Bread of Life Church India

ஐயோ, என்னை காப்பாற்ற யாரும் இல்லையா?

ஒரு மனிதன் மலையில் ஏறுவதற்காக வேண்டிய எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஏறிக்கொண்டிருந்தான். பல கடினமான பகுதியையும் கவனமாக கடந்தான். அவனுடைய பயணத்தில் எத்தனையோ இடறல்கள் வந்தும் அவைகளையும் தாண்டி மலையின் உச்சியை அடையும்படியாக அருகில் சென்று விட்டான். அவனுக்குள்ளாக மகிழ்ச்சி “இன்னும் சிறிது தூரம்தான் என்னுடைய இலக்கை நான் அடைய போகிறேன்’’ என்று நினைத்துக்கொண்டே உற்சாகமாக சென்று கொண்டிருந்தான். பகல் சென்று இருள் சூழ ஆரம்பித்தது. மலை உச்சியின் மிக அருகில் வந்து விட்டான்.
அந்த நேரத்தில் எதிர்பாராமல் அவன் கால் பிசகி, நிலை தடுமாறி பிடிமானம் ஒன்றும் கிடைக்காததால் அங்கிருந்து கீழே விழுந்தான். அவ்வளவுதான் தனது வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தவனுக்கு ஒரு மரத்தின் விழுது கிடைத்தது. அதை இறுக பிடித்துக்கொண்டான்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எல்லாம் இருட்டாக இருந்தது. அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பது தெரிய வில்லை. அவனுக்குள்ளாக பயம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் கண்ணீரோடு ஜெபிக்க ஆரம்பித்தான். “இயேசுவே என்னை காப்பாற்றுங்கள்’’ என்று கதறி கொண்டிருந்தான்.
அப்பொழுது அவனிடத்தில் இயேசு பேசினார். “மகனே நீ பிடித்துக்கொண்டிருக்கும் விழுதை விட்டு விடு’’ என்று சொன்னார். உடனே அவன் “என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னால் நான் விழாமல் இருக்க என்னை தாங்கி கொண்டிருக்கும் விழுதை விட்டு விடு என்று சொல்லுகிறீர்களே, இது உண்மையில் இயேசுவின் குரல் தானா? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது’’ என்று பதில் சொல்லி முன்னிலும் இன்னும் இறுக்கமாக பிடித்துக்கொண்டான்.
கரங்கள் வலித்தது, உடல் தளர்ந்தது, மனம் முழுவதும் பயம் சூழ்ந்திருந்தது. கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. ஐயோ, என்னை காப்பற்ற யாரும் இல்லையா? என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று துடித்துக்கொண்டிருந்தான். மறு படியுமாக இயேசு “ மகனே என் வார்த்தைகளை நம்பு, நீ பிடித்துக்கொண்டிருக்கும் விழுதை விட்டு விடு, நீ பிழைத்துக்கொள்வாய்’’ என்று சொன்னார். இயேசுவின் வார்த்தைகளை மறுபடியும் அவன் கேட்க மறுத்து விட்டான். இரவு  முழுவதும் அந்த விழுதில் தொங்கி கொண்டிருந்தான். இரவு விடிந்தது. அவன் அந்த விழுதை பிடித்தபடியே உறைந்து மரித்துப்போய் இருந்தான். அவன் தொங்கி கொண்டிருப்பதற்கும் தரையை தொடுவதற்கும் சிறிய அளவுதான் இருந்தது. அவன் அந்த விழுதை விட்டு இருந்தால் எந்த சேதமும் இல்லாமல் காக்கப் பட்டிருப்பான். அதை அறியாமலும், இயேசுவின் வார்த்தையை நம்பாமலுமே அவன் மரித்துப்போய் இருந்தான்.
"விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்'' ( எபிரெயர் 10:38) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
அந்த மனிதனைப்போன்றே இன்றைக்கும் அநேகர் தங்கள் சுயத்தில் நம்பிக்கை வைத்து, தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காமல் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் அதிகமான தோல்விகளை சந்திக்கிறார்கள்.
தேவனுடைய வார்த்தையை நம்பி, விசுவாசித்து நடப்பவர்கள் தங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டு நன்மைகளை பெற்றுக்கொள்கிறார்கள்.

0 comments:

Post a Comment