Bread of Life Church India

இயேசுவின் வார்த்தைக்கும், செயலுக்கும் முரண்பாடா?


இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மனித சரித்திரத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை நாம் சொல்லி மற்றவர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை காரணம் அதற்கு சரித்திரம் சாட்சி சொல்லும். இயேசுவானவர் போதித்தவர் மட்டுமல்ல, அவரது  போதனைகளை அவர் தனது மானுட வாழ்வில் கடைப்பிடித்து காண்பித்தவர். உலகில் எத்தனையோ தத்துவங்களும் தத்துவ ஞானிகளும் தோன்றி மறைந்திருக்கின்றனர், அவர்களெல்லாம் தங்கள் வார்த்தைகளின் படி நடந்தார்களா?


என்றால் இல்லை என்றுதான் சரித்திரம் நமக்கு சான்று கொடுக்கும். ஏனென்றால்,  மற்றவர்களுக்கு உபதேசிப்பது எளிது, அதை போதித்தவரே கடைப்பிடிப்பது கடினம். அப்படித்தான் இயேசு கிறிஸ்துவுக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த மனிதர்கள் இருந்தனர் என்பதை சரித்திரம் நமக்கு படம்பிடித்து காண்பிக்கிறது.

ஆனால் இயேசுவானவர் அப்படி அல்ல, தான் சொன்னதை செயலில் வெளிப்படுத்தியவர், ஆனால் இயேசு கிறிஸ்துவை முழுவதும் அறியாதவர்கள், அவரின் தெய்வத்துவத்தை உணராதவர்கள் அவருடைய வார்த்தையில் குற்றம் கண்டு பிடித்துவிட வேண்டும் என்று, ஒன்றுக்கும் உதவாத வாதங்களையும், ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத விஷயங்களையும் கலந்து உளரிக்கொண்டிருக்கிறார்கள், சரி உளறுகிறவர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா? என்று சிலர் கேட்பது எனக்கும் புரிகிறது. ஆனால் வேதம் தெளிவாக போதிக்கிறதே மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறு உத்தரவுகொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்’’ ( நீதி 26:5) என்று. ஆகவே அப்படிப்பட்டவர்கள் தன்னை ஞானியாக நினைத்துக்கொள்ளும் முட்டாள்கள் மதியீனனின் முதுகுக்கு ஏற்றது பிரம்பு என்றும் வேதம் கூறுகிறது. 

ஆகவே அப்படிப்பட்ட சிலருக்கு நாம் பதில் கொடுத்தே ஆகவேண்டும் ஏனென்றால் கிறிஸ்துவுக்குள் புதிதாய் வந்து,  உறுதியாய் இல்லாதவர்கள், குழப்பிக்கொள்ளாமல் தெளிவடைய வேண்டும் என்பதற்காகவே வேதத்தின் வெளிச்சத்தில் இப்பதில். சரி விஷயத்திற்கு வருவோம், என்ன முரண்பாடானவைகளை கண்டு பிடித்து விட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டி அதற்கு வேதத்தின் வெளிச்சத்தில் பதிலை கண்டு பிடிப்போம். 

"ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு'' ( மத் 5:39). என்ற வசனத்தையும், "சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்''(யோவான் 18:22,23) என்ற வசனத்தையும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாகவும், இயேசுவானவர் ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு என்று சொல்லிவிட்டு, ஒருவன் அடிக்கும் போது, “என்னை ஏன் அடிக்கிறாய்’’ என்று கேட்கிறாரே , மறு கன்னத்தை ஏன் காட்டவில்லை என்று வாதிடுகிறார்கள். 

ஏன் அடிக்கிறாய் என்று இயேசுவானவர் கேட்கும் சம்பவத்தை ஒழுங்காக கவனித்து வாசிக்கவேண்டும். "பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்'' ( யோவான் 18:19) அப்பொழுது இயேசு கிறிஸ்து பதில் சொல்லுகிறார். "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.

 நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்'' ( யோவான் 18:20,21). இவ்விதமாக பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் "சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்'' ( யோவான் 18:22). அப்பொழுதுதான் "இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்''( யோவான் 18:23). இயேசுவானவரின் கேள்வி என்னவென்றால் கேள்வி கேட்கும் போது பதில் சொல்லுகிறேன், நான் தவறாக பேசினால் அதை எனக்கு சொல்லு, அப்படிக்கேட்காமல் ஏன் என்னை அடிக்கிறாய் என்று கேட்கிறார். இக்கேள்வியின் இன்னொரு அர்த்தம் நான் பதில் சொல்லவா வேண்டாமா? என்பதுதான். இதில் என்ன முரண்பாடு இருக்கிறது. அடித்தவனை அவர் திருப்பி அடிக்க வில்லை, அவனைத் திட்டவில்லை அவனுக்கு விரோதமாக பேசவில்லை. மாறாக நியாயத்தைக்கேட்கிறார். அல்லது நான் என்னதான் செய்வது எனக்கு சொல்’’ என்று கேட்கிறார். 

அது மட்டுமா? இதற்கு பின்  "இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து, அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்'' ( லூக்கா 22: 63-65) மேலும் அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்'' ( மத் 26:67,68). "அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, அவர் மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள் '' ( மத்தேயு 27: 28-30). இயேசுவானவர் இவைகள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, பதில்  வார்த்தை பேசாமல் எல்லா அடிகளையும், அவமானங்களையும் ஏற்றுக்கொண்டார்.  அது மட்டுமா? முதல் நாள் துவங்கி மறுநாள் வரை, (இரவிலும், பகலிலும்) அடிக்கிறார்கள். பொய் குற்றச்சாட்டு கூறி, சிலுவையிலே ஆணிகளால் அடித்து, தொங்க விட்டு, சித்ரவதை செய்கிறார்கள். அப்படி இருந்தும் அவர் ஒருவார்த்தை பேசவில்லை ஒருவரையும் திட்டவில்லை. மாறாக அப்பொழுதும் இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’’ ( லூக்கா 23:34) என்று தன்னை அடிக்கிறவர்களுக்காகவும், ஜெபிக்கிறார், பரிந்து பேசுகிறார். சாதாரணமான புழு கூட தனது உயிருக்கு ஆபத்து வருகிறது என்றால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, போராடும் எதிர்த்து நிற்கும் ஆனால் தனக்கு நடந்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் மிகவும் பொறுமையுடன் சகித்து, தனக்கு விரோதமாக செயல்படுகிறவர்களுக்கு எதிராக ஒன்றுமே செய்யாமல் இருந்த இப்படிப்பட்ட இயேசு கிறிஸ்துவா, தான் சொன்ன வார்த்தையின் படி நடந்து கொள்ளாமல் முரண்பாடாக நடந்து கொண்டார். ஆம் அவர் முரண்பாடாகத்தான் நடந்து கொண்டார்’’ என்று மறுபடியும் சொன்னால் நாமும் ஏற்றுக்கொள்வோம். அவர் முரண்பாடாகத்தான் நடந்து கொண்டார்’’. எப்படியென்றால் "ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு'' ( மத் 5:39).  என்று நமக்கு சொல்லி விட்டு, மறு கன்னத்தை மட்டுமல்ல, அவமானங்களையும், அடிகளையும் வாங்கிக்கொண்டு, எதிர்த்து ஒருவார்த்தையும் பேசாமல், தனது உடலில் அடிவாங்காத இடம் இல்லாத அளவிற்கு,  உடல் முழுவதும் அடிக்கும் படியாக காண்பித்து அடிவாங்கினாரே, தனது உடம்பில் உள்ள எல்லா இரத்தத்தையும் சிந்த தன்னை அர்ப்பணித்தாரே, அவர் முரண்பாடாகத்தான் பேசினாரோ?  எப்படி மனம் வருகிறது இப்படி பேசுகிறவர்களுக்கு? பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’’    ( லூக்கா 23:34).



3 comments: