சரியான நட்பு வேண்டும்
ஒரு முறை நான் பேருந்து
நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அந்த வேளையில் இரண்டு நண்பர்கள்
பேசிக்கொண்டிருந்தார்கள், பேருந்து வந்ததும் அதில்
ஒருவர், வேகமாக
பேருந்தில் ஏறப்போக கூட பேசிக்கொண்டிருந்த மனிதர். அவரை பேருந்தில் ஏறவிடாமல் கையை
பிடித்து இழுத்தார்.
உடனே அந்த மனிதர். “ஏய் கைய விடுடா, இன்றைக்காவது நான்
வேலைக்கு போக வேண்டும், மூன்று நாளா லீவு போட்டதால வீட்டல ஒரே சண்ட, விட்டு விடு, என்று சொல்லி கையை உதறி
விட்டு பேருந்தில் ஏற முயற்சிக்க, அந்த நபர் “சீ கீழ எரங்கு, என்ற படி படியில் ஏறிய அந்த நபரை வலுக்கட்டாயமாக இழுத்து
இறக்கி விட்டார் பேருந்து சென்று விட்டது.
அந்த நபர் எவ்வளவோ கெஞ்சியும்
எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கையை
பிடித்து இழுத்துக்கொண்டே பேருந்து நிருத்தத்தை விட்டு நடக்க ஆரம்பிக்க “டேய் இன்னிக்கி நா வரல, வேலைக்கு போறேன்னு வீட்ல
சொல்லிட்டு வந்துட்டேன். போலன்னா வீட்ல பிரச்சன பெருச ஆயிடும் நா வரல’’ என்று எவ்வளவோ, மன்றாடி கேட்டும் அந்த
நபர் விடுவதாக இல்லை. “யேய் என்ன ரொம்ப அலட்டிக்கிற, செலவ நான் பாத்துக்கிறேன்,
நீ வா’’ என்று பிடித்த பிடியை
விடாமல் வலுக்கட்டாயமாக அந்த நபரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே சென்றான்.
“யேய், யேய் வேண்டாண்ட தலைவேற வலிக்குது,
இன்னைக்கும் அங்க
போன நல்லா இருக்காது’’ என்று எவ்வளவோ கெஞ்சியும் அந்த நபர் விடுவதாக இல்லை என்பதை அறிந்து, கடைசியில் வேறு வழி
இல்லாமல் கூடவே போய்விட்டார்.
இதை எல்லாம்
கவனித்துக்கொண்டிருந்த நான் என்னதான் நடக்கிறது என்பதை கொஞ்சம் யூகித்து விட்டேன்.
எனக்கு கோபமாக வந்தது ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம்
வேறு மனதுக்குள்ளாக இருந்தது, இருப்பினும் அமைதியாக நானும் அவர்களை பின் தொடர்ந்தேன்.
என்னதான் நடக்கிறது பார்த்து விடலாம் என்று. சிறிது தூரம் சென்றதும்.
நான் என்ன யூகித்தேனோ, அது அப்படியே நடந்தது,
சிறிது தூரத்தில்
இருந்த “டாஸ்மாக்’’
கடைக்குள் இருவரும்
சென்றனர்.
‘வேலைக்கு போகிறேன் என்று சொன்ன நபருக்கு, குடும்பம் இருக்கிறது.
அவர் வேலைக்கு போனால்தான் அந்த குடும்பம் நடக்கும், குடிகார கணவனை திட்டி, குடும்ப நிலையை விளக்கி,
சாப்பாடு
கட்டிக்கொடுத்து, மனைவி வேலைக்கு அனுப்பி இருக்கிறாள் என்பது அந்த நபரின் பேச்சில் இருந்து
தெரிந்தது.
ஆனால் அந்த நபரோ, இன்னொருவனால் வலு
கட்டாயமாக டாஸ்மாக் கடைக்குள் இழுத்து செல்லப்பட்டு, மறுபடியுமாக குடிக்க வைக்கப்பட்டு, அந்த மனைவி, பிள்ளைகளின் எதிர்பார்ப்பை தகர்த்து, குடும்பத்தில் குழப்பத்தை
ஏற்படுத்தி விட்டானே, என்று என் மனம் எரிய ஆரம்பித்தது.
