Bread of Life Church India

இயேசு உனக்கு முன் செல்வார்



தேவனுடைய வழிநடத்துதல் இல்லாவிட்டால், கர்த்தர் நமக்கு முன் செல்லாவிட்டால் நம்முடைய வாழ்வில் நாம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது, 
நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தேவனுடைய வார்த்தைகளுக்குப் கீழ்ப்படிந்து நடக்கும் போது, நம்முடைய வாழ்வில் நம்மை  வழி நடத்தும்படியாக கர்த்தர் முன் செல்லுகிறார். கர்த்தர் நமக்கு முன் செல்வதினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தேவனுடைய வார்த்தைகள் மூலமாக அறிந்து கொள்வோம்.

வழிகளை செவ்வையாக்க முன்செல்வார்
“நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்’’ (ஏசாயா 45:2). நம்முடைய வாழ்க்கை பயணம் எப்போதுமே கரடு முரடானவைகள்தான். இந்த பாதைகளில் கர்த்தர் நம்மோடு இல்லாவிட்டால் நம்முடைய வாழ்வில் சமாதானம் என்பதே இருக்காது.
இந்த உலகம் சமாதானம் இல்லாத உலகம். இந்த உலகத்தில் எங்கு தேடிச் சென்றாலும் சமாதானத்தை மட்டும் கண்டு பிடிக்கவோ, பெற்றுக்கொள்ளவோ முடியாது. இந்த சமாதானமில்லாத உலகில் வழிதப்பி போகிறவர்களின் நிலை மிகவும் மோசமானது.
அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கைப் பயணத்தில் தான் நாம் சென்று கொண்டு இருக்கிறோம். இந்த பயணத்தில் சரியான வழிநடத்துதல் நமக்கு இருந்தால் நமது வாழ்க்கைப் பயணம் இனிமையாக அதே வேளையில் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே. இயேசு கிறிஸ்து இல்லாத வாழ்க்கை வெறுமையான வாழ்க்கை. பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை. சமாதானம் இல்லாத வாழ்க்கை.
ஆனால் நம்முடைய வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவிடம் கொடுத்துவிட்டோம் என்றால் நமது வாழ்க்கைப் பயணத்தில் அவர் நம்மோடு கூட வருவது மட்டுமல்ல, அவர் நமக்கு முன்பாக சென்று எல்லாவற்றையும் சரியாக நடத்தித் தருவார்.
திட்டம் இல்லாத செயல் சிதறிப்போகும் என்று சொல்லுவார்கள். வாழ்க்கையில் எப்போதுமே நமக்கு திட்டங்கள் இருக்க வேண்டும். அந்த திட்டங்கள் தேவன் நமக்கு அமைத்துக்கொடுத்துள்ள திட்டவரையறைக்குள் இருப்பது மிக மிக அவசியமானது.
மேலே நாம் வாசித்த வசனம் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம், பல ஆண்டுகளுக்குப் பின்பாக நடக்கப்போகிறவைகளைக்குறித்து முன் அறிவிக்கப்பட்டு, உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம். இதில் கோரேசின் செயல்பாடுகளைக்குறித்து சொல்லி, அவனுடைய செயல்களில் எந்த தடையும் வந்து விடக்கூடாது என்பதற்காக “நான் உனக்கு முன்பாகச் சென்று கோணலானவைகளை செவ்வையாக்குவேன்’’ என்று தேவன் வாக்குப் பண்ணுகிறார்.
பிரியமானவர்களே: இன்றைக்கும் உங்களையும் என்னையும் குறித்து தேவனுடைய திட்டம் உண்டு, எத்தனையோ விஷயங்களில் நாம் திட்டமிட்டு, அதை செய்யவேண்டும், இதை செய்யவேண்டும் என்று தீர்மானம் செய்கிறோம். ஆனால் அவைகள் வாய்க்காமல் போகும் போது சோர்ந்து போகிறோம். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் சில காரியங்கள் வாய்க்காமல் போகும்போது இரண்டு வகைகளில் அவைகளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
1, நான் செய்வது தேவனுக்கு பிரியமா? இது தேவனுடைய சித்தமா?
2. இவைகளை தேவனுடைய கரங்களில் கொடுத்து, தேவன் இதை   நடத்திக் கொடுக்கவேண்டும் என்று தேவனுடைய கரங்களில் கொடுத்திருக்கிறேனா?
என்பதை சோதித்து பார்க்கவேண்டும். அப்படி சோதித்து பார்த்து நம்முடைய செயல்களில் தேவன் இருப்பார் என்றால், நமக்கு முன்பாக தேவன் செல்லுவார். நமது காரியங்கள் வாய்க்கும். இதை நாம் நன்றாக அறிந்துகொள்ளவேண்டும். சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் கொடுக்கவேண்டும். தேவன் நமக்கு முன்பாக செல்ல வேண்டும்.
தேவன் நமக்கு முன்பாக செல்லும் போது நாம் எந்த வேலையாக செல்லுகிறோமோ அந்த வேலை வாய்க்கும்.
எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நாம் தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். நாம் வெளியில் செல்லும்போதும், எதாவது வேலை விஷயமாக போகும்போதும் நாம் ஜெபிக்கவேண்டும். ஆண்டவரே நான் இந்த வேலையாக செல்ல போகிறேன். எனக்கு முன்பாக நீங்கள் சென்று எல்லாவற்றையும் நன்மைக்கு ஏதுவாக செய்து கொடுங்கள்.   மனிதர்களின் கண்களில் தயவு கிடைக்க செய்யுங்கள். உயர் அதிகாரியின் கண்களில் தயவு கிடைக்கச் செய்யுங்கள்.
என்னுடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் எனக்கு முன்பாக செல்லுங்கள், நான் ஒவ்வொருநாளும் விசுவாசத்தில் வளரவும் உங்களுக்கு பிரியமாக வாழவும் எனக்கு கிருபை தாங்க, எனக்கு முன்பாக இருக்கிற கோணலான யாவையும் சரியாக்கி தாங்க’’ என்று நாம் ஜெபிக்க வேண்டும்.
இப்படியாக நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றையும் தேவ கரத்தில் கொடுத்து நாம் செல்லும்போது கர்த்தர் நமக்கு முன்பாக செல்லுவார். கோணலான எல்லாம் செவ்வையாக மாறும்.

