Bread of Life Church India

விலைமகள் விசுவாசியாகிறாள்.

யோவான் 8:11 வேதபகுதி மிகவும் கடினமான பகுதியாக இருந்தாலும், இயேசுகிறிஸ்துவானவர் இந்த பூமிக்கு வந்ததை உலகிற்கு உரக்க சொல்லும் செய்தியாகும்.மனிதனின் சட்டங்களுக்கும் தேவனின் சட்டங்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை எடுத்துக்காட்டுகிறது.

     இயேசுவானவர் போதனைகள் எல்லாமே மனிதனை வாழவைக்கும்படியாக இருக்கிறது, மன்னித்து மறுவாழ்வு கொடுப்பதை எடுத்துக்காட்டுகிறது, தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் தவறு செய்தால் ஒருவேளை மன்னிக்கலாம். ஆனால் தனக்கு எதிரனவர்களையும், தனக்கு துரோகம் செய்தவர்களையும் மன்னிப்பதென்பது மனிதனுடைய வழக்கத்தின்படி முடியாத காரியம்.
     யோவான் 8ம் அதிகாரத்தில் உள்ள இந்த பகுதியை தியானித்து பார்ப்போம்.

     3.அப்பொழுது விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரியை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி:
  4. போதகரே, இந்த ஸ்திரி விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
  5. இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர்; என்ன சொல்லுகிறீர்; என்றார்கள்.
  6. அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
  7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
  8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
  9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரி நடுவே நின்றாள்.
 10. இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரியைத்தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரியே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
 11. அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

