Bread of Life Church India

வெற்றி மேல் வெற்றி



வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் தொடர் செய்தியாக நாம் தியானித்து வருகிறோம். இதில் அறிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள் என்ற பகுதியில் இன்று நாம் தியானிக்க இருக்கும் செய்தி உலக வழிபாடுகளின் பிடியில் இருந்து நாம் விடுதலைப் பெற்று விட்டோம்.

`நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத் தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்'' (ரோமர் 12:2).
இப்பிரபஞ்சம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலக வழிபாடுகள். இந்த உலக வழிபாடுகளுக்கு நாம் விடுதலையாக்கப் பட்டு விட்டோம்.
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப் பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே’’ (1பேதுரு 1:18,19).
தேவனுக்கு விரோதமாக இருந்து, தேவனிடமிருந்து மனிதர்களைப் பிரிக்க நினைக்கும் மனிதர்களின் பாரம்பரியங்களில் இருந்து நாம் விடுவிக்கப்பட்டு விட்டோம் என்பதுதான் அதன் உண்மையான பொருள்.
நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள் போல, (கொலோசெயர் 2:20) நாம் பிழைக்க மாட்டோம்.
உலக ஆசைகளுக்கும், உலகத்தின் வழிபாடுகளுக்கும் நாம் விடுவிக்கப் பட்டுவிட்டோம். ஆனால் நாம் இந்த விடுதலை வாழ்வை வாழ்வதற்கு தயங்குவதே சில நேரங்களில் உலகத்துடன் இசைந்து செல்வதற்கு வழிவகுக்கிறது.
பொதுவாக நம்முடைய எண்ணங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதிலேயே இருக்கிறதே தவிற, கிறிஸ்துவுக்குள்ளாக எப்படி வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் குறைவாகவே இருக்கிறது.
எப்போது இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டு, இரட்சிக்கப்பட்டு, இரட்சிப்பின் அனுபவத்திற்குள்ளாக வந்தோமோ, அப்பொழுதே எல்லா விதமான உலக வழிபாடுகளில் இருந்தும் தேவன் நம்மை விடுவித்து விட்டார்.
ஆனால் நமக்குதான் முழுமையாக இந்த உலக வழிபாடுகளின் பிடியில் இருந்து வெளியே வர விருப்பம் இல்லை. அதனால்தான் இங்கு ஒரு கால் அங்கு ஒரு கால் என்று ஒரே சமயத்தில் இரண்டு படகுகளில் பயணிக்க ஆசைப்படுகிறோம்.
இதுதான் பல வேளைகளில் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் தோற்றுப்போனவர்களைப்போல ஒரு தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வந்ததும் நாமும் ஆமாம் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு வாழ்வதற்கு நான் தகுதியில்லாத ஆள் என்று, முடிவு செய்து கொள்கிறோம். அதற்கு பின்பாக கிறிஸ்துவுக்குள்ளாக வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு  முயற்சி கூட எடுப்பது இல்லை. அதனால்தான் தோல்வி மேல் தோல்வியடைந்து நம்மை தோற்றுப் போனவர்களைப் போல பிசாசு நமக்கு காண்பிக்க ஆரம்பித்து விடுகிறான்.
இரட்சிக்கப்பட்டுவிட்ட நமக்குள் ஏன் இப்படிப்பட்ட எண்ணங்களும், உலக ஆசைகளும் வரவேண்டும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. இதற்கும் முக்கிய காரணம் நாம்தான். தேவன் நமக்கு சுயாதீனத்தைக் கொடுத்திருக்கிற படியினாலே எதை நம்முடைய மனதிற்குள்ளாக அனுமதித்து எதற்கு நம்முடைய வாழ்க்கையை அற்பணிக்கிறோமோ, அது நம்மை நடத்த ஆரம்பித்து விடுகிறது.

