Bread of Life Church India

நினைவுநாள் ஸ்தோத்திர கூட்டம் அவசியமா?






மரித்து போன ஒருவருக்கு நினைவு நாள் கொண்டாடுவது, சில மதங்களில் இருக்கும் பாரம்பரியங்கள், இதற்கு பல காரணங்களை முன்னோர்களின் பெயரை சொல்லி அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இது மெல்ல மெல்ல கிறிஸ்தவத்திலும் உட்புக ஆரம்பித்து, 16ம் நாள், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு என்று,  அதற்கும் ஜெப கூட்டங்கள் நடத்தப்பட ஆரம்பித்தது.
ஆனால் பெந்தெகொஸ்தே சபைகள், சுயாதீன சபைகளில் இதற்கு எதிர்ப்புகள் எழும்பின, ஆகையால் சில சபைகளில் மட்டும் மரித்தவர்களுக்கு ஜெப கூட்டங்கள் நடத்தப்படுவது இல்லை.

தற்போது பெந்தெகொஸ்தே சபைகளும் இதற்கு விதி விலக்கல்ல என்பது போல் மரித்தவர்களுக்கு ஸ்தோத்திர கூட்டம் என்ற பெயரில் நடத்தப்பட ஆரம்பித்து விட்டனர்.
ஒரு காலத்தில் இதற்கு எதிர்ப்பு காண்பித்தவர்களும், இப்படிப்பட்ட பெயர்களில் ஜெப கூட்டங்கள் நடத்தாமல் இருந்தவர்களும், தற்போது தாராளமாக ஸ்தோத்திர கூட்டங்கள் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
அது மட்டுமல்ல, தற்போது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தின செய்தி என்ன வென்றால். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்  சுயாதீன சபைகளை ஒருங்கிணைத்து அதை ஒரு பெரிய ஸ்தாபனமாக அமைத்து அன்றைய அரசாங்கத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர்களை வைத்து, சென்னையின் முக்கிய பகுதியில் சிறப்பு கூட்டமாக துவக்கப்பட்ட ஸ்தாபனத்தின் தலைவர்,
கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அந்த தலைவருக்கு, தற்போது உள்ள தலைவர்கள் முதலாம் ஆண்டும், இரண்டாம் ஆண்டும், அவர் மரித்த தினத்தை முன்னிட்டு, நினைவுநாள் சுவிசேஷ கூட்டங்கள் நடத்தினார்கள்.
இதில் விஷேசம் என்ன வென்றால், இது வரை ஸ்தோத்திர கூட்டம் நடத்தப்படுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, அப்படி நடத்துபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவரே, இரண்டாம் ஆண்டு நினைவுநாள் சுவிசேஷ பெருவிழாவின் தலைவர். நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள!
இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் தற்போது, பெந்தெகொஸ்தே சபைகள், அதாவது பூரண சுவிஷேச சபைகளின், தலைவர்கள், பிரபலமான ஊழியர்கள், முன்மாதிரியாக இருக்கும் பெரிய தலைவர்கள் கூட இதை ஆதரிக்கிறார்கள், இப்படிப்பட்ட கூட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இவர்களிடம் ஏன் இப்படிப்பட்ட ஸ்தோத்திர கூட்டங்கள் நடத்துகிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் மரித்தவர்களை அல்ல, சுவிசேஷம் தான் அறிவிக்கிறோம் என்று தங்களை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள்.
ஆனால் இவர்கள் அடுத்த தலைமுறைக்கு எதை முன் மாதிரியாக வைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மறுக்கிறார்களா? அல்லது மறந்து விட்டார்களா? தெரிய வில்லை!
