பலமற்றவர்களின் பலம்
“என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே
என் பலம் பூரணமாய் விளங்கும்
என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி,
என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய்
மேன்மைபாராட்டுவேன்
அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம்
எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” (2 கொரி 12:9,10)
இந்த பூமியில் வாழும்
நாட்களில் பல வேளைகளில் பெலவீனங்கள்
தாக்குகிறது. அது சரீரத்திலும், ஆத்துமாவிலும்
உண்டாகிறது. பெலவீனம் இல்லாமல் வாழ்கிறவர்கள் குறைவு, பெலவீனத்தை மேற்கொண்டு
வாழ்கிறவர்கள் அதிகம். பெலவீனங்கள் வருகிறபொழுது.
சந்தேகங்களும் உடனடியாக கூடவே வந்து விடுகிறது.
பெலவீனத்தை எண்ணி சோர்ந்து போகிறவர்கள்,
தொடர்ந்து வெற்றி வாழ்க்கை வாழ
முடியாமல் தடுமாற வேண்டிய நிலை
உண்டாகிறது. பெலவீனங்களை எண்ணி சோர்ந்து போகாமல்
தேவனுடைய கிருபையினால் எதிர்
நீச்சல் அடிப்பவர்களே, இலக்கை நோக்கி வீர
நடை போட முடியும்.
கிறிஸ்துவுக்குள்ளாக வாழ்வதற்கு அர்ப்பணித்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் வரும்
பெலவீனங்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
பெலவீனங்கள் நமக்கு அனுமதிக்கப்படுகிறது என்றால்,
நாம் கிறிஸ்துவுக்குள் பெலன் அடையும்படியாகதான் என்பதை முதலாவது
அறிந்து கொள்ள வேண்டும்.
எப்போதெல்லாம் நாம் குறை உள்ளவர்களாக
காணப்படுகிறோமோ, அப்பொழுதெல்லாம் இன்னும் அதிகமாக தேவனை
சார்ந்து கொள்ள வேண்டும்.
சுய பெலத்தினால் நாம்
தேவனை விட்டு விலகி, விழுந்து
விடக்கூடாது என்பதற்காகவும், தேவனுடைய கிருபைதான் நம்மை ஒவ்வொருநாளும் தாங்குகிறது
என்பதை அறிந்து கொள்வதற்காகவும்தான் பெலவீனங்கள்
அனுமதிக்கிக்கப்படுகிறது.
எனவே பெலவீனங்களைக்கண்டு சோர்ந்து
போய் பின்வாங்குகிறவர்களாக இல்லாமல், பெலவீனங்களில் தேவனுடைய கிருபை என்னை முன்னோக்கி
இன்னும் வேகமாக கொண்டு செல்லும்.
எனது பெலவீனங்களை தேவனுடைய கரத்தில் கொடுக்கிறேன் என்று அர்ப்பணித்து விட
வேண்டும்.
பெலவீனங்களில் தடுமாறாமல் தேவனுடைய கிருபையை பிடித்துக்கொள்ள வேண்டும். பெலவீனமான பகுதியில் தேவனுடைய கிருபைதான் பெலன் தருகிறது.
இங்கே கிருபையை பெலவீனத்திற்கு
மூடலாக தேவன் கொடுக்க வில்லை.
பெலவீன நேரங்களில் தேவனை அதிகமாக சார்ந்து
கொண்டு, கிருபையினாலே பெலவீனத்தை மேற்கொள்ளும்படியாகவே கிருபை கொடுக்கப்படுகிறது.
பவுல் அப்போஸ்தலர் வாழ்க்கையிலே
பெலவீனம் என்னும் ஒரு
முள், சாத்தானுடைய தூதனைப்போல் எப்போதும் அவரை குத்திக்கொண்டே இருந்தது,
அந்த முள் நீங்கும்படியாக அவர்
வேண்டுதல் செய்தபொழுது ஆண்டவர் அவருக்கு கொடுத்த
பதில் “என்
கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய்
விளங்கும் என்றார்’’
பவுல் அப்போஸ்தலர் தன்னுடைய
பலவீனத்தில் சோர்ந்து போகாமல், அதை தேவனிடத்திற்கு கொண்டு
செல்கிறார், இந்த பலவீனம் என்னை
விட்டு நீங்க வேண்டும் என்று
வேண்டுதல் செய்கிறார், கர்த்தர் சொல்லுகிறார். பலவீனமான இடத்தில் என்னுடைய பெலன் உன்னுடன் கூட
இருக்கும் என்று சொன்னவுடன். தன்னுடைய
பலத்தை விட, பலவீனத்தில் கிடைக்கும்
தேவனுடைய கிருபையை மேன்மையாக எண்ணுகிறார்.