வெற்றியை கொடுக்க முன் செல்வார்
“என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்’’  (யாத்திராகமம் 33:14). என்று மோசேயோடு கர்த்தர் பேசுகிறார். அப்படி இருந்தும் மோசே தேவனிடத்தில் சொல்லுகிறார். “உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்’’ (யாத்திராகமம் 33:15 என்று சொல்லுகிறதை பார்க்கிறோம்.
தேவன் நமக்கு முன் செல்லாவிட்டால் நாமாக செல்லக்கூடாது. நமக்கு முன்பாக தேவன் செல்லாமல் நாம் தோல்வியை சந்தித்தால் அதற்கு தேவன் பொறுப்பல்ல.
தொடர்ந்து தேவனுக்கு விரோதமாக முறு முறுத்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் இருந்து வந்த இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தையை மீறி “அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள்  பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள்’’ (எண்ணாகமம் 14:40).
அப்பொழுது “மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார். அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான்’’ (எண்ணாகமம் 14:41-43).
அந்த வார்த்தைகளை கேட்காமல் சென்று “அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் பாளயத்தை விட்டுப் போகவில்லை. அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்கள் (எண்ணாகமம் 14:44,45). தோல்வியை சந்தித்தார்கள்.
பிரியமானவர்களே நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் நமக்கு முன்பாக சென்றால் மட்டும் நாம் எந்த செயலையும் செய்யவேண்டும். தேவன் நமக்கு முன்பாக செல்ல வில்லை என்றால் நாம் அமைதியாக தேவனுக்காக காத்திருப்பது நல்லது.
தேவன் உங்களுக்கு முன்பாக செல்லுவார் என்றால் உங்கள் காரியங்கள் கட்டாயமாக வாய்க்கும். அதை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது.  எத்தனை விதமான எதிர்ப்புக்கள் வந்தாலும் தேவன் அவைகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார். நமது வெற்றியின் இரகசியமே தேவன் நமக்கு முன்பாக செல்லுவதுதான்.
தேவன் உங்களுக்கு முன்பாக செல்லுவாரானால் தைரியமாக செய்யுங்கள். அதில் எந்த தயக்கமோ, பயமோ அவசியமில்லை. இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.
அதே வேளையில் வேதம் வேண்டாம் என்று சொல்லுகிறதை நாமும் செய்யாமல் இருப்பது நல்லது. தேவன் வேண்டாம் என்று சொல்லுகிறவைகளை நாம செய்ய நினைக்கும்போது தேவன் அதில் கிரியை செய்யமாட்டார். தேவன் கிரியை செய்யாவிட்டால் அது நமக்கு தோல்வியாகவே இருக்கும்.
சில நேரங்களில் நாம் ஒருகாரியத்தை செய்தே ஆகவேண்டும் என்று வேகமாக செயல்பட முயற்சி செய்வோம், ஆனால் தேவன் நமது உள்ளத்திற்குள்ளாக பேசுவார் ‘வேண்டாம் இதை செய்யாதே என்று, அந்த சத்தத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அதற்கு செவி சாய்க்க வேண்டும்.
தேவ சித்தம், தேவ சித்தம் என்று வார்த்தையில்மட்டும் சொல்லிவிட்டு எல்லாவற்றையும் நம்முடைய சுய சித்தத்தில் செய்து கொண்டிருக்கக் கூடாது. உண்மையாக இது தேவ சித்தம்தானா என்பதை சரியாக அறிந்து கொள்ளவேண்டும்.
அப்படி நாம் தேவ சித்தத்தை சரியாக அறிந்து செல்லும் போது, தேவனுடைய சமுகம் நமக்கு முன்பாக செல்லும். எந்த ஆபத்திலும் நாம் சிக்கிக்கொள்ள மாட்டோம். தோல்வி நம்மிடம் தோற்றுப்போகும். ஏன் என்றால் கர்த்தர் நமக்கு முன்பாக செல்லுகிறார்.

