Bread of Life Church India

பணக்காரர்கள் தேவனுடைய இராஜ்யம் செல்ல முடியாதா?

 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்” (மாற்கு 10:25).

"ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால் ஒருவேளை ஊசியின் துவாரவழியாக ஒட்டகம் கூட சென்று விடும், ஆனால் பணக்காரனாக இருப்பவன் தேவனுடைய இராஜ்யத்தில் நுழைவது அதை விட கடினம் என்று சொல்வதால் பணக்காரர்களாக இருப்பதே தவறு என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாரா? அல்லது பணக்காரர்களாகவே ஆக கூடாது என்று சொல்கிறாரா?
இதை குறித்து தேவ ஆவியானவரின் உதவியுடன்  வேதாகமத்தை ஆராய்வோம். வாருங்கள்.
இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளை சொல்வதற்கு முந்தைய வேத  வசனங்களை மாற்கு 10: 17 முதல் கருத்தாக நாம் கவனித்து வாசிப்போமானால், அதில் இதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
இங்கே ஒரு வாலிபன் தான் எல்லாவற்றிலும் மிகவும் சரியாக இருப்பதாக நினைத்து, அதை இயேசு கிறிஸ்துவிடம் சொல்லி எப்படியாகிலும் இயேசு கிறிஸ்துவிடம் பாராட்டு பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் கேள்வியுடன் இயேசு கிறிஸ்துவை அணுகுகிறான். இயேசு கிறிஸ்துவும் அவனிடத்தில் எதிர் கேள்விகளை முன் வைக்கிறார். அதற்கு எல்லாம் அவன் பதில் சொல்லிக்கொண்டு வரும் போது, மிகவும் பணக்காரனாக இருந்த அந்த வாலிபனை அவனுடைய ஆஸ்தியை வைத்தே அவனுக்கு பரீட்சை வைத்தார்.
இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்” (மாற்கு 10:21). தனது பணத்திற்கும் ஆஸ்திக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்த அந்த வாலிபன், இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டதும் சற்று நிலை குலைந்தே போய் விட்டான்.
அவனால் எந்த பதிலும் சொல்ல முடிய வில்லை. தன்னுடைய நற்குணங்களை சொல்லி பாராட்டு பெற வேண்டும் என்று வந்தவனின் பலவீன பகுதியை இயேசு கிறிஸ்து தொட்டவுடன், அவனால் அவருக்கு முன் தொடர்ந்து நிற்க முடிய வில்லை. “அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்” (மாற்கு 10:22) என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய இராஜ்யத்தை குறித்தும், நியாயப்பிரமாணத்தைக் குறித்தும் உடனுக்குடன் பதில் கொடுத்துக்கொண்டிருந்த வாலிபனால் தேவனுடைய இராஜ்யத்திற்காக பணத்தை இரண்டாம் நிலையில் வைக்க அவனுடைய மனம் சம்மதிக்க வில்லை.
ஐசுவரியத்தை விடவும் தேவனுடைய இராஜ்யத்திற்கு அவன் முக்கியத்துவம் கொடுக்கிறானா? என்றே இயேசு கிறிஸ்து அவனுக்கு வைத்த பரீட்சை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதில் அவனால் வெற்றி அடைய முடியாமல், பண ஆசை அவனை தோல்வியடைய செய்து விட்டது.
தேவன் தனக்கு கொடுத்துள்ள ஐசுவரியத்தையே நம்பி, அதை மட்டுமே உயர்வாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் நுழைய முடியாது. ஆனால் தனக்கு தேவன் கொடுத்துள்ள ஆஸ்திக்காக அந்தஸ்திற்காக தேவனுக்கு நன்றி சொல்லி, ஏழை எளியோரை அசட்டை செய்யாமல் அவர்களுக்கு உதவி செய்து, இயேசு கிறிஸ்துவை மட்டும் முதன்மையாக வைத்தால் ஐசுவரியவான்கள் தேவனுடைய இராஜ்யம் செல்ல எந்த தடையும் இல்லை.
சிலர் இந்த வசனத்தோடு ஐசுவரியவான், லாசரு சம்பவத்தை இணைத்து ஐசுவரியவான் தேவனுடைய இராஜ்யத்தில் நுழையவே முடியாது என்று போதிப்பார்கள். அது முற்றிலும் தவறு.
ஐசுவரியவான் லாசரு சம்பவத்தில் இயேசு கிறிஸ்து எதை முக்கியத்துவ படுத்தி போதிக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்.
லூக்கா 16 ம் அதிகாரத்தின் துவக்கத்தில் ஐசுவரியமுள்ள ஒரு மனிதனிடத்தில் உக்கிராணக்காரனாக இருந்த மனிதனை குறித்து உவமையாக சொல்லி விட்டு, “எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்” (லூக்கா 16:13).
இந்த வார்த்தைகளை கேட்டுக்கொண்டு இருந்த பரிசேயர்கள் இயேசுவின் போதனைகளை பரியாசம் பண்ணுகிறார்கள். “இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்” (லூக்கா 16:14) என்று வேதம் கூறுகிறது.
பரிசேயர்கள் ஏன் பரியாசம் பண்ணினார்கள்? ஏன் என்றால் பணக்காரர்கள் மட்டும்தான் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் தவறான புரிதலோடு இருந்து வந்தனர்.
இப்படிப்பட்ட தவறான எண்ணம் உள்ளவர்களின் எண்ணத்தை சுக்கு நூறாக உடைக்கும் படியே, இயேசு கிறிஸ்து  ஐசுவரியவான், லாசரு சம்பவத்தை சொல்லி விளக்கம் கொடுக்கிறார்.
மிகவும் ஐசுவரியவானாக செழிப்பாக எந்த குறையும் இல்லாதவனாக வாழ்ந்து வந்த ஐசுவரியவானின் முடிவு பரிதாபமாக இருக்கிறது. ஆகவே ஐசுவரியவானாக இருப்பவர்கள் எல்லாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தான் என்ற எண்ணத்துடன் தங்கள் பெருமையில் இரட்சிப்பை இழந்து விட கூடாது என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கிறார்.
மேலும், ஏழ்மை என்பது இழிவான நிலை அல்ல, ஏழையாக இருப்பவர்கள் சபிக்கப்பட்டவர்களும் அல்ல என்பதை விளக்கவே மிகவும் பரிதாபமாக வாழ்ந்து வந்த லாசருவின் முடிவு எவ்வளவு ஆசீர்வாதமாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளும்படி இயேசு கிறிஸ்து போதிக்கிறார்.
ஆகவே இந்த சம்பவத்தில் இருந்தும் நாம் சரியாக அறிந்து, உணர்ந்து கொள்ள வேண்டிய செய்தி, ஐசுவரியவானோ, ஏழையோ அது தேவனுடைய இராஜ்யத்திற்கு  தகுதியோ,  தகுதி  இழப்பையோ செய்யாது. ஆனால் ஐசுவரியமே ஆசீர்வாதம் என்று அதை மட்டும் பிடித்துக்கொண்டு, இயேசு கிறிஸ்துவை அசட்டை செய்கிறவர்கள் தேவனுடைய இராஜ்யதில் பிரவேசிக்க முடியாது.
அதே வேளையில் ஏழ்மையாக வாழ்வது மட்டுமே, ஒரு மனிதனை தேவனுடைய இராஜ்யத்திற்கு தகுதியாக்கும் என்றும் எண்ணி விட கூடாது. ஐசுவரியவானோ, ஏழையோ அவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு கிறிஸ்துவை முதன்மையாக வைத்திருக்க வேண்டும். இதுவே தேவனுடைய இராஜ்யத்திற்கு தகுதிபடுத்தும்.

0 comments:

Post a Comment