எனவே பலவீன நேரங்களில்
தேவனுடைய கிருபையை பெற்றுக்கொள்ளும் பொழுது நம்முடைய பலத்தை
விடவும், அதிக பெலனை தேவனுடைய
கிருபை நமக்கு தருகிறது.
“என்னைப்
பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’’
(பிலிப்பியர் 4:13).
எவைகள் எல்லாம் என்னால்
செய்யமுடியாதோ, அவைகளை எல்லாவற்றையும், கிறிஸ்துவினாலே
நான் செய்து முடிப்பேன் என்று
பவுல் அப்போஸ்தலர் கூறுகிறார்.
“என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை;
ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும்
மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன் (பிலிப்பியர் 4:11,12) என்று வேதம் கூறுகிறது.
நம்மாலே முடியாதவைகளை
செய்வதற்காகவே தேவனுடைய கிருபை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
என்னால் எல்லாம் இது
முடியாது என்று கிறிஸ்துவை
பின்பற்றுகிற சீஷன் சொல்ல முடியாது.
ஏன் என்றால் சுய பெலத்தினால்
நம்மை போராட தேவன் விடவில்லை.
எனவே முடியாது, தெரியாது, என்ற வார்த்தைகளை நாம்
பயன் படுத்த கூடாது. பெலவீனங்களுக்கு
சாட்டு போக்கு சொல்லவும் முடியாது.
பெலவீனத்தை தேவனிடம் கொடுத்தால், தேவ கிருபை பெற்று,
பெலவீனத்தை மேற்கொள்ளலாம்.
எல்லா நிலையிலும் சந்தோஷமாக
வாழ, தேவ கிருபையினாலே நாம்
நிரப்பப்படுகிறோம். கிருபையை பெற்றுக்கொள்ளவும், கிருபையில் நிலைத்திருக்கவும் கவனமாக இருக்க வேண்டும்.
தேவ கிருபை நம்முடைய
ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக தேவனால் கொடுக்கப்படுவது. கிருபையை
பிடித்துக்கொண்டால் மட்டுமே நாம் தேவனுக்குப்
பிரியமாக வாழ முடியும்.
“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை’’ (புலம்பல்
3:22) என்று வேதம் கூறுகிறது.
தேவனுடைய கிருபை இல்லை என்றால்
கிறிஸ்துவை பின்பற்ற முடியாது, கிருபையினாலேதான் தேவனுடைய வார்த்தைகளை நம்மால் கைக்கொள்ள முடியும்.
தேவனுடைய கிருபையே இரட்சிப்பின் வழியில் செல்ல நம்மை
பலப்படுத்தி, நடத்தி செல்கிறது.
எனவே பலவீன நேரங்களில்,
சோர்ந்து போய், பின்வாங்கி நிற்காமல்,
தேவ கிருபையுடன் முன்னோக்கி செல்லவேண்டும். சோர்வுகள், பெலவீனங்கள் வருகிற நேரமெல்லாம் தேவ
கிருபையையே நோக்கி
காத்திருக்க வேண்டும்.
தேவன் நமக்கு கொடுத்திருக்கும்
கிருபையை மறந்து, அல்லது நினைக்காமல்
எப்போதும் பெலவீனத்தை உயர்வாக எண்ணாதபடி, எனது
பெலவீன நேரங்களில் தேவ கிருபையினால் நமக்கு
கிடைக்கும் பெலனை அதிக மேன்மையாக
எண்ண வேண்டும்.
கிறிஸ்துவுக்குள்ளாக ஒவ்வொரு நாளும் நாம்
வளர ஆரம்பிக்கும்போது, நம்முடைய வாழ்வை திசை மாற்றும்படியாக
பலவிதமான எதிர்ப்புக்கள் தாக்க வருகிறது. எல்லா
எதிர்ப்புக்களையும் தேவனுடைய கிருபையினாலே நாம் எதிர் கொண்டு
மேற்கொள்ளும்படியாகவே தேவன் பெலவீனத்தில் தம்முடைய
கிருபையை கொடுக்கிறார்.
எந்த பகுதி பெலவீனமாக
இருக்கிறதோ, அந்த பகுதியில்தான் எதிரி
வருகிறான். ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு பகுதியில்
கட்டாயம் பெலவீனங்கள் இருக்கும். எது பெலவீனமான பகுதி
என்பதை முதலாவது கண்டு பிடிக்க வேண்டும்.
எது பெலவீனம் என்று
கண்டு பிடித்தால்தான், பெலவீனமான பகுதியை தேவனுடைய கரத்தில்
கொடுக்க முடியும், பெலவீனத்தையே அறியாமல், எல்லாவற்றையும் நான் சரியாக செய்தும்
எனக்கு தோல்வியே வருகிறது என்று நாம் விரக்தி
அடைவதினால் எந்த பயனும் இருக்காது.
எந்த பகுதியில் எதிரி
உள்ளே நுழைந்து எனது நன்மைகளை திருடுகிறான்
என்பதை அறிந்து, தேவனிடத்தில் என்னுடைய பலவீனமான பகுதியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
எனக்கு கிருபை கொடுங்கள் என்று
கேட்டால் எது நமக்கு பெலவீனமாக
இருந்து, எந்த பகுதியில் நாம்
விரக்தியடைந்து தோற்றுப்போனோமோ, அந்த பகுதியில் தேவ
கிருபையால் அதிகமான பெலன் அடைகிறோம்,
இதுவே வெற்றியின் இரகசியங்களில் ஒன்று.
பெலவீனங்களை அறிந்து ஐயோ, என்னால்
தொடர்ந்து கிறிஸ்துவுக்காக முன்னேற முடியவில்லையே என்று
பெலவீனத்தை தேவனுடைய கரத்தில் கொடுக்காமல் இருந்தால் அந்த பெலவீனம் ஒட்டு
மொத்தமாக எல்லா நன்மைகளையும் கெடுத்து
பின்வாங்க செய்து விடும். கவனமாக
இருக்க வேண்டும்.
தேவ கிருபையை சார்ந்து
கொண்டால் எந்த பெலவீனமும் விலகி,
தேவ கிருபை பெலனாகிவிடும். பெலவீனத்தில்
தேவனுடைய கிருபை முழுமையாக கிடைக்கும்.
இதுதான் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு
கிடைக்கும் பலன். கிறிஸ்துவை பின்பற்றாதவர்களோ,
பெலவீனத்தில் விழுந்து விடுவார்கள் கிறிஸ்துவை பின்பற்றும் தேவனுடைய பிள்ளைகளோ, பெலவீனத்தில் தேவனுடைய கிருபையை பெற்று, பெலவீனத்தை மேற்கொண்டு,
நிமிர்ந்து நிற்பார்கள்.
எனவே, பெலவீனத்தை நினைத்து
சோர்ந்து போய், விரக்தியடைந்து விடாமல்,
பெலவீனத்தில் தேவனுடைய பெலன் இரட்டிப்பாக எனக்கு
கிடைக்கும் என்ற விசுவாசத்தில் உண்மையாக,
நேர்மையாக நம்முடைய பெலவீனங்களை தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு,
தேவ பெலத்தை பெற்றுக்கொள்வோம்.
பெலவீனங்களை தேவ சமூகத்தில் நாம்தான்
அறிக்கையிட வேண்டும். எதில் பெலவீனம் இருக்கிறதோ,
அதை தேவ சமூகத்தில் அறிக்கையிடும்
போதே, தேவன் சொல்வார். என்னுடைய
கிருபை உனக்கு போதும். உனது
பெலவீனத்தில் என்னுடைய கிருபை (பெலன்) பூரணமாக
விளங்கும்.
தேவனுடைய பெலன் நமக்குள் வந்து
விட்டால், பெலவீனத்திற்கு வேலை இல்லை. அது
தானாக விலகி விடும். எனவே
பெலவீனத்துடன் போராடாதபடிக்கு, தேவ கிருபையை பெற்றுக்கொள்ள
தேவ சமூகத்தில் காத்திருப்பது நல்லது.
தேவ கிருபை நமக்கு
பெலன் கொடுக்கும், தேவ கிருபை நம்மை
பாதுகாக்கும், தேவ கிருபை நம்மை
வழி நடத்தும். எதை குறித்தும் கலங்க
வேண்டாம்.தேவனோடு உள்ள ஐக்கியத்தை
மட்டும் விட்டு விடாதிருக்க வேண்டும்.
எதை வேண்டுமானாலும் ஒரு
மனிதன் இழக்கலாம். ஆனால் தேவ கிருபையை
மட்டும் இழந்து போகக் கூடாது.
தேவ கிருபையே எல்லாவற்றிலும் இருந்து நம்மை விடுவித்து,
நடத்துகிறது.
வெற்றி வாழ்க்கை வாழ
விரும்புகிறவர்கள் பெலவீனத்தை கண்டு அஞ்சாமல், பெலவீனங்களை
தேவனிடம் அறிக்கையிட்டு பெலனை பெற்றுக்கொள்வோம். வெற்றியுடன்
வாழ்வோம்.
0 comments:
Post a Comment