நீ என்னுடையவன்
“கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்
பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்’’ (ஏசாயா 43:1)
தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு
தந்த வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக்கொடுத்தார், ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாய் இருக்கிற நாமும் இந்த வாக்குத்தத்தங்களை
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
இந்த உலகத்தின் பாவ
அடிமைத்தனத்தில் இருந்து நம்மை மீட்டெடுத்து,
தம்முடைய வாக்குதத்தங்களுக்கு சுதந்திரவாளிகளாக்கிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
நம்மை பெயர் சொல்லி,
அழைத்து, தம்முடைய நாமம் தரிப்பித்து, நம்மை
அதிகாரமுள்ளவர்களாய் இந்த பூமியிலே வாழ
வைத்திருக்கிற தேவன் சொல்லுகிறார்.
“கர்த்தராகிய
நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை
விட்டுப் பிரித்தெடுத்தேன்’’ (லேவி
25:23).
தேவன் நம்மை வேறு
பிரித்ததே நாம் அவருடைய மக்களாய்
வாழ வேண்டும், அவருடைய விருப்பத்தின்படி இந்த
பூமியில் சாட்சிகளாக வாழ வேண்டும் என்பதற்காகதான்.
தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் “நீ என்னுடையவன்’’ இந்த வார்த்தைக்கு சொந்தகாரர்களாக
இருக்க நாம் என்ன செய்தோம்.
தேவனுடைய கிருபையே நமக்கு இந்த தகுதியை
கொடுத்திருக்கிறது.
என்னை ஒரு பொருட்டாக
ஒருவரும் எண்ணுவதில்லை, என்னை ஒருவரும் மதிக்கவில்லை.
என்னை விசாரிக்க ஒருவரும் இல்லை. எனக்கென்று யார்
இருக்கிறார்கள். எனக்கு என்ன இருக்கிறது?
என்று புலம்புகிற மக்கள் உண்டு.
அன்பு சகோதரனே, சகோதரியே
கர்த்தர் உங்களை பார்த்து சொல்லுகிறார்.
நீ என்னுடையவன்(ள்) இதை விட
மேன்மை இந்த பூமியில் வேறு
எதாவது இருக்கிறதா? வானத்தையும், பூமியையும் படைத்த கடவுள் சொல்லுகிறார்.
நீ என்னுடையன். நீங்கள் என்னுடையவர் களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை
விட்டுப் பிரித்தெடுத்தேன். தேவனுடையவர்களாக இருக்கும் நாம் ஏன் பயப்படவேண்டும்.
“பயப்படாதே,
நீ என்னுடையவன்’’ ஒன்றுமில்லா நிலையில் இருக்கலாம், ஆனால் எல்லாவற்றையும் தம்முடைய
கரங்களில் வைத்திருக்கும் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய
பிள்ளைகள் என்பதை நாம் ஒருபோதும்
மறக்கலாகாது.
உன்னை மீட்டுக்கொண்டேன். இனி
எதுவும் உன்னை மேற்கொள்வதில்லை, உன்னை
பெயர் சொல்லி அழைக்கிறேன். நீ
எனக்கு மட்டுமே சொந்தம். என்று நம்மை உரிமையோடு
அழைக்கும் அன்பு தகப்பனாய் சர்வ
வல்லமையுள்ள தேவன் நம்மோடு இருக்கிறார்.
உன்னை மீட்டுக்கொண்ட தேவன்,
உன்னை பெயர் சொல்லி அழைத்த
தேவன் எந்த நிலையிலும் கைவிடுவதில்லை.
உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒருவராலும் கவனிக்கப்படாமல் இருந்தாலும்,
என்ன நிலையில் இருந்தாலும், அவரை நோக்கி உண்மையாக
கூப்பிடும் பொழுது ஆண்டவர் சொல்லுவார்.
பயப்படாதே, நீ என்னுடையவன்.
நம்முடைய தகுதி பார்த்து நம்மை
அழைப்பதற்கு நமக்கு என்ன தகுதி,
இருந்தது. நம்முடைய திறமையை பார்த்து இரட்சிப்பதற்கு
நமக்கு என்ன திறமை இருந்தது.
