Bread of Life Church India

எல்லாம் நன்மைக்கே...



கடந்த சில ஆண்டுகளுக்குமுன் இயேசு கிறிஸ்துவை அறியாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வாலிப சகோதரனுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
சுவிசேஷத்தை ஆரம்பத்தில் அசட்டை செய்த அந்த வாலிபர் நாட்கள் செல்ல செல்ல சுவிசேஷத்தினால் ஈர்க்கப்பட்டு, இயேசுவே உண்மையான கடவுள் என்பதை அறிந்து கொண்டார்.
சுவிசேஷ கூட்டங்களில் கலந்து கொண்டார், சபையின் ஆராதனை ஐக்கியத்திலும் பங்கு பெற்று வந்தார். அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதின் நிமித்தமாக குடும்பத்தில் பலவிதமான எதிர்ப்புக்களையும் சந்தித்தார்.
இருப்பினும் இயேசுவே உண்மையான கடவுள் என்பது உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டதால் எந்த எதிர்ப்புக்களும் ஒன்றும் செய்திட முடிய வில்லை. வந்த எதிர்ப்புக்கள் வாலிபர் விசுவாசத்தில் மேலும் வளர்வதற்கு உதவியாகவும், இயேசு கிறிஸ்துவை இன்னும் உறுதியாக பற்றிக்கொள்ளவும் செய்தன.
நாட்கள் சென்றன. வாலிபர் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.  படித்த படிப்புக்கான வேலைக்காக காத்திருந்தார். ஜெபித்தார். பல மாதங்கள் உருண்டோடின, ஆனால் வேலை கிடைக்க வில்லை. மிகவும் சோர்ந்து போன நிலையில் கர்த்தரை நம்பி வந்திருக்கிற எனக்கு கர்த்தர் ஒரு நல்ல வேலையை கொடுக்க கூடாதா? என்று சபையின் போதகரிடத்தில் கேட்பார்.
கர்த்தர் நிச்சயமாக நல்ல வேலையை உங்களுக்கு தருவார். சகோதரனே, கர்த்தரை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது’’ என்று சபையின் போதகரும் வாலிபருக்கு கர்த்தரின் வார்த்தைகளை சொல்லி, ஜெபித்து, “கர்த்தருக்காக காத்திருங்கள். கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாக அற்புதங்களை செய்வார்’’ என்று விசுவாசத்தில் பெலப்படுத்தி நடத்துவார்.
நாட்கள் செல்ல செல்ல வாலிபரின் இரட்சிக்கப்படாத குடும்பத்தினர் வாலிபரை மிகவும் நெருக்க ஆரம்பித்தனர். “எந்த ஒரு வேலைக்கும் போகாமல் இப்படி இயேசு, இயேசு என்று சுற்றிக்கொண்டிருக்கிறாயே, இதனால்தான் உனக்கு வேலை கூட கிடைக்க வில்லை’’ என்று பேசுவது நாளுக்கு நாள் அதிகமாக பதில் பேச முடியாமல் வாலிபர் தனிமையில் கண்ணீருடன் ஜெபிக்க ஆரம்பித்தார்.

அந்த வேளையில் மிகவும் உயர்ந்த பதவிக்கு நேர்முக தேர்வுக்காக அழைப்பு கடிதம் வந்தது. தேவனுக்கு நன்றி சொல்லி, தனது சபை போதகரிடத்தில் கடிதத்தை காண்பித்து, மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லி, இயேசு கிறிஸ்து அவரை நம்புகிற பிள்ளைகளை ஒரு போதும் கை விட மாட்டார்’’ என்று சாட்சியாக அறிவித்தார்.
நேர்முக தேர்வுக்கு செல்ல ஆயத்தம் செய்தார். வெளி ஊருக்கு செல்ல இருப்பதால் அதற்காக ரயிலில் முன்பதிவு செய்தார். இந்த நேர்முக தேர்வில்நான் கலந்து கொண்டால் கட்டாயமாக எனக்கு இந்த வேலை கிடைக்கும்என்று முழு நிச்சயமாக நம்பி அந்த நாளுக்காக காத்திருந்தார்.
நேர் முக தேர்வுக்கு செல்ல வேண்டிய நாளுக்கு முந்தைய தினம்  உடல் மிகவும் அதிகமாக சூடாகி ஜூரம் அதிகமாயிருந்தது. எழுந்து நிற்க கூட முடியாத நிலையில் ஜெபத்துடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்தார்.
மறுநாளிலே இன்னும் அதிகமாக உடல் நிலை சோர்வாக இருந்ததால் வாலிபர் மிகவும் வருத்தப்பட்டார். “இன்றைக்கு நான் நேர் முக தேர்வுக்காக செல்ல வேண்டுமே, இது என்னுடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருக்குமே, இந்த நேரத்தில் இப்படி ஒரு சோதனையா? என்று தனது சபை போதகரை அழைத்து ஜெபிக்க சொன்னார்.
போதகரும் மிகவும் பாரத்துடன் ஜெபித்தார். வாலிபர் நேர்முக தேர்வுக்காக ஊருக்கு செல்ல வேண்டிய நேரமும் வந்தது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் என்ன நடந்தாலும் பரவாயில்லை.
நான் சென்றே ஆகவேண்டும் என்றார். ஆனால் அவரால் முடிய வில்லை. அவருடைய குடும்பத்தினரும்இந்த நிலையில் நீ செல்ல வேண்டாம்’’ என்று சொல்லி விட்டனர்.
வாலிபர் கண்ணீருடன் போதகரை பார்த்து, “ஏன் இப்படி நடக்கிறது.? இவ்வளவு நாட்கள் வேலை இல்லாமல் நான் இருந்தேன். இன்று நான் நேர்முக தேர்வுக்காக செல்ல வேண்டிய நேரத்தில் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இப்படி படுத்திருக்கிறேன். இயேசப்பா எனக்கு இப்பொழுது அற்புதம் செய்ய கூடாதா? எனது ஜெபத்திற்கு பதில் கொடுக்க கூடாதா? எனது குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் என்னை எதிர்த்த போதும், என் நண்பர்கள் என்னை பரியாசம் செய்து கேலி செய்த போதும் கூட நான் இயேசப்பாவை மட்டும்தானே நம்பினேன். இப்போது அவரும் என்னை கை விட்டு விட்டாரே, என்று கண்ணீர் வடித்து புலம்ப ஆரம்பித்தார்.
இல்லை சகோதரனே, இயேசப்பா எதை செய்தாலும் நன்மைக்காகவே செய்வார், நீங்கள் விசுவாசத்தை விட்டு விடாதீர்கள். நிச்சயமாக அவர் தம்மை நம்புகிற பிள்ளைகளுக்கு நன்மைகளை மட்டுமே செய்வார்’’ என்று போதகர் கூறினார்.
ஆனால் அதைக் கேட்கும் மன நிலையில் வாலிபர் இல்லை. “இல்லை ஐயா, இதை விட எனக்கு வேறு என்ன நன்மைகளை இயேசப்பா செய்யப்போகிறார். இதுவரை எனது எல்லா கஷ்ட நேரத்திலும் இயேசப்பாவை விட்டு ஒரு போதும் நான் விலகி செல்ல வில்லையே, இப்போது இந்த வேலை கிடைத்தால் எனக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்குமே, நானும் இதை அனைவருக்கும் சாட்சியாக அறிவிப்பேனே, இயேசப்பா என்னை கை விட்டு விட்டாரே’’ என்று மிகவும் வேதனையுடன் கூறினார்.
போதகரும்சரி சகோதரனே, நாம் ஜெபிப்போம், எதுவாக இருந்தாலும் தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம்’’ என்று சொல்லி, ஜெபித்து விட்டு வந்து விட்டார்.
ஜெபத்தில் கூட முழுமையாக மனதை செலுத்த முடியாதபடிக்கு மிகவும் சஞ்சலத்துடன் காணப்பட்டார் வாலிபர். நேரம் ஆக ஆக உடல் வலி ஒருபுரம் இருந்தாலும், மனதின் வலி அதிகமாக வேதனையுடன் காணப்பட்டார். இரவு வெகு நேரம் ஆகியும் தூக்கம் இல்லாமல் நடு இரவுக்கு பின் தன்னையறியாமல் தூங்கினார்.
காலை வெகு நேரத்திற்கு பின் அவருடைய தாயார் அவரை வேக வேகமாக எழுப்ப சோர்வுடன் கண்ணைத்திறந்து என்ன என்பது போல் பார்த்தார்.
அவருடைய தாயார் அந்த நாளின் செய்திதாளை விரித்து காண்பித்து, “நீ நேற்று செல்ல வேண்டிய ரயில் விபத்துக்குள்ளாகி, அநேகர் மரித்து போய் விட்டார்கள். நல்ல வேளை நீ அந்த ரயிலில் செல்ல வில்லை. நீ வணங்கும் இயேசப்பாதான் உன்னை காப்பாற்றியிருக்கிறார்’’ என்று சொல்ல தன் உடல் வலியையும் மறந்து எழுந்து, செய்திதாளை வாங்கி விரித்து பார்த்தார்.
வாலிபருக்காக கொடுக்கப்பட்டிருந்த அந்த பெட்டியே மிகவும் சேதத்திற்குள்ளாகி இருக்கிறது என்ற செய்தியை படித்து. நேற்றைய தினம் பேசிய வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று நினைக்கும் போதே போதகரும்தம்பி விஷயம் கேள்விப்பட்டீர்களா?’’ என்று கேட்டுக்கொண்டே உள்ளே வர, “ஐயா நேற்று நான் பேசியதற்காக உங்களிடமும், இயேசப்பாவிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்னார்.
சில மாதங்களுக்கு பின் அதே இடத்தில் இருந்து அழைப்பு வர நேர்முக தேர்வில் வெற்றி பெற்று நல்ல நிலைக்கு உயர்ந்து, தேவனோடு உள்ள ஐக்கியத்தில் உறுதியாக இருந்து சாட்சியாக வாழ்ந்து வருகிறார்.
அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’’ (ரோமர் 8:28).


3 comments:

  1. God only knows what is best and which is right time to give goodenss to his chidren.

    ReplyDelete
  2. அய்யா, ஜீவ அப்பம் எத்தனை பிரதிகள் அச்சடிக்கிறீர்கள்?

    ReplyDelete