Bread of Life Church India

வெற்றியின் இரகசியம்

   
    கிறிஸ்துவுக்குள் நாம் வாழும் பொழுது தேவன் நமக்கு வெற்றியை கொடுக்கிறார். ஆனால் நாம் தான் இந்த வெற்றி வாழ்க்கையை  அனுதினமும் நம்முடைய வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்.
    அதற்கு தேவனுடைய வசனங்கள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
    வெற்றி வாழ்க்கை சாத்தியமே, என்ற தலைப்பில் செயல் படுத்த வேண்டிய அவசியம் என்ற குறிப்பின் கீழ்  இப்போது நாம் தியானிக்கும் பொருள். அர்ப்பணிப்பின் ஆழம்.
    கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை எந்த அளவுக்கு அர்ப்பணிக்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய வெற்றி வாழ்க்கை சாத்தியமாகும்.
    அர்ப்பணிப்பின் அழம் அதிகமாகும் போது, ஆசீர்வாதங்களின் அளவும் அதிகமாகும். இதுதான் வெற்றி வாழ்வின் இரகசியம்.
    இதைக்குறித்து நாம் விரிவாக வேதாகம வசனங்களின் அடைப்படையில் தியானிப்போம்.
    லூக்கா 17ம் அதிகாரம், 7முதல் 10 வரை உள்ள வேத பகுதியை நாம் வாசித்துப் பார்க்கும் போது. உவமையாக ஒரு சம்பவத்தை இயேசு கிறிஸ்து  விவரித்துக் காண்பிக்கிறார்.