அன்றைக்கு நான் எதுவும் பேசாமல் வந்து விட்டாலும்
இன்னும் அந்த நினைவு என்னை விட்டு அகல வில்லை.
இன்றும் இப்படி அநேக இடங்களில்
நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் என்ன வேண்டாத
நபர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதுதான், தவறான நட்பு தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது.
நாம் பழகும் நபர்கள் யார்?
அவர்கள் எப்படி
பட்டவர்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
குடி என்பது இன்றைக்கு அநேகருக்கு
“ஜாலி’’
ஆனால் அதினால்
அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம்.
விளையாட்டாய் குடிக்கு அடிமையாகி,
அதன் மூலமாக
சீரழியும் குடும்பங்கள் எத்தனை எத்தனை. நண்பர்கள் என்ற போர்வையில் குடிக்கு
அடிமைப்படுத்தி, சீரழிக்கிறவர்கள் எத்தனை பேர்.
எல்லாவற்றிற்றுகும் கணக்கு
பார்க்கும் சில மனிதர்கள் இந்த குடிக்கு மட்டும் கணக்கு பார்க்கிறதே இல்லை.
குடியின் அபாயம் தெரிந்தும் சிலர்
அந்த குடிக்கு அடிமையாக இருப்பதுதான் மிகுந்த வேதனை.
அன்றாடம் கூலி வேலை செய்யும்
நபரின் குடும்பத்திற்குள் சென்று பார்த்தால் பரிதாபம்.
வேலைக்கு சென்று சம்பளம்
வாங்கியதும் நேராக குடிக்கவே செல்கிறான்
தினம் தோரும் ஒழுங்காக வேலைக்கு
போய் சம்பளத்தை வீட்டில் கொடுத்தால் அந்த குடுப்பம் ஏழையாக இருக்காது. ஒரு சில
நாட்கள் உண்மையில் வேலை இல்லை என்றாலும்,
வீண் செலவு
இல்லை என்றால் அழகாக குடும்பத்தை நடத்த முடியும்.
ஆனால் நடப்பது அதுவா. ஒருநாள்
வேலைக்கு போனால் வேலை இருந்தாலும் பல நாள் வேலைக்கு செல்வது இல்லை. காலையில்
ஆரம்பித்து இரவு வரை போதையிலேயே இருக்கிறான். குடும்பத்தைக் குறித்த அக்கரை இல்லை,
பிள்ளைகளை குறித்த
அக்கரை இல்லை. பணக்காரன் முதல் ஏழைவரை,
வாலிபன் முதல்
கிழவன் வரை, குடி பேஷன் ஆகி விட்டது.
சந்தோஷம் வந்தாலும் குடி, துக்கம் வந்தாலும் குடி,
கல்யாண வீட்டிற்கு
சென்றாலும் குடி, இழவு வீட்டிற்கு சென்றாலும் குடி, குடி, குடி எங்கும் எதிலும் குடி, ஆபிஸ் பார்ட்டி ஆனாலும் குடி,
இருவர்
சந்தித்தாலும் குடி,
இந்த குடி என்பது ஒரு பிசாசு என்பது அநேகருக்கு தெரிய
வில்லை. இந்த பிசாசின் பிடியில் நாளுக்கு நாள் அநேகர் சிக்கி கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிசாசு மனிதருக்குள்ளாக புகுந்து குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.
இந்த பிசாசுக்கு முற்றுப்புள்ளி
வைத்து, தனி மனிதனையும் குடும்பங்களையும் விடுவிக்க வேண்டுமானால் ஒருவர் இயேசு
கிறிஸ்துவுக்குள்ளாக மனந்திரும்பி வர வேண்டும்.
எந்த நிலையிலும் குடி என்ற பிசாசை
அருகில் வரவிடாதபடிக்கு விரட்டி அடிக்க வேண்டுமானால் இயேசு கிறிஸ்துவின்
அடிச்சுவடுகளை உண்மையாக பின்பற்ற வேண்டும்.
குடி என்ற பிசாசின் பிடியில்
இருந்து விடுபட வேண்டுமானால் சுய முயற்சி உதவாது இயேசு கிறிஸ்துவே விடுதலை
தருகிறார்.
0 comments:
Post a Comment