நாம் எப்போது இயேசு கிறிஸ்துவினால் விடுவிக்கப் பட்டோமோ, அப்பொழுதே இந்த உலக வழிபாட்டின் பிடியில் இருந்தும் விடுவிக்கப்பட்டு விட்டோம். ஆனால் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மை இந்த உலக பழக்க வழக்கங்கள் அழுத்தப் பார்க்கிறது. நமக்கு முன்பாக அனேகர் இந்த உலக அமைப்பின் வழிபாடுகளுக்கு இசைந்து நடப்பதை நாம் பார்க்கும் போது. நமக்குள்ளாக தடுமாற்றம் ஏற்பட்டு, நாமும் இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது.
இதைக் குறித்து வேதாகமத்தில் பார்க்கும் போது `தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னை விட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்;'' (2தீமோ 4:10) என்று வேதம் கூறுகிறது. இந்த தேமா சாதாரணமான நபர் அல்ல கிறிஸ்துவுக்காக தன்னை முழுவதும் அற்பணித்து வாழ்ந்த தேவ மனிதனாக இருந்தவன்.
அது மட்டுமல்ல, கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஊழியம் செய்த கர்த்தருடைய ஊழியக்காரன் என்று வேத வசனத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். ‘’பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்’’ (கொலோசெயர் 4:14), “என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்’’ (பிலேமோன் 1:24). இந்த வேத பகுதிகள் பவுல் அப்போஸ்தலர் சிறைச்சாலையில் இருக்கும் போது அவரோடு தேமாவும் சுவிசேஷத்தின் நிமித்தமாக சிறைச்சாலையில் இருந்தார் என்பதை நமக்கு அறியத்தருகிறது.
ஆனாலும் பின்னாளிலே அவருடைய வாழ்க்கையில் அவருக்குள் ஏற்பட்ட தடு மாற்றமும் சந்தேகமுமே, அவர் உலக ஆசைக்குள்ளாகச் சென்று விட்டதை நமக்கு காண்பிக்கிறது. ஆனாலும் அவர் அதில் இருந்து விடுபட்டிருக்க முடியும். ஆனால் தேமா இப்பிரபஞ்சத்தை நேசிக்க ஆரம்பித்து விட்ட படியால் அவரால் திரும்பி வரமுடியாமல் போய்விட்டது. அதற்கு முழுகாரணம் அவர்தான். இந்த பிரபஞ்ச ஆசையில் இருந்தும் இயேசு என்னை விடுவித்து விட்டார் என்ற சத்தியத்தை அவர் தன் மனதில் எழுதாமல் போனதே அதற்கு முக்கிய காரணங்களாக மாறி விட்டது.
தேமாவுக்குள்ளாக வந்த சந்தேகமும், தடுமாற்றமும் இன்றும் நமக்குள்ளாக வர வாய்ப்பிருக்கிறது. அது எப்படி வரும் என்றால்
கிறிஸ்துவை அறியாத மனிதர்கள் எல்லாம் உலக வழிபாடுகளில், உலக இன்பங்களை அனுபவிக்கும் போது, நாம் மட்டும் அவைகளை அனுபவிக்காமல் ஏன் நம்மைக்கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் போது, நாம் தனித்து நிற்பதைப் போன்றதொரு  தோற்றம் நமக்கு  ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.
இப்படிப்பட்ட எண்ணங்கள் நமக்குள்ளாக வந்ததும் நம்முடைய செயல்பாடுகள் மாற ஆரம்பிக்கின்றது. பிறகு நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக 

                இதெல்லாம் தவறு அல்ல, எல்லாவற்றையும் அனுபவிப்பதற்காக தானே தேவன் எல்லாவற்றையும் படைத்தார். அப்படி இருக்க நான் ஏன் என்னை ஒடுக்கிக் கொள்ள வேண்டும். இதுவரை நான் அறியாமையில் இருந்து விட்டேன். இந்த உலகத்தின் நன்மைகளை நான் அனுபவிக்கவே தேவன் எல்லாவற்றையும் படைத்திருந்தும் அவைகளுக்கு நானாகவே தடைவிதித்துக் கொண்டேன் என்ற எண்ணங்கள் நமக்குள்ளாக பிசாசு மூலமாக நமது சிந்தைக்குள்ளாக விதைக்கப் படும் போது, கிறிஸ்துவுக்கு உள்ளான வெற்றி வாழ்க்கை வாழவிடாத படிக்கு இவ்வித எண்ணங்களும், செயல்களும் நம்மை பின்னுக்கு இழுக்கப் பார்க்கிறது.
இதனால்தான் கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்ட ஆரம்ப நாட்களில் இருந்த உற்சாகமும், கிறிஸ்துவுக் குள்ளான நம்முடைய செயல்பாடுகளும், இயேசு கிறிஸ்துவில் நாம் கொண்டிருந்த அன்பும் குறைய ஆரம்பிக்கிறது. ஆகையால்தான் கிறிஸ்துவுக்குள்ளாக வந்த ஆரம்ப நாட்களில் எதெல்லாம் வேண்டாம் என்று விட்டு வந்தோமோ, அதை எல்லாம் மறுபடியும் எடுத்துக்கொள்ள மனம் ஏங்க ஆரம்பிக்கிறது. இப்படிப்பட்ட எண்ணம் வந்ததும் பிசாசு தந்திரமாக நாம் விட்டு வந்த எல்லாவற்றையும் நமக்கு முன்பாக நிறுத்த ஆரம்பித்தவுடன்  மறுபடியும் அது நமக்குள்ளாக வர ஆரம்பிக்கிறது.
இது தவறு அல்ல அது தவறு அல்ல, அவர்கள் அப்படி இருக்கிறார்கள். இவர்கள் இப்படி இருக்கிறார்கள் நான் மட்டும்தான் இப்படியே இருக்க வேண்டுமா? என்று கிறிஸ்துவுக்குள்ளான பிரித்தெடுத்தலின் வாழ்க்கை வாழாதபடிக்கு உலக பழக்கவழக்கத்துடன் நம்மை இணைத்துக் கொள்ள ஆரம்பிக்கிறோம்.
ஆனால் எப்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை விடுதலை ஆக்கினாரோ, அப்பொழுதே இந்த உலக வழிபாடுகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டோம். தேவனை அறியாத மக்களிடம் இருக்கும் தேவனுக்கு எதிரான பழக்க வழக்கங்களில் சிக்கிக்கொள்ளாத படிக்கு நம்மால் வெற்றியுடன் வாழ முடியும். நாம் கிறிஸ்துவோடு நெருங்க நெருங்க உலக வழிபாடுகள் எல்லாம் ஒரு பொருட்டாக நமக்குத் தெரியாது.
சிலர் அப்படி எல்லாம் இந்த காலத்தில் வாழ முடியாதுங்க’’ என்று தங்கள் பெலத்தைச் சார்ந்து சொல்லி விடுகிறார்கள். ஆனால் இரட்சிப்பின் வாழ்க்கை வாழ நம்முடைய பெலத்தை நாம் சார்ந்துகொண்டால் நம்மால் ஜெயமாக வாழ முடியாது. தேவ பெலத்தை நாம் சார்ந்து கொள்ள வேண்டும். தேவ பெலனே நம்மை வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு நம்மை பெலனுள்ளவர்களாக மாற்றுகிறது. தேவ வசனமே நம்மை வெற்றியுள்ள வாழ்வு வாழ்வதற்கு நமக்கு வழிகாட்டுகிறது. ஆகவே நம்மால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.
ஒன்றை நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். தேவ பிள்ளைகளாகிய நாம் தேவனுடைய ராஜ்யத்திற்கு உரியவர்கள் என்பதை மறந்து போய்விடக்கூடாது.
ஆகையால்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்’’ (மத்தேயு 6:33).
உலக வழிபாடு என்பது  கலாச்சார   உடையணிவதிலோ, அல்லது நம்முடைய பேச்சு நடவடிக்கைகளையோ, நாம் உலக வழக்கம் என்று சொல்ல வில்லை. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உலக வழக்கம் என்றதும் நாம் வாழ்கிற கலாச்சாரத்திற்கு எதிராக வாழவேண்டும் என்பதோ, அல்லது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் அவிசுவாசிகளோடு நட்பாக இருக்கக் கூடாது என்பதைப்பற்றியோ நாமும் குறிப்பிட வில்லை. வேதமும் அதைக்குறித்து பேச வில்லை.

இங்கு உலக வழக்கம் என்று சொல்லுவதும், அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று சொல்லுவதும் என்னவென்றால், “அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப் போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்'' (எபேசியர் 4:22_24).
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டு பண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்.
இவைகளின் பொருட்டே கீழ்ப் படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கினை வரும். நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்த போது, அவைகளைச் செய்து கொண்டு வந்தீர்கள்.
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளை எல்லாம் விட்டுவிடுங்கள்.
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாது இருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கு ஒப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே’’ (கொலோசெயர் 3: 5_10).
இப்படிப்பட்ட உலக வழிபாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்ட நாம். மறுபடியும் அவைகளில் சிக்கிக் கொள்ளாதபடிக்கு நாம் ஒவ்வொரு நாளும் விலகி இருக்க வேண்டும் என்றும், இவைகளில் இருந்தே நாம் மாற்றம் அடைய வேண்டும் என்பதுமே, வேதம் நமக்கு வலியுறுத்திக்கூறும் பாடம். இப்படிப்பட்டவைகளில் இருந்து நம்மை விடுவித்து விட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு கூட நாம் நடந்து கொண்டே வாழும் பொழுது கட்டாயமாக நம்மாலும் வெற்றி பெற முடியும். ஏன் என்றால் ஜெய கிறிஸ்து நம்மோடு கூட இருக்கிறார்.

தொடரும்........





வெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1) 

வென்றவர் மூலம் வெல்வோம் (தொடர் செய்தி, பகுதி 2) 

பிசாசின் மேல் வெற்றி    (தொடர் செய்தி, பகுதி 3) 


 






0 comments:

Post a Comment