    அதில் வேலையாள் தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு வரும் பொழுது, எஜமான் அவனை வரவேற்று அவனை உபசரிப்பானா? அல்லது தன்னை உபசரிக்கும்படி சொல்லுவானா? என்று கேட்டு, இங்கு குறிப்பிடும்படியாக, அல்லது இதன் மூலமாக தெளிவு படுத்தும் செய்தி என்ன? என்பதை சற்று நிதானமாக கவனிக்க வேண்டும்.
    விசுவாசித்து மனந்திரும்புதஙின் மூலமாக சீஷத்துவ வாழ்வை துவங்கும் அநேகர் இன்று கிறிஸ்தவ வாழ்வில் தோல்வி அடைந்து நிற்பதற்கு மிக முக்கியமான காரணம் இந்த வேதப்பகுதியிலே தெளிவாக இயேசு கிறிஸ்துவின் மூலமாக குறிப்பிடப்படுகிறது.
    சீஷத்துவ வாழ்க்கையை துவங்கும் போதே எல்லாவிதமான கனமும், மரியாதையும் தங்களுக்கு கிடைத்து விடவேண்டும், எந்த இடத்திலும் நான் அவமானங்களை சந்தித்து விடக்கூடாது. எனக்கு சாதகமாக எல்லாம் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறவர்கள் அநேகர் உண்டு.
    ஒருவர் மற்றவர்களை புரிந்து கொள்வதை விட மற்றவர்கள் தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் மனிதர்களின் வழக்கம். ஆனால் அதற்கு எதிர்மறையானது இயேசு கிறிஸ்துவின் உபதேசம்.
    அப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் சீஷத்துவத்தில் எதிப்பார்ப்புடன் தங்கள் பயணத்தை துவங்க ஆரம்பிக்கின்றனர்.  இயேசு கிறிஸ்துவை பின்பற்றினால் என்ன கிடைக்கும், அவருக்கு கிடைக்கும் செல்வாக்கு மரியாதை எல்லாம் தனக்கும் கிடைக்கும்  என்ற எதிர்பார்ப்புடன் அவரைப் பின்பற்றின அநேகர் அவர் சீஷத்துவத்தின் நிபந்தனைகளை அறிவிக்கும் போது அவர்களுக்கு அது கடினமாக இருந்தது.
    வேதம் சொல்கிறது ``அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள் <யோவான் 6:60>.
    அப்படியானால் அதுவரை அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வந்ததின் காரணம் என்ன எதாவது தனக்கு கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு, தங்களின் மனதின்படி எல்லாம் நடக்க வில்லை. நம்முடைய மனதின்படி இயேசு கிறிஸ்து உபதேசிக்க வில்லை என்பதை அறிந்தவர்கள் அவரை விட்டுவிலக ஆரம்பித்தனர்.
    இன்றும் அநேகருடைய கிறிஸ்தவ வாழ்க்கை இப்படிதான் இருக்கிறது. தங்கள் தேவைகளை முன்வைத்து எதிர்பார்ப்புடன், துவங்குகிறவர்கள். சீக்கிரமாக சோர்வடைந்து, பெலவீனத்துடன். விலகி செல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.
    இப்படி விலகி செல்வதினால் என்ன நடக்கிறது, தங்கள் வாழ்வில் தோல்விக்கு மேல் தோல்வியை சந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
    பின்பு அவர்களிடம் இருந்து புறப்படுகிற வார்த்தைகள் எல்லாம் அவிசுவாசமாகவும்,, தோல்வி நிறைந்த வார்த்தையாகவும் வெளிப்பட ஆரம்பித்து விடுகிறது. அப்படிப்பட்டவர்கள் வெற்றி வாழ்க்கை சாத்தியம் இல்லை என்பது போல் தங்களுக்கு ஏற்ற விதத்தில் கிறிஸ்துவின் வழியை மாற்றிக்கொண்டு, தனக்கு முன் கிறிஸ்து செல்லாத வழியை கிறிஸ்துவின் வழி போல ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கி தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துக்கொள்கின்றனர். சத்தியத்தை சரியாக அறியாத அநேகர் மனிதர்களின் உபதேசங்களை பின்பற்றி சோரம் போகின்றனர். ஆனால் அவர்கள் அதை கிறிஸ்துவின் வழி என்றே சொல்கின்றனர்,
    ஆனால் அதற்கும் கிறிஸ்துவின் வழிக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. வேத வசனங்கள் அப்படிப்பட்டவர்களின் பொல்லாத வழிக்கு எதிராகவே இருக்கிறது. ஆகையால் என்ன செய்து விடுகிறார்கள் என்றால், இது எனக்கு வெளிப்படுத்தியது என்று வேதாகமத்தில் இல்லாதவைகளையும், தேவன் சொல்லாதவைகளையும் வெளிப்பாடு, தரிசனம் என்று சொல்ஙி, கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கைக்கு எதிராக பிசாசின் கைப்பாவைகளாக அநேகர் செயல்பட்டு வருகின்றனர்.
    எனவே அப்படிப்பட்ட கூட்டத்துக்குள் மாட்டிக்கொள்ளாமல் வேதம் கற்பிக்கும் பாதையில் வெற்றி வாழ்க்கை வாழும் படியாக வேதாகமம் அறை கூவல் விடுக்கிறது.
    எனவே இந்த வேதாகம பகுதியில் வேதம் தெளிவாக குறிப்பிடுவதை நன்றாக கவனித்து பார்க்க வேண்டும்.
    கிறிஸ்துவை பின்பற்றும்படி தங்களை அர்ப்பணித்த நாம் நமக்கு முன்பாக இயேசு கிறிஸ்துவின் வழிகளை மட்டுமே முன்பாக வைத்து செயல்பட வேண்டும்.
    லூக்கா 17:7_10 ல் உள்ள வேத பகுதியில் இயேசு கிறிஸ்து ஏன் குறிப்பிடுகிறார் என்பதை மேலே உள்ள வசனங்களை வாசித்து பார்க்கும் பொழுது நன்றாக விளங்கும்.
    எப்படியெனில் 6 ம் வசனத்தில் ``அதற்கு கர்த்தர்; கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்த காட்டத்திமரத்தை நோக்கி; நீ வேரோடே பிடுங்கப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்கு கீழ்ப்படியும்'' என்று சொல்லுகிறார்.
    ஏன் இந்த வார்த்தைகளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் என்றால், ``அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி; எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும் <லூக்கா 17:5>என்று கேட்கின்றனர்.
    எதற்காக அவர்கள் தங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்படி கேட்கிறார்கள் என்று பார்க்கும்போது.
    உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால்,அவனைக் கடிந்துகொள், அவன் மனஸ்தாபப் பட்டால் அவனுக்கு மன்னிப்பாயாக.
    அவன் ஒரு நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து; நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். <லூக்கா 17:3,4>.
    வெற்றி வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டால்தான் இந்த செய்தியின் சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
    உலகத்தின் பார்வையில் இருக்கும் வெற்றியைக் குறித்து வேதாகமமோ, இயேசு கிறிஸ்துவோ, பேசியதும் இல்லை. சொன்னதும் இல்லை. இயேசு வெற்றி சிறந்தார் என்று சொல்லும் வேதாகம வசனத்தை பார்க்கும் போது தனக்கு எதிராக செயல்பட்ட மனிதனின் பாவத்தையும் மன்னித்தார். இதன் மூலமாகவே இயேசு கிறிஸ்து வெற்றியின் நாயகனாக பவனி வருகிறார்.
    ஆனால் இந்த உலகம், ஒருவனைக் கொன்று அழிப்பதையே வெற்றி என்று நினைத்து கொண்டாடிக்கொண்டிருந்தது. அது வெற்றி கொண்டாட்டம் இல்லை. வெற்றியும் இல்லை. உனக்கு எதிராக இருப்பவனை நீ மன்னிப்பதுதான் வெற்றி. உன்னால் மற்றவனை மன்னிக்க முடியும் என்றால் நீ வெற்றி வாழ்க்கைக்கு சொந்த காரன் என்று இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களிடத்தில் சொல்லுகிறார்.
    அப்பொழுதான் அவர்கள் அதற்கு எங்களுக்கு விசுவாசத்தை அதிகப்படுத்தும் என்று வேண்டுதல் செய்கிறார்கள்.
    அதற்குதான் உங்களுக்கும் பூரணமான விசுவாசம் இருந்தால் எல்லாம் உங்களுக்கு கீழ்ப்படியும்,
    அந்த பூரணமான விசுவாசம் அர்ப்பணிப்பின் ஆழத்தில் மூலமாகவே வரும் என்று இந்த உவமையின் மூலமாக விளக்கி காண்பிக்கிறார். 
    எனவே பிரியமானவர்களே,நமது   அர்ப்பணிப்பின் ஆழத்தைப் பொருத்தே நம்முடைய விசுவாசத்தின்  அளவு பெருகும். விசுவாசத்தின் அளவு எந்த அளவுக்கு பெருகுகிறதோ, அந்த அளவுக்குதான் நாம் கிறிஸ்துவின் வழியில் வெற்றி வாழ்க்கை வாழ முடியும்.
