Bread of Life Church India

சுதந்திரமும் மனித வாழ்வும்


உங்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்.
                சுதந்திரத்தை விரும்ப வேண்டுமானால், அடிமைத்தனத்தை அறிய வேண்டும். தன்னை ஒருவன் தான் விரும்பாமலேயே ஆளுகை செய்கிறான் என்ற எண்ணம். வெகு காலங்களுக்கு பின்பே இந்தியர்களாகிய நமக்கு புரிய ஆரம்பித்தது. அதை நமக்கு புரிய வைத்ததில் பெரும் பங்காற்றியவர்களில் ஒருவர் அன்னிபெசன்ட் அம்மையார். முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவுக்கு வந்திருந்த அன்னிபெசன்ட் அம்மையார் மனதில் மிகுந்த போராட்டம். இந்திய மக்களின் இன்னல்களைப் பார்த்து மனம் வெதும்பினார்.
                இந்தியர்களின் இன்னல்களைப் போக்க போராட முடிவெடுத்தார். தலைவர் பாலகங்காதர திலகருடன் இணைந்து ஹோம் ரூல் லீக் என்ற இயக்கத்தைத் துவக்கி தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடினார். பல இன்னல்களை அனுபவித்து சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ள வழிவகுத்தார். இது அரசியல் ரீதியான சுதந்திரம். இந்த சுதந்திரத்தைத்தான் ஆகஸ்ட் 15 மகிழ்ச்சியுடன் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
                நம் தேசம் சுதந்திர காற்றை சுவாசிக்க தன் சுவாசத்தை மறந்தவர்கள் பலர். அடிமைப்பட்ட தேசத்தை விடுவிக்க எழும்பின தலைவர்கள் பலர். ஆனால் மனிதனுக்குள்ளே இருக்கிற அடிமைத்தனதை விடுவிக்க எந்த மனிதனும் எழும்பவில்லை. எழும்பினாலும் அதை வெற்றியாக முடிக்கவில்லை. ஆனால், அரசியல் ரீதியான தேச சுதந்திரத்திற்கும், உள்ளான தனிமனித சுதந்திரத்திற்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முதலில் வித்திட்டவர், இன்றும் தன்னைப் பின்பற்றுகிறவர்கள் மூலம் அதில் வெற்றி கண்டவர் இயேசு கிறிஸ்துவே.
                தேச சுதந்திரத்திற்காகப் போராடி வெற்றிகண்டு இன்று அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம், இன்னும் தனக்குள் சுதந்திரம் பெறவில்லை என்பதையும் தனக்குள் இருக்கிற பாவ அடிமைத்தனத்தையும் அறியாமல் அல்லது விடுவிக்கப்பட வழியறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
                பாவம் நம்மை அடிமைப்படுத்துகிறது. பாவம் என்பது என்ன? மெய்யான தேவனை அறியாமல் வாழ்வது, பெருமை, பொறாமை, கொள்ளை, கொலை, மற்றவர்களை அழிக்க நினைத்தல், குடி, சூது, விபச்சாரம், பண ஆசை, சுயநலம் இது போன்ற பாவத்தில் சிக்குண்டு அதற்கே அடிமையாகிப் போனவர்கள் உண்டு. பாவத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் வழியறியாமல் அதிலேயே பழகிப்போனர்களும் அநேகர் உண்டு.
                எதினாலே ஒருவன் ஜெயிக்கப்படுகிறானோ அதினாலேயே அவன் அடிமையாகிவிடுகிறான் <2 பேதுரு 2:19>.
                மனிதர்களுக்குள் பாவம் தான் விரும்புகிறதை செய்ய வைக்கிறது. ஒரு மனிதனின் பாவ நிலையைக் குறித்து பைபிள் தெளிவாக எடுத்துக்கூறும்பொழுது ``நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை: நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
                ஆதலால், நானல்ல எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. நிர்பந்தமான மனுஷன் நான். இந்த மரண சரீரத்திலினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? <ரோமர் 7:15, 17, 24> என்ற போராட்டத்துடன் அநேகர் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்
                இரண்டாவதாக நம்மை சூழ்நிலை அடிமைப்படுத்துகிறது: மனிதன் சூழ்நிலைக்கைதியாகி உலா வருகிறான். வியாதி, வறுமை, தரித்திரம், கடன், ஏமாற்றங்கள், தோல்விகள் போன்றவற்றினால் அடிமைப்படுத்தப்பட்டு அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதை அறியாது பயத்தோடு வாழ்ந்து வருகிறான்.
                மூன்றாவதாக மரண பயம் அடிமைப்படுத்துகிறது: இவ்வுலகில் வாழ்பவர்களில் அநேகருக்குத் தங்கள் சரீரத்தை விட்டுப் பிரிந்து இவ்வுலகைக் கடந்து போனால் நலமாயிருக்கும் என்கிற தவிப்பு. ஆனால், எவரும் மரணத்தை விரும்புவதில்லை. வாழ்நாளெல்லாம் மரணம் தன்னை சந்தித்துவிடக்கூடாது என்கிற பயத்தோடு வாழ்கிறார்கள். ஆனால் மரணம் நிச்சயம் என்று நாம் அறியாததல்ல. மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனை தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும் வாழ்நாளெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கு அப்படியானார். <எபிரெயர் 3:13,14>. இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்தார். அவர் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை வாக்கு பண்ணுகிறார்.
                தேவனே, மனிதன் விடுவிக்கப்பட வேண்டும் என்று அன்புகூர்ந்து, இயேசு கிறிஸ்துவாக இப்பூமியில் அவதரித்தார். அவர் நம்மைப் போல் சோதிக்கப்பட்டு பாவமில்லாதவராக வாழ்ந்தார். நமக்காக பாடுபட்டு, இரத்தம் சிந்தி, சிலுவையில் அறையப்பட்டார். நம் அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்கப்பட அவர் சிலுவை மரணத்தினாலே உயிர்தெழுந்து  வெற்றி சிறந்தார்.
                அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். ஆதலால், நம் பாவ அடிமைத்தனங்களில் இருந்தும், சூழ்நிலை அடிமைத்தனத்திலிருந்தும், மரண பயத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும், சுதந்திரமாக வாழ இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். அவரை அண்டிக் கொள்ளுங்கள். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.



1 comments:

  1. நண்பரே!

    சந்தோஷம் துக்கமாக மாறாது என்ற உறுதியைத் தர முடியுமா?

    ReplyDelete