Bread of Life Church India

பாஸ்டர்தான் திருச்சபையை நடத்த வேண்டுமா?

மக்கள் திரளாக கூடிவருகிற இடத்தை சபை என்று சொல்லுவது வழக்கம். திருச்சபை என்ற பதமும் அதே அடிப்படையில் வருகிறதா? என்றால் இல்லை.
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று, ஞானஸ்நானம் பெற்ற ஒருவர், பாவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிற சபையில் இணைக்கப்படுகிறார். அதாவது பாவத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டவர்களே, சபை என்று அழைக்கப்படுகிறது.

கிறிஸ்துவின் சரீரத்தில் இணைக்கப்பட்டவர், விசுவாச வாழ்வில் பலப்படும்படியாகவும், கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்கும் படியாகவும், வேத வசனங்களின் படி, போதிக்கப்பட்டு, விசுவாசத்திலும், ஜெபத்திலும், வேண்டுதலிலும், தேவ அன்பிலும் நிலைத்திருக்க, தொடர்ந்து நடக்க, தேவனை ஆராதிக்க, ஐக்கியம் அவசியமாக இருக்கிறது.

இந்த ஐக்கியமே, திருச்சபை என்று அழைக்கப்படுகிறது, இந்த ஐக்கியமானது, பல ஊர்களில் பல இடங்களில் கூடி வருவதால், அதற்கு ஒரு பெயருடன் நடந்து வருகிறது. அது ஊர் பெயராக இருக்கலாம். அல்லது எல்லோரும் அறிந்து கொள்ளும் வண்ணம் ஒரு பெயருடன் இயங்கலாம்.
திருச்சபையில் பிரதானமாக ஐந்து வகையான ஊழியங்களை, ஊழியர்களை கர்த்தர் ஏற்படுத்தினார் என்று எபேசியர் 4:11-13 வசனங்கள் மிகவும் தெளிவாக காண்பிக்கிறது.

“மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,

பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்’’
திரளான விசுவாச மக்கள் கூட்டத்தில் இருந்து சிலரை பிரித்தெடுத்து, பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், தேவன் சபையில் பொறுப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த  பொறுப்புக்களுக்கு  தேவனே சிலரை ஏற்படுத்துகிறார்.  ஆனால் இந்த பொறுப்புக்களையும், சபையின் ஒழுங்குகளையும் ஏற்றுக்கொள்ள தயங்குகிறவர்கள்  இந்த வசனத்தை கவனிக்க வில்லையா? அல்லது மறுக்கிறார்களா? என்பது தெரிய வில்லை.

தேவனை தொழுது கொள்ளும், ஆசாரியத்துவத்தையும், தேவன் சபையில் ஏற்படுத்தி இருக்கும் பொறுப்புக்களையும் ஒன்றாக பார்க்க கூடாது.  இயேசு கிறிஸ்துவை தொழுது கொள்வதும். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பதுவும், எல்லோருடைய கடமையாக இருக்கிறது. இதை ஒவ்வொரு விசுவாச மக்களும் கட்டாயம் செய்தே ஆகவேண்டும்.

ஆனால் எல்லோரும், போதகர்களா? எல்லோரும் மேய்ப்பர்களா? அல்லது எல்லோரும் அப்போஸ்தலர்களா? இல்லையே
“நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது’’ (1 கொரி 14:26) என்று கொரிந்து சபைக்கு பவுல் அப்போஸ்தலர் எழுதுகிறார்.

இதை எழுதுவற்கு என்ன காரணம், கொரிந்து சபையிலே என்ன நடந்தது என்றால், சபை கூடி வரும் பொழுது ஒரே வேளையில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை செய்கிறார்கள். ஒன்றின்பின் ஒன்றாக அல்ல ஒரே வேளையில், ஒருவர் போதிக்கிறார். ஒருவர் பாடுகிறார். ஒருவர் ஜெபிக்கிறார். ஒருவர் அந்நிய பாஷை பேசுகிறார், ஒருவர் வியாக்கியானம் செய்கிறார், இது சபை கூடி வந்திருக்கிற வேளையில் ஒரே சமயத்தில் நடக்கிறது. இப்படி நடந்தால் சபை எப்படி நடந்திருக்கும், ஒருவரும் பக்தி விருத்தி அடைய முடியாதே.

“சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது’’ (1 கொரி 14:40) என்று வேதம் கூறுகிறது.

ஒருவர் மேய்ப்பராக, போதகராக இருந்து நடத்துவதால் விசுவாசிகளின் ஆசாரியத்துவம் பறிக்கப்படுகிறது என்று சிலர் சொல்லுவது போல் ஆசாரியத்துவம் எவ்விதம் பறிக்கப்படுகிறது.

இவ்விதம் பேசுவது வேத வசனத்திற்கு முரணானது. இவ்விதம் பேசுகிறவர்கள் சுட்டி காட்டும் வசனம் எது என்றால் “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்’’ 1பேதுரு 2:9)

இதற்கு அடுத்த வசனத்தையும் இணைத்து வாசிக்க வேண்டும். “முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்’’ 1 பேதுரு 2;10)

இந்த வசனங்களின் விளக்கங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால் கிறிஸ்துவுக்கு முன் மக்கள் தேவனை எவ்விதம் தொழுது கொண்டார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இப்பொழுதோ, ஒவ்வொரு விசுவாச மக்களும் நேரடியாக தேவனை தொழுது கொள்ளும் ஆசாரியத்துவ முறைகளை, கிறிஸ்துவின் மூலமாக பெற்றிருக்கிறோம்,

நாம் தேவ சந்நிதியில் நின்று “அப்பா பிதாவே’’ என்று கூப்பிடவும், தேவனை நமது நாவினாலே போற்றி, துதிக்கவும், ஆராதிக்கவும், சிலாக்கியம் பெற்று இருக்கிறோம். நமக்காக இன்னொருவர் ஆராதிக்க வில்லை, ஒவ்வொரு விசுவாசிகளும் தாமாக கர்த்தரை தங்கள் சுயாதீனத்தின்படி தொழுது கொள்ள சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை கூடிவருகையில் ஆராதனை நடத்துகிற சபை மேய்ப்பர், மக்களுக்காக அவர் மட்டும் ஆராதனை செய்ய வில்லை. விசுவாச மக்கள் தேவனை ஆராதிக்க உற்சாகப்படுத்துகிறார்,  விசுவாச வாழ்வில் நடக்க, விசுவாசத்தில் பலப்பட, விசுவாச வாழ்வில் நிலைத்திருக்க வேத வசனங்களின் மூலமாக போதிக்கிறார்.

இதை ஒருவர்தான் செய்ய வேண்டுமா? எல்லா விசுவாச மக்களும்  தங்கள் கரங்களில் எடுத்து ஏன் செய்யக்கூடாது என்பதே இன்று சிலருடைய கேள்வி.
செய்யலாம் ஆனால் எல்லாம் ஒழுங்கும், கிரமமுமாக இருக்க வேண்டும். சரீரத்தில் இருக்கிற எல்லா அவயவங்களும் எல்லா வேலைகளையும் செய்ய ஆசைப்படலாம். ஆனால் அப்படி செய்தால் அது ஒழுங்காக இருக்குமா?

அப்படி செய்யாமல் தடுக்கப்படுவதால் அந்த அவயவம் சரீரத்திற்கு புறம்பானது என்று சொல்லி விட முடியுமா?

கால் செல்லும் திசையில் தான் முழு உடலும் செல்ல வேண்டும். கை ஒன்றை எடுக்க முற்படும் போது கால் அதற்கு இசைந்து செல்ல வேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைகளை செய்ய வேண்டும்.

“கிறிஸ்துவை  விசுவாசித்து  ஏற்றுக்கொண்ட அனைவரும்  திருமுழுக்கு, திருவிருந்து, திருமணம், அடக்க ஆராதனை இது  போன்ற  சபைக்காரியங்களை  செய்ய வேதாகமம்  அனுமதிக்கின்றது’’என்று ஒருவர் சொல்லுவது தேவன் சபையில் ஏற்படுத்தி இருக்கும் பொறுப்புக்கு எதிராக பேசுவதாகும்.

அப்படியானால் விசுவாசிகளுக்கு இந்த அதிகாரம் இல்லையா? விசுவாசிகள் இதை செய்யக்கூடாதா? என்றால், செய்யக்கூடாது. காரணம், அப்படி செய்யக்கூடாது என்றே தேவன் பொறுப்புக்களை கொடுத்து, அதில் சிலரை ஏற்படுத்தி வைக்கிறார்.

விசுவாசிகள் எல்லோரும் எல்லாவற்றையும் செய்யலாம், இதற்கு மேய்ப்பரோ, போதகரோ, அவசியமில்லை என்றால், ஒழுங்கு கிரமம் என்று எதுவும் இருக்காது.

இவ்விதமாக செயல்பட விடாமல் இருப்பதே “விசுவாசிகளின் ஆசாரியத்துவம் சபைகளில் மறுக்கப்படுகிறது’’ என்று சொல்வார்கள் என்றால் அவர்கள் வேத வசனங்களை ஓரமாகவே பார்க்கிறார்கள் என்பதே பொருள்.

ஆசாரியத்துவம் என்பது தேவனை நேரடியாக தொழுதுகொள்ளும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதாகும்.

ஆனால் சபை ஒழுங்கு என்பது மிகவும் அவசியமானது. ஒழுங்கு இல்லை என்றால் எல்லாம் ஒழுங்கீனமாக மாறி விடும். ஒழுங்கீனமான காரியங்கள் விசுவாச வாழ்வில் வளர்ச்சியை தடை செய்து விடும்.

விசுவாச வாழ்வின் வளர்ச்சிக்கும், கிறிஸ்துவுக்குள்ளான ஐக்கியத்திற்கும், திருச்சபை ஐக்கியத்திற்கும், திருச்சபை ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வதும் மிகவும் அவசியமாக இருக்கிறது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி நடந்தால் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக சென்று சேர முடியாது. வேத வசனத்தின் அடிப்படையில், தேவன் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் சபை ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டு, ஆவியானவரின் ஆளுகைக்குள்ளிருந்து தேவன் நடத்தும் பாதையில் ஒவ்வொரு விசுவாச மக்களும் செல்ல வேண்டும்.

சபை ஐக்கியத்திற்கு எதிராக பேசி, விசுவாச மக்களை சிதறடிக்க தேவன் ஏற்படுத்திய சபையின் ஒழுங்குகளை உடைப்பதற்காகவே, சிலர் எழும்பி, பேசி வருவது, விசுவாச வாழ்வுக்கு எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கும். என்பதை அப்படிப்பட்டவர்கள் வேதவசனங்களின் அடிப்படையில் சிந்திப்பது நல்லது. அப்படிப்பட்டவர்களின் வலையில் சிக்கிக்கொள்ளாமல், விசுவாச மக்கள் தங்களை காத்துக்கொள்ளுதலும் நல்லது.

குழப்புகிறவர்களும், புரட்டுகிறவர்களும் எதாவது குறிப்பிட்ட சில வசனங்களை காண்பித்து, அந்த வசனத்தின் சரியான அர்த்தத்தை மாற்றி, தங்கள் சுய இஷ்டத்தின்படியான விளக்கங்களை கொடுக்க முயற்சித்து வருகிறதை தேவ ஆவியானவரின் துணை கொண்டு, விசுவாச மக்கள் சரியாக அறிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம்.

எந்த ஒரு சட்டமும் ஒழுங்குக்கு உட்பட்டு இருந்தால்தான், அது சரியாக இயங்க முடியும், ஒழுங்கு இல்லாமல் நான் சட்டத்தை கைக்கொள்வேன் என்பது, சட்டத்திற்கே புறம்பானது, அது போல நான் வேத வசனத்தை கைக்கொள்வேன், ஒழுங்குக்குள் வர மாட்டேன். என்பது, வேத வசனத்தை அவமதிப்பதாகவே இருக்கும்,

கிரமம், என்ற வார்த்தையோடு “அ’’ சேர்ந்து விட்டால் அக்கிரமம் ஆகி விடும்.
ஆண்டவர் யாரை அறியேன் என்று சொல்லுகிறார். “அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்’’ (மத்தேயு 7:23) என்று சொல்லுகிறார்.

