Bread of Life Church India

உயர்வுக்கு வழி

ஒரு மனிதன் கோழி பண்ணையை சுற்றிப் பார்க்கும் படியாக சென்றார். சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது, ஒரு முட்டை தானாக உடைவதைப் பார்த்தார். பார்த்தவரின் கண்கள் தொடர்ந்து அந்த முட்டையின் மீதே பதிந்து நின்றது. அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, கொஞ்சம் கொஞ்சமாக முட்டை ஓடுகள் அகன்று உள்ளே இருந்து குஞ்சின் அலகு தெரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, ஆர்வம் அதிகமாகி விட்டது. இன்னும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டார். அப்படியே நேரம் செல்ல, செல்ல பாதி அளவிற்கு முட்டையின் ஓடு உடைந்து பாதி அளவு குஞ்சு வெளியே தெரிய ஆரம்பித்தது.

                அப்பொழுது அதைப் பார்த்துக் கொண்டிருந்தவரின் இருதயம் கனக்க ஆரம்பித்தது "ச்சே சிறு குஞ்சு வெளியே வருவதற்கு எவ்வளவு கஷ்டப் படுகிறது." என்று உள்ளத்துக்குள்ளாகவே அவர் வேதனைப் பட்டார். இன்னும் சிறிது நேரம் ஆனது. அவரால் தாங்க முடியவில்லை. அருகில் சென்று குஞ்சுக்கு உதவி செய்யும்படியாக முடிவெடுத்து தயங்காமல் இன்னும் உடையாமல் இருந்த மீதி ஓடுகளை தனது கரங்களால் உடைத்து, குஞ்சு முழுவதும் வெளியே வர உதவி செய்து விட்ட நிம்மதியோடு சந்தோஷ முகத்தோடு குஞ்சை கீழே விட்டார்.
                ஆனால் குஞ்சு அவர் விட்ட இடத்தை விட்டு நகராமல் அப்படியே இருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்ததது. "ஏன் நகர்ந்து செல்லாமல் அப்படியே இருக்கிறது" என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுதே இன்னொரு முட்டை முன்பு போலவே சிறிது சிறிதாக உடைந்து குஞ்சு வெளிப்பட்டது. அந்த குஞ்சு கஷ்டப்பட்டது போலவே இதுவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது அவர் "நாம் இதற்கு உதவி செய்யக்கூடாது" என்ற முடிவுடன் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் கடந்து போன பின்பு, மிகவும் கஷ்டப்பட்டு, முற்றிலும் இந்த குஞ்சு தன்னைச் சுற்றிலிருமிருந்த எல்லா ஓடுகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்து சந்தோஷமாக துள்ளி குதித்து ஓடவும் ஆரம்பித்து விட்டது.
           இதைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு மேலும் அதிர்ச்சியாகிவிட்டது. "நாம் உதவி செய்த குஞ்சு அதே இடத்தில் அப்படியே இருக்கிறது. நாம் உதவி செய்யாத குஞ்சு உடனே குதித்து ஓடுகிறதே" ஏன் என்று பார்க்கும்பொழுது அவர் உதவி செய்து உடைத்து விட்ட பகுதி மட்டும் அந்த குஞ்சுக்கு பெலன் இல்லாது இருப்பதை அறிந்து அதற்கு உதவி செய்ததே அதனுடைய வாழ்நாள் முழுக்க அதற்கு வேதனையை உண்டாக்கும் பாதகமாக மாறிவிட்டதே என்று அதைப் பார்க்கும் பொழுது அந்த குஞ்சு அவரை பரிதாபமாக பார்ப்பது போல அவருக்குத் தோன்றியது.
                முட்டையின் ஓட்டை தானாகவே கஷ்டப்பட்டு உடைத்து வெளியே வருவதுதான் குஞ்சின் கால்களுக்கும் சிறகுகளுக்கும் பெலன். மாறாக குஞ்சின் கஷ்டத்தைப் பார்த்து அதன் ஓட்டை உடைத்து விட்டதே அதற்கு பாதகமாக மாறிவிட்டது.
                இதே போல வாழ்க்கையில் நமக்கும் சில கஷ்டங்களை தேவன் அனுமதிப்பது நம்முடைய வாழ்க்கையில், உயர்வை ஏற்படுத்தத்தானே தவிர, நாம் அழிந்து போகும்படியாக அல்ல. மேலும் நம்மால் முடியும் என்ற அளவுக்கே நாம் சோதிக்கப்படுகிறோம்.
                "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத் தக்கதாக, சோதனையோடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார் (1 கொரி 10:13) என்று வேதம் கூறுகிறது.
                ஆகவே நமது வாழ்க்கையில் வரும் சோதனைகளைப் பார்த்து சோர்ந்து விடாமல், தைரியமாய் போராடும் பொழுது நமக்கு பெலன் உண்டாகிறது, அது மாத்திரமல்ல வாழ்க்கையில் எல்லாவற்றையும் எளிதாக எதிர்கொள்ள ஒரு பாடமாகவும் அமைகிறது. அதுவே உயர்வுக்கு வழி. எனவே சோதனை நேரத்தில் விரக்தியடைந்து இயேசு என்னை கைவிட்டு விட்டார் என்றோ, இயேசு என்னை மறந்து விட்டார் என்றோ மனம் குழம்பாதபடிக்கு, எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் இயேசு கிறிஸ்துவையே பற்றிப் பிடித்துக் கொள்வோம்.

0 comments:

Post a Comment