எங்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும், அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை, ஆனால் அதற்கு மரித்து போனவர்களின் பெயரை வைத்துத்தான் பண்ணவேண்டும் என்பது அவசியமில்லை.
மேலும் மூத்த ஊழியர், முன் மாதிரியாக இருந்த ஊழியரை கனப்படுத்துவது தவறு இல்லை, அதற்காக அவருக்கு நினைவு நாள் வைத்துத்தான் கனப்படுத்த வேண்டும் என்பதுமில்லை.
இப்படித்தான் கத்தோலிக்க சபைகளில், புனிதர்கள் வணக்கமும், நினைவுநாள் திருவிழாக்களும், உட்புகுந்தது அவ்வித வழிகளைத்தான் பெந்தெகொஸ்தெ சபைகளும், மூத்த ஊழியர்களும், மரித்த ஊழியரை கனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், சுவிசேஷ பெருவிழாவாக ஆரம்பிக்கிறார்களோ?
இப்படியே தொடர்ந்தால், இப்போதுள்ள வயதில் மிக மிக மூத்த ஊழியர்களும் ஒருநாளிலே கர்த்தருக்குள் நித்திரை அடைவார்கள், அவர்களுக்கெல்லாம், அந்தந்த ஸ்தாபனத்தின் அடுத்த ஊழியர்கள் நினைவு நாள் சுவிசேஷ விழாக்களாக கொண்டாட ஆரம்பிக்க, அதற்கு அடுத்த தலைமுறை திருவிழாக்களாக கொண்டாட துவங்கும்.
பின்பு பல ஆண்டுகள் கழித்து அவர்கள் எல்லோரும் புனிதர்களாக மாற்றப்பட்டு, அவர்களை வணக்கத்திற்குறியவர்களாக மாற்றி, வழிபடவும், வணங்கவும் துவங்குவார்கள்.
பெரிய தலைவர்களே, கர்த்தருடைய ஊழியர்களே, உங்களைத்தான் அடுத்த தலைமுறை கவனிக்கிறது, தவறான முன் மாதிரியை விதைத்து விடாதீர்கள்.
எந்த வகையிலும் ஸ்தோத்திர கூட்டத்தையோ, நினைவு நாள் சுவிசேஷ கூட்டத்தையோ, வேதம் நமக்கு அப்படி வலியுறுத்தவுமில்லை, அங்கிகரிக்கவுமில்லை. மரித்தவர்களுக்காக வைக்கப்படும் ஸ்தோத்திர கூட்டத்தினால், மரித்தவர்களுக்கு எந்த மாறுதலும் ஏற்படப்போவதும் இல்லை.
இவைகளெல்லாம் உங்களுக்கும் தெரியும். ஆகவே சுவிசேஷ கூட்டத்தை, சுவிசேஷ கூட்டம் என்ற பெயரிலேயே நடத்தி, ஆத்ம ஆதாயம் செய்யலாம், வேறு எந்த ஆதாயமும் வேண்டாம். தனி மனிதனை திருப்தி படுத்தவும் வேண்டாம். அதன் மூலமாக தன்னைத்தான் பிரபல படுத்தவும் முயற்சிக்க வேண்டாம்.
எனவே விசுவாசிகளுக்கும், ஊழியக்காரர்களுக்கும், அவர்கள் மரித்த பின்பு ஸ்தோத்திர ஜெபம் நடத்துவதை வேத வசனத்தின் அடிப்படையில் நிறுத்தி விடலாம்.
ஏனென்றால் இந்த பூமியில் வாழும் வரை ஒருவருடைய வாழ்க்கை எந்த அளவுக்கு கிறிஸ்துவுக்குள் இருந்தது, என்பதுதான் நித்திய வாழ்க்கையை தீர்மானிக்கும். மற்றபடி மரித்துபோன பிறகு, மரித்தவருக்காக நடத்தப்படும் ஸ்தோத்திர கூட்டத்தினால் நித்திய வாழ்வில் எந்த மாறுதலும் ஏற்பட்டு விடாது.(எபி 9:27, 2கொரி 5:10).
இக்காலத்தில் வித விதமாக, மனிதர்கள் தங்களை திருப்தி படுத்திக்கொள்ளவும், மற்ற மனிதர்களை திருப்திபடுத்தவும், தற்கொலை செய்து மரித்து போனவர்களுக்கும் கூட ஸ்தோத்திர ஜெபம் வைக்கிறார்கள், இதெல்லாம் ஏன்?, எதற்கு? என்பது, அப்படி நடத்துபவர்களுக்காவது தெரியுமா? தெரியாதா?
கிறிஸ்தவர்களுக்கு பைபிள்தான் எல்லாவற்றுக்கும் வழிகாட்டி, வேதாகமம் வழிகாட்டாத  வழியில் செல்வது, தேவனுக்கு பிரியமில்லாதது, தேவனுக்கு பிரியமில்லாததை செய்து இப்படிப்பட்டவர்கள் எதை சாதிக்க முயற்சி செய்கிறார்களோ?

0 comments:

Post a Comment