Bread of Life Church India

உங்கள் துக்கம் முடிந்தது

``உன் சூரியன் இனி அஸ்தமிப்பது மில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்ச மாயிருப்பார்; உன் துக்க நாட்கள் முடிந்துபோம்'' (ஏசாயா 60:20).
    கர்த்தர் தமது மக்களுக்கு வெளிச்சமாக இருந்து, தம்மை விசுவாசித்து பின்பற்றும் யாவரையும் பிரகாசிக்க வைக்கிறார்.
    கடந்த நாட்களில் துக்கத்துடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்த உங்கள் துக்கங்களை மாற்றி,  உங்களை ஆனந்த களிப்புடன்  செழிக்க வைக்கப்போகிறார்.

     சிலருடைய வாழ்க்கையில் துக்கத்தின்மேல் துக்கம் வேதனையின் மேல் வேதனை வாழ்க்கையே முடிந்து போனதோ? என்கிற அளவுக்கு மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருவார்கள்.
    நம்பிக்கை அற்றுப்போன நிலையில், ``எனது வாழ்க்கையில் விடிவுகாலம் என்பது இல்லையா? என்னை இப்படிப்பட்ட இக்கட்டிலிருந்து விடுவிப்பார் யார் உண்டு.'' என்ற கேள்விகளோடு  இருக்கலாம்.  அப்படிப்பட்ட நிலைமையில் உள்ளவர்களைபார்த்துத்தான் கர்த்தர் சொல்லுகிறார்.
    என் வாழ்க்கை முடிந்து போய் விடுமோ? என்று கலங்கிக் கொண்டிருக்கிறாய். ஆனால் உன் வாழ்க்கை அல்ல, உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
    ``விடியற்கால வெளுப்பைப் போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுக வாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்'' (ஏசாயா 58:8).
    இருளாக இருந்த உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உதித்து உங்கள் வாழ்வை பிரகாசமாக மாற்றுகிறார். நம்பிக்கை அற்றுப்போன உங்கள் வாழ்வை நம்பிக்கையுள்ளதாக மாற்றுகிறார்.
    அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந் திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது (லூக்கா 1:78,79)    விடாய்த்து போன உங்கள் வாழ்வை விசுவாசத்தில் கட்டியெழுப்புங்கள். கண்ணிருந்தும் குருடாய் இருப்பது போல்தான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு துக்கத்துடன் இருப்பது.

நம்முடைய துக்கங்களை சுமந்தார்

    ``மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்'' (ஏசாயா 53:4).
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, துக்கங்களை அவர் சுமந்து விட்டார். நாம் எதைக்குறித்தும் கலங்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் நம்முடைய பாடுகளை நாம் சுமந்து, துக்கம் நிறைந்தவர்களாக இருப்போ மானால் நம்மைப்போல முட்டாள்கள் வேறுயாருமல்ல என்பதுதான் உண்மை.
    ஒரு கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு மனிதர் வெளியூர் சென்று வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக ஒரே மூட்டையாக கட்டிக்கொண்டு, தனது தலையின் மேல் வைத்து சுமந்து கொண்டு வந்தார்.
    அப்பொழுது அந்த வழியாக அதே ஊரை சார்ந்த மற்றவர் தன்னுடைய மாட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தார்.
    தலைச்சுமையாக நடந்து சென்றவர் அருகில் வண்டி வந்த  போது அவரை அழைத்து, ``நானும் ஊருக்குத்தான் போகிறேன் நீங்களும் வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லி தனