Bread of Life Church India

மன அமைதி கிடைக்கும் இடம்.


உலகத்தில் மனிதனின் மிக முக்கியமான தேடல் மன அமைதி. மன அமைதி எந்த மனிதனிடம் இருக்கிறதோ, அந்த மனிதன்தான் தன் வாழ்வில் வெற்றிகரமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
சமாதானம், சந்தோஷம் மன நிறைவு இல்லாமல், வாழ்க்கையில் இலக்கு தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் வெகு விரைவில் தன் மன அமைதியை இழந்து வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும். வாழக்கையின் முடிவுக்கும் கூட சென்று விட வாய்ப்புக்கள் உண்டு.
மனிதன் மன அமைதி இல்லாமல் இருப்பதுதான், அநேக பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணம். தன்னால் தன் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் மனிதன் தன்னை சுற்றிலும் இருக்கும் மனிதர்களுக்கோ, அல்லது தன் குடும்பத்தினர்களுக்கோ கூட சந்தோஷத்தை கொடுக்க முடியாது.

ஒரு பொருள் ஒருவரிடம் இருந்தால் தான் அதை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். தன்னிடம் இல்லாத ஒன்றை இன்னொருவருக்கு ஒருவர் கொடுக்க முடியாது. மனிதர்கள் மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தன்னிடம் மற்றவர்கள் எதிர்பார்க்கும், சந்தோஷத்தை கொடுக்க முடியவில்லை. தன்னிடம் இருந்தால்தானே கொடுப்பதற்கு. ஆகையால் தன்னிடம் இல்லாததை மற்றவர்களிடம் பெற்று விடலாம் என்று செல்லும் மனிதனுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைக்கிறது. எங்கு சென்றாலும், எதை செய்தாலும் சந்தோஷம் இல்லை. சமாதானம் இல்லை.  
எப்படியாகிலும் மன அமைதியையும், சந்தோஷத்தையும் பெற்று விட வேண்டும் என்று மனிதன் எங்கு எங்கோ தேடி அலைகிறான். பல வழிகளை தேர்வு செய்கிறான். எதிலும் முழுமையான நிறைவு இல்லை. எதுவும் நிரந்தரமாக கிடைக்க வில்லை. எல்லாம் தற்காலிகமாகவே உள்ளது.
வருத்தம், பாரம், மன அழுத்தம். கவலை, பயம், சோர்வு, குழப்பம், கண்ணீர், இப்படி வாழ்க்கையே கேள்வி குறியாக, வாழ்க்கையே கடினமாக மாறி, வாழ்வதை விட வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என்று கலங்குவோர் உண்டு. வாழ்க்கையை எப்படியாவது வாழ்ந்து விட  வேண்டும் என்று வாழ்க்கையில் எந்த பிடிமானமும் இல்லாமல், விரக்தியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் உண்டு.
இப்படிப்பட்டவர்களைப் பார்த்து தான்வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்;  நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”(மத்தேயு 11:28) என்று இயேசு கிறிஸ்து அழைக்கிறார்.
நான் உனக்கு மனஅமைதியை தருவேன்என்று ஒரு மனிதனாலும் சொல்ல முடியாது. கொடுக்கவும் முடியாது. ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்என்று வாக்குறுதி தருகிறார்.
மனிதர்கள் நான் உனக்கு அதை தருகிறேன், இதை தருகிறேன் என்று பல வித வாக்குறுதிகளை கொடுக்கலாம். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா? என்று பார்த்தால் அதில் எதையுமே நிறைவேற்றி இருக்க மாட்டார்கள். ஏன் என்றால் சொன்னதை செய்யக்கூடிய ஆற்றல் மனிதர்களுக்கு இருப்பது இல்லை.
வெறும் சொற்கள் மட்டும் எந்த மன நிறைவையும் கொடுத்துவிட முடியாது. சொன்னதை நிறைவேற்றும் ஆற்றல் இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே சொன்னதை நிறைவேற்றும் ஆற்றல் கொண்டவர். அவரிடம் வருகிறவர்களுக்கு அவர் தாம் சொன்னதை நிறைவேற்றுவார்.
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29). இந்த பூமியில் பிறக்கும் எந்த மனிதனும் கற்றுக்கொண்டு, பிறப்பதில்லை. பிறந்த பிறகு கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறான்.
மனிதன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், இந்த உலகம் எதோ ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதில் மனிதன் எதைக் கற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை வைத்தே அவனுடைய வாழ்க்கையின் தரம் வெளிப்படுகிறது.
மனிதன் கற்றுக்கொள்ளும் எல்லாம் மனநிறைவையும், மனஅமைதியையும் தருவதில்லை. சில விஷயங்கள் மனிதனின் மனஅமைதியை கெடுத்தும் விடுகிறது.
எனவே கற்றுக்கொள்வதிலும் கூட, மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. உலகம் மனிதர்கள் மேல் பலவிதமான பாரங்களை ஏற்றிக்கொண்டே இருக்கிறது. மனிதன் மேல் ஏற்றப்படும் பாரங்களே மன அமைதியை கெடுத்து, சமாதானம், சந்தோஷம் இல்லாது செய்து விடுகிறது.
ஆனால்என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது ” (மத்தேயு 11:30) என்று  இயேசு கிறிஸ்து தன்னிடம் உள்ள சாந்தம், மனத்தாழ்மை என்னும் பாரத்தை(நற்குணத்தை) மனிதன் மேல் வைக்க விரும்புகிறார். இலகுவான என் பாரத்தை(நற்குணத்தை) உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
கடினமான பாரங்களை சுமந்து கொண்டு, வருத்தத்தோடு இருப்பவர்களுக்கு, தன்னுடைய இலகுவான பாரங்களை கொடுத்து, மனநிறைவையும், மன அமைதியையும் கொடுக்க விரும்புகிறார். 

0 comments:

Post a Comment