இன்னும் என்ன செய்ய போகிறாய்?
அழகிய ஒரு குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து
வந்தது. கணவன் தூர தேசத்தில் இருந்தாலும், கணவனோடு தொடர்பு கொண்டு,
குடும்பத்திற்கு தேவையானதை கணவனிடம் பெற்று, தனது கணவன் கொடுப்பதை வைத்து, மனைவி
குடும்பத்தை நன்றாக நடத்தி வந்தாள். நாட்கள் செல்ல செல்ல, மனைவியின் நடத்தையில்
மாறுதல் உண்டாக ஆரம்பித்தது. கணவனோடு தொடர்பு கொள்ளாமல், குடும்பத்தையும் பிள்ளைகளையும்
சரியாக கவனிக்காமல், ஏனோ தானோ என்று குடும்பத்தை நடத்த ஆரம்பித்தாள். ஆரம்பத்தில்
கணவன் மேலும், பிள்ளைகள் மேலும் இருந்த அன்பு குறைந்து தன் சுய இஷ்டப்படி நடக்க
ஆரம்பித்தாள்.
மனைவியின் பொறுப்பில்லா தன்மையாலும், சரியான திட்டமிடல்
இல்லாததாலும் ஒரு நாளில் மிகுந்த வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது அந்த குடும்பம். சமையல்
செய்வதற்கு கூட ஒன்றும் இல்லாமல், அதைக்குறித்த கவலை இல்லாமல், தன் கணவனிடத்திலும்
எதுவும் சொல்லாமல் இருந்தாள். வெகு நாட்களாக சரியான விதத்தில் உணவும் தயார் செய்து
பிள்ளைகளுக்கு கொடுக்காததால் பிள்ளைகள் எல்லாம் மிகுந்த பசியிலும், பட்டினியிலும் வாடினர்.
என்ன செய்வது என்று புரியாத நிலையில் பிள்ளைகள் இருந்த வேளையில், அருகில் இருந்த குடும்பத்தினர்
அந்த வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது, பிள்ளைகள் பசியிலும், பட்டினியிலும்
மிகவும் வாடிப்போன நிலையில் இருப்பதைக் கண்டு, மிகவும் வேதனை அடைந்து, அந்த குடும்ப
தலைவியை அழைத்து, “நீ நன்றாக பிள்ளைகளை
கவனித்துக் கொள்வாய் என்று தானே பிள்ளைகளை உனது பொறுப்பில் கொடுத்து விட்டு, உனது
கணவர் தூர தேசத்துக்கு சென்று உங்களுக்கு வேண்டியதை கொடுக்கிறார். அவர் குடும்பத்திற்கு
வேண்டிய எல்லாவற்றையும் நிறைவாகக் கொடுத்து இருந்தும் பிறகு எப்படி பிள்ளைகளுக்கு
ஒன்றும் கொடுக்காமல் இப்படி பட்டினியாக வைத்திருக்கிறாய்?’’ என்று கேட்டார். அதை காதில் வாங்கி கொள்ளாதது
போல் இருந்து விட்டாள். பதில் எதுவும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்த பக்கத்து
வீட்டார் “என்ன எதுவும் பதில் சொல்லாமல் இருக்கிறாய்’’ என்று கேட்டதும். “எனது குடும்பத்தை நடத்த
எனக்கு தெரியும், உங்கள் வேலை எதுவோ அதை மட்டும் பாருங்கள்’’ என்று சொல்லி விட்டு, “மற்றவர்கள் வீட்டில்
என்ன நடக்கிறது என்று பார்ப்பதே சிலருக்கு வேலையாகி விட்டது’’ என்று முறு முறுத்துக்கொண்டே சென்று விட்டாள்.
தூர தேசத்தில் இருந்த கணவன் ஒருநாள் தனது மனைவியையும்,
பிள்ளைகளையும் பார்க்கும்படி வீட்டிற்கு வந்தான். பிள்ளைகளின் நிலையைப் பார்த்து தன்
மனைவியிடம் “பிள்ளைகள் ஏன் இப்படி இருக்கிறார்கள் உனக்கு என்ன ஆனது பிள்ளைகளை
கவனிக்காமல், பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்.பார், என்னிடத்திலும் முன்பு போல்
சரியாக பேசுவது இல்லை, நான் உன்னுடன் தொடர்பு கொண்டாலும் உன்னிடம் பேச முடிய
வில்லை. உனக்கு என்னதான் பிரச்சனை’’ என்று கேட்டான்.
