Bread of Life Church India

வேதாகமத்தில் “திரித்துவம்’’ உள்ளதா?


வேதாகமத்தில் திரித்துவ உபதேசம் மிகவும் முக்கியமான உபதேசமாகும். திரித்துவத்தை சரியாக விளங்கி கொள்ளா விட்டால், புரிந்து கொள்ளாவிட்டால் துர் உபதேசக்காரர்களின் வலையில் விழுந்து விசுவாச வாழ்வை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
திரித்துவ உபதேசம் இடையில் வந்தது அல்ல., வேதாகமத்தோடு கலந்தது. ஒரே நித்திய தேவன் திரித்துவமாக எப்படி செயல்படுகிறார் என்பதை வேதாகமம் அற்புதமாக விளக்கி காண்பிக்கிறது.
திரித்துவத்தை மறுதலிக்கப் புறப்படும் கள்ளர்களின் நோக்கம் இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்க வைப்பதேயாகும். இது பிசாசின் மற்றுமொரு தந்திரம்.

திரித்துவ சத்தியம் ஆதியாகமத்தில் இருந்து வெளிப்படுத்தல்வரை வேதாகமத்தில் நிறைந்திருக்கும் சத்தியமாகும்.
ஆதியாகமம் 1:26 ல், “தேவன்: நமது சாயலாகவும் நமது  ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக’’ என்று தேவன் தம்மை பன்மையில் வெளிப்படுத்துவதை கவனிக்க வேண்டும்.
நன்றாக அறிந்து கொள்ள வேண்டும், வேதாகமத்தை குழப்புகிற சிலர், தேவன் தமது தேவதூதர்களை சிருஷ்டிப்பின் வேலையில் பயன்படுத்தியதாக கூறுகின்றனர். இது தவறு. ஏனென்றால் தேவன் நம்மை தேவ தூதர்களின் சாயலாக படைக்க வில்லை, தம்முடைய சாயலாகவே படைத்திருக்கிறார். தூதர்களுக்கு  சிருஷ்டிப்பில எந்த பங்கும் இல்லை, ஏனென்றால் தேவ தூதர்களும் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்தான்.
மேலும் சில வேதாகம ஆதாரங்களைப் பார்க்கலாம். ஆதியாகமம் 3:22, நம்மில் ஒருவராக, ஆதி 11:7, நாம் இறங்கி போய், ஏசா 5:8, யார் நமது காரியமாக போவான்,  சங் 110;1, கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, இப்படியாக இந்த வசனங்கள் எல்லாம் தேவனைக்குறித்து பன்மையாகவே வருகிறது. எனவே  இந்த வேத வசனங்கள் எல்லாம் சர்வ வல்லமையுள்ள ஒரே தேவன், திரித்துவராக செயல்படுகிறார் என்பதை அறியத் தருகிறது.
மேலும் புதிய ஏற்பாட்டில் திரித்துவத்தைக் குறித்த சத்திய வசனங்கள் சிலவற்றை பார்க்கலாம்.  இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் லூக்கா 1:35, பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன், உன்னதமானவரின் (பிதா) பலத்துடன்  தேவ குமாரன் (இயேசு) வெளிப்படுவார், என்று  வேதம் கூறுகிறது,
லூக்கா 3:21,22ல் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்ற பொழுது, வானத்தில் இருந்து பிதாவாகிய தேவன் பேசுகிறார். நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்’’, “பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர் மேல் இறங்கினார்’’  இந்த சம்பவத்தில் தெளிவாக திரித்துவத்தை குறித்து விளங்கிக்கொள்ள முடியும்.
மேலும், இயேசு கிறிஸ்துவின் பிரதானமான கட்டளையில் மிக மிக தெளிவாக இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,’’ (மத் 28:19),  இங்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமங்களில் என்று தனித்தனியாக குறிப்பிடாமல், நாமத்தில் என்று ஒருமையில் சொல்லுகிறதை கவனிக்க வேண்டும். எனவே தேவன் செயல்களில் மூவராக இருந்தாலும், மூன்று தேவன் அல்ல, ஒரே சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்து சிலுவைக்கு செல்லும் கடைசி நாட்களில் தம்முடைய சீஷர்களுக்கு அநேக உபதேசங்களை போதித்துக்கொண்டு வரும் பொழுது, யோவான் 15:26 ல் “பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்’’ என்று சொல்லுவதில் கவனித்தால் திரித்துவத்தைக்குறித்து பேசுவதை அறிந்து கொள்ள முடியும். இதில் குமாரனாகிய இயேசு கிறிஸ்து, பிதாவைக்குறித்தும், பரிசுத்த ஆவியானவரைக்குறித்தும் பேசுவதின் மூலம் திரித்துவ தேவனின் செயல்களை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. ‘’ (1கொரி 12:4-6). திரித்துவத்தை குறித்து தெளிவாக கொடுக்கப்பட்டுள்ள இந்த வேத வசனங்களை துர் உபதேச குழப்பவாதிகள் தங்களுக்கு ஏற்றார்போல் ஏதாவது ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதையே சாதிக்க முயற்சிக்கிறார்கள்.
ஆனால் இந்த பகுதி தெளிவாக விளக்குகிறது,  ஆவியானவர் ஒருவரே. கர்த்தர் (இயேசு) ஒருவரே. தேவன் (பிதா)ஒருவரே சர்வ வல்லமையுள்ள ஒரே தேவன் திரித்துவமாக செயல்படுகிறார் என்பதை மூன்று வசனங்களையும் இணைத்து வாசித்தால் மட்டுமே விளங்கும், தனி தனியாக பிரித்து பார்ப்பது, மனிதனை, தலை தனியாக, உடம்பு தனியாக, இடுப்புக்கு கீழ் தனியாக பார்ப்பதற்கு சமம்.
எதாவது ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடாது. வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும். யார் எது சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு கேட்பதே, துர் உபதேசக் குழுக்கள் அதிகமாவதற்கு காரணங்களாக இருக்கிறது. அதே வேளையில் வேதாகமத்தை வாசிக்கும் போது ஆவியானவரின் உதவியுடன் வாசிக்க வேண்டும். சுய அறிவு குழப்பத்தையே ஏற்படுத்தும்.
நிருபங்களில் வாழ்த்துக்கள் சொல்லும் போது, திரித்துவம் வெளிப்படுகிறதை காணலாம். யூதா 20,21, ல் நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்  என்று வருகிறதையும்,
2கொரி 13:14ல் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென் என்று எழுதப்பட்டுள்ளது, மேலும், 1தெசலோனிக்கேயர் 1:2-5, வேதபகுதியிலும் இதே வாழ்த்துதலைப் பார்க்கலாம்.
கிறிஸ்தவ வாழ்வியலை விளக்கும் போதும் வேதாகமம் திரித்துவ தேவனை காண்பிக்கிறதைப் பார்க்கலாம்.
அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே (ஆவியானவர்) பிதாவினிடத்தில் (பிதா) சேரும் சிலாக்கியத்தை அவர் (இயேசு) மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசி களென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர் களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்’’ (எபே 2:18-20). என்று வாசிக்கிறோம்.
மேலும், வேதாகம ஜெபத்திலும், திரித்துவ தேவனை வெளிப்படுத்துவதை காணமுடியும், ஜெபங்களில் பிதாவாகிய தேவனை நோக்கி, பரிசுத்த ஆவியானவராகிய தேவன் மூலமாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபங்களை நாம் ஏறெடுக்கிறோம், இந்த ஜெபத்தைதான், இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும் வேதாகமத்தின் மூலமாக நமக்கு கற்றுத்தருகிறார்கள். அப்போஸ்தலர் 4:24-31, எபே 1:16-19, மத் 6:9.
இதைப்போலவே சிருஷ்டிப்பில் திரித்துவ தேவனின் செயல்களை வேதம் திட்டமாக நமக்கு காண்பிக்கிறது.
ஆதி 1:1, ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதி 1:2, தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
யோவான் 1:3, சகலமும் அவர் (இயேசு) மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
சிருஷ்டிப்பின் வார்த்தையை பிதாவாகிய தேவன் கட்டளையிடுகிறார், சிருஷ்டிப்பின் கட்டளைகளை குமாரனாகிய தேவன் நிறைவேற்றுகிறார், சிருஷ்டித்தவைகளை ஆவியானவராகிய தேவன் பாதுகாக்கிறார், அல்லது அவயம் காக்கிறார்.
இவ்விதமாக திரித்துவ உபதேசமானது வேதாகமம் எங்கும் நிறைந்து இருப்பதை கவனித்து, ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
திரித்துவ உபதேசம், பாதியில் வந்த இடை செருகல் அல்ல, நித்தியமாக இருக்கும் தேவனின் முழு தன்மை.
வேதாகம சத்தியங்களில் சில  மறைபொருளாகவும், இரகசியமாகவும் இருக்கின்றன, அதை ஆழ்ந்து படிக்கும் போதே விளங்கிக் கொள்ள முடியும், மேலோட்டமாக வாசிப்பவர்கள் வேதம் கூறும் சத்தியங்களை கண்டுகொள்ள முடியாது, வேதாகமத்தை வாசிக்க துவங்கும் முன், ஜெபத்துடனும், பரிசுத்த ஆவியானவரின் துணையுடனும் அணுகவேண்டும், உலக ஞானம் ஒன்றும் வேதாகமத்திற்கு முன் செல்லுபடியாகாது.

அப்போஸ்தலருடைய நடபடிகள்  புத்தகத்தில் 7:55,56 ல்  ஸ்தேவானைக் குறித்து வாசித்து வருகையில் அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு; அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்’’
ஸ்தேவானின் பரம தரிசனத்தில் அவன் கண்ட திரித்துவ தேவனின் தன்மையை விளக்கி வேதாகமம் கூறுவதையும் கவனிக்க மறக்க வேண்டாம்.
தேவன் தன்மைகளில் மூன்று நபர்களாய், ஒவ்வொருவரும் முழுமையான தேவனாக, ஒரே சர்வ வல்லமையுள்ள தேவனாக இருக்கிறார்.
இதை மனித தன்மையில் விளக்க வேண்டுமானால், ஒரே மனிதன், ஆவி, ஆத்துமா, சரீரம் என்னும் மூன்று தன்மையில் ஒரே முழு மனிதனாக இருக்கிறான்.
தேவன் மூன்றில் ஒன்றாக இருக்கிறார் என்ற சத்தியமே வேதாகமத்தையும், தேவனின் நோக்கத்தையும், திட்டத்தையும் அறிந்து கொள்ள செய்யும், இந்த சத்தியத்தை அறிந்து கொள்ளக்கூடாதபடிக்கு கண்களை மூடிக்கொள்கிறவர்கள், தேவனின் மெய்யான வெளிச்சத்தை கண்டுகொள்ள முடியாது.
திரித்துவம் என்பது வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதை விசுவாசிக்கும் போதே மற்ற உபதேசங்கள் நமக்கு தெளிவாகும், வேதத்தின் சரியான உபதேசத்தில் வளரமுடியும்.
ஒரு சிலர் திரித்துவத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், திரித்துவம் என்ற வார்த்தை, பதம் வேதாகமத்தில் இல்லை என்பதே ஆகும்,
ஆனால் திரித்துவம் என்ற வார்த்தை, பதம் நேரடியாக வேதாகமத்தில் எழுதப்படாவிட்டாலும், திரித்துவ தேவனைக்குறித்த அத்தனை சத்தியங்களும் வேதாகமத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
திரித்துவத்தில் மூவராக செயல் படும் தேவன்  தேவத்துவத்தில் ஒருவராக இருக்கிறார். அதே வேளையில் தனித் தனியான செயல்பாட்டில் தேவத்துவத்தின் முழுமை நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது.
பிதாவாகிய தேவன் எப்படி, தேவத்துவத்தில் முழு தேவனாக இருக்கிறாரோ, அதே போல குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் முழுமையான தேவனாக இருக்கிறார்.
குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து வேத வசனங்கள்  கூறுகிறதை சற்று கவனிப்போம்.  யோவான் 1: 1-4, குமாரனாகிய கிறிஸ்து நித்திய தேவன் என்பதை அறியத்தருகிறது, மத்தேயு சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்துவை ஆபிரகாமில் இருந்து அறிமுகப்படுத்தும் வேதம், மாற்குவில் உலகத்தில் அவருடைய ஊழிய நாட்களில் இருந்து காண்பிக்கும் வேதம், லூக்காவில் ஆதாமில் இருந்து வெளிப்படுத்தும் வேதம், யோவானில் முந்திய நித்தியத்தில் இருந்து காண்பிப்பதை கவனமுடன், கவனித்து வாசித்து அறிந்து கொள்ள வேண்டும். 
யோவான் 20:28 ல் தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்கிறான்
யோவான் 8:57, 58 ல் ஆபிரகாமுக்கு முன் நான் இருக்கிறேன் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். யாத்திராகமத்தில் 3:14 ல் அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.’’ இந்த வார்த்தைகளையே இயேசு கிறிஸ்து யோவான் 8:58ல் குறிப்பிட்டு அவிசுவாசமுள்ள யூதர்களைப் பார்த்து தேவனின் பெயரான இருக்கிறேன்’’ என்பவர் என்ற பெயரை தனக்கு ஒப்பிட்டு சொல்லி நான் தேவன் என்பதை சொல்லுகிறார்.
அதை புரிந்து கொள்ள முடியாத, சகித்துக்கொள்ள முடியாத அவிசுவாசமுள்ள யூதர்கள் அவர் மேல் கல் எறியும் படி கற்களை எடுக்கிறார்கள்.
மேலும், எபிரெயர் 1:8 ல் பிதாவாகிய தேவன், குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது, என்று  சொன்னதாக வேதம் கூறுகிறது. பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை தேவனே என்று அழைப்பதையே இங்கு வேதம் சுட்டிக்காட்டுகிறது.

ஏசாயா 9:6 ல் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்த தீர்க்க தரிசனத்தில், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். என்று அறிவித்து, அவர் நித்திய தேவன் என்று வேதம் கூறுகிறது.
வெளிப்படுத்தல் 1:8 ல் இயேசு கிறிஸ்து இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
இது போன்ற நேரடியான வேத வசனங்கள் இயேசு கிறிஸ்து நித்தியமான தேவன் என்பதை நமக்கு அறியத்தருகிறது. மேலும் இது போன்ற வேத வசனங்களை நாம் கோடிட்டு காண்பிக்க முடியும். (வரும் நாட்களில், “நித்திய தேவன் இயேசு’’ என்ற தலைப்பில் இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தைக்குறித்து பார்க்கலாம்.)
மேலும், எப்படி பிதாவாகிய தேவனையும், குமாரனாகிய தேவனையும் காண்பித்துக்கொடுக்கும் வேத வாக்கியங்கள், பரிசுத்த ஆவியானவராகிய தேவனையும் அடையாளப்படுத்துவதைப் பார்க்கலாம்.
ஆதி 1:2 ல், மத் 28:20 ல், 2கொரி 13:14 ல், பிதாவோடும் குமாரனோடும் பரிசுத்த ஆவியானவர் சமமாகவே இருக்கிறார். அப் 5:3,4 லும், 2 கொரி 3:17,18 லும் பரிசுத்த ஆவியானவர் தேவனென்று அழைக்கப்பட்டுள்ளார்.
எனவே பரிசுத்த ஆவியானவர் வெறும் வல்லமை மட்டும் இல்லை, பரிசுத்த ஆவியானவர் ஆள்தத்துவம் உள்ள ஓர் நபர். பரிசுத்த ஆவியானவர் ஒரு வல்லமை என்று மட்டும் எடுத்துக்கொண்டால் லூக்கா 4:14 ஐ எப்படி வாசிப்பது?  இங்கு பலத்தின் பலத்தினாலே கலிலேயாவிற்கு திரும்பிப் போனார், என்றா வேதாகமத்தில் உள்ளது? அப்படி இல்லையே  பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்’’ என்றுதானே வாசிக்கிறோம். எனவே ஆவியானவர் ஆள்த்தத்துவம் உள்ள திரித்துவ தேவனில் தேவனாக இருக்கிறார்.
இது போன்ற அநேக வேத வசனங்கள் ஆவியானவரைக்குறித்து வேதம் திட்டமாக நமக்கு விளக்கி காண்பிக்கிறது. (வரும் நாட்களில் ஆவியானவரின் ஆள்த்தத்துவம்’’ என்ற தலைப்பில் ஆவியானவரின் ஆள்த்தத்துவத்தைக் குறித்த செய்திகளை கவனிக்கலாம்.)
பிரியமானவர்களே, திரித்துவம் கிறிஸ்தவத்தின் பிரதானமான சத்தியமாக இருக்கிறது. அது மட்டுமல்ல தேவத்துவத்தின் இரகசியம் என்றும் சொல்லப்படுகிறது, இது மறைபொருளாக வேதாகமத்தில் இருந்தாலும், வெளிப்படுத்தப்படாத சத்தியமாக இருக்க வில்லை. விசுவாசத்துடன் அணுகும் போது தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு இவைகளை வெளிப்படுத்துகிறார்.
திரித்துவம் என்பது கடல், கரையில் நின்று, கடலை அளந்தவர் எவருமில்லை. தனக்கு விளங்காததை மனிதன் இல்லை என்று சொல்லுவதை வாடிக்கையாக கொண்டுள்ளான். அந்த வரிசையில்தான் திரித்துவம் இல்லை என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள்.
விசுவாசம் இல்லாமல் திரித்துவத்தை விளங்கிக் கொள்வது கூடாத காரியம், திரித்துவத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவத்துவத்தை அறியாதவர்களே, அப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவின் இரட்சிப்பையும், ஆவியானவரின் வழிநடத்தலையும் பெற்றுக்கொள்ளாத அவிசுவாசிகளே.
ஆகவே வெறும் மூளை அறிவில் இதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல், ஆவியானவரின் ஒத்தாசையுடன்,தேவ கிருபைகளை பெற்றுக் கொள்ளுங்கள். தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இவைகளை விளங்கிக்கொள்ள ஞானத்தை தருவார்.
இந்த செய்தியை வாசிக்கும் போது, வேதாகமத்தை கரங்களில் வைத்துக்கொண்டு வாசியுங்கள், ஜெபத்துடன் வாசியுங்கள். கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.





3 comments: