Bread of Life Church India

பலவீனத்தை பலமாக்கும் தேவன்



     கர்த்தருடைய பெரிதான கிருபையினால் நாம் தியானிக்கும் படியாக தேவன் காண்பித்துக் கொடுத்த தேவனுடைய வார்த்தையை உங்களுக்கு காண்பித்துக்கொடுக்க விரும்புகிறேன்.கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’’ < சகரியா 4:6>.
                இந்த வார்த்தையானது நாம் செயல்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்லாமல், எந்த செயலாக இருந்தாலும் மனித பெலத்தினாலும், மனித பராக்கிரமத்தினாலும் ஆகாது. எந்த செயலைச் செய்தாலும் அதை தேவனுடைய ஆலோசனையின்படி செய்யவேண்டும் என்று தேவன் சொல்லுகிறார்.

                தேவன் தமது செயல்களை நமது மூலமாகவே வெளிப்படுத்த விரும்புகிறார். இன்றும் சிலர் என்ன சொல்லுகிறார்கள் என்றால், “எல்லாவற்றையும் தேவனே செய்கிறார். நாம் எதுவும் செய்ய வேண்டாம்’’ என்று தவறாக இந்த வசனத்தை புரிந்து கொள்கிறார்கள்.  அப்படி அல்ல, செயல்படாத மனிதனை தேவன் செயல்படுத்த மாட்டார். செயல் பட விரும்புகிறவர்களை பலப்படுத்தி செயல்பட வைக்கிறார்.
                அக்காலத்திலே செருபாபேல் என்ற தேவ மனிதன் தேவனுடைய ஆலயத்தை கட்டும்படியாக பாரத்துடன் செயல்பட ஆரம்பிக்கிற வேளையில்தான் தேவனுடைய வார்த்தை செருபாபேலுக்கு வருகிறது.
உன்னுடைய முயற்சி சரியானது. உன்னுடைய செயல் மிகவும் நல்லது, நீதான் செயல்பட போகிறாய். ஆனால் முழுவதும் உன்னுடைய பலமும் பராக்கிரமமும் அல்ல என்னுடைய ஆலோசனையின்படி, என்னுடைய ஆவியினாலே <பலத்தினாலே>  செய்யும் போது அது எந்த தடையும் இல்லாமல் நடக்கும். அப்படி தடைகளே வந்தாலும் அவைகள் ஒன்றுமில்லாமல் போகும்  என்றே கர்த்தர் பேசுகிறார்.
                தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மனிதனுடைய பலம் மட்டுமே போதாது, ஏன் என்றால் மனித பலம் எல்லாம் தனக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே செயல்படும். சூழ்நிலைகள் எதிராக வந்தாலோ, பலவீனமாக மாறிவிடும்.
                மேலும்  மனித பலத்தினாலும், வல்லமையினாலும் மட்டும் துவங்குகிற எந்த செயலும் முழுமை அடையாமல் பாதியில் நின்று போகக் கூடிய சூழ்நிலை உருவாகலாம். மனிதனின் பராக்கிரமத்தினால் வேகமாக துவங்குகிறவைகள், சோர்வு வந்ததும் நின்று போக அதிகமான வாய்ப்புக்கள் ஏற்படலாம்.
                ஆகையால் தான் வைராக்கியமாக தேவனுடைய பணியை துவங்கிய செருபாபேலிடம் கர்த்தர் சொல்லுகிறார். உன்னுடைய பலமும், பராக்கிரமமும் மட்டும் போதாது, என்னுடைய ஆவியும் உன் பலத்துடனும், பராக்கிரமத்துடனும் இணைய வேண்டும்.  என்னுடைய ஆவியினால் நீ நிரப்பப்படும் போதுதான் நீ முழுபலத்துடன் முழுமையாக எந்த செயலையும் செய்து முடிக்க முடியும் என்று என்னுடைய ஆவியினாலேயே எல்லாம் ஆகும்’’ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
                கர்த்தருடைய இந்த வார்த்தை செருபாபேலுக்கு மட்டுமல்ல, விசுவாசிகளாக இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகும்.
                தேவனுடைய ஒத்தாசை இல்லாமல் விசுவாச மக்கள் எந்த செயலையும் தன்னிச்சையாக செய்யக் கூடாது.
                தன்னிச்சையாக செய்யப்படும்  எந்த செயலும் அது தேவனுக்கு மகிமையைக் கொண்டு செல்லாது, நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் தேவனுக்கு மகிமையைக் கொண்டு செல்ல வேண்டும். தேவனுக்கு மகிமையைக் கொண்டு செல்ல வேண்டுமானால் நம்முடைய செயல்களில் தேவனுடைய ஆலோசனைகளும், தேவனுடைய விருப்பம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், தேவனுடைய விருப்பத்தின் படியான வாழ்வும் அவசியம்.
                தேவன் எந்த இடத்திலும் நம்மை பலவீனராக விடுவதும் இல்லை.  அல்லது நம்முடைய பலவீனத்தில் நம்மைக் கைவிடுகிறவரும் இல்லை. நம்மை பலப்படுத்தவும், நம் மூலமாக செயல் படவும் நமக்கு வெற்றியை கொடுக்கவுமே தேவன் விரும்புகிறார்.
கர்த்தருடைய வல்லமை
                தம்மைப் பற்றி உத்தம இருதயத் தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது’’ <2நாளாகமம் 16:9>. இந்த வார்த்தைகள் ஆசா என்ற யூதா ராஜாவுக்கு சொல்லப்படுகிறது.
                இந்த வார்த்தை ஏன் சொல்லப் படுகிறது என்று முந்திய வசனங்களில் படித்தால் இதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியும்.  2நாளாகம புஸ்தகத்திலே 14,15,16 இந்த மூன்று அதிகாரங்களிலும் ஆசா ராஜாவின் வரலாறுகளைப் படித்து தெரிந்து கொள்ள முடியும்.
                ஆசாவின் ஆரம்பம் வியக்க வைக்கும் பல திருப்பங்களுடன் மிக அற்புதமாக இருக்கும்.  அவர் தேவனை உண்மையாக பின் தொடர்வதும், தேவனைப் பற்றிக் கொள்வதும், தேவனுடைய வார்த்தைகளின்படி தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, தேவனுடைய ஆலோசனையின்படி தனது மக்களை வழிநடத்துவதிலும் மிகவும் கவனம் உள்ளவராக இருக்கிறார்.
                ஒரு சமயம் எத்தியோப்பியனாகிய சேரா என்பவன் யூதாவிற்கு விரோதமாக யுத்தத்திற்கு பலத்த தன்னுடைய படையுடன் வருகிறான். <2 நாளாகமம் 14:9,10>.
                அந்த வேளையில் குறைவான தனது படையுடன் யுத்தம் செய்வதற்காக களத்தில் இறங்கி விட்ட ஆசா, தேவனை நோக்கி ஜெபித்த ஜெபம் அவர் தேவனை எந்த அளவிற்கு நம்பினார், சார்ந்து கொண்டார், என்பதற்கு சான்றாக இருக்கும்.
                ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ள விடாதேயும் என்றான்’’ <2 நாளாகமம் 14:11>.
                ஆசாவின் ஜெபத்தைக் கேட்டு தேவன் தமது வல்லமையை ஆசாவிற்கும் அவனுடைய படைக்கும் கொடுத்தபடியினால் சரித்திரத்தை மாற்றக் கூடிய செயல் நடக்கிறது.
                உலக வழக்கம் என்ன? என்றால் பலசாலி ஜெயிப்பான். பராக்கிரம சாலி ஜெயிப்பான். இப்படித்தான் சிறு குழந்தை கூட கண்ணை மூடிக்கொண்டு சொல்லும்.
                ஆனால் இங்கு நடந்தது என்ன? பலசாலியாக, பராக்கிரம சாலியாக வந்த எத்தியோப்பியனாகிய சேராவும், அவனுடைய படைகளும், பலவீனமான ஆசாவின் படைகளுக்கு முன்பாக நிற்க முடியாமல் ஓடுகிறது. அதைக்குறித்து வேதத்தில் பார்க்கும் போது,
                அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.
                அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார் மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப் போனார்கள்;’’
<2 நாளாகமம் 14: 12,13>.
                இந்த இடத்தின் மனிதனின் தவறான எண்ணங்களுக்கு தேவன் முற்றுப் புள்ளி வைக்கிறார்.  மனிதனின் தவறான எண்ணம் என்ன? “பலசாலி ஜெயிப்பான். பராக்கிரமசாலி ஜெயிப்பான்.’’ ஆனால் தேவன் சொல்லுகிறார், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே <வல்லமை> ஆகும் என்று. சொல்லுவது மட்டும் அல்ல, அதை செயலிலும் நிரூபித்துக் காண்பிக்கிறவர்.
                அன்பானவர்களே, இன்றைக்கும் நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் இவ்விதமாகவே செயல்பட விரும்புகிறார். நீங்கள் பலவீனத்துடன் இருக்கலாம். எனக்கு எல்லாம் எந்த திறமையும் இல்லை என்ற விரக்தியுடன் இருக்கலாம். அல்லது எனக்கு விரோதமாக வருகிறவைகளை எதிர்கொள்ள எனக்கு திராணி இல்லை என்று சோர்ந்து போன நிலையில் இருக்கலாம்.
                ஆனால் பெலவீனத்துடன் இருக்கும் உங்களை பலப்படுத்தும் படியாகவும், விரக்தியுடன் இருக்கும் உங்களை திறமையுள்ளவர்களாக மாற்றவும், சோர்வை நீக்கி தைரியத்தைக் கொடுக்கவும், கர்த்தருடைய கண்கள் உங்களையே சுற்றிக்கொண்டிருக்கிறது.
                ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?  உத்தமமாக இயேசு கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும், நாம் கர்த்தரையே சார்ந்து கொள்ள வேண்டும். எல்லா நேரத்திலும் கர்த்தரையே பற்றி பிடித்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல எதை எல்லாம் நாம் பலம் என்று நினைக்கிறோமோ, அதிலே தேவன் செயல்பட ஒப்புக்கொடுக்க வேண்டும். நம்முடைய பலம் எல்லா நேரமும் நமக்கு கை கொடுக்காது. ஆனால் தேவனுடைய பலம் நமக்கு எப்போதும் வெற்றியை மட்டுமே கொடுக்கும். 
பலத்தை வெல்லும் பலவீனம்.
                தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.. பலமுள்ளவைகளை வெட்கப் படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார்’’ <1 கொரிந்தியர் 1: 25, 27>.
                மனிதர்களின் மிகப்பெரிய பலமானது, தேவனுடைய பலவீனத்திலும் மிகவும் குறைவானது, நம்முடைய மிகப்பெரிய பலமானாலும், நம்முடைய மிகப்பெரிய பலவீனமானாலும் சரி, எப்போது தேவனிடம் சமர்ப்பிக்கிறோமோ, அப்பொழுது தேவனுடைய பலத்தால் நாம் நிரப்பப்படுகிறோம்.
                மனித பலம், மனித பராக்கிரமம் எல்லாம் தேவனுக்கு முன்பாக ஒன்றுமில்லை. அவர் பலம் உள்ளவனுக்கும், பலம் இல்லாதவனுக்கும் உதவி செய்கிறவர். இங்கு பலமோ, பலவீனமோ முக்கியத்துவப் படவில்லை. நம்முடைய அர்ப்பணிப்பே பிரதானமாக சொல்லப்படுகிறது.
                பலசாலியான கோலியாத்தை வீழ்த்த பலவீனமான தாவீதையே தேவன் பயன்படுத்தினார். தேவனுக்கு முன் பலமா? பலவீனமா என்பது முக்கியமல்ல. தேவனுடைய கரங்களில் பயன்படுகிறவர்களா? என்பதே முக்கியம்.
                கோலியாத்திற்கு முன்பாக தாவீது நிற்கும் போது தன்னுடைய பலவீனத்தை நினைக்கவில்லை. தனக்குள் இருக்கும் தேவ பலத்தையே சார்ந்திருந்தார். மனித பலம் எல்லாம் காய்ச்சல் வந்தால் காணமால் போய் விடும். தேவ பலம் அப்படி அல்ல.
                தேவனுடைய வல்லமையால் <பலத்தால்> நிறைந்தவர்களாக  இருந்தால் எதைக்குறித்தும் நாம் பயந்து நடுங்க வேண்டிய அவசியம் இருக்காது.
                அன்பானவர்களே, “நான் பலசாலி, பராக்கிரமசாலி என்று, மேட்டிமையால் தேவனைவிட்டு விலகாமலும், நான் பலவீனன், நான் ஒன்றுக்கும் உதவாதவன்’’ என்று சொல்லி, தாழ்ந்த சிந்தையுடன் வேதனையுடன் இல்லாமலும், பலமோ, பலவீனமோ தேவனிடம் கொடுங்கள். தேவன் பயன்படுத்துவார்.
                ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை சகல வல்லமையினாலும், தமது பரிபூரணத்தினாலும் நிறைத்து உயர்த்துவாராக.



0 comments:

Post a Comment