Bread of Life Church India

பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணம் வரும்

``பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது'' <நியா 14:14>. வேதாகமத்தில் விடுகதையாக சிம்சோனால் கொடுக்கப்படும் வார்த்தையே நாம் மேலே வாசிக்கும் வசனம். இந்த வசனத்தை தியானித்துக்கொண்டிருக்கும் போது இவ்வசனத்திற்கு இணையாக சில சம்பவங்களின் மூலமாக தேவனுடைய மக்களின் வாழ்வில்  தேவன் எப்படியெல்லாம் செயல்பட்டார், இக்காலத்திலும் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்கும் போது மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது, இவ்வசனத்தை உங்களோடு பகிர்ந்து இந்த ஆசீர்வாதத்திற்கு நீங்களும் பங்கு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையுடன் இந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஜெபத்துடன் விசுவாசித்து வாசியுங்கள். கர்த்தர் அற்புதம் செய்வார்.   


    ``பட்சிக்கிறவன்'' என்றால் நம்மிடம் உள்ளதை அபகரித்துக் கொள்பவன் அல்லது கொள்ளை அடிக்கிறவன் என்று பொருள் கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய உழைப்புக்கள் கொள்ளை யிடப்படுகிறது. நம்முடைய பொருளாதாரம் கொள்ளையிடப்படுகிறது, நம்முடைய சமாதானம் கொள்ளையிடப்படுகிறது, நம்முடைய சுகம் கொள்ளையிடப்படுகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் என்ன தீர்வு? இதெல்லாம் ஏன் நடக்கிறது? இவைகளெல்லாம் மறுபடியும் திரும்ப கிடைக்குமா? என்ற பல கேள்விகளுடன் தொடர்ந்து வாசிக்கலாம். வேத வசனத்தின் மூலமாக பதில் வரும்.

உழைப்பின் பலனை பட்சித்தவனே திரும்ப தருவான்.

    ``நான் உழைத்து உழைத்து ஓடாக போனதுதான் மிச்சம். நான் உழைத்ததில் ஒன்றும் மிச்சம் இல்லை என்ற ஏக்கத்துடனும், ஏன் என்று தெரியாமலும் குழப்பத்துடன் இருக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த செய்தி.

    ``எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள். சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக் கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்''
<யாத் 1:13,14>.

    எகிப்தில் இஸ்ரவேல் மக்கள் உழைத்தார்கள் உழைத்தார்கள் கடுமையாக உழைத்தார்கள், விடுமுறை இல்லாமல் உழைத்தார்கள், கொஞ்ச நேரம் கூட ஓய்வு இல்லாமல் உழைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன? அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியமும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் மரியாதையாகவும் நடத்தப்படவில்லை. ஒரு எந்திரத்தைவிட கேவலமாக நடத்தப்பட்டார்கள், மனிதர்களாகக்கூட அவர்கள் நடத்தப்படவில்லை. கொத்தடிமையைவிட மோசமாக நடத்தப்பட்டார்கள். கொத்தடிமைகளாவது ஏதாவது ஒருவகையில் கொஞ்சம் முன் பணம் வாங்கி மாட்டிக்கொண்டு அதிலிருந்து விடுபடமுடியாமல் தத்தளிப்பார்கள், ஆனால் இஸரவேல் மக்கள் அதைவிட கொடுமையாக நடத்தப்பட்டார்கள். கொடுக்கப்பட்ட வேலையை, கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் முடித்துக் கொடுக்காவிட்டால் அந்த குடும்பம் தனது குழந்தையை இழக்க நேரிடும். அந்த அளவுக்கு கொடுமைப் படுத்தப்பட்டார்கள். அவர்களின் பெலத்துக்கு மிஞ்சிய வேலையே அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

    இப்படியாக 400 ஆண்டுகள் மிகவும் கொடுமையாக நடத்தப் பட்டார்கள். ஆனால் தேவன் அவர்களை அப்படியே விட்டுவிட வில்லை. மோசேயின் மூலமாக மக்களை விடுவிக்கிறார். அதுமட்டுமல்ல, அவர்களின் உழைப்பை ஏமாற்றி கொள்ளையடித்து வைத்திருந்த அனைத்தையும் அவர்கள் திருப்பி வாங்கிக்கொண்டார்கள். அதற்கு மேலும் எகிப்தியர் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்து அனுப்பும்படி தேவன் அவர்களின் வாழ்க்கையில் கிரியை செய்தார். பட்சித்துக் கொண்டிருந்தவர்களுக்கு திகிலை ஏற்படுத்தி, அவர்கள் கொள்ளையடித்து வைத்திருந்ததை கொள்ளைப் பொருளாக எடுத்துக்கொண்டு திரும்பி வரும்படியாக செய்தார்.