    ஆகவே உண்மையான வெற்றி வாழ்க்கை இயேசு கிறிஸ்துவை நாம் எந்த அளவிற்கு ஆழமாக பின்பற்றுகிறோமோ, அந்த அளவுக்கே சாத்தியமாகிறது.
    நாம் செயல்படுத்த வேண்டிய விதத்தில் நம்முடைய சீஷத்துவத்தின் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.  
    அப்படி அமைத்துக்கொள்ளும் போதுதான்   முழு மனிதனுக்குரிய தகுதி உண்டாகிறது.
    அந்த தகுதி வரும்பொழுதுதான் நம்மால் கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி நடக்க முடிகிறது.
    அப்பொழுது இந்த உலகம் நம்மைப் பார்த்து எதை எல்லாம் செய்ய முடியாது என்று சொல்லுகிறதோ, அவைகளை எல்லாம் கிறிஸ்துவின் மூலமாக நாமும் செய்ய ஆரம்பிக்கிறோம்.
    கிறிஸ்துவுக்குள் இருக்கும் வெற்றி நமக்கும் உண்டாகிறது. மற்ற மனிதர்களை பார்க்கும் போது உண்டாகும் , கசப்பு, வெறுப்பு, கோபம், பொறாமை, எரிச்சல், எல்லாம் நம்மை விட்டு நீங்கி, நமக்குள் கிறிஸ்துவின் சாயல் உண்டாகிறது. கிறிஸ்துவின் சாயல் நமக்குள் உண்டாகும் போது, நாமும் பிறரை மன்னிக்கிறவர்களாகவும், அரவணைக்கிறவர்களாகவும், உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறவர்களாகவும், மாறுகிறோம். சுயம் நீங்கி நமக்குள் கிறிஸ்து செய்லபட ஆரம்பிக்கிறார்.
    இவ்விதமாக நாம் மாறும் போது, நமக்கு எதிரடையாக செயல்பட்ட  வேண்டாத தன்மைகள் எல்லாவற்றையும் தூக்கி எரிந்து விட்டு, புதிய மனிதனாய் வெற்றி வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறோம்.
    இந்த உலகம் நிர்பந்திக்கும் எந்த செயலையும் நாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் கிறிஸ்துவுக்குள் நம்மை அர்ப்பணித்து விட்டோம்.
    முழுமையான நம்முடைய அர்ப்பணிப்பே நம்மை முழுமையாக மாற்றுகிறது.
    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்கிறேன் என்று கிறிஸ்துவை பின்பற்ற வைக்கிறது.
    இவ்விதமாக நடந்து கொள்ளும் போது வெளிப்படையாக நாம் தெரியாமல் மறைந்திருக்கிறவர்களாக காணப்படலாம். ஆனால் அதைக்குறித்து நாம் கவலைப்பட வேண்டாம்.
    என் எஜமானைப் பிரியப்படுத்தும் நல்ல வேலையாளாக நான் இருந்தால் போதும்,
    இப்படியெல்லாம் வாழ்வது கிறிஸ்துவுக்காகதான், ஆகையால்தான்  நம்மை நாமே ஒடுக்கிகொள்கிறோம், என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நாம் இப்படி கிறிஸ்துவில் வாழ்வது கிறிஸ்துவுக்காக அல்ல, நமக்காக.
    கிறிஸ்துவுக்காக நம்மால் எதையும் செய்ய முடியாது. எல்லாம் நமக்காகவே நமது நன்மைக்காகவே, நாம் கிறிஸ்துவை பின்பற்றுவது, நமக்காக, நாம் கிறிஸ்துவை அறிவிப்பது. நமக்காக <நம்முடைய கடமை>
    இவைகளை செய்யும் போது நம் வாழ்வில் வெற்றியோடு வலம் வருகிறோம். கிறிஸ்து நம்மில் செயல்படுகிறார்.
    எனவே கிறிஸ்துவுக்குள் முழுமையான அர்ப்பணிப்பே வெற்றி வாழ்வை சாத்தியமாக்குகிறது.
    இதை ஒவ்வொரு நாளும் நாம் நமது வாழ்வில் செயல் படுத்த வேண்டும். முந்தைய நாளின் வெற்றி அல்ல, நேற்றைய வெற்றியும் அல்ல, இன்றும் நாம் வெற்றி பெற வேண்டும் இன்று மட்டுமல்ல என்றும் நாம் வெற்றியோடு வாழ வேண்டும்.
    வெற்றி வாழ்க்கை சாத்தியமே, கடினம் என்று பிசாசு சொல்லலாம் ஆனால் வெற்றி சாத்தியம் என்று இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார். அவருடைய உண்மை சீஷர்களாய் அவரை பின்தொடர்வோம். வெற்றி வாழ்க்கை வாழ்வோம்.
தொடர்ந்து வரும் நாட்களிலும் வெற்றி வாழ்க்கையை குறித்து தியானிப்போம்.   

வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பின் கீழ் தொடர்ச்சியாக வேத வசனத்தை தியானித்து வருகிறோம்.

0 comments:

Post a Comment

விடை தேடும் கேள்விகள்