Bread of Life Church India

வெற்றி வாழ்க்கையின் அவசியம்



வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் நாம் தொடர்ந்து தியானித்து வருகிறோம்.
வெற்றி வாழ்க்கையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் வெற்றி வாழ்க்கையை விரும்பினால்மட்டும் போதாது வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவற்றை நாமும் தேவனோடு இணைந்து செயல்படுத்த வேண்டும். அதைக்குறித்த தேவ வசனம் என்ன சொல்லுகிறது என்பதை கவனிக்கலாம்.


1.       1.  தேவ சித்தம் அறிந்து கொள்ளும் ஆவல். 

பொதுவாக மற்றவர்கள் நம்மை அறிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதே இயற்கையாக மனிதனின் குணம். ஆனால் தேவன் விரும்புகிற வெற்றியுள்ள வாழ்க்கையை நாம் வாழ்வதற்கு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது.
தேவ சித்தம் அறிந்து கொள்ளாதவர் வெற்றி வாழ்க்கை வாழ முடியாது. தேவ சித்தம் அறிந்து கொண்டவர், வெற்றி வாழ்க்கை வாழாமல் இருக்க முடியாது. இதுதான் வேதாகம உண்மை.
வெற்றி வாழ்க்கையை ஆசைப்படுகிற அநேகர் வெற்றி வாழ்க்கை வாழமுடியாமல் இருப்பதற்கு காரணம். தேவ சித்தம் அறிந்து கொள்வதற்கு பதில் சுயசித்தம் செய்ய துடிப்பது தான்.
“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்’’ (நீதிமொழிகள் 3:5,6).
சுய புத்தியில் சாயாமல் என்றால் நம்முடைய புத்தி செயல்படக்கூடாது என்பது அர்த்தமல்ல, நம்முடைய புத்தியில் தேவன் செயல்பட வேண்டும் என்பதே இந்த வசனத்திற்கு அர்த்தம்.
வெற்றி வாழ்க்கை வாழவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், நம்முடைய சுயபுத்தியில் சாதிக்க நினைக்காமல், தேவ சித்தத்தில் எல்லாவற்றையும் செய்ய நம்மை அர்ப்பணித்துவிடவேண்டும்.
தேவ சித்தம் நம்முடைய வாழ்வில் நன்மையை மட்டுமே கொண்டுவரும். நம்முடைய சுயசித்தத்தில், சுயபுத்தியில் செய்கிறவைகள் நமக்கு தோல்வியை கொண்டுவரலாம். ஆனால் தேவ சித்தம் அறிந்து நமது புத்தியில் தேவன் செயல்பட அனுமதித்துவிட்டால் தோல்விக்கு இடமில்லை.
குழந்தைகளின் கையில் ஆயிரம் ரூபாயையும், பள பளப்பான பேப்பரையும் கொடுத்தால் சந்தேகமே இல்லாமல் குழந்தை பள பளப்பான பேப்பரையே விரும்பி, ஆயிரம் ரூபாயை தூக்கி எரிய தயாராகி விடும். ஏன் என்றால் குழந்தைக்கு எது மதிப்பு மிக்கது என்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு புத்தி வளர்ச்சி இருப்பது இல்லை.
அதைப்போலதான் அநேகருடைய வாழ்க்கை இருக்கிறது. உலகில் தேவன் மதிப்பு மிக்க எத்தனையோ நன்மைகளை நமது கரங்களில் கொடுத்திருக்க பள பளப்பாக பிசாசு காண்பிக்கும் பாவத்தை எடுத்துக்கொள்ளவே மனிதனின் புத்தி தயாராகி விடுகிறது.
“ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்’’ (எபேசியர் 5:17) என்று வேதம் கண்டித்து உணர்த்துகிறது.
‘மதியற்றவர்களாய் என்றால் புத்தி இல்லாதவர்களாய் என்று அர்த்தம், இதை விட கடுமையாக சொல்ல வேண்டும் என்றால் ‘முட்டாளாய் இருக்காமல் தேவனுடைய விருப்பம் என்ன என்பதை சரியாக அறிந்து கொள்  என்றே மேலே உள்ள வசனம் சொல்லுகிறது.
தரமான வாழ்க்கை நாம் வாழவேண்டுமானால் தேவ சித்தம் அறிந்து கொள்ள வேண்டும், நம்முடைய விருப்பம் எல்லாம் தேவ விருப்பமாக மாறவேண்டும். நமக்கு இன்று இனிமையாக தெரிகிறவைகள் நாளை ஆபத்தாக மாற வாய்ப்பிருக்கிறது. அதேபோல் இன்று கடினமாக தோன்றும் தேவனுடைய வார்த்தைகள் நாளை நமக்கு இனிமையாக மாறும். கர்த்தர் நமக்கு நன்மையை மட்டுமே ஆயத்தப்படுத்தி தருகிறவர். எந்த அளவுக்கு நாம் தேவ சித்தத்தின்படி நடக்க ஆரம்பிக்கிறோமோ, அந்த அளவிற்கு தேவன் நமது வாழ்வில் செயல்பட ஆரம்பித்து விடுவார். தேவன் எந்த அளவிற்கு நமது வாழ்வில் செயல்பட ஆரம்பிக்கிறாரோ, அந்த அளவிற்கு நாம் வெற்றி வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுவோம். எந்த அளவிற்கு நாம் வெற்றி வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்முடைய வாழ்வில் நன்மைகள் வர ஆரம்பித்து விடும்.
இதெற்கெல்லாம அடிப்படையாக இருப்பது தேவ சித்தமே, அந்த தேவ சித்தத்தையே அறிந்து கொள்ள ஒவ்வொரு நாளும் நாம் பிரயாசப்பட வேண்டும். தேவ சித்தம் அறிந்ததும்  தேவ சித்தப்படி செயல்பட ஆரம்பித்து விடவேண்டும்.  
நம்முடைய சுய எண்ணங்களும் சுய புத்தியும் பல நேரங்களில் நமக்கு கைகொடுப்பது இல்லை. காரணம் என்னவென்றால் பிறகு நடப்பது நமக்குத் தெரியாது. ஆகையால் சூழ்நிலைகளைப் பார்த்து இப்படி செய்வதால் பிறகு இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது  என்ற எண்ணத்துடன் செயல்பட ஆரம்பிக்கிறோம்.

அது பல நேரங்களில் நமக்கு தோல்வியையும் ஆவிக்குறிய வாழ்க்கையில் தோய்வையுமே கொண்டு வரும்.
ஆகவே மிகவும் எச்சரிக்கையுடன் நமது வாழ்வில் செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது.
“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்’’ (ரோமர் 12:2).
தேவ சித்தம் இன்னதென்று பகுத்தறியுதலின் மூலமே நம்முடைய மனம் புதிதாகிறது. நம்முடைய மனம் புதிதாகும் போதே சரியாக நிதானித்து, எது சரி, தவறு என்று அறிந்து கொள்ள முடிகிறது. எதையும் சரியாக நிதானித்து சரியானதை தேர்ந்தெடுக்கும் போதே நாம் வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு தயாராகிறோம்.
இவைகள் எல்லாம் ஒரே நாளில் நடந்து முடிந்து விடுவது இல்லை. ஒவ்வொரு நாளும் நாம் தேவ சித்தத்தை  வாஞ்சிக்க வேண்டும், தேவ சித்தம் என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
இக்கால கிறிஸ்தவ விசுவாசிகளில் கூட தேவ சித்தத்தை  அறிந்து கொள்வதற்கு பதிலாக தன்னுடைய சித்தத்தை நிறைவேற்றவே மிகவும் பிரயாசப்படுகிறார்கள். அது மட்டுமல்ல, தங்கள் சுய சித்தத்தை நிறைவேற்றவே தேவனுடைய உதவியை நாடுகிறார்கள்.
எந்த விதத்திலாவது தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்றே செயல்படுகின்றனர். இதுவே கிறிஸ்தவ வாழ்க்கையில் வெற்றி பெறமுடியாதபடிக்கு தோல்வியின் ஆரம்பமாக அமைந்துவிடுகிறது.
தொடர்ந்து இதிலேயே நிலைகொண்டிருப்பதால் வெற்றி வாழ்க்கை வாழமுடியாமல் துவண்டு போகவேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.
இன்னும் அநேகர் தங்களுடைய மன விருப்பத்தை மனதில் நிறுத்தியே தேவ விருப்பத்தை அறிய முயற்சி செய்கின்றனர்.
தேவ சித்தம் அறிந்து கொள்ள முடியாமல் அநேகர் தவறுகிற இடம் இக்கட்டான சூழ்நிலையே, இரண்டு விதமானவைகள் எதிரில் இருக்கும் போது இரண்டில்ஒன்றை தீர்மானம் செய்யவேண்டும் என்ற நிலையில் அங்கு தேவ சித்தத்திற்கு பதில் எது சிறப்பாக தெரிகிறதோ அதை முடிவு செய்து விடுகிறது உண்டு.
வாலிப வயதை உடைய பிள்ளைகள் அதிகமாக தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் அதிகமாக குழப்பம் அடைகின்றனர். தேவ சித்தத்தை விட பார்வைக்கு அழகாக இருக்க வேண்டும் என்றும், பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்க வேண்டும் என்றும், நிரந்திரமான பணியில் இருக்கவேண்டும் என்றே அதிகமாக விரும்புகின்றனர்.
இதில் தேவ சித்தத்திற்கு இடமில்லை. தங்கள் விருப்பத்தின்படி தேவன் எல்லாவற்றையும் அமைத்து கொடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தேவனிடமே போராடுகின்றனர்.

