Bread of Life Church India

அதே தந்திரங்கள் பலிக்குமா?

...பழைய கதைதான் முழுவதும் வாசியுங்கள்.....

ஒரு தொப்பி வியாபாரி ஊர் ஊராக அலைந்து தொப்பி விற்று விட்டு  வரும் போது மிகவும் களைப்பாக இருந்ததால்  தொப்பிகளை கிழே  வைத்து விட்டு, ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தான்.

மரத்தின் நிழலில் இதமான காற்றி்ல் அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டான். கண் விழித்து பார்த்த போது தனக்கு அருகில் இருந்த  தொப்பிகளை காணவில்லை. சுற்றி பார்க்கும் போது மரகிளைகளில் அமர்ந்திருந்த குரங்குகள் தொப்பிகளை அணிந்திருந்தன.

குரங்குகள் ஒவ்வொன்றும் அணிந்திருக்கும்  தொப்பிகளை எப்படி வாங்குவது என்று யோசித்த வியாபாரி தன்னுடைய தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டான்.

உடனே குரங்குகளும் அணிந்திருந்த தொப்பிகளை கீழே போட்டு விட்டது.

உடனே சந்தோஷத்துடன் எல்லா தொப்பிகளையும் எடுத்துக்கொண்டு வியாபாரி வியாபாரத்திற்கு சென்றான்.

ஆண்டுகள் உருண்டோடின..தொப்பி வியாபாரிக்கு வயதாகி விட்டது.

இப்போது தொப்பி வியாபாரியின் பேரன் தாத்தாவை போன்று தொப்பி வியாபாரம் செய்ய புறப்பட்டான்.

அப்பொழுது அந்த தொப்பி வியாபாரி தனக்கு நடந்த அனுபவங்களை தனது பேரனிடம் சொன்னான்.

"ஒரு நாள் நான் வியாபாரத்துக்கு சென்ற போது, அசதியில் ஒரு மரத்தின் நிழலில் தூங்கி விட்டேன்.

அப்பொழுது மரத்தில் அமர்ந்து இருந்த குரங்குகள் தொப்பியை எடுத்து அணிந்து கொண்டன. உடனே அந்த தொப்பிகளை எப்படி குரங்குகளிடம் இருந்து வாங்குவது என்று யோசித்த நான், எனது தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டேன்.

உடனே குரங்குகளும் தான் அணிந்திருந்த தொப்பிகளை கீழே போட்டு விட்டது நான் தொப்பிகளை எடுத்து வந்து விட்டேன்" என்று தனது பேரனிடம் தனது பழைய அனுபவத்தை விவரித்து  சொன்னான்.

தனது தாத்தாவின் அனுபவத்தை கேட்ட பேரன். தொப்பி வியாபாரத்திற்கு சென்றான்.

மதிய வேளையில்  மிகவும் களைத்து போனவனாக ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தவன் அப்படியே தூங்கி விட்டான்.

கண் விழித்து பார்த்த போது தொப்பிகளை காண வில்லை. சுற்று முற்றும் பார்த்த போது மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகள் தொப்பிகளை எடுத்து அணிந்திருந்தன.

உடனே அவனுக்கு தாத்தா. சொன்ன கதை ஞாபகத்திற்கு வந்தது.

இப்போது என்ன செய்கிறேன் பார்.
 என்று தான் அணிந்திருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டான்.

கீழே போட்டு விட்டு குரங்குகளை பார்த்தான். குரங்குகள் தாங்கள் அணிந்திருந்த தொப்பியை கீழே போட வில்லை.

மறுபடியும் தலையில்  தொப்பியை அணிந்து விட்டு கீழே போட்டு விட்டு குரங்குகளை பார்த்தான்.

அப்பொழுதும் குரங்குகள் தொப்பியை கீழே போட வில்லை.

அவனுக்கு புரியாமல் திகைத்துக்கொண்டிருக்கும் போது குரங்குகள் அவனைப்பார்த்து உனக்கு எப்படி தாத்தா இருக்கிறாரோ அதே போல
எங்களுக்கும் தாத்தா இருக்கிறார் என்றது...😀😀

..கதையின் பொருள்..
ஒருவரின் அனுபவம் இன்னொருவருக்கு உதவாது..

செயல்களில் மாற்றம் இல்லாமல் ஜெயிக்க முடியாது.

எனவே..சிந்தித்து செயல்படுவோம்.☺

Rev. V.S.Lourduraj
Bread of Life Church
Thiruvottiyur, Chennai 19

0 comments:

Post a Comment