     மனிதர்களின் எண்ணங்கள் எப்பொழுதும் மற்ற மனிதன் எப்பொழுது தவறிவிழுவான் அவனை எப்படி தூற்றித்திரியலாம் என்றும், எப்படி மட்டம் தட்டலாம் என்றுமே இருக்கிறது,
அப்படித்தான் இந்த பகுதில் உள்ள சம்பவமும் விளக்குகிறது, ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அவளை பிடித்து இழுத்துக்கொண்டு, இயேசு கிறிஸ்துவிடம் ஒரு கூட்டம் வந்து நிற்கிறது. வந்து நிற்கும் கூட்டத்தின் எண்ணமெல்லாம் அந்த பெண் தண்டிக்கப்படவேண்டும், அது மட்டுமல்ல, இயேசுவானவரிடத்திலும் குற்றம் கண்டு பிடுக்கவேண்டும் என்பதும்தான்.
      சட்டப்படி அந்த பெண் தண்டிக்கப்படவேண்டும், அதே சமயம் கல்லால் எரிந்து அந்த பெண்ணை தண்டிக்கலாம் என்று இயேசு கிறிஸ்து சொல்லி விட்டால் மன்னிப்பு என்று அவருடைய போதனைகள் வெறும் வாய் பேச்சுதான் என்று குற்றம் பிடித்து அவருடைய போதனைகளின் கருத்தை அடித்து விடலாம் என்ற தீர்மானத்தோடுதான் அந்த கூட்டம் வந்து நிற்கிறது.
     இப்படிப்பட்ட சூழ்நிலையில் நூல் பிசகினாலும், பொருளும் அர்த்தமும், மொத்தமாக மாறிப்போகும்.
     இந்த வேளையில் இயேசுவானவர் எடுக்கும் முடிவுகள்தான் யாரும் எதிர்பாராத அதே சமயம் எதிர்க்கமுடியாத பதிலாக அமைந்தது. அவர் சொன்ன பதில் என்ன “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்’’
     எப்படியாகிலும் குற்றம் கண்டுபிடித்து விடவேண்டும் என்று வந்த கூட்டத்திற்கு என்ன செய்வதென்பதே தெரியவில்லை ஒவ்வோருவாராக தலை கவிழ்ந்து போய்வடுகிறார்கள்.
     மனிதனின் எண்ணமெல்லாம் எப்படி இருக்கிறது என்றால், யாருக்கும் தெரியாமல் செய்யும் பாவங்கள் எண்ணப்படாது என்றும், நாம் மிகவும் சுத்தமானவர்கள் மற்றவர்கள்தான் தவறானவர்கள் என்றும் இருக்கிறது. இப்படிப்பட்ட எண்ணம்தான் மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
     உலகத்தின் பார்வை என்ன இளைத்தவன் இழிச்சவாயன் என்பது போல்தான் உள்ளது. அதை இந்த பகுதி அழகாக விளக்கி காண்பிக்கிறது.
     விபச்சாரம் என்பது இருவர் இணைந்து செய்யக்கூடிய பாவம், இந்த பகுதியில் பெண் மட்டுமே குற்றவாளியாக இயேசுவுக்கு முன் நிறுத்தப்படுகிறாள், அவளோடு இருந்த அந்த ஆண் என்ன ஆனான்? மனிதன் தனக்கு பிரச்சனை வராதபடிக்கு சிலவற்றை தந்திரமாக விட்டு விடுவான்.
     ஒருவரை அழித்து விடவேண்டும் என்று எடுக்கும் முயற்சியில் பாதி அளவு கூட வாழவைப்பதற்கு முயற்சி எடுப்பதில்லை, உலகெங்கும் எத்தனையோ இயக்கங்களும், கட்சிகளும் உலகையே தலைகீழாக திருப்பி விடுவோம் என்கின்ற ரீதியில் செயல்படுகிறார்கள்,
ஆனால் இப்படிப்பட்டவர்கள் ஒன்றை மட்டும்  மறந்து விட்டனர். என்னவென்றால் மாற்றம் என்பது உலகில் அதாவது மற்றவர்களிடமிருந்து அல்ல, தன்னிடமிருந்துதான் மாற்றம் தொடங்க வேண்டும் என்பதை,ஆகையால்தான் எத்தனை இயக்கங்கள் வந்தாலும் வாய்ப்பேச்சிலும், எழுத்து வடிவில் மட்டுமே மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
     மறுரூபமென்பது மனித வாழ்வில் மறைந்து வருகிறது, சகமனிதர்களை புரிந்து கொள்ளாததும் இதற்கு காரணம்.
     ஆகையால்தான் மற்றவர் மாறுவதற்கும், தங்களை  திருத்திக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கொடுக்காமல், சமயம் கிடைத்த்தும் கல் எடுத்து எரிய தயாராகிவிடுகின்றனர். ஆனால் தனக்குள்ளிருக்கும எண்ணங்களையும், யாருக்கும் தெரியாமல் தான் செய்து கொண்டிருக்கும் செயல்களையும், கல்லெறிய வேண்டும் என்று கல்லெடுக்க தயங்குகின்றனர்.
     அது அந்த பெண்ணின் வாழ்வில் மட்டுமல்ல, இக்காலத்திலும் நாம் கண்கூடாக பார்க்கக்கூடியவைகள்தான்
     என்னதான் இருந்தாலும், அந்த பெண் செய்ததை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் மன்னிக்க முடியும் ஆகையால்தான் “இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை ; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
     இது அந்தப்பெண் தன்னைத்திருத்திக்கொள்வதற்கும், மாற்றிக்கொள்வதற்கும் கொடுக்கப்பட்ட நல்லதொரு சந்தர்பம்.
     இப்பொழுது அந்த பெண்ணுக்கு கிடைத்தது மறுவாழ்வு, அவளைக்கல்லெறிந்து கொல்ல இயேசுவுக்கு மட்டுமே தகுதியும், அதிகாரமும் உண்டு, ஏனென்றால் பாவம் செய்யாதவரும், தேவனும் அவரே. அப்படிப்பட்டவர் இனிப் பாவஞ்செய்யாதே என்று மன்னித்து அனுப்புகிறார்.
     அப்பொழுது உண்மையாக அந்த பெண்ணின் மன நிலை எப்படி இருந்திருக்கும், தான் செய்த பாவத்தின் நிமித்தமாக ஊரை எதிர்த்து தனக்கு எதிராக கல்லெடுத்து நின்ற போதும், நம்மை காப்பாற்றி வாழ்வு தந்தாரே இனி நான் எப்படி மறுபடியும் பாவம் செய்வேன், இனி அவருடைய பெயரை காப்பாற்றியாக வேண்டும் ஆகவே இனி பழைய வாழ்க்கை அல்ல ஒரு புதிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று தீர்மானித்து, விலைமகளாக இருந்த அவள் இயேசு கிறிஸ்துவின் உண்மையான விசுவாசியாக மாறி சாட்சியாக வாழ்ந்தாள்.
     இது அக்காலத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை கதை மட்டுமல்ல, இக்காலத்திலும் உள்ள  ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கை சரித்திரமும் இப்படிப்பட்டதுதான்.
            ஏதோ ஒரு வகையில் பாவத்தின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தவர்களை, இயேசுகிறிஸ்து மன்னித்து மறுவாழ்வு கொடுத்திருக்கிறார், வேதம் கூருகிறது“அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். (கலா 1:4)