நம்முடைய தகுதியெல்லாம், பாவத்தின் அசுத்தத்தில் இருந்ததுதான். நம்முடைய திறமை எல்லாம் பிசாசின்
ஆளுகைக்குள் அடிமைத்தனத்தில் இருந்ததுதான். இவைகளில் இருந்துதான் நம்மை காப்பாற்றி, நீங்கள்
என்னுடைய பிள்ளைகள் என்று நம்மை சொந்த
மாக்கிக்கொண்டார்.
இன்றைக்கும் நம்முடைய வாழ்வில் நமக்கு பெரிதும் உதவியாக
இருப்பது தேவனுடைய கிருபைதான். தேவ கிருபைதான் நம்மை
ஒவ்வொரு நாளும் தாங்கி, நடத்தி
வருகிறது.
தண்ணீர் பிரிந்து
நிற்கும்
“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்;
நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன் மேல்
புரளுவதில்லை’’ {ஏசா
43:2}
தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கும் விசேஷித்த
பாதுகாப்பு, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் கானானை நோக்கி
வரும்பொழுது, அவர்களை பிடிக்கும்படியாக பார்வோனின்
படைகள் தொடர்ந்து வருகிறது. எதிரில் செங்கடல் இருக்கிறது.
அந்த சூழ்நிலையில் இந்த வனாந்திரத்தில் நம்முடைய
வாழ்க்கை முடிந்து விடும், பின்னால் பார்வோனின்
படைகள். எதிரே கடல். எதாவது
ஒன்றினால் மரித்து போவது உறுதி
என்று நினைத்து இஸ்ரவேல் மக்கள் பயப்படுகிறார்கள், கலங்குகிறார்கள்,
கதறி அழுகிறார்கள்.
அப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் “மோசே தன் கையைச்
சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம்
ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்;
ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்;
அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம்
அவர்களுக்கு மதிலாக நின்றது’’ (யாத் 14:21,22) தேவன் தம்முடைய மக்களுக்காக
இராமுழுதும் செயல்பட்டு,
செங்கடலை இரண்டாக பிரித்து அதனுடாக
வழி நடத்தினார்.
தண்ணீர்கள் பிரிந்து மதில் போல நின்றது, இரண்டு
பக்கமும், தண்ணீரை மதிலாக நிற்க
வைத்து அதன் நடுவில் எந்த
சேதமும் இல்லாமல் பாதுகாப்பாய் நடத்தின தேவன் சொல்லுகிறார்.
“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்;
நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன் மேல்
புரளுவதில்லை’’என்று
சொல்லி வாக்கு பண்ணுகிறார்.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே,
ஒரு வேளை இதே சூழ்நிலையில்
நீங்கள் கடந்து வந்து கொண்டிருக்கலாம்,
எல்லா பக்கமும் நெருக்கப்பட்ட நிலையில் இருக்கிறேனே என்று சோர்ந்து போய்
இருக்கிறீர்களா? செங்கடலை இரண்டாக பிரித்த தேவன்
உங்களோடு இருக்கிறார்.
எது உங்களுக்கு பிரச்சனையாக
உங்கள் எதிரில் இருக்கிறதோ, அவைகளின்
நடுவில் எந்த விதமான சேதமும்
இல்லாமல் பாதுகாப்பாக சர்வ வல்லமையுள்ள தேவன்
உங்களை நடத்தப்போகிறார்.
இன்று அநேகருக்கு பிரச்சனையின்
நடுவாக நடந்து செல்ல பயம்,
ஒரு வேளை அவைகள் நம்மை
மூழ்கடித்து விடுமோ, என்ற கலக்கம்.
பிரியமானவர்களே, இரண்டு பக்கமும் தண்ணீர்
மதிலைப்போல நிற்க இஸ்ரவேல் மக்கள்
அதன் நடுவிலே நடந்து போனார்கள்.
எந்த பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை. தண்ணீர்கள் அவர்கள் மேல் புரளவில்லை.
காரணம் செங்கடலை இரண்டாக பிரிந்து நிற்க
செய்தவர் சர்வ வல்லமை உள்ள
தேவன்.
அன்றைக்கு இஸ்ரவேல் மக்கள் முன்னோக்கி செல்லுவதற்கு
தடையாக இருந்தது செங்கடல், எது தடையாக இருந்ததோ
அதற்குள்ளாகவே நடந்து செல்லவைத்து, அதன்
மூலமாக எந்த பாதிப்பும் வராதபடி
பாதுகாப்பவர்தான் நம்முடைய தேவன்.
