Bread of Life Church India

வியாபாரம் செய்தவர்களை இயேசு சாட்டையால் அடித்தது ஏன்?

    

``பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு  எருசலேமுக்குப் போய், தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர்; உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டு பண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக் காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.''
( யோவான் 2:13_16).
    இயேசு தேவாலயத்தில் வியாபாரம் செய்தவர்களை
அடித்தது நியாயமா? வியாபாரம் செய்து பிழைத்து போகட்டுமே என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.
ஆனால் தேவாலயத்தில் நடந்தது வியாபாரமல்ல. பஸ்கா  பண்டிகையன்று மக்கள் எருசலேம் ஆலயத்தில் கூடி தேவனுக்கு பலியிட்டு, அவரை தொழுதுகொள்ள வருவார்கள். ஆனால், ஆலயத்திற்குள் யூத ஆசாரியர்கள் (ஆலயத்தை பராமரிப்பவர்கள்) ஆடுகளை, புறாக்களை விற்க ஆலயத்திற்குள் அனுமதி அளித்து, அநியாயமாக மக்களிடம் பணம் வசூலித்தார்கள், இதைக் கண்டு இயேசு கோபமுற்று வியாபாரம் செய்யும் மனிதர்களை துரத்தி, தேவனுடைய ஆலயம் என்பது தேவனுடன் உறவாடும் இடம், அதை வியாபார வீடாக்காதீர்கள் என்று சொல்லி எல்லாரையும் துரத்துகிறார், பாவப்பட்ட மக்களுக்கு
எதிராக நடந்த அநீதிக்கு எதிராகவே சாட்டையை எடுத்தார்.
    எப்படியெனில், ஆடுகள் மாடுகள் புறாக்கள் எல்லாம் தேவாலயத்தில் பலியிடும்படியாக கொண்டு வரப்படும். ஆனால் இயேசு
கிறிஸ்துவின் காலத்தில் ஆடுகள் மாடுகள் புறாக்கள் எல்லாம் வெளியில் இருந்து கொண்டு வரக்கூடாது, அதை தேவாலயத்தில் வந்துதான் வாங்க வேண்டும். ஏனென்றால், பாவிகள் கொண்டு வருகிற பாவமான பொருளை தேவன்
ஏற்றுக்கொள்ள மாட்டார், எனவே தேவாலயத்தில் விற்கப்படும் ஆடுகள் மாடுகள் புறாக்கள்தான் பரிசுத்தமானது. எனவே இதை வாங்கி பலி செலுத்தினால்தான் தேவன் ஏற்றுக்கொள்வார். இதுதான் பரிசுத்தமானது என்று மக்களை ஏமாற்றி, வெளியில் விற்க்கப் படுவதற்கும்  தேவாலயத்திற்குள்ளே  விற்கப்படுவதற்கும் பெரிய அளவு வித்தியாசம் வைத்து, பலமடங்கு அதிக லாபம் வைத்து இங்குதான் வாங்க வேண்டும் என்று, மக்களை பயமுறுத்தி வாங்க  வைத்தனர், தேவாலயத்தில் வாங்கும் பலி பொருள்களை மட்டுமே  ஏற்றுக்கொண்டனர். தேவாலயத்தில் விற்கும் காசுகளை மட்டுமே காணிக்கையாக செலுத்த அனுமதித்தனர்.
    ஏனென்றால் எருசலேம் தேவாலயத்தில் ரோம நாணயங்களைக் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளமுடியாது, காரணம் அதில் ரோம அரசனின் பெயரும், அவனுடைய உருவமும், பெயரோடு கூட கடவுளுடைய குமாரன் என்ற வாக்கியமும் இருந்ததால் இந்த முடிவை தன்னிச்சையாக  எடுத்துக் கொண்டு, ஆலய வளாகத்தில் பிரதான ஆசாரியர்களே காசுக்கடை நடத்தி எட்டு ரோம நாணையங்களுக்கு ஒரு சேக்கல் என்ற விதத்தில் காசுகளை மாற்றி கொள்ளை இலாபம் அடித்தார்கள்.
    ஆகையால்தான் இயேசு கிறிஸ்து ``என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்''
(மத்தேயு 21:13).என்று சொல்லுகிறார்.
    இப்படியாக மக்களை கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றி
திருடர்களைப்போல செயல்பட்ட பிரதான ஆசாரியர்களையும் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களையும்தான், இயேசு கிறிஸ்து அடித்து விரட்டுகிறார். தேவனுடைய நியமங்களையும், தேவனுடைய வழியையும் விட்டு, தங்களின் சுய லாபத்திற்கு தங்களின்
பதவிகளையும், பொறுப்புக்களையும் தவறாக பயன்படுத்தியவர்களையே இயேசு கிறிஸ்து தண்டிக்கிறார், மாறாக அன்றாடம் தங்கள் பிழைப்புக்காக தேவாலயத்தில் வியாபாரம் செய்யும் படியாக வந்தவர்களை அல்ல, என்பதை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.
    இக்காலத்திலும் தேவனுடைய சபைகளில் இப்படிப்பட்ட தவறான செயல்களை செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிராகவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சாட்டை வரும் என்பதை மறந்து விடக்கூடாது.
    மக்கள் எந்தவிதத்திலும் தேவனை சார்ந்து கொள்வதற்கு தடையாக ஒருவரும் இருக்கக்கூடாது.
அதில் கவனமாக இருந்து, மக்கள் இயேசு கிறிஸ்துவை சார்ந்து கொள்ளவும், தேவனுடைய இராஜ்யம் கட்டப்படவும் செயல்படவேண்டும்.

0 comments:

Post a Comment