     பாவமென்பது மனிதகுலத்தின் பயங்கரமான எதிரி, மனிதனோ இந்த பாவத்தின் படுகுழியில் சிக்கிக்கொண்டான், பாவந்தான் தேவனுக்கு எதிரி, மனிதன் எதிரியல்ல, ஆகவேதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவத்தின் பிடியில் இருக்கும் மனிதனை விடுவிக்க மனிதனாக இப்பூமியில் அவதரித்தார்.
     “மன்னிப்பு’’ என்பது பாவத்தை தாரளமாக செய்யவதற்கு கொடுக்கும்  அனுமதியல்ல, இக்காலத்தில் கிறிஸ்தவத்தை சரியாக அறிந்து கொள்ளாதவர்கள், மன்னிப்பை தவறுதலாக புரிந்து கொண்டு அதை கொச்சை படுத்தி பேசுவதை கேட்க முடிகிறது, “எத்தனை முறை பாவம் செய்தாலும் பாவமன்னிப்பு கேட்டு, தொடர்ந்து பாவத்தில்  ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று. இப்படி பரவலாக பலர் பேசுகிறார்கள்.
     ஆனால் அதற்கும் காரணம் உண்டு, பாவமன்னிப்பு பெற்று மறுவாழ்வு அடைந்துள்ளவர்கள் தொடர்ந்து அதே பாவத்தை செய்து கொண்டிருப்பதினால்தான், ஆனால் பாவம் மன்னிக்கப்பட்டு, மறுவாழ்வு பெற்றவர்கள் தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருந்தால், அப்படிப்பட்டவர்களை குறித்து வேதம் என்ன கூருகிறது என்பதை பார்ப்போம் “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறோரு பலி இனியிராமல்,
     நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
     மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
     தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்து பாருங்கள்’’(எபி 10:26-29).
     பாவமன்னிப்பை அலட்சிய படுத்துகிறவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை எனபது கொடியதாக இருக்கும், எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.
கர்த்தரும் இரட்சகுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். (2பேதுரு 2:19-21).
     பாவம் எப்பொழுதுமே மனிதனை அடிமைப்படுத்த முயற்சிக்கிறது, பாவத்தோடு போராடி ஜெயிக்க மனிதனால் முடியாது, அதே சமயம் பாவத்தை ஜெயிக்க இயேசு கிறிஸ்து உதவி செய்து பாவத்திலிருந்து விடுதலை தருகிறார்.
     ஆகவேதான் எப்போதும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, விசுவாசத்தின் வாழ்வு வாழ வேண்டும், விசுவாசந்தான் பாவத்தையும், உலகத்தையும், ஜெயிக்க வைக்கிறது, இதை குறித்து வேதம் என்ன கூருகிறது என்று பார்ப்போம்.
     “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற  ஜெயம்.
 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?’’ 1யோவான் 5:4,5).
     விசுவாசம் மட்டுமே, விலைமகளையும் விசுவாசியாக மாற்றும். உண்மையாக விசுவாச வாழ்வுக்குள வந்து விட்ட நபர் பாவ வாழ்விலிருந்து விலகுவது சுலபம்,   
     உலகத்தை ஜெயித்தவர்கள் என்று சொன்னவுடனே சிலருக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, மகா அலெக்ஸண்டர் போன்ற சிலர்தான், ஆனால் வேதம் கூருகின்றவை இப்படிப்பட்டவர்களை குறித்து அல்ல.
     விசுவாசத்தினால் உலகத்தை ஜெயிப்பது என்பது, தேவனுக்கு விரோதமாக, மனிதனை தேவனிடமிருந்து பிரிக்கும் படியாக இயங்கும் தந்திரங்களை சரியான விதத்தில் அறிந்து விலகுவது மட்டுமல்ல, தொடர்ந்து அவைகளுக்கு விரோதமாக போரிட்டு ஜெயிப்பதாகும்.   
காலத்துக்கு ஏற்றார் போல் நீயும் கொஞ்சம் உன்னை மாற்றிக்கொள், அப்படி மாறுவது ஒன்றும் பெரிய தவறு இல்லை, சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்து கொள், அதுதான் புத்திசாலித்தனம், உலக வாழ்க்கையே கொஞ்ச காலந்தானே, உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் நன்றாக அனுபவித்து விடு, இப்படியெல்லாம் உலக அமைப்பு சொல்லும், அது மட்டுமல்ல நம்மை அதற்கு நேராக கொண்டு செல்லும்.
தனிமனித ஒழுக்கத்தை குறித்த தெளிவான போதனைகளைத்தான் விசுவாச வாழ்க்கை அதிகமாக வலியுருத்துகிறது, அதற்கு விரோதமாக செயல்படும் உலகத்தையும் ஜெயிக்க வைக்கிறது  விசுவாசம்.
பாவத்திலிருந்து மனிதன் விடுபடுவதற்கு வேண்டிய அத்தனை விதமான உதவிகளையும், இயேசு கிறிஸ்து செய்கிறார். ஆனால் உலகமோ மனிதனை பாவம் செய்யவும் வைக்கிறது, பாவம் செய்தவர்களை எப்படியாகிலும் அழித்து விடவும் முயற்சிக்கிறது.
இக்காலத்தில் பிசாசு தந்திரமாக அநேகருடைய எண்ணத்தில் விதைத்திருக்கும் விதை என்ன வென்றால், தான் பாவம் செய்வதில்லை நான் பாவியும் அல்ல என்பதுதான்.
இன்னும் சிலருடைய எண்ணம் என்னவென்று பார்க்கும் பொழுது, கிறிஸ்தவர்கள் மனிதர்களை பாவிகள், பாவிகள் என்று சொல்லி குற்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறார்கள் என்று.
ஆனால் கிறிஸ்தவம் எந்த மனிதனையும் குற்ற உணர்வு உண்டாக்குவதில்லை, மாறாக மனிதனின் உண்மையான நிலையை உணர்த்தி பாவத்திலிருந்து விடுபடுவதற்குண்டான அத்தனை விதமான வழிமுறைகளையும் காண்பித்து, மனிதனை பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக்கூடியவர் இயேசுவே என்று எடுத்து கூருகிறது.
தான் பாவி என்று உணர்வு மனிதனுக்குள் வரும்பொழுது, தன்னை விடுவிக்கிறவர் இயேசுவே என்று அறிந்து, இயேசுவை விசுவாக்கும் பொழுது, பாவ அடிமைத்தனத்திலிருந்து இயேசுவானவர் விடுவிக்கிறார்.