வேத வசனங்களை கிரமமாக கற்றுக்கொள்ளவும், அதன்படி நடக்கவும், தேவன் திருச்சபையில் சில ஒழுங்குகளை வைத்திருக்கிறார்.

பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கணக்கை சரியான வழிமுறையோடு செய்து காண்பிக்க வேண்டும், தனக்கு அந்த கணக்கு தெரியும் என்று விடையை மட்டும் எழுதினால் போதாது. எப்படி விடை கிடைக்கிறது என்ற வழி முறைகளையும் செய்து காண்பிக்க வேண்டும்.

சொல்லப்படும் விடை சரியாக இருந்தாலும், அந்த விடையின் வழி முறைகளையும் செய்து காண்பிக்க வேண்டும், சரியான வழி முறையுடன் இல்லாத சரியான விடையும் தவறுதான்.

கிரமத்திற்கும், அக்கிரமத்திற்கும் இதுதான் வித்தியாசம்.

சபையின் மேய்ப்பர் என்பவரோ, போதகர் என்பவரோ, விசுவாசிகளை விட மேலானவர் அல்ல, ஆனால் தேவனிடத்திலிருந்து பொறுப்பை பெற்றவர். முன்மாதிரியாக ஏற்படுத்தப்பட்டவர்.

எனவே, சபையின் போதகரோ, மேய்ப்பரோ, ஆசாரியத்துவத்தை மற்றவர்களுக்கு கொடுக்காமல் முழுவதும் தங்கள் கரங்களில் எடுத்துக்கொள்ள வில்லை. தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை செய்கிறவர்களாக இருக்கிறார்கள். தொழுதுகொள்ளுதல் {ஆசாரியத்துவம்)என்பது இயேசு கிறிஸ்துவை  ஏற்றுக்கொண்ட எல்லா மக்களுக்கும் பொதுவானது.

தேவன் நியமித்திருக்கும் ஒட்டு மொத்த ஒழுங்குகளையும், நிராகரிக்கவோ, வேண்டாம் என்று சொல்லவோ, யாருக்கும் அதிகாரம் இல்லை.

மேலும் பொறுப்பு என்பது, தேவனால் கொடுக்கப்படுவது, ஒருவருக்கு தேவன் பொறுப்பை கொடுப்பாரானால் அதை ஏற்று செய்கிறவரே, அதற்கு உத்திரவாதி, அவரே, அதற்கு கணக்கு கொடுக்க வேண்டும்.

பொறுப்பாளர், தன்னுடைய பொறுப்பில் இருந்து தவறுகிறார் என்பதற்காக, பொறுப்பு மாறுவதில்லை, பொறுப்பாளரே மாற்றப்படுவார். எனவே தேவனுடைய சபையில் பொறுப்பாளர்கள் சிலர் தவறுகிறவர்களாக இருந்தால், பொறுப்பாளரே  மாற்றப்படுவார் பொறுப்பு மாறாது.

அதே வேளையில் எல்லோரும் எல்லா பொறுப்புக்களையும் செய்ய முடியாது.
சபை கிறிஸ்துவின் சரீரம் என்றால் சபையில் இருக்கும் அங்கத்தினர் அவயவங்கள் அல்லவா? ஒவ்வொரு அவயவமும் ஒவ்வொரு வேலையை கிரமமாக செய்ய வேண்டும். மற்ற அவயம் செய்வதை தான் செய்ய வேண்டும் என்றோ, அல்லது. அந்த அவயத்தின் செயல்கள் மேலானது என்று சொல்லவோ, முடியாது. இணைந்து செயல்படுவதே, சரீரம்.

இல்லை என்றால், செயல் இழந்த உறுப்பாகி விடும். கவனம். பொறுப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது.

தேவன் கொடுத்திருக்கும் ஆசாரியத்துவத்தை (தொழுது கொள்ளுதல், தேவன் நியமித்திருக்கும் வழியில், அர்ப்பணித்து வாழுதல்) சரியாக உணர்ந்து, தேவன் நியமித்திருக்கும் சபையின் ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டு, உண்மையாக வாழ்வோம் கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக.


 



0 comments:

Post a Comment