காயீன் மனைவி யார்?
வேதாகமத்தை வாசிக்கும் போது கேள்விகள் வராமல்
இருந்தால்தான் தவறு. கேள்விகள் வருவது
நல்லது. ஆனால் அந்த கேள்விகள்,
விடையை தேடி விசுவாசத்தில் வளர்வதற்கு
ஏதுவாக இருக்க வேண்டும். விசுவாச வாழ்வில் இருந்து
தவறி விழுவதற்கு ஏதுவாகவும், முரண்பட்ட கருத்துக்களை கூறி, குழப்புவதற்கு காரணமாக
இருந்து விடக்கூடாது.
ஆதியாகம புத்தகத்தை வாசிக்கும்
போது, “காயீனின் மனைவி எங்கிருந்து வந்தாள்”
என்ற கேள்வி வராமல் இருக்காது.
ஏனென்றால் ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரத்தில்
ஆதாம் ஏவாள் இருவர் மட்டுமே
இருக்கின்றனர். 4ம் அதிகாரத்தில் 1,2 வசனங்களில்
இவர்களுக்கு காயீன், ஆபேல் என்னும்
இரண்டு பிள்ளைகள் பிறந்ததாக குறிப்பிடும் வேதம் 4ம் அதிகாரம்
17ம் வசனத்தில் காயீன் தன் மனைவியை
அறிந்தான் என்று கூறுகிறது. அந்த சமயத்தில் ஆதாம்,
ஏவாள், காயீன் மட்டுமே இருப்பதை
போல நாம் வேகமாக வாசித்துக்கொண்டு
செல்லும் போது தெரிகிறது. எனவேதான்
காயீனுக்கு மனைவி எங்கிருந்து வந்தாள்
என்ற கேள்வி எழுவது இயற்கையே.
அதே வேளையில் வேதாகமத்தை
வேகமாக வாசித்துக்கொண்டே செல்லாமல் நிதானமாக தியானித்தும் பார்க்க வேண்டும் என்பதையும்
நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அப்படி நாம் நிதானமாக தியானிக்கும்
போது 4ம் அதிகாரம் 14ம்
வசனத்தில் “என்னைக் கண்டுபிடிக்கின்ற எவனும்
என்னைக் கொன்று போடுவான்” என்று
காயீன் கூறுவதிலிருந்து, அப்பொழுதே மற்ற மனிதர்களும் அவர்களோடு
இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
முடிகிறது. இதை அறிந்து கொண்டால்
காயீன் மனைவி யார் என்பதை
அறிந்து கொள்ள முடியும்.