    ``மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளி உடைமைகளையும் பொன் உடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்'' <யாத் 12:35,36>. கொள்ளையிட்டார்கள் என்ற வார்த்தைக்கு கொள்ளையிடப்பட்டதை திரும்ப பெற்றுக்கொண்டார்கள் என்பதுதான் பொருள்.

    இது வரைக்கும் உங்கள் வாழ்க்கையிலும் உங்களின் உழைப்பையும், பொருளாதாரத்தையும் பிசாசானவன் பட்சித்துக் கொண்டிருக்கலாம், இதுவரை பட்சித்த எல்லா பலன்களையும் கர்த்தர் திருப்பிக்கொடுக்கப் போகிறார். ``வெட்டுக்கிளிகளும், பச்சைக் கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்'' <யோவேல் 2:25>. என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் விசுவாசிக்கும் போது, நீங்கள் இழந்த யாவற்றையும் திரும்ப இரட்டிப்பாக பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்.

நீங்கள் இழந்தவைகளை பட்சித்தவனே திருப்பிக்கொடுப்பான்

    ``இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்'' <எபி 7:4>. இங்கே கொள்ளையிடப்பட்ட பொருள்களில் ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான் என்று வாசிக்கிறோம் ஆனால் ஆதியாகம புத்தகத்தில் சோதோம் கொமோர பட்டணங்களுக்கு எதிராக வரும் ராஜாக்கள் சோதோமில் இருந்த லோத்தின் பொருள்களையும் கொள்ளையடித்துக்கொண்டு போய் விடுகிறார்கள். இதை கேள்விப்பட்ட ஆபிரகாம் தன்னோடு இருந்தவர்களை அழைத்துக் கொண்டு சென்று எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டு வந்தான் என்று வேதம் கூறுகிறது. ``தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,
இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள் மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி, சகல பொருள்களையும் திருப்பிக் கொண்டு வந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக் கொண்டுவந்தான்'' <ஆதி 14:14_16>. கர்த்தருக்கு கொடுக்க வேண்டியதை தேவபிள்ளைகள் சரியாக கொடுக்கும் போது,  தேவ பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்துள்ளவைகளை இழந்து போக தேவன் ஒருநாளும் விடமாட்டார். ஆபிரகாம் தேவனுக்கு  கொடுக்கவேண்டியதை பிரமாணமாக தேவன் ஏற்படுத்துவதற்கு முன்பாகவே, சரியாக தசமபாகம் கொடுத்தார் என்று வேதவசனம் சொல்லுகிறது. நாமும் தேவனுக்கு உரியவைகளில் உண்மையாக இருந்து நமக்கு கர்த்தர் கொடுக்கும் எல்லாவற்றிலுமிருந்து நாம் தசமபாகம் கொடுக்க வேண்டும்  அப்படி கொடுத்தால், நம்மிடமிருந்து சத்துரு பட்சித்த எல்லாவற்றையும் நாம் திருப்பிக்கொள்ளும் படியாக கர்த்தர் கிருபை செய்வார்.

    இதே போல ஒரு சமயம் தாவீதின் வாழ்க்கையிலும் நடக்கிறது. ``அமலேக்கியர்; தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாக்கின் மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய் விட்டார்கள்''
<1 சாமு 30: 1,2>. அப்பொழுது பட்டணத்திலுள்ள  சகல ஜனங்களும் தாவீதை நெருக்கி தங்கள் மன கிலேசத்தினால் தாவீதை கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டார்கள். அவ்வேளையில் தாவீது கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, தேவனிடத்தில் விசாரிக்கிறார்.