முன்பு போல் தனது கணவனிடம் சரியாக தொடர்பு கொண்டு
குடும்பத்தின் நிலையை சொல்லாமலும், அவரிடமிருந்து குடும்பத்திற்கு வேண்டியதை
பெற்றுக்கொள்ளாமலும் இருப்பதையும், தன்னுடைய சரியான திட்டமிடாத செயல்தான் இதற்கு
காரணம் என்று அறிந்திருந்தாலும் அதை தனது கணவனிடம் சொல்லி தவறுக்கு மன்னிப்பு
கேட்காமல், தனது தவறை மறைத்து மௌனமாக நிற்கிறாள். உடனே கணவன் “சரி சரி உடனடியாக
பிள்ளைகளுக்கு உணவு தயார் செய்து கொடு’’ என்று சொன்னதும் “உணவு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை’’ என்று தனது கணவனிடம் சொல்லுவதற்கு பயந்து, கணவனிடத்தில்
எதுவும் கேட்காமல் “சரிங்க இதோ தயார் செய்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு வீட்டில் உணவு தயாரிப்பதற்கு ஒன்றும்
இல்லாததால், காட்டிற்கு சென்று ஏதாகிலும் கிடைக்கும் அதை வைத்து சமைத்து
பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்று எண்ணி, வேக வேகமாக காட்டை நோக்கி நடக்கிறாள். அங்கும்
இங்குமாக சுற்றிப்பார்க்கிறாள் ஒன்றும் கிடைக்க வில்லை. மேலும் சற்று தூரம் சென்று
பார்க்கலாம் என்று போன பொழுது, அவளுடைய கண்களில் ஒரு செடி தெரிகிறது. அதில் நிறைய
காய்கள் விளைந்து தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து, சந்தோஷத்துடன் அருகில்
செல்லுகிறாள். அருகில் சென்றதும் தூரத்தில் பார்த்ததைவிட அருகில் போனதும் இன்னும் அதிகமான
காய்களை பார்க்கிறாள். அது என்ன காய் என்று கவனிக்காமலேயே “காய் கிடைத்து விட்டது
என்ற சந்தோஷத்தில் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு, அதன் கீரைகளையும்
எடுத்துக்கொண்டு “இந்த வேளை சமைப்பதற்கு இது போதும், பட்டினியாக இருக்கும் எனது
பிள்ளைகளின் வயிற்றை நிரப்பிவிடலாம். என்மீது கோபமாக இருக்கும் கணவனையும்
சமாளித்து விடலாம் என்ற எண்ணத்துடன்
சந்தோஷமாக வீட்டை நோக்கி நடக்கிறாள்.
வீட்டிற்கு வந்ததும், வேகமாக காய்களை
அரிந்து, கீரைகளை நருக்கி சமைக்க ஆரம்பித்தாள். ஒரு வழியாக சமைத்து முடித்து,
பசியோடு காத்திருந்த பிள்ளைகளை அழைத்து, பரிமாற ஆரம்பித்தாள். பசியில் வாடிப்போய்
இருந்த பிள்ளைகளின் நாவில் நீர் சுரக்க ஆரம்பித்தது. “அம்மா இன்று நமக்கு
புதிதாகவும், வித்தியாசமாகவும் சுவையான உணவை தயார் செய்திருக்கிறார்கள். இன்று
வயிறு நிறைய சாப்பிட்டு விடவேண்டும்’’ என்று, எல்லா பிள்ளைகளும் வரிசையாக அமர்ந்தனர்.
தாய் தான் சமைத்ததை தன்னுடைய
பிள்ளைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தாள். பிள்ளைகள் தாய் சமைத்ததை ஆசையாய் எடுத்து
சாப்பிட்டபோது அதை சாப்பிட முடிய வில்லை. கொஞ்சம் சாப்பிட்டதுமே பிள்ளைகள் வாந்தி
எடுக்க ஆரம்பித்து விட்டனர். இதை கவனித்த பிள்ளைகளின் அப்பா ஓடி வந்து “என்ன
ஆச்சு?, ஏன் வாந்தி எடுக்கிறீர்கள்’’ என்று கேட்டார்.
“அம்மா சமைத்து கொடுத்த இந்த உணவு
சாப்பிட்டதும் வாந்தி வந்து விட்டது. ஏன் என்று தெரியவில்லை’’ என்று பிள்ளைகள்
பரிதாபமாக பதில் சொன்னார்கள். “என்ன உணவு சாப்பிட்டதால் வாந்தியா? ‘’ என்று கேட்டு
விட்டு உணவை சுவைத்து பார்த்தார். அது கசப்பு நிறைந்ததாகவும், அதில் நஞ்சு
கலந்திருப்பதையும் அறிந்து, உடனடியாக பிள்ளைகளுக்கு சிகிச்சை அளித்து பிள்ளைகளை
காப்பாற்றினார். அதன் பின்தான் தாய் கவனிக்கிறாள். அவசரத்தில் எதை எடுக்கிறோம்
என்று அறியாமல் நஞ்சு காய்களை கொண்டு வந்து இப்படி பிள்ளைகளை சாகடிக்க பார்த்தோமே
என்று மிகவும் வருந்தினாள்.
அப்பொழுது கணவன் தனது மனைவியை அழைத்து,
நீ என்ன கேட்டாலும் நான் உனக்கு தருகிறேன். அப்படி இருக்க நீ ஏன் இப்படி நடந்து
கொள்ளுகிறாய். இன்னும் என்ன செய்ய போகிறாய் குடும்பத்திற்கு வேண்டியவைகள்
எல்லாவற்றையும் நீ என்னிடத்தில் கேட்டு பெற்று கொள்ளலாம். அப்படி இருக்க என்னை
விட்டு பிரிந்து நீ ஏன் சுயமாக செயல்படுகிறாய். இனி இவ்விதமாக நடந்து கொள்ளாதே
என்று கடிந்து கொண்டான். மனைவி தலை கவிழ்ந்து நின்றாள்.
இந்த சிறுகதையில் வரும் குடும்பத்தை “திருச்சபைக்கும்’’ கணவனை “இயேசு
கிறிஸ்துவுக்கும்’’ மனைவியை “திருச்சபை ஊழியருக்கும்’’ பிள்ளைகளை “விசுவாச
மக்களுக்கும்’’ உருவகப்படுத்தி மறுபடியுமாக வாசித்து பாருங்கள்.
வசன ஆதாரம்:
2 இராஜாக்கள் 4:38-41
0 comments:
Post a Comment