சிலர் தேவன் வேண்டாம் என்று சொல்லியும் அதை ஒரு பொருட்டாக எடுக்காதபடிக்கு தங்கள் வாழ்வில் துன்பத்தை தாங்களே தேடிச் சென்று எடுத்துக்கொண்டு கண்ணீருடனும் வேதனையுடனும் வாழ்வதைக் காணமுடிகிறது.
அது மட்டுமல்ல வாழ்வில் அவர்கள் எதிர்பார்த்தவைகளுக்கு நேர் எதிராக தங்கள் வாழ்வு அமைந்ததை எண்ணி  கிறிஸ்துவுக்குள்ளான வாழ்விலும் நிலையாக இருக்க முடியாத படிக்கு வாழ்க்கையை முழுவதும் தோல்வி மேல் தோல்வியாக வெற்றி வாழ்க்கை வாழமுடியாதபடி போகும் நிலை ஏற்பட்டு விடும். இதெற்கெல்லாம் முக்கிய காரணம் என்ன?  தேவ சித்தத்தை அறியாமல், அல்லது தேவ சித்தத்தை உதறி தள்ளியதால் ஏற்பட்ட விளைவுகளே.  தேவ சித்தத்தை செய்ய நாம் தவறும் போது எல்லாமே தோல்வியாக மாறிவிடும்.
நம்முடைய வாழ்க்கையில் நம்மை தோல்விகளை சந்திக்க வைக்க பிசாசு எடுக்கும் ஆயுதம் நம்மை தேவ சித்தத்தை மீற வைப்பதே, அதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதை எல்லாம் தந்திரமாக செய்யப்பார்ப்பான். ஆகையால் நாம் பிசாசின் தந்திரங்களை அறிந்து அவனுடைய எல்லா தந்திரங்களையும் முறியடிக்க வேண்டுமானால் நாம் தேவ சித்தம் செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட பிசாசின் தந்திரங்களையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒவ்வொரு முறையும் முறியடித்து பிசாசுக்கு தொடர்ந்து தோல்வியை பரிசாக கொடுத்தார்.
இயேசு கிறிஸ்து இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் தன்னுடைய சித்தத்தை நிறைவேற்றுவதை விட பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதில் அதிக கவனமுடையவராக இருந்தார். அவருடைய வெற்றியின் இரகசியமே அவர் பிதாவின் சித்தத்தை செய்ய தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தது தான்.
இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற நாமும் இயேசு கிறிஸ்து எப்படி பிதாவின் சித்தத்தை அறிந்து செயல்பட்டாரோ, அதே போல நாமும் தேவ சித்தம் அறிந்து செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.
அப்படி நாம் தேவ சித்தத்தை செய்ய தயாராகி விட்டோம் என்றால் தோல்வி என்பதை கனவிலும் சந்திக்க மாட்டோம். 


தொடரும்...........

0 comments:

Post a Comment