    ``தாவீது கர்த்தரை நோக்கி;: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்; அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார்''<1 சாமு 30:8>.
தேவன் பின் தொடர்ந்து போக அனுமதி கொடுத்தது மட்டுமல்ல, எல்லாவற்றையும் திருப்பிக் கொள்வாய் என்று சொன்னதும் தாவீது பின்தொடர்ந்து சென்று ``அவர்கள் கொள்ளையாடிக் கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்'' < 1சாமு 30:19> என்று வேதம் கூறுகிறது.

    பிரியமானவர்களே, உங்களை கொள்ளையிடும்படியாக வந்த சத்துருவை முறியடிக்கும்படியான பெலனை கர்த்தர் உங்களுக்கு கொடுக்கிறார், உங்களிடமிருந்து திருடப்பட்ட அனைத்தையும், நீங்கள் திருப்பிக்கொள்ளப்போகிறீர்கள். அது மட்டுமல்ல,  உங்கள் சத்துருவுக்குண்டானவற்றையும் சேர்த்து நீங்கள் திருப்பிக்கொள்ளப் போகிறீர்கள்.  ஏனென்றால் உங்கள் சத்துருவுக்கு தேவன் நீதியை  சரிகட்டும்படியாக  அப்படிச்செய்வார்.

பட்சித்தவனிடத்தில் இருந்து பிடுங்கி பஞ்சத்தை மாற்றும் கர்த்தர்

    எலிசாவின் நாட்களில் சமாரியாவில் பயங்கரமான பஞ்சம் உண்டாகிறது, அதற்கு முன்போ, அதற்கு பின்போ அப்படிப்பட்ட பஞ்சம் சமாரியாவில் உண்டாயிருப்பது சந்தேகம்தான். ஏனென்றால் அந்தளவிற்கு பஞ்சம் கடுமையாக இருந்ததாக வேதாகமத்தில் வாசிக்கிறோம்.

    ``சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தை எல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கை போட்டான். அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள்'' <2 இராஜா 6:24,25>. 1 வெள்ளிக்காசு என்பது 1 சேக்கல் அளவு. 1 சேக்கல் என்பது 11.5 கிராம். காற்படி என்பது தற்கால அளவின்படி 350 கிராம் இருக்கலாம். தற்காலத்தில் 1 கிராம் வெள்ளி என்ன விலையாக இருக்கிறது என்பதை நிர்ணயத்துப்பார்த்தால் பஞ்சத்தின் கொடூரம் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

    அது மாத்திரமல்ல, பஞ்சத்தின் கொடுமை ஒருக்காலும் எந்த தாயும் செய்யக்கூடாத செயலை இரண்டு தாய்மார்களை செய்ய வைத்தது என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். ``அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவிட்டாள் என்றாள்'' <2 இராஜா 6:28,29>. இவ்விதமாக இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக சத்துருவாக சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் இருந்தான்.

    சமாரியாவை அவன் முற்றுகை போட்டபடியினாலே, வெளியில் இருந்து எந்த பொருள்களும் உள்ளே போகமுடியவில்லை, உள்ளே இருப்பவர்களும் வெளியே போக முடியவில்லை இதனால்தான் பஞ்சம் உண்டாகி இருந்தது. இன்றைக்கும் இதுபோன்று பிசாசானவன் சில குடும்பங்களை சுற்றிலும் முற்றுகை போட்டுவிடுகிறான். அதனால் தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் குடும்பங்களில் தத்தளிப்பு உண்டாகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பங்கள்   குழப்பத்தின் உச்சத்தில் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தேவ மனுஷனான எலிசா மூலமாக தேவனுடைய வார்த்தை மக்களுக்கு வருகிறது. ``அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்'' <2 இராஜா 7:1>.

    ஒரு சேக்கலுக்கு விற்கப் படுமென்றால் ஒரு சேக்கல் வெள்ளி என்று பொருள்படும். அதே போல் ஒரு மரக்கால் என்பது பழங்கால அளவை. எட்டுப்படி சேர்ந்ததுதான் ஒரு மரக்கால். ஒருபடி என்பது, தற்கால அளவையின்படி 1.5 கிலோ <ஒன்அறைக்கிலோ> அப்படியானால் எட்டுப்படி 12 கிலோ, ஒரு மரக்காலின் அளவும் 12 கிலோதான்.