பாவத்தை தண்ணீரைப்போல குடித்துக்கொண்டிருக்கும் அநேகர் பூமியில் உண்டு, ஆனால் இவர்கள் தங்கள் பாவத்தைக்குறித்த சிறிதாகிலும் உணர்வு அற்றவர்களாக இருக்கிறார்கள் இதுதான் பாவத்திலும் மிகப்பெரிய பாவம்.
தங்களின் உண்மை நிலை அறியாத மனிதன், அவல நிலையில் இருப்பவன் அப்படிப்பட்டவர்கள், பாவ உணர்வு பெற்றே ஆக வேண்டும், பாவ உணர்வு அடைவது எதற்க்காகவென்றால் தங்களின் உண்மை நிலை அறிந்தால் மட்டுமே விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
அடிமைப்பட்டிருக்கிறோம் என்று தெரிந்தால் தானே, விடுபடவேண்டும் என்றும், விடுதலை பெற  போராட வேண்டும் என்றும், தாகம் ஏற்படும். தானே போராடி பார்த்து பயனில்லாமல் போகும் பொழுதுதான், தனக்கு விடுதலை கொடுக்கும் இரட்சகனை நோக்கி சென்று முறையிட வேண்டும் என்ற முடிவோடு, செல்லமுடியும்.
இதைக்குறித்தும், பரிசுத்த வேதாகமத்தின் வழியாக ஒரு சம்பவத்தை பார்க்கலாம். யோவான் நற்செய்தி புத்தகத்தில் நான்காம் அதிகாரத்தில் சமாரிய ஸ்திரி என்று அழைக்கப்படும்    
பகுதி – 2 தொடரும்........................


    

           

0 comments:

Post a Comment