தடைகளை நீக்க முன் செல்வார்
     தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்’’ (மீகா 2:13).
     வாழ்க்கையில் முன்னேற்றத்தை தடை செய்யும்படியும், ஆவிக்குறிய வாழ்க்கையில் தடைகளை உண்டுபண்ணும்படியும் அநேக விதங்களில் எதிராளியாகிய சாத்தான் தந்திரமான வழிகளில் வருவான். ஆனாலும் கர்த்தர் நமக்கு முன்பாக செல்லுகிறபடியால் அவர் எல்லா தடைகளையும் நீக்கி நம்முடைய காரியங்கள் வாய்க்கும்படி செய்வார்.
     நான் எதை செய்தாலும் எல்லாம் தடையாக இருக்கிறதே, எதுவுமே எனக்கு வாய்க்கவில்லையே என்று கவலையுடனும் வேதனையுடனும் இருக்கிறீர்களா? கர்த்தர் உங்களுக்கு முன்பாக சென்று இந்த தடைகளை உடைக்கப்போகிறார் கவலைப்படாதீர்கள்.
     வேலையில் பிரச்சனை, திருமணத்தில் பிரச்சனை, வீடுகட்டுவதில் பிரச்சனை, எதை எடுத்தாலும் எல்லாம் பாதியில் நின்று விடுகிறதே ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று விரக்தியுடன் இருக்கிறீர்களா? விசுவாசத்தை விட்டு விடாதீர்கள். உங்களுக்கு முன்பாக தடைகளை நீக்குகிறவர் போக போகிறார்.  எல்லா தடைகளும் இருந்த இடம் தெரியாத அளவிற்கு ஒன்றுமில்லாமல் போகப் போகிறது. விசுவாசத்துடன் ஜெபித்து நன்மைகளை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
     உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற தடைகள் எல்லாம், பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு எதிரானது அல்ல. உங்கள் விசுவாசத்திற்கு எதிரானது. உங்கள் விசுவாசத்திற்கு வைக்கப்பட்டிருக்கிற பரீட்சை. இந்த பரீட்சையில் ஜெயிக்க வேண்டுமானால் நீங்கள் தேவனோடு கூட இருக்க வேண்டும். ஜெபத்துடன் இருக்கவேண்டும்.
     தைரியத்தை விட்டுவிடாதீர்கள், உங்கள் விசுவாசத்தை இழந்து விடாதீர்கள். சூழ்நிலைகள் ஒருநாளும் நம்மை தேவனைவிட்டு பிரிக்க நாம் இடங்கொடுத்துவிடக்கூடாது. சூழ்நிலைகளை மாற்றுகிற தேவன் நம்மோடு உண்டு,
     தடைகளை கண்டு நாம் கலங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் தடைகளை நீக்குகிறவர் நமக்கு முன்பாகச் செல்லுகிறார்.
     இதுவரை உங்கள் வாழ்க்கையில் எதை எடுத்தாலும் தடையாக இருந்திருக்கலாம். இப்போது முழுமனதுடன் உங்களை இயேசு கிறிஸ்துவுக்குள் ஒப்புக்கொடுங்கள். எல்லா தடைகளையும் நீக்கி கர்த்தர் அற்புதம் செய்வதை உங்கள் கண்கள் காணும்.
     கடந்த நாட்களில் இருந்த எல்லா தடைகளையும் நீக்கி கர்த்தர் இந்த மாதத்தில் உங்களுக்கு அற்புதம் செய்வதற்காகவே, உங்களுக்கு முன்னே செல்லப்போகிறார்.
     உங்களுக்கு முன் செல்லும் கர்த்தர், கோணலானவைகளை செவ்வையாக்குவார், அவருடைய சமுகம் உங்களுக்கு முன்பாக செல்லும், எல்லா தடைகளும் நீங்கி போகும்.
     தொடர்ந்து கர்த்தருக்கு சாட்சியாக வாழ்வோம். தேவ நாமம் மகிமைப்படும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.


0 comments:

Post a Comment