Bread of Life Church India

புத்தம் புதிய பூமி

மழை குறையாதா என்று எல்லா மக்களும் ஏக்கத்துடன் இருந்தது அவர்கள் முகத்தில் தெரிந்தது. ஆனாலும் மழையின் தாக்கம் குறைவதாக இல்லை. மேலும் அதிகமாக மிகவும் அதிகமாக நாளுக்கு நாள் தண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது.
மக்கள் உயரமான வீடுகளை நோக்கியும், உயர்ந்த மரங்கள், குன்றுகள், மலைகளை நோக்கி ஓடினர். என்றாலும் உயர்ந்த வீடுகள் எல்லாம் தண்ணீரினால் சூழப்பட்டு, நீர்நிறைந்த குடத்திற்குள் போட்ட கற்களைப் போல குன்றுகளும் மலைகளும் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கின.
நீர் அருந்துவது போல பாவத்தை அருந்தி, கடவுளின் வார்த்தைகளை கேலி  செய்து சிரித்த மக்கள் அதே  வாய்களில் தண்ணீரைக் குடித்து மூழ்கி கொண்டிருந்தனர். நோவா எச்சரித்து பேசிய வார்த்தைகள் ஒவ்வொருவருடைய மனதிலும் எதிரொலித்தன. ஐயோ, நல்ல வார்த்தைகளைக் கேட்காமல் போனோமே! வாழ வைக்கும் வார்த்தைகளை கேட்காமல் போனோமே!’’ என்று கதறி அழுது, கடைசி நிமிடங்களில் தங்கள் அறியாமைகளையும், தங்கள் பாவங்களையும், சொல்லி சத்தமிட்டு அழுதனர். அப்படி அழுதவர்களின் மரண ஓலங்கள் பூமி முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தன.
யாரை யார் காப்பாற்றுவது? மரணத்தை நேரடியாக சந்தித்துக் கொண்டிருந்த மக்கள் திகிலின் உச்சத்தில் இருந்தனர். என்ன செய்வது என்று புரியாமல், அங்கும் இங்கும் ஓடி அலைந்து பார்த்தனர். ஆனாலும் அவர்களின் முயற்சிகளேதும் எந்தப் பலனையும் கொடுக்க வில்லை.
ஒருவராலும் ஒருவரையும் காப்பாற்ற முடியவில்லை, தன்னைத்தானும்  காப்பாற்ற முடியவில்லை. பூமியில் இருந்த எந்த மனிதருக்கும் தப்பிக்க வழி இல்லை. தொடர்ந்து 40 நாட்கள் விடாமல் பெய்த மழையால் உயரமாக இருந்த எல்லா மலை உச்சிகளும் மூடின. மூடப்பட்ட மலைஉச்சிகளுக்கு மேலாக பதினைந்துமுழ உயரத்திற்கு தண்ணீர் பெருகி நின்றது.
நோவா செய்த பேழை மட்டும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. பேழைக்குள் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும், ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாப்பாக பேழைக்குள் இருந்தனர்.
ஜன்னலின் வழியாக மக்கள் படும் வேதனைகளையும், அவர்களின் மரண ஓலங்களும், பலர் மாண்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததையும்  பார்த்துக்கொண்டிருந்த நோவா, இனி மேலும் இதைப் பார்க்க முடியாது என்று கண்ணீருடன் ஜன்னலை விட்டு தன் கண்களை விலக்கி பேழைக்கு உள்ளே சென்றான்.
இப்படி எல்லாம் நடக்கும் என்பதை முன்பே சொல்லியும் ஒருவரும் இதை நம்பாமல் இப்படி மாண்டுபோனார்களே,  ஒரு நாளா? இரண்டு நாளா? 100 ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்லியும், சொன்ன என்னைத்தானே முட்டாள் என்று சொன்னார்கள். ஒருவர் கூட நான் சொன்ன வார்த்தைகளை நம்பவில்லையே! 'நீ சொல்வது எல்லாம் நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்என்று சொன்னவர்களெல்லாம் பார்க்கவே முடியாதபடி தண்ணீரில் மிதக்கிறார்களே’’ என்று தன்னுடைய மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சொல்லி சொல்லி புலம்பினான் நோவா.
‘’விடுங்க இதையே நினைத்து எத்தனை நாள்தான் இப்படியே இருப்பீங்க? கடவுளை நம்பி செத்தவன் ஒருவனும் இல்லைங்க. நம்பாமல் செத்தவர்கள்தான் அதிகம். இதுவே அதற்கு நல்ல உதாரணம். விசுவாசித்து கெட்டவர்கள் இல்லை. விசுவாசியாமலேயே கெட்டவர்கள் தான் அதிகம் என்பதற்கும் இதுவே உதாரணமாக மாறிவிட்டது. இனி இதைக்குறித்து நாம் யோசித்து, பேசி என்ன ஆகப்போகிறது.
இதுகுறித்து கேள்விப் படுகிற வருங்கால சந்ததிகளாவது கடவுளின் வார்த்தைகளை கேலி செய்யாமல், அதை ஏற்றுக்கொண்டு அதன்படி செய்ய வேண்டும் என்று நாம் கடவுளிடம் வேண்டுவோம்’’ என்று நோவாவின் மனைவி அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
நாள்கள் செல்ல ஆரம்பித்தன. மழை நின்றும் பூமியின் மேல் 150 நாள்கள் தண்ணீர் மிகவும் பெருகிக்கொண்டே இருந்தது.  150 நாட்கள் சென்ற பின், கடவுள் நோவாவையும் அவனோடிருந்த குடும்பத்தினரையும். பேழையில் இருந்த சகலவிதமான விலங்குகளையும், பறவைகளையும் நினைத்துப் பார்த்து, பூமியின் மேல் காற்றை ஏவினார். அப்பொழுது முதல் தண்ணீர் பூமியில் அமர்ந்தது. ஆழத்தின் ஊற்றுக் கண்களும், வானமும்  அடைக்கப்பட்டது. மழையும் நின்று போயிற்று.
150 நாட்களுக்குப் பின்பு, பூமி முழுவதும் கடலைப்போல நிறைந்து காணப்பட்ட தண்ணீர், கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து, வற்ற ஆரம்பித்தது. நாளுக்கு நாள் நீர் வற்றிக்கொண்டே வந்ததால், பேழை அரராத் எனும் மலைத்தொடரின் மேல் தங்கியது.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. 8 மாதங்கள் கழிந்ததும் மலை உச்சிகளைச் சூழ்ந்து இருந்த நீர் அனைத்தும் குறைந்ததால்  மலை உச்சிகள் காணப்பட்டன.
ஒவ்வொரு நாளும் ஜன்னலைத் திறந்து, தண்ணீர் குறைந்து விட்டதா என்று பார்த்து வந்த நோவாவும், அவன் மனைவி பிள்ளைகளும் தண்ணீர் குறைவதைப்பார்த்து ஒருவருக்கு ஒருவர் அதுகுறித்துப் பேசிக்கொண்டனர்.
இன்னும் ஒரு சில நாளில் தண்ணீர் முழுவதும் வற்றிவிடும், பூமியில் ஒருவரும் இருக்க மாட்டார்கள். நாம் எப்படி பூமியில் இருக்கப்போகிறோமோ?’’ என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னான் நோவாவின் மகன்.
அதற்கு ஏன் கவலைப்படுகிறாய். நம்மோடு கர்த்தர் இருக்கிறார். அவர் நம்மை பார்த்துக்கொள்வார்’’ என்று நோவா அவனைத் தைரியப்படுத்தினான்.
40 நாட்கள் கழிந்த போதே, நோவா பேழையின் ஜன்னலைத் திறந்து ஒரு காகத்தை வெளியில் பறக்க விட்டான். பூமியில் தண்ணீர் வற்றும் வரை போகிறதும் வருகிறதுமாக  பேழைக்குள் வராமல் இருந்து வந்தது காகம். ஒரு நாள் கைக்கு எட்டும் தூரத்தில் பேழையின் ஜன்னல் ஓரமாக நின்ற போது  நோவா அந்த காகத்தை எட்டிப் பிடித்து பேழைக்குள் விட்டான்.
சில நாட்கள் சென்ற பின்பு, ஒரு புறாவை வெளியே விட்டு, தண்ணீர் குறைந்து விட்டதா? என்று பார்த்தான். அதுவரை பேழைக்குள் அடைபட்டிருந்த புறா தன் சிறகுகளை அடித்து உற்சாகமாகப் பறந்து வெளியில் சென்றது. ஏன் இதுவரை பேழையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தோம் என்பது தெரியாத புறா, உற்சாகமாக பறந்து சென்றது. பூமியில் முழுவதும் தண்ணீர் வடிந்து நிலப்பரப்பு இல்லாததாலும் ஒரு இடத்தில் தங்கி இளைப்பாற முடியாததாலும் அந்தப் புறா, மறுபடியும் பேழையை நோக்கி அவனிடமே திரும்பி வந்து விட்டது. நோவா தனது கரத்தை ஜ்ன்னலுக்கு வெளியே நீட்டி, புறாவைப்பிடித்து பேழைக்குள் விட்டு விட்டான்.
பத்து மாதங்களாக பேழையில் இருந்த நோவாவின் குடும்பத்தினருக்கும், அவனோடு இருந்த விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உணவு பற்றாக்குறை இல்லாமல் அவர்களுக்கு தேவையான எல்லாமே குறையாமல் பேழையில் இருந்தது.
நோவா, அவனுடைய மனைவி, பிள்ளைகள், பிள்ளைகளின் மனைவியர், ஆகியோர் தங்களோடு இருந்த விலங்குகளையும், பறவைகளையும் கவனித்துக்கொள்வதிலும்,  தினம் தோறும் குடும்பமாக அமர்ந்து, ஒருவருக்கொருவர் பேசி அன்பை வெளிப்படுத்துவதிலும், கர்த்தரை நோக்கி ஜெபம் செய்வதிலும் ஈடுபட்டு ஒவ்வொரு நாளையும் இனிமையாகக் கழித்தனர். இப்படியே பேழையில் உள்ள  நாட்கள் அவர்களுக்கு வேகமாக செல்ல ஆரம்பித்தன. 
புறா திரும்பி வந்து 7 நாட்கள் ஆனதும், மறுபடியும் புறாவை பேழையில் இருந்து வெளியே விட்டான் நோவா. தண்ணீர் எல்லாம் முழுவதும் வற்றி, மரங்களும், செடி கொடிகளும் வளர ஆரம்பித்திருந்தன. அந்த புறா பகல் எல்லாம் பூமியை சுற்றி விட்டு, பொழுது சாயும் சாயங்கால வேளையில் ஒலிவ மரத்தின் இலையை தன் அலகால் கொத்தி, தன்னுடைய வாயில் வைத்துக்கொண்டு, பேழையை நோக்கிப் பறந்து வந்தது.
புறாவின் வாயில் இருக்கும் ஒலிவ இலையைப் பார்த்த நோவா மகிழ்ச்சியுடன் பிடித்து, புறாவை தன் கரங்களில் அணைத்து, தன்முகத்தோடு வைத்து, சந்தோஷத் துள்ளலுடன், “பூமியில் மரங்களும், செடி, கொடி, தாவரங்களும் வளர ஆரம்பித்து விட்டன. தண்ணீர் மிகவும் குறைந்து, வற்றிக் கொண்டே வருகிறது. இன்னும் சிறிது நாட்களுக்குள் நாம் நிலத்தில் இறங்கி விடலாம்’’ என்று தனது மனைவி பிள்ளைகளை அழைத்து சொன்னான். பிறகு, எல்லோரும் கடவுளுக்கு நன்றி சொல்லி, ஒருவரோடு ஒருவர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.
பேழையிலேயே வெகுநாட்கள் இருந்து வந்ததால் புத்தம் புதிய பூமியில் தங்கள் பாதச்சுவடுகளைப் பதிக்கப் போகும் அப்பொன்னான தருணத்தை மிகவும் அதிகமாக எதிர்பார்த்து காத்திருந்தது நோவாவின் குடும்பம்.
புறா ஒலிவ இலையை எடுத்துக்கொண்டு வந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டது. நீர் வற்றி பூமி காய்ந்து விட்டதா? என்று பார்க்க மறுபடியும் புறாவை அனுப்புங்கள்’’ என்று நோவாவின் மகன்கள் சொல்ல, நோவாவும்  சரி அனுப்பி வைக்கலாம்’’ என்று சொல்லி, ஜன்னலைத்திறந்து புறாவை பறக்க விட்டான்.
சிறகை விரித்துப் பறந்த அப்புறா மாலையில் திரும்பி வரும் என்று எதிர்பார்த்து இருந்த எல்லோருக்கும் ஏமாற்றமே ஏற்பட்டது. இரண்டு முறை சரியாகத் திரும்பி வந்த புறா, மூன்றாவது முறை திரும்பி வராமல் இருந்ததால்  பூமி முழுவதும் நீர் வற்றிக் காய்ந்து இருக்கும் என்று அனைவரும் தீர்மானமாக நினைத்துக்கொண்டனர்.
நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியிலே வானத்தில் இருந்து கடும் மழையும், பூமியின் ஆழங்களில் இருந்து ஊற்றுக்கண்களும், திறந்து நாற்பது நாட்கள் இரவும், பகலும் விடாமல் பெருமழை பெய்தது.
நோவாவிற்கு அறுநூற்றி ஒரு வயது ஆகும் முதல் தேதியிலே, பூமியின் நிலப்பரப்பில் இருந்த எல்லா  தண்ணீரும் முழுவதுமாக வற்றிப்போயிருந்தது. இரண்டாம் மாதம் இருபத்தி ஏழாம் தேதியிலே பூமி முழுவதும் காய்ந்திருந்தது. பூமி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு, அந்த தண்ணீர் எல்லாம் முழுவதுமாக வடிந்து காய்ந்து தரையாக மாற 370 நாட்கள் ஆனது.
புறா திரும்பி வரவில்லை என்றதும்  பூமியில் நீர் எல்லாம் வற்றி நிலமெல்லாம் காய்ந்து இருக்கும் என்பது தெளிவாக  தெரிந்து விட்டது.
பேழையில் உள்புற ஓரத்தில் ஒருவருடனும் பேசாமல் கைகளால் தனது கண்களை மூடி, மிகவும் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்த நோவாவின் அருகில் வந்து வெகு நேரமாக நின்று கொண்டிருந்த அவனின் பிள்ளைகளைக் கவனிக்காமல் அமர்ந்திருந்த அவனிடம் தந்தையே தண்ணீர் முழுவதும் வடிந்து தரையெல்லம் உலர்ந்து விட்டது, இன்னும் நாம் இந்த பேழையில் இருந்து இறங்காமல் இருக்கிறோம். நீங்களும் அமைதியாக இப்படி அமர்ந்திருந்தால் எப்படி? அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும். பேழையை விட்டு நாம் இறங்க வேண்டும்  என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையா?’’ என்று நோவாவின் மகன்கள் கேட்க,
கண்களில் இருந்த தனது விரல்களை விலக்கி, இருகின முகத்துடன் தனது புருவங்களை மட்டும் உயர்த்தி, என்ன? என்பதைப்போல நோவா பார்த்தான். அவர்கள் பேசினதை எதையும் காதில் வாங்காதவனைப்போல இருந்தது அவனின் செய்கைகள்.
முன்பு சொன்னவைகளையே மறுபடியும் அவனுடைய பிள்ளைகள் சொல்ல அதைக் கேட்டு விட்டு, தனது தலையை மட்டும் அசைத்து மறுபடியும் முன்பு இருந்த படியே அவன் இருப்பதைக் கண்ட அவனுடைய பிள்ளைகள் இனியும் தங்களுடைய தந்தையிடம் பேசி பயன் இல்லை என்பதை அறிந்து அவர் விருப்பப்படி எப்போது கீழே இறங்கலாம் என்று சொல்லுகிறாரோ, அப்பொழுது இறங்கலாம்’’ என்று ஒருவரோடு ஒருவர் பேசி அங்கிருந்து சென்றுவிட்டனர்.
நோவாவின் எண்ணமெல்லாம் கடவுள் தன்னிடம் பேசி, வெளியே பூட்டப்பட்டிருக்கும் பேழையில் கதவை  திறந்து விட வேண்டும் என்றும், கடவுள் தன்னிடம் பேசுவதற்காகவும் காத்திருந்தான்.
அந்த வேளையில் நோவா, நோவா’’ என்ற கம்பீரமான குரலைக்கேட்டு, ஏற்கனவே பல முறை கேட்ட குரலாக இருந்த படியாலே இது கடவுளின் குரல்தான் என்பதை உடனடியாக அறிந்து கொண்ட நோவா, தன்  இரண்டு கால்களையும் மடக்கி முழங்கால்களினால் நின்று, தன்னுடைய இரண்டு கரங்களையும் சேர்த்து, கூப்பி, தன் தலையை தாழ்த்தி கடவுள் பேசுவதை கேட்கிறவனாக பயபக்தியுடன், பவ்யமாக நின்றான்.
கடவுள் நோவாவிடம் ";நீயும் உன்னுடன் உன் மனைவியும் உன் புதல்வரும் உன் புதல்வரின் மனைவியரும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள்.
உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா. மண்ணுலகில் அவை பன்மடங்காக பெருகட்டும். பூமியில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்" என்று சொல்லி வெளியே பூட்டப்பட்டிருந்த பேழையின் கதவை கடவுள் திறந்து விட்டார்.
பல நாட்கள் பேழைக்குள்ளாகவே இருந்த நோவாவும் அவர் புதல்வரும் அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும் மிகுந்த ஆவலுடன் புத்தம் புதிய பூமியில் தங்கள் பாதங்களை பதித்தனர். அப்பொழுது எதோ புதிய உலகத்திற்குள் பாதம் பதித்தது போல் இருந்தது அவர்களுக்கு.
சுற்று முற்றும் பார்த்தால் எல்லாம் புதுமையாக அவர்களுக்கு தென்படவே அவர்கள் உள்ளம் எல்லாம் மிகவும் பூரிப்புடன் காணப்பட்டன. 
நோவா சென்று விலங்குகள், ஊர்வன, பறவைகளைத் திறந்து விட அடைத்து வைக்கப்பட்டிருந்த  அனைத்தும் வகை வகையாகப் பேழைகளிலிருந்து வெளியே வந்தன.
இத்தனை நாட்களாக ஒரே இடத்தில் இருந்த விலங்குகள் வெளியே வந்ததும்  துள்ளிக்குதித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆங்காங்கே சிதறிச் சென்றன. பறவைகளும் தங்கள் சிறகுகளை விரித்து, பட படவென அடித்துக்கொண்டு, மேலே பறந்து சென்றன.
புத்தம் புதிய பூமியில் பசுமையான புல் வெளிகளும், மரம் செடி கொடிகளும் நிறைந்து காணப்பட்டது, நோவாவும் அவன் குடும்பத்தினரும் தாங்கள் தங்குவதற்காக கூடாரத்தை கட்டும் பணியில் ஈடுபட ஆரம்பித்து கட்டி முடித்தவுடன்
நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி,  நன்றி சொல்லும் விதமாக  அதன் மேல் எல்லா வகை விலங்குகளிலும், எல்லாப் பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தி குடும்பமாக கர்த்தருக்கு முன்பாக பணிந்து நின்றனர்.
கர்த்தர் அவர்களின் பலி பொருள்களை ஏற்கும் வண்ணமாக வானத்திலிருந்து நெருப்பு இறங்கி பலி பொருள்களை எரிக்க, புகையாக பலிப்பொருள்கள் மாறின.
கர்த்தர் அந்த நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது; "மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.
மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை" என்றார்.புத்தம் புதிய பூமியில் நோவாவின் குடும்பம் தொடரும்.ஆதியாகமம் 7ம் அதிகாரம் 18 முதல் 24 வரை
ஆதியாகமம்  8ம் அதிகாரம் முழுவதும்.      

கதை வடிவில்..........
வேதாகம சரித்திர கதைகளின் முந்தைய Linksபகுதி 1 

காணும் போதே மறைந்த தோட்டம்    

 

பகுதி 2

மனு குலத்தின் முதற்கொலை 

 

பகுதி 3 

மரணத்தை காணாத மனிதன் 

 

பகுதி 4 

பூமி முழுவதும் அழியப் போகிறது

 

 பகுதி 5

உலகின் முதல் ஆழிப்பேரலை

 

 

 


0 comments:

Post a Comment