழு வழியாக
ஓடிப்போகப்பண்ணுவார்.
நமக்கு எதிராக வரும் சத்துரு திரும்ப எழுந்திருக்க
கூடாத அளவுக்கு தேவன் சத்துருவை முறியடித்துப் போடுவார்.
பிரியமானவர்களே, நீங்கள் மிகவும் நெருக்கப்பட்ட நிலையில் இருக்கலாம்.
எந்த பக்கம் திரும்பினாலும் எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களே இருக்கிறார்கள் நான்
என்ன செய்வேன் என்ற வேதனை மத்தியில் இருக்கலாம்.
உங்கள் குடும்பத்திற்கு எதிராக, உங்கள் வேலைக்கு விரோதமாக வேலை ஸ்தலத்தில், இப்படி பலவிதங்களில் மனிதர்கள் மூலமாக சத்துரு
உங்களுக்கு எதிராக பிரச்சனைகளை கொடுக்கலாம்.
கலங்காதிருங்கள் எல்லாவற்றையும்
கர்த்தர் பார்த்துக்கொள்வார். விசுவாசத்தோடு இயேசு கிறிஸ்துவை நோக்கி
பாருங்கள்.உங்களுக்கு எதிராக எழும்பி உங்களை கலங்கடிக்கிற சத்துருவை தேவன்
ஏழுவழியாக ஓடச்செய்வார்.
இம்மாதத்திலே தேவன் கொடுக்கும்
வாக்குத்தத்ததை வைத்து ஜெபியுங்கள் கர்த்தர் உங்களுடன் இருந்து அற்புதங்களை செய்து
உங்களை உயர்த்துவார்.
“நீ பயப்படாதே, நான்
உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான்
உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என்
நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி
இலச்சையடைவார்கள்; உன்னோடே
வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.
உன்னோடே போராடினவர்களைத்தேடியும்
காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின
மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்’’ (ஏசாயா 41:10-12).
எந்த நிலையிலும் எப்படிப்பட்ட
சூழ்நிலையிலும் இயேசு கிறிஸ்துவை சார்ந்துகொள்ளுங்கள், தேவனுக்குப் பிரியமாக உண்மையாக இருந்து இயேசு
கிறிஸ்துவை பின்பற்றுங்கள்.
தேவன் உங்கள் வாழ்க்கையில் இதுவரை
உங்களுக்கு விரோதமாக எழும்பின சத்துருவை இருந்த இடம் தெரியாமல் போக செய்வார்.
0 comments:
Post a Comment