    இப்படியாக தேவமனிதன் மூலமாக தேவன் தம்முடைய வார்த்தையை கொடுத்தும் ஒருசிலரால் தேவனுடைய வார்த்தையை நம்பி, விசுவாசிக்க முடியவில்லை. ஏனென்றால் இவ்வளவு கொடூரமான பஞ்சம் ஒரே நாளில் மறைந்து விடுமா? என்பதுதான் அவர்களின் சந்தேகம். ஆனால் இன்றைக்கு பஞ்சமாக இருக்கும் நமது வாழ்வில் கர்த்தர் சொன்னால் நாளை செழிப்பாகும். கர்த்தர் சொன்னால் நாம் விசுவாசித்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் தேவன் இல்லாதவைகளில் இருந்தே எல்லாவற்றையும் உருவாக்குகிறவர். ``தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை'' என்றும், இதோ, நான் மாம்சமான யாவருக்கும்  தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? <எபி 32:27> என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்ற அவரே செயல்படுகிறார். எப்படியெனில், ``ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி, இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்''<2 இராஜா 7:6,7>.

    பல மாதங்களாக சமாரியாவை கலங்கடித்துக் கொண்டிருந்த சீரியரின் இராணுவத்துக்கு பயத்தையும் கலக்கத்தையும் உண்டாக்கி இரவோடு இரவாக, முழு இராணுவத்தையும் சிதறி ஓடும்படியாக கர்த்தர் செய்தார்.

    ஓடியவர்கள் சாதாரணமாக ஓடவில்லை, தங்களுடைய வெள்ளி உடமைகளையும், பொன் உடமைகளையும், வஸ்திரங்களையும், உணவு தானியங்களையும் இருந்தபடியாக அப்படியே விட்டு விட்டு ஓடினர். அப்பொழுது அதுவரை பலமாதங்கள் சமாரியா மக்களின் ஆசீர்வாதங்களை தடைசெய்து வைத்திருந்த சீரியர்கள் தங்களின் எல்லா உடைமைகளையும் விட்டுச்சென்றதை ``ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது'' <2 இராஜா 7:16>. இப்படியாக பட்சித்து வைத்திருந்தவனிடமிருந்தே பட்சணங்களை கர்த்தர் வரவைத்தார். பஞ்சம் நீங்கியது, ஜனங்கள் செழிப்பாகி, மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். கர்த்தர் தேவனுடைய மனுஷனைக் கொண்டு சொன்னபடியே ``இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுக வாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது'' <2இராஜா 7:18>.

    பிரியமானவர்களே, உங்களின் குடும்பத்தைச்சுற்றிலும் சத்துருவானவன் முற்றுகை போட்டு உங்களின் ஆசீர்வாதங்களை தடுத்து வைத்திருப்பதினால் நீங்கள் உங்கள் குடும்பத்தில் சில பஞ்சங்களை சந்தித்துக்கொண்டிருக்கலாம், பொருளாதாரத்தில், குடும்ப சமாதானத்தில், சரீர சுகத்தில், அது எப்படிப்பட்ட பஞ்சமாக இருந்தாலும் சரி கர்த்தர் மாற்றப்போகிறார். இன்றைக்கு பஞ்சத்தோடு இருக்கும் உங்கள் வாழ்க்கையை கர்த்தர் நாளை செழிப்பாக மாற்றப்போகிறார். இந்த வார்த்தையை விசுவாசித்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை சாட்சியாக நிறுத்துவார். வரும் நாட்களில் நீங்கள் இந்த புத்தகத்தில் சாட்சி எழுதி அனுப்பப்போகிறீர்கள். இச்செய்தியை வாசித்துக் கொண்டிருகும் போதே என்னையும் என் குடும்பத்தையும் முற்றுகை போட்டிருந்த சத்துருவை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஓட செய்து விட்டார். இது வரை எங்கள் நன்மையை பட்சித்து வைத்திருந்த வனிடத்திலேயே தேவன் பட்சணத்தை வரவைத்தார் என்று சொல்லப்போகிறீர்கள். அல்லேலூயா. தொடர்ந்து கர்த்தருக்குள்ளாக இருந்து தேவனுடைய நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படியாக உங்களை வாழ்த்துகிறேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன்.  



0 comments:

Post a Comment