Bread of Life Church India

புதிய பூமியில் புது துவக்கம்


புத்தம் புதிய பூமியின் நறுமணமும், சிலு சிலுவென்றிருந்த காற்றும், மனதிற்குள் இன்பத்தை ஏற்படுத்த, நோவா தன் குடும்பத்தாருடன் அமர்ந்திருந்தான். அவர்கள் பழ வகைகளை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே இன்பமுடன் ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

                தண்ணீரால் அழிவதற்கு முன் இருந்த பழைய பூமிக்கும், இந்தப் புதிய பூமிக்கும் உள்ள வித்தியாசமான சூழ்நிலைகள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறது’’ என்று தன் தகப்பனாரின் அருகில் இருந்த நோவாவின் மூத்த மகன் யாப்பேத் சொல்ல; நோவா, தனது மகனின் தலையை வருடியபடி ஆமாப்பா’’ என்று புன்னகைத்தான்.
                கனிகளைத் தன் கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் கொடுத்தபடியே,  மழையே பார்க்காமல் இருந்த நாம், தொடர்ந்து மழையைப் பார்க்க முடிந்தது. முன்பு இருந்த சீதோஷன நிலைகளுக்கும், தற்போது உள்ள சீதோஷன நிலைக்கும் எவ்வளவு மாறுபாடு இருக்கிறது. இவ்வளவு நேரம் ஆகியும் வெயில் குறையவில்லையே. எவ்வளவு உஷ்ணம். அப்பப்பா...! உங்களுக்கு எப்படித் தெரிகிறது’’ என்று கேட்டு விட்டு, நோவாவையும் தன் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள் நோவாவின் மனைவி.
                அவள் சொல்வது சரி என்பது போல் எல்லோரும் பழங்களை சாப்பிட்டுக்கொண்டே தலையை அசைத்தனர்.
                தன் பணியை முடித்து ஓய்வெடுக்க செல்வது போல சூரியன் மறைந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் தன் மனைவியரோடு எழுந்து கூடாரத்திற்குள் செல்ல ஆரம்பித்தனர். சிறிது நேரத்திற் கெல்லாம் சூரியன் முழுவதும் மறைந்து, சந்திரன் வானத்தில் வட்டமாக பிரகாசிக்க, கடவுளிடம் நோவா தனிமையில் பேசுவதற்காகத் தனித்திருந்தான்.
                கண்களை மூடி, தன் கால்களை மடக்கி, மனதை ஒரு நிலைப்படுத்தி கடவுளுக்கு நன்றி சொல்லி, இந்த புதிய பூமியில் நான் என்ன செய்ய வேண்டும் என்று வேண்டுதலோடு, வானத்தை நோக்கி தன கரங்களை விரித்து நின்றான்.
                நோவாவோடு அவனுடைய குடும்ப்பத்தினரும் இணைந்து கொண்டனர்.
                அவ்வேளையில் மேகம் போன்ற திரள், அவர்களை மூட ஆரம்பித்தது. அந்த மேகத்திலிருந்து கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கி அவனிடம் பேச ஆரம்பித்தார். 
`               ``பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள். மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
                நடமாடும் உயிரினங்கள் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசுமையான செடிகளை உணவாகத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.
                இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள். உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன்.
                ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார்.
                நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்.`' என்றார்.
                மேலும் கடவுள் நோவாவிடமும் அவனோடிருந்த அவர் புதல்வரிடமும் பேசினார்..
`               ``இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும்
                பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன் படிக்கையை நிலை நாட்டுகிறேன்.
                உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.`
                மேலும் `எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி,
                நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்.  மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது,  எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது. வில் மேகத்தின்மேல் தோன்றும்பொழுது அதை நான் கண்டு, கடவுளாகிய எனக்கும் மண்ணுலகில் இருக்கும் சதையுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இடையே என்றென்றுமுள்ள உடன்படிக்கையை நினைவுகூர்வேன்`' என்றார்.

                கடவுள் தங்களிடம் பேசிய எல்லா வார்த்தைகளையும் மரியாதை கலந்த பயத்துடன் கவனமாக கேட்டுக் கொண்டிருக்க அவர்களைச் சுற்றிலுமாக இருந்த மேகம் போன்ற திரள் அவர்களை விட்டு விலக ஆரம்பித்தன. பின்பு யாவரும் எழுந்து சென்றனர்.
                நாட்கள் செல்ல ஆரம்பித்தன. நோவாவின் பிள்ளைகளான சேம், காம், யாப்பேத் என்பவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களின் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள்  பிறந்து, பூமியில் மக்கள் பெருக ஆரம்பித்தனர்.
                நோவா பூமியில் பயிரிடுகிறவனாக இருந்தான். அதிகமாக திராட்சை தோட்டத்தை உருவாக்கினான். தன் பிள்ளைகளுக்கும் விவசாயத்தைக் கற்றுக்கொடுத்து, நிலத்தை பாதுகாக்க சொன்னான்.
                நோவாவின் பிள்ளைகளும் விவசாயத்தை செய்து தங்களுக்கு வேண்டிய உணவுப்பொருள்களை பெற்றுக் கொண்டனர்.
                நாட்கள் உருண்டோட நோவா முதிர்வயதிலும் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தைக் கவனித்து வந்தான். ஒரு நாள் மாலை வேளை தன் திராட்சைத்தோட்டத்தில் இருந்து களைத்தவனாய் வந்த நோவா. குடுவையில்   இருந்த திராட்சை ரசத்தை எடுத்தான். அது பழையதாக இருந்ததால் புளித்து போன நிலையில் இருந்தது. தன் களைப்பில் திராட்சை ரசம் எப்படி இருக்கிறது என்பதை அறியாதவனாக தன் தாகம் தீரும் அளவுக்கு குடித்து அமர்ந்தான்.
                நேரம் செல்ல புளித்திருந்த திராட்சை ரசம் கிறுகிறுப்பை ஏற்படுத்த தான் அணிந்திருந்த உடை விலகியது கூட தெரியாமல் நோவா அயர்ந்து தூங்கி விட்டான்.
                அந்த வேளையில் தகப்பனை பார்க்கும் படியாக வந்த நோவாவின் இளைய மகன் காம், நோவா அணிந்திருந்த உடை விலகி இருப்பது கூட தெரியாமல் படுத்திருந்ததை பார்த்து, தனக்குள்ளாக சிரித்துக்கொண்டு, வெளியே வந்தான் அப்பொழுது யாப்பேத்தும் சேமும் தங்களின் தகப்பனைக் காண தூரத்தில் வருவதைக் கண்ட காம். அவர்களுக்கு எதிர் கொண்டு ஓடி மூச்சிரைக்க நின்றான்.
                மூச்சிரைக்க ஓடி வந்த தம்பியைப் பார்த்து, “தம்பி ஏன் இப்படி ஓடி வருகிறாய், என்ன விசயம்’’ என்று யாப்பேத் கேட்டான்.  வெகு நேரம் சிரித்துக் கொண்டேயிருந்த காம், தகப்பனார் தன்னுடைய உடை விலகியது கூட தெரியாமல் கூடாரத்தில் படுத்திருப்பதை விவரித்து சொன்னான்.
                அதை கேட்டதும் யாப்பேத்தும், சேமும் எல்லாமே உனக்கு விளையாட்டுதானா? அப்பா அப்படிப் படுத்திருந்தால் நீ அதைச் சரி செய்யாமல் இதை ஒரு பெரிய விசயமாக எங்களிடம் வந்து சொல்லுகிறாயே’’ என்று அவனை கோபத்துடன் முறைத்து கூடாரத்தின் அருகில் வந்ததும் வெளியில் காய வைக்கப்பட்டிருந்த ஒரு உடையை எடுத்துக்கொண்டு ஒரு முனையை சேமும், மறுமுனையை யாப்பேத்தும் பிடித்துக்கொண்டு, பின்பக்கமாகவே சென்று தங்கள் தகப்பனின் நிர்வாணத்தை பார்க்காதபடிக்கு மூடிவிட்டு வந்தனர்.
                மறுநாள் அதிகாலை வழக்கம் போல் எழுந்த நோவா தன் மேல் வேறு ஒரு உடை போர்த்தப் பட்டிருப்பதைக் கண்டு, ‘தனக்கு என்ன ஆயிற்று எப்போதும் இல்லாதது போல் இரவில் நான் தூங்கி விட்டேனே, கடவுளிடம் இரவு பிரார்த்தனை செய்ய வில்லை. இரவு உணவு அருந்தவில்லை. என்ன நடந்தது. தோட்டத்திலிருந்து வந்ததும் திராட்சை ரசம்தானே அருந்தினேன்.என்று சிந்திக்கலானான்.
                சிறிது நேரம் சென்று கடவுளைத் தொழுது கொண்டு, குடுவையில் இருந்த திராட்சை ரசத்தை எடுத்துப்பார்த்தான். அது நுரையாக மேலே எழும்பி புளித்த வாசம் வந்ததை அறிந்து ஓ இதனால் வந்த விளைவுதான்என்பதை அறிந்து அதை வெளியில் வந்து கீழே ஊற்றும் பொழுது காம் சேம் யாப்பேத் அவனுக்கு முன்பாக வந்து நின்றனர்.
                நேற்று என்மீது உடை போர்த்தியது யார்?’’ என்று தன்னுடைய புதல்வர்களைப் பார்த்து நோவா கேட்டான். உடனே யாப்பேத் நடந்த எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தான். காம்தான் முதலாவது பார்த்து எங்களிடம் சொன்னான். நாங்கள் பின்புறமாக வந்து அந்த உடையால் உங்களை போர்த்தினோம்’’ என்று சொல்ல காம் செய்த செயலால் கோபம் அடைந்த நோவா,
                ஏன் இப்படிச் செய்தாய்? உன் செயல் தகாததாக ஏன் உனக்கு தெரியாமல் போயிற்று? எனது நிர்வாணத்தைக் கூப்பிட்டு காண்பிப்பதா உன் வேலை. நீ அல்லவா நிர்வாணத்தை மூடி இருக்க வேண்டும். நீ மூடி இருந்தால் அது உன்னோடு முடிந்திருக்கும், உன் சகோதரர்களிடமும் சொல்லி நீ கேலி செய்ததால் உனக்கு பின் வரும் உன் சந்ததி சபிக்கப்பட்டிருக்கும்.  உன் சந்ததியினர் உன் சகோதரர் வழி மரபினர்களுக்கு அடிமைகளாகவே இருந்து அவர்களை சேவிப்பார்கள். இது உன் நிமித்தமாக அவர்களுக்கு உண்டான தண்டனை.
                ஒருவரின் தவறை காணும்போது அதை மற்றவர்கள் முன் தூற்றித் திரியாது, அந்த தவறை மூட வேண்டும். அதைச் செய்ய மறந்த உனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அறிந்து மற்றவர்களும் உணர்ந்து நடக்கும் படியாக உன் வழி மரபினர் மேல் நான் இட்ட சாபம் இருக்கும்’’ என்று நோவா கோபத்துடன் சொல்ல தன் தவறை உணர்ந்தவனாக காம் தலை கவிழ்ந்து நின்றான்.
                அந்த வேளையில் சேமையும் யாப்பேத்தையும் வாழ்த்தி ஆசீ கூறி, உங்களின் நற்செயல்களின்படி உங்கள் வழி மரபினர், திரளாக பெருகி பூமியில் பரவுவார்கள். அவர்களுக்கோ கடவுளின் ஆசி எப்போதும் உண்டு’’ என்று ஆசி கூறினான்.
                நாட்கள் சென்றன. நோவாவின் பிள்ளைகள் சேம், காம், யாப்பேத் மூலமாக பூமியில் மக்கள் தொகை பெருக ஆரம்பித்தது.
                யாப்பேத்துக்கு, கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் ஆகிய பிள்ளைகள் பிறந்தார்கள்.
                கோமருக்கு அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா ஆகியோர் பிறந்தனர்.
                யாவானுக்கு எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் பிறந்தனர்.
காமுக்கு கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் ஆகியோர் பிறந்தனர்.
                கூஷுக்கு, சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் புதல்வர், சேபா, திதான் ஆகியோர் பிறந்தனர்.
                இவர்களால் மக்கள் எங்கும் சிதறிச் சென்று குடியிருக்க ஆரம்பித்தனர். அவரவர் தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர் தங்கள் வம்சத்தின் படியேயும், கூட்டம் கூட்டமாக, பூமியில் வேறு வேறு பகுதிகளாக சென்று குடி அமர்ந்ததால் பூமி தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
                நாட்கள் செல்ல மிகவும் வயது முதிர்ந்தவனான நோவா பூமியைப் பார்த்தான் பூமி தன் பிள்ளைகளால் நிறைந்திருப்பதைக் கண்டு அக மகிழ்ந்தவனாக தன்னுடைய சுவாசம் நின்று போக பூமியில் நோவாவின் வாழ்நாட்கள் நிறைவு பெற்றன.
                நோவாவின் வாழ்நாட்கள் வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள். பூமியில் நோவா வாழ்ந்த மொத்த வருடங்கள் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள்.


ஆதியாகமம்  9 ம் அதிகாரம் கதை வடிவில்



வேதாகம சரித்திர கதைகளின் முந்தைய Links



பகுதி 1 

காணும் போதே மறைந்த தோட்டம்    

 

பகுதி 2

மனு குலத்தின் முதற்கொலை 

 

பகுதி 3 

மரணத்தை காணாத மனிதன் 

 

பகுதி 4 

பூமி முழுவதும் அழியப் போகிறது

 

 பகுதி 5

உலகின் முதல் ஆழிப்பேரலை

 

 

 பகுதி   6

 

புத்தம் புதிய பூமி

 

 

 



0 comments:

Post a Comment