உன்னால் முடியும்
கர்த்தர் நமக்குக் கொடுத்த
அதிகாரத்தை நினைவுபடுத்தி, அதிகாரம் உள்ளவர்களாக
நடந்துகொள்ளவும், தேவனிடத்தில் பெற்ற
அதிகாரத்தைச் செயல்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்றும்
தம்முடைய வார்த்தையின் மூலம் பேச விரும்புகிறார். கர்த்தருடைய இந்த வார்த்தைகளைக்
கருத்துடனும், ஜெபத்துடனும் வாசித்துத்
தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
“இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும்
உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்;
ஒன்றும்
உங்களைச் சேதப்படுத்தமாட்டாது’’
{லூக்கா
10:19} என்று இயேசு கிறிஸ்து
சொல்லுகிறார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
விசுவாசித்து, அவருடைய வழியில் நடக்கும்
தேவ பிள்ளைக்ளுக்கு விசேஷமான அதிகாரத்தை இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கிறார்.
அது என்னவென்றால் “சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ளக்கூடிய
வல்லமை. மனிதர்களாயிருக்கிற நம்முடைய வாழ்க்கையில் கண்ணுக்கு மறைவாகப் பல விதமான
போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம், இந்தப்
போராட்டங்களுக்கு எல்லாம் காரணக் கர்த்தாவாயிருப்பது, சத்துரு என்று அழைக்கப்படும் பிசாசு.
இந்தச் சத்துருவினுடைய
தந்திரங்களை முதலாவது தேவனுடைய பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டும். அதைவிட முக
முக்கியமானது சத்துருவினுடைய வல்லமைகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரத்தைப்
பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் இன்றைக்கும் அநேக தேவ
பிள்ளைகள் கூடத் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அறிந்து
கொள்ளாமல் இருப்பதே சத்துருவின் கொண்டாட்டமாக இருக்கிறது.
சத்துருவானவன் எடுக்கும் ஆயுதங்களில்
முதன்மையானது நம்மைப் பெலவீனமானவர்களைப்போலவும், நம்மால்
ஒன்றும் செய்ய முடியாது என்பது போலவும் காண்பித்துச் சோர்வடையச் செய்வதேயாகும்.
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ,
நம்மைப்
பெலமுள்ளவர்களாக மாற்றிச் சத்துருவின் எல்லாத் தந்திரங்களையும் வீழ்த்தும்படி
நமக்குத் தம்முடைய அதிகாரத்தைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார்.
ஆகவே நம்முடைய கரங்களில்
கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். எப்படி
அறிந்து கொள்வது? கர்த்தராகிய தேவன் கொடுத்துள்ள வேத வாக்கியங்கள் மூலமாகவே
நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைக்குறித்து நன்கு அறிந்து கொள்ள
முடியும். “சத்தியத்தையும்
அறிவீர்கள், சத்தியம் உங்களை
விடுதலையாக்கும் என்றார்’’ { யோவான் 8:32} சத்தியத்தை எந்த அளவுக்கு நாம் அறிகிறோமோ, அந்த அளவுக்குத் தேவன் நமக்குக் கொடுத்திருக்கும்
அதிகாரத்தை அறிந்து கொள்ள முடியும்.
அறிந்து கொள்வது மட்டுமல்ல
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுக்கும்
அதிகாரம் எல்லோருக்குமா? என்றால்
எல்லோருக்கும்தான். ஆனால் அவர் கொடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குச் சில
தகுதிகளைத் தேவன் வைத்திருக்கிறார்.
மேலும் அதிகாரத்தைப்
பெற்றுக்கொள்வது மட்டுமல்ல, அதிகாரத்தைப் பயன்படுத்த
வேண்டும். அநேகர் அறிந்து கொள்வார்கள், பெற்றுக்கொள்வார்கள்
ஆனால் பயன்படுத்துவது குறித்து அநேகருக்கு தெரிவதில்லை.
நாம் எப்படி அறிந்து கொள்வது
என்பதைக்குறித்தும், எப்படிப் பெற்றுக்கொள்வது
என்பதைக்குறித்தும். எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் குறித்தும் தொடர்ந்து தேவ
ஆவியானவரின் துணையுடன் கவனிப்போம்.
அறிந்து கொள்ள வேண்டும்.
“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல
அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது’’ {மத்தேயு 28:18}
வானத்திலும் பூமியிலும் சகல
அதிகாரத்தையும் உடையவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே, எப்படி என்றால் எல்லாமே இயேசு கிறிஸ்துவுக்காகப்
படைக்கப்பட்டதே, “ஏனென்றால் அவருக்குள்
சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய
காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும்
சிருஷ்டிக்கப்பட்டது’’ {கொலோசெயர் 1:16} என்று வேதம் கூறுகிறது.
ஆகவே எந்த அதிகாரங்களானாலும் சரி
எந்த வல்லமைகள் ஆனாலும் சரி அது இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்தான் என்பதை நாம்
முதலாவது நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய வார்த்தையிலும் சரி
நடக்கையிலும் சரி சத்துருவைக்குறித்தே நாம் பேசிக்கொண்டு இருக்காதபடிக்கு சர்வ
வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவைக்குறித்தும், அவருடைய வல்லமை, அதிகாரத்தைக்குறித்தும்
நாம் அதிகமாகத் தியானித்து, பேச வேண்டும்.
சூழ்நிலைகளைக் காரணம் காட்டி பிசாசானவன் “உன்னால்
ஒன்றும் செய்யமுடியாது’’ என்பது போல நம்மிடத்தில்
பேசலாம். ஆனால் நம்மோடு கூட இருப்பவர் பெரியவர் என்பதை நம்முடைய நடக்கையின்
மூலமாகவும், செயலின் மூலமாகவும், பேச்சின் மூலமாகவும் நமக்கு எதிராக இருக்கும்
எதிரிக்கு முன்பாகக் காண்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
“மேலும் சகல
துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள்
பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்’’
{கொலொசெயர்
2:10} என்று வேதாகமம் கூறுவதை நாம்
மறந்து போகக்கூடாது.
இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக
நீங்களும் நானும் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறோம். எனவே அவர் எப்படி வல்லமை ஆளுகை
உள்ளவராக இருக்கிறாரோ நாமும் அப்படியே அவருக்குள் இருக்கிறோம். எனவே எந்தச்
சூழ்நிலையிலும் நாம் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது “நான் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாகப் பரிபூரணமாக
இருக்கிறேன்’’ பரிபூரணமாக இயேசு கிறிஸ்துவுக்குள் நாம் இருக்கும் போது
அவரைப்போலவே நமக்கும் எல்லாம் கீழ்ப்பட்டிருக்கும்.
“அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக்
கீழ்ப்பட்டிருக்கிறது’’ {1 பேதுரு 3:22).
பரலோகத்திலும், பூலோகத்திலும் இயேசு
கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியாதவைகள் எதுவுமே இல்லை. எல்லாமே அவருக்குக்
கீழ்ப்பட்டிருக்கிறது.
அப்படி இருக்க அவருக்குள்
இருக்கும் நமக்கு எதுவும் கீழ்ப்படியாமல் எப்படி இருக்கும்? எனவே இந்தச் சத்திய
வசனத்தின் மூலமாகவே நமக்குத் தேவன் கொடுத்திருக்கும் சிலாக்கியம் என்ன? நாம்
எப்படிப்பட்டவர்கள் நாம் யாருடன் இருக்கிறோம் என்பதைத் தெளிவாக அறிந்துக் கொள்ள
வேண்டும்.
“பிள்ளைகளே, நீங்கள்
தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர்
பெரியவர் {I யோவான் 4:4} எனவே எல்லாவற்றையும் விடப் பெரியவர் நம்மோடு
இருக்கிறார். எதைக்குறித்தும் கலங்கவோ, பயப்படவோ
வேண்டாம்.
சத்துருவாகிய பிசாசு
ஏமாற்றுக்காரன், அவன் எப்படியெல்லாம் தனது
தந்திரங்களைச் செயல்படுத்த முயற்சிப்பான் என்பதற்கு இயேசு கிறிஸ்துவிடமே வந்து
அவன் பேசிய வார்த்தைகள் அடையாளமாக இருக்கிறது.
“பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே
அவருக்குக் காண்பித்து:
இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும்
இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள்
எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு
இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான் {லூக்கா 4:5-7} இந்த
உலகத்தைப் படைத்து எல்லா அதிகாரத்துக்கும் தலைவராகிய இயேசு கிறிஸ்துவிடமே வந்து
அவன் இப்படிப் பேசுவான் என்றால் நம்மிடத்தில் அவன் எப்படி எல்லாம் தன்னுடைய
ஏமாற்று வித்தைகளைக் காண்பித்துப் பேசுவான்.
இயேசு கிறிஸ்து தேவனுடைய
வார்த்தையினாலே எப்படி அவனுடைய தந்திரங்களை முறியடித்தாரோ, அதே போல நாமும் தேவனுடைய வார்த்தையினாலேயே அவனுடைய
தந்திரங்களை முறியடிக்க வேண்டும்.
பெற்றுக்கொள்ள வேண்டும்
தேவனுடைய அதிகாரத்தைப்
பெற்றுக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று வேதம் கூறுகிறது என்பதையும்
நாம் கவனித்துப்பார்க்க வேண்டும்.
“அவருடைய {இயேசு
கிறிஸ்துவின்} நாமத்தின்மேல்
விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்’’ {யோவான் 1:12}.
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, ஏற்றுக்கொள்ளும் பொழுது தேவனுடைய பிள்ளை என்று
அதிகாரத்தைதந்து எதிராகச் செயல்படுகிற சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ளும்
அதிகாரத்தைக் கொடுக்கிறார்.
இந்த உலகத்தில் இருக்கிற எல்லா
மனிதர்களுக்கும் இந்த அதிகாரம் இல்லை. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு
மட்டுமே பிள்ளை என்ற அதிகாரமும்,
எதிரான
வல்லமைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தையும் தேவன் கொடுக்கிறார்.
அது மாத்திரமல்ல இயேசு
கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஜெயங்கொள்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்
என்றும் வேதம் கூறுகிறதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.
சிலர் எப்படி வாழ்ந்தாலும்
தேவனுடைய அதிகாரத்தைப் பெற்று விட முடியும் என்று நினைத்துத் தங்களைத் தாங்களே
ஏமாற்றிக்கொள்கிறார்கள். ஆனால்“ஜெயங்கொண்டு
முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்’’ {வெளி 2:26} என்று
இயேசு கிறிஸ்து தெளிவாகச் சொல்லுகிறார்.
பிரியமானவர்களே நீங்கள் யாராக
இருந்தாலும் சரி முதலாவது இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக் கொண்டு, மனந்திரும்பி மூழ்கி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்
பொழுது தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிகாரத்தைப்பெற்றுக்கொள்கிறீர்கள், தொடர்ந்து இயேசு கிறிஸ்துவோடு ஐக்கியம் கொண்டு
அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து, அவருடைய
சீஷர்களாய் அவருக்குப் பின் செல்லும் பொழுது இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில்
பெற்றது போல முழு உலகத்தின் அதிகாரத்தைக் கொடுக்கிறார்.
இந்த அதிகாரம் பரலோகத்திலிருந்து
கொடுக்கப்படுகிறபடியால் இதற்கு எதிராக எந்த வல்லமைகளும் எதிர்த்து நிற்க முடியாது.
பயன்படுத்த வேண்டும்.
இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கும்
அதிகாரத்தைப்பெற்ற அநேக தேவ பிள்ளைகள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதே
போராட்டக்களத்தில் தொடர்ந்து நிற்ப்பதற்கு காரணமாக இருக்கிறது. நமக்கு எதிராக
வரும் போராட்டத்தில் சத்துருவானவன் கொண்டுவரும் எல்லாவற்றையும் தேவன்
கொடுத்திருக்கும் அதிகாரத்தின் மூலம் எதிர்கொண்டு அழிக்க வேண்டும்.
தேவன் அதிகாரத்தை நம்முடைய
கரத்தில் கொடுத்த பின்பும், அதிகாரத்தை
வைத்துக்கொண்டே பயந்து ஓடிக்கொண்டிருக்கிற அநேகரை காண முடியும்.
சிறு பிரச்சனையானாலும் எதிர்த்து
நிற்காதபடிக்கு பயந்து நடுங்கும் போது பிரச்சனைகள் மேற்கொள்ளப் பார்க்கும். ஆனால்
உடனடியாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கொடுக்கப்பட்டிருக்கும்
அதிகாரத்தைப்பயன்படுத்தி முறியடிக்க வேண்டும்.
வாலிபன் ஒருவன் முறைப்படி கராத்தே
கற்றுக்கொள்ளும்படி கராத்தே நன்றாகக் கற்றுக்கொடுக்கும் நல்ல குருவை தேடி வந்தான்.
அந்தக் குருவும் அவனைத் தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டு எல்லா வித்தைகளையும்
கற்றுக்கொடுத்தார்.
வெகு விரைவில் அந்தச் சீடனும்
நன்றாகக் கற்றுக்கொண்டான். அவனுடைய கற்றுக்கொள்ளும் ஆர்வமும், கற்றுக்கொள்ளும் விதத்தையும் பார்த்த குரு தனக்குத்
தெரிந்த எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துப் பயிற்சி கொடுத்து வந்தார். அவனும்
எல்லாவற்றிலும் தேறினவனாக இருந்தான்.
ஒரு சமயம் அவன் கடைத்தெருவில்
சென்று கொண்டிருக்கும் போது சில பொல்லாத வாலிபர்கள் அவனை வழி மறித்து வேண்டாத
வார்த்தைகளைப் பேசி, அவனைத் துன்புருத்தினார்கள்.
அந்த வாலிபனோ, அழுதுகொண்டு வந்தான். அவனுக்கு எதிரில் அவனுக்குப் பயிற்சி கொடுத்த குரு
வந்தார்.
தன்னுடைய சீடன் அழுது கொண்டு
வருவதைக்கண்டு, “ஏன் அழுகிறாய்’’ என்று கேட்டார். அவன் நடந்த சம்பவங்களைச் சொன்னான். எல்லாவற்றையும்
கேட்ட குரு “நான் உனக்கு எல்லா
வித்தைகளையும் கற்றுக்கொடுத்திருக்கிறேன். அவைகள் எல்லாம் உனக்குத் தெரியும்.
நீயும் எதையும் சிறப்பாக எதிர் கொள்ளக்கூடியவன் இப்படி அழுது கொண்டு வருகிறாயே, நீ கற்றுக்கொண்ட வித்தைகளைப் பயன்படுத்தினால்
ஒருவனும் உனக்கு முன்பாக நிற்க முடியாதே, நீ
ஏன் என்னைத் தேடி வருகிறாய் என்று சொல்லி, இனி
எந்த இடத்திலும் நான் உனக்குக் கற்றுக்கொடுத்த வித்தைகளைப் பயன்படுத்து என்று
சொன்னார்.
பிரியமானவர்களே, இன்றைக்கும் நம்மில் அநேகர் அந்த வாலிபனைப்போலவே
இருக்கிறோம். நம்முடைய குருவாகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய எல்லா வல்லமையையும், அதிகாரத்தையும் கொடுத்திருந்தும் பயன்படுத்தாமல், பிரச்சனை, போராட்டங்கள்
வரும் போது மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதும், பயந்து நடங்குவதும் நம்முடைய குருவுக்கு மகிமையைக்
கொண்டு செல்லாது.
எனவே தெய்வீக அதிகாரத்தை, அறிந்து கொள்வது மட்டுமல்ல, அந்த அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும், இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது
மட்டுமல்ல, அதைப் பயன்படுத்தவும்
வேண்டும்.
எனவே இந்த மாதத்தில் கர்த்தர்
கொடுத்த வாக்குத்தத்ததின் படி எதுவும் நம்மைச் சேதப்படுத்தாதபடிக்கு எதிராக வருகிற
எல்லாவற்றையும் மிதிக்கவும், மேற்கொள்ளவும் நமக்குத்
தந்த விசேஷமான வல்லமைகளை, அறிந்து, பெற்று, பயன்படுத்துவோம்.
தேவனாகிய கர்த்தர் நம்மூலமாகச் செயல்பட்டு மகிமைப்படுவார்.
கர்த்தர்தாமே இந்த வார்த்தைகளின்
மூலமாக உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக. உங்களுக்காகவும் உங்கள்
குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
0 comments:
Post a Comment