எனவே, உங்களுக்கு எது
பிரச்சனையாக, தடையாக இருக்கிறதோ, அதையே
உடைத்து அதன் வழியாகவே கர்த்தர்
உங்களை நடத்தி செல்கிறார். தயங்காமல்
செல்லுங்கள். தேவனுடைய துணையும், பாதுகாப்பும் உண்டு. தேவனுடைய வார்த்தை
அப்படிதான் நமக்கு சொல்லுகிறது. “நீ
தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்’’.
கர்த்தர் கூட இல்லாதவர்கள்தான் பிரச்சனைகளை
பார்த்து பயப்பட வேண்டும், அது
என்னை மூழ்கடித்து விடுமோ, என்று கலங்க
வேண்டும். ஆனால் தேவாதி தேவன்
நம்மோடு இருக்க நமக்கு ஏன்
கலக்கம். நாம் ஏன் பயப்பட
வேண்டும்.? தயங்காமல் முன்னோக்கி செல்லுங்கள். கர்த்தருடைய கரம் உங்களோடு இருந்து
உங்களை வழி நடத்தும்.
நெருப்பும் பற்றாது
“நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது’’ (ஏசாயா
43:2).
நம்முடைய தேவன் இயற்கையின் மேல் அதிகாரம்
உள்ளவர் என்பதை இந்த வார்த்தைகள்
உறுதிப்படுத்துகிறது. மனிதர்களாகிய
நாம் நமது அறிவுக்கும், புத்திக்கும்
உட்பட்டே எல்லா வற்றையும் சிந்திக்கிறோம்.
செயல்படுகிறோம். ஆனால் நம்முடைய தேவன்
சர்வ வல்லவர் என்பதை ஒரு
போதும் மறந்து விடக்கூடாது.
தேவன் வாக்கு பண்ணுகிறவர்
மட்டும் அல்ல,அதை நிறைவேற்றிக்கொடுப்பதில்
உண்மையுள்ளவர் என்பதை வேதாகமத்தில் உள்ள
சம்பவங்களே சாட்சியாக நிற்கிறது.
அந்த நாட்களில் புறவின
மக்கள் இராஜாக்களை கடவுளுக்கு சமமாக எண்ணி வணங்கி
வந்திருக்கிறார்கள். ஆகையால் நேபுகாத்நேச்சார்
தன்னை வணங்கும்படி மக்களுக்கு தன்னுடைய பொற்சிலையை வைக்கிறான்.
ஆனால் சாத்ராக், மேஷாக்,
ஆபேத்நேகோ என்ற வாலிபர்கள் தேவனுக்காக
வைராக்கியமாக நின்று, தேவனைத்தவிர வேறு
எதையும் வணங்க மாட்டோம். என்று
வைராக்கியமாக இருக்கிறார்கள். வைராக்கியமாக இருக்கும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, என்பவர்களுக்கு பிரச்சனை
வருகிறது.
தேவனைத் தவிர வேறு
எதற்கும் அஞ்சாதவர்களாய் யார் என்ன சொன்னாலும்,
பொற்சிலையை வணங்க மாட்டோம் என்று
உறுதியாக நிற்கின்றனர்.
இந்த செய்தி நேபுகாத்நேச்சாருக்கு
தெரிந்தவுடன் “நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக்,
மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு
ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப்
பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு
முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும்
நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான்
பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற
அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை
என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் ’’ (தானியேல் 3:14,15). என்று தேசத்தின் இராஜாவேமிரட்டல்
விடுக்கிறான்.
உயிரா? தேவன் மேல்
உள்ள வைராக்கியமா? என்ற நிலையிலும் கொஞ்சமும்
தயங்காமல், “ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே,
இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல
எங்களுக்கு அவசியமில்லை.
நாங்கள் ஆராதிக்கிற தேவன்
எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும்,
ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்;
விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு
ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப்
பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள் (தானியேல் 3:16-18).
அங்கு அவர்களுக்கு உயிர்பயத்தை
விட தேவ பலம் அதிகமாக
இருந்தது, தங்கள் மேல் உள்ள
நம்பிக்கையை விட, தேவன் மேல்
அதிகமான நம்பிக்கை இருந்தது. தங்களை விட தேவன்
மேல் வைத்திருந்த விசுவாசம் அதிகமாக அவர்களிடம் வெளிப்பட்டது.
பயப்படாதே, நீ என்னுடையவன் என்ற
வார்த்தையை அவர்கள் மறக்க வில்லை.
தேவனை விட அவர்களுக்கு வேறு
எதுவும் பெரியவைகளாக தெரியவில்லை. தைரியமாக நின்றார்கள்.
அவர்களின் தைரியத்தையும், விசுவாச வார்த்தையையும் கேட்ட
நேபுகாத்நேச்சார் கோபம் கொண்டு, ஏழு
மடங்கு நெருப்பை அதிகமாக்கி, அதிலே போட சொல்லுகிறான்.
அவர்களை கட்டி நெருப்பிலே தூக்கிப்போடுகிறார்கள்.
அவர்களை தூக்கி சென்றவர்களை நெருப்பு
பற்றிக்கொண்டது. ஆனால்
தேவனுக்காக வைராக்கியமாக நின்றவர்களையோ, நெருப்பால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காரணம்
அவர்களோடு தேவன் இருந்தார். அக்கினியின் தழல் அவர்கள் மேல் பற்றாதபடிக்கு அவர்களை பாதுகாத்தார்.
அவர்தான் நம்முடைய தேவன்.
“அப்பொழுது
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி:
மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக
அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக:
ஆம், ராஜாவே என்றார்கள்.
அதற்கு அவன்: இதோ,
நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்;
அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம்
ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது
என்றான்.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு
வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே,
நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்;
அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள்
அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்’’ ( தானியேல் 3: 24-26)
அவர்களை அக்கினி சூளையால் ஒன்றும் செய்ய
முடிய வில்லை.
பிரியமானவர்களே, தேவனுக்காக நிற்கும் போது தேவன் நமக்காக
நிற்பார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின்
தேவன்தான் நம்முடைய தேவன்.
பிரச்சனைகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும்
வரலாம். ஆனால் எந்த பிரச்சனைகளும்
நம்மை சேதப்படுத்தாதபடி பாதுகாக்கிற தேவன் நம்மோடு உண்டு.
வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள் படிப்பதற்காக
மட்டும் கொடுக்கப்பட்டது அல்ல, படித்து விசுவாசிப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே,
ஆண்டவர் இப்பொழுதும் உங்களை பார்த்து, பயப்படாதே, நீ என்னுடையவன். உனக்கு
எதிராக என்ன வந்தாலும் தப்புவிக்கிற
தேவன் உன்னோடு இருக்கிறேன். என்று
சொல்லுகிறார்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை
நெருப்பில் போடாமல் தேவன் தடுக்கவில்லை.
நெருப்பில் போட அனுமதித்தார். ஆனால்
நெருப்பு பற்றுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதுதான்
நம்முடைய தேவன்.
உனக்கு பிரச்சனை வந்தது
உண்மைதான். நீ பிரச்சனைக்குள் இப்போது
சிக்கிக்கொண்டிருப்பதும் உண்மைதான். ஆனால் பிரச்சனை உன்னை
மேற்கொள்ளாது நீ பிரச்சனையை மேற்கொள்வாய்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அன்பானவர்களே, இந்த உலகத்தில் நாம்
வாழும் நாள் வரைக்கும் பிரச்சனைகள்
நம்மை சுற்றிலுமாக இருக்கதான் செய்யும், நாம் தேவனோடு இருந்தால்
எந்த பிரச்சனையானாலும் நம்மை நெருங்கும் போது
காணாமல் போய் விடும். காரணம்
நம்முடைய தேவன் சர்வ வல்லவர்
அவர் நம்மோடு கூட இருக்கிறார்.
எனவே எதைக்குறித்தும் கலங்க
வேண்டாம், பயப்பட வேண்டாம். ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவை இன்னும் அதிகமாக பிடித்துக்கொள்வோம்.
இந்த மாதத்தில் தேவன்
கொடுத்திருக்கிற வாக்குத்தத்தத்தின் படி உங்களை நடத்துவார்,
பாதுகாப்பார் பராமரித்து தேவைகளை சந்திப்பார்.
ஜெபத்தில் உறுதியாக இருங்கள், விசுவாசத்தில் நிலைத்திருங்கள், தேவனுடைய வார்த்தைகளை கைக்கொள்ள தீவிரமாக இருங்கள்.
கர்த்தர்
உங்களை ஆசீர்வதிப்பாராக.
0 comments:
Post a Comment