Bread of Life Church India

பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் , என்று அழைக்கலாமா?


கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்கள் பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று போட்டுக்கொள்வது தவறு என்பது போல் இக்காலத்தில் சிலர் பேசுவது வேதாகமத்திற்கு எதிராகவும், உறுதியில்லாத விசுவாச மக்களை, திருச்சபை விசுவாசத்தை விட்டு விலகச் செய்வது போலும் இருக்கிறது.
இக்காலத்தில் சிலர் தவறாக  பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்கிறார்கள், தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக வேதாகமம் சொல்லியிருக்கும் பொறுப்புக்களை இல்லை என்று சொல்லி விட முடியுமா?

பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்பது பட்டமோ, பதவியோ அல்ல, இது திருச்சபையில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு, இந்த பொறுப்புக்கு தேவனே மனிதர்களை நியமிக்கிறார்.
தேவனுடைய பணியை இந்த பூமியில் நிறைவேற்றுவதற்கு, தேவனுடைய வார்த்தைகளை அறிவிப்பதற்கு, தேவனுடைய மக்களை பராமரிப்பதற்கு, வேத வசனத்தின் மூலம் போஷித்து, பாதுகாப்பதற்கு, தேவன் இந்த பொறுப்புக்களை கொடுத்திருக்கிறார்.
தேவன் தன்னுடைய இராஜ்யத்தை தமது திருச்சபையின் மூலமாகவே ஸ்தாபிக்கிறார். தன்னுடைய வார்த்தைகளை திருச்சபையின் மூலமாகவே பிரஸ்தாபப்படுத்துகிறார்.
இக்காலத்தில் திருச்சபையின் ஒழுங்குக்கும், வேத உபதேசங்களுக்கும் கட்டுப்படாத சிலர், தான்தோன்றித்தனமாக திருச்சபைக்கு விரோதமாகவும், திருச்சபையில் தேவன் நியமித்திருக்கும் பொறுப்புக்களுக்கு எதிராகவும், திருச்சபை பொறுப்பில் உண்மையாக இருப்பவர்களுக்கு எதிராக பேசிவருவது, தேவனுடைய நியமங்களை மட்டுப்படுத்துவதாகும்.
எல்லா காலத்திலும் கள்ள போதகர்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள் என்று வேதம் அடையாளப்படுத்துகிறது, சிலர் கள்ளர்களாக இருப்பதால் ஒட்டு மொத்தமாக எல்லோரையும் கள்ளர்களைப்போல விமர்சனம் செய்வது. கண்டிக்கப்பட தக்க செயலாகும். இதற்கு வேதத்தை உண்மையாக கடைபிடிக்க விரும்பும் ஒருவரும் பலியாகிவிடக்கூடாது.
மேலும் திருச்சபையின் பொறுப்பு தங்களுக்கு தாங்களே நியமித்துக்கொள்வதோ, அல்லது ஓட்டு போட்டு, தேர்ந்தெடுப்பதோ, அல்லது எதோ ஒரு மனிதன் மூலம் நியமிக்கப்படுவதோ இல்லை. இல்லவே இல்லை. அதை தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கும் தேவனுக்கும் சம்மந்தம் இல்லை.
..................அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்........
.......அவர்:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்........
.........இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். ............
(யோவான் 21:15,16,17.) என்று தன்னுடைய திருச்சபையின் பொறுப்பை இந்த வசனங்களில் மூலம்  பேதுருவிடம் இயேசு கிறிஸ்து கொடுப்பதை வாசிக்கிறோம்.
பின்நாட்களில் சபையின் நியமங்களைக் குறித்தும், திருச்சபையின் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதைக்குறித்தும் ஆவியானவர் பேதுரு மூலமாக எழுதிவைத்துள்ளதை கவனிக்கும் போது.
"உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்'' (I பேதுரு 5:2-4).
இந்த வசனங்கள்  இந்த காலத்திற்கும் பேதுரு மூலம் சபைகளுக்கு தேவன் பேசிய வார்த்தைகள்தான். இயேசு கிறிஸ்து பிரதான மேய்ப்பராக இருக்கிறார். தமது சபையை கண்காணிக்க மேய்ப்பர்களை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது இந்த வசனங்ளின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் பவுல் அப்போஸ்தலர் மூலமாக தேவன் எழுதி வைத்துள்ள வார்த்தைகள். "இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்''  (I தீமோத்தேயு 2:7).
"அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்'' (II தீமோத்தேயு 1:11)
ஆதிகால திருச்சபையில் "தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்'' (அப்போஸ்தலர் 13:1). என்று வேதம் கூறுகிறது.
மேலும் திருச்சபையின் வளர்ச்சிக்காக, பக்தி விருத்திக்காக "அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்'' (எபேசியர் 4:13) என்று வேதம் கூறுகிறது.
“ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்’’ (அப்போஸ்தலர் 20:28 ).
“கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை’’ (I தீமோத்தேயு 3:1).
இவைகள் எல்லாம் வேதாகமத்தில் உள்ள வேத வசனங்களே, இந்த வசனங்களின் மூலம் வேதாகம காலத்தில் இருந்த திருச்சபையில் பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்ற இந்த பொறுப்பு இருந்தது, அவர்கள் தேவனுடைய வேலையை மட்டுமே செய்து வந்தார்கள் என்று வேதம் திட்டவட்டமாக சொல்லுகிறது. அது நல்ல வேலை என்றும் சான்றிதழ் கொடுக்கிறது.
வேதமே நமக்கு முன்மாதிரி, மனிதர்கள் அல்ல, வேதம் சொல்லுவதுதான் சத்தியம், மனிதர்கள் சொல்லுவது அல்ல.
இப்பொழுது சிலர்.   ஊழியர்கள் வேத வசனத்திற்கு விரோதமாக   மேய்ப்பர், (பாஸ்டர்) போதகர்,  கண்காணி (பிஷப்) என்று போட்டுக்கொள்வது வேதாகமத்திற்கு விரோதமானது என்று சொல்லுகிறார்கள்.
அது எப்படி வேதாகமத்திற்கு விரோதமாக இருக்கும்? தேவனே தன்னுடைய சபையின் பக்தி விருத்திக்காக இவ்வித முறைமைகளை ஏற்படுத்தி இருக்க இல்லை என்று சொல்லி குற்றம் சாட்டுகிற இவர்கள் யார்?.
மேய்ப்பன் என்று சொல்லப்படுகிற வார்த்தைகள் எல்லாம் மந்தை மேய்ப்பவர்களாகிய யூதர்களுக்கு நன்றாக தெரிந்த வார்த்தைகள். ஏன் என்றால் அவர்களின் மூதாதையர்கள்  (ஆபிரகாம்,  மோசே, தாவீது)  மேய்பர்களாக இருந்தார்கள்.   தாவீது மேய்ப்பனாக இருந்ததால்தான் “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்’’ என்று கர்த்தரை தன்னுடைய மேய்ப்பராக உருவகப்படுத்தி சொல்லுகிறார்.
இயேசு கிறிஸ்துவும் அவர்கள் பாணியிலேயே “நானே நல்ல மேய்ப்பன்’’ என்று தன்னை உருவகப்படுத்தி காண்பிக்கிறார்.
அதே உருவக தன்மையுடனே,  தனது மந்தை (சபை)யை  மேய்க்கும் மேய்ப்பராக,  (உணவளிப்பவன், பராமரிப்பவன், பாது காப்பவன், வழி நடத்துபவன்.) ஏற்படுத்துகிறார்.
பிரதான மேய்ப்பர் இயேசு கிறிஸ்து. (உலகளாவிய சபைக்கு).
மேய்ப்பர் (ஸ்தல சபைக்கு)
இப்படியாக மேய்ப்பர் (அ) ஆயர் (பாஸ்டர்). போதகர், கண்காணி (பிஷப்) என்று வேதாகமம் ஏற்றுக்கொள்கிறது. இதை இல்லை என்று சொல்லுகிற நபர்கள் எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள்??
தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,

சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:

நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார் என்று இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கும் வார்த்தைகளை வைத்து சிலர் பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்பது இல்லை என்று வாதிடுகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் யாரைக்குறித்து இயேசு கிறிஸ்து பேசுகிறார். யாரை கண்டணம் செய்கிறார் என்று பார்ப்போமானால், தங்கள் பொறுப்புக்களை தங்கள் புகழ்ச்சிக்காகவும், தங்கள் சுய ஆதாயத்திற்காகவும், எல்லாவற்றிலும் முதன்மையாகத் தங்களை காண்பித்துக்கொண்ட யூத ரபீக்களையே என்பதை கவனித்து வாசித்தால் விளங்கி கொள்ள முடியும். மாறாக இயேசு கிறிஸ்து உருவாக்கிய திருச்சபையில்  பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்ற பொறுப்பு இல்லை என்று சொல்ல வில்லை.

இந்த பொறுப்பில் உள்ளவர்களை மூப்பன் என்றும் சகோதரன் என்றும் அழைக்கலாம். பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று தேவன் கொடுத்துள்ள பொறுப்புக்களின் பெயரை சொல்லிதான் அழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதே வேளையில், தாங்கள் செய்கின்ற வேலையை சொல்லி சிலர் அழைக்கப்படுவது உண்டு, உதாரணமாக, தைப்பவர், தையல்காரர் என்று அழைக்கப்படுகிறார். விவசாயம் செய்கிறவர் விவசாயி என்று அழைக்கப்படுகிறார்.
இது போன்று மீன்காரர், கடைக்காரர், அமைச்சர், முதல் அமைச்சர், டீச்சர், மேலாளர். என்று தாங்கள் வகிக்கும், பொறுப்பை சொல்லியும், தாங்கள் பார்க்கும் வேலையை சொல்லியும் அழைக்கப்படுகிறார்கள். அது போலதான் திருச்சபையின் பொறுப்பில் இருப்பவரை பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அதேவேளையில், பாஸ்டர், போதகர்,  பிஷப் என்ற கனமான பொறுப்பை தவறான நபர்கள், தவறான நோக்கத்துடன் தங்களுக்கு தாங்களே சூட்டிக்கொள்வது மிக மிக தவறு.
எனவே, பாஸ்டர், போதகர், பிஷப் என்பது பட்டமல்ல, பதவியும் அல்ல, பொறுப்பு,

இந்த பொறுப்பு செயல்களில் வெளிப்பட வேண்டுமே தவிர உடைகளில் அல்ல என்பது தெளிவான உண்மை. இதை வேத வசன வெளிச்சத்தில் ஏற்றுக்கொள்வது அவசியம். மேலும் வேதவசனத்தை முன் வைத்து சொல்ல விரும்புவது எல்லாம் இப்படிப்பட்ட பொறுப்புக்கள் சபையிலே உண்டு. அதை இல்லவே இல்லை என்று சொல்ல ஒருவராலும் கூடாது.

சிலர் ஊழியங்களை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக நாம் நல்ல விதமாக ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது அல்லவா? அது போல பாஸ்டர், போதகர், பிஷப் என்ற பொறுப்புக்களை சிலர் தவறாக பயன்படுத்துவதால் நாம் அதை பயன்படுத்தாமலும் இருக்க கூடாது. பயன் படுத்தக்கூடாது என்று சொல்லவும் கூடாது.



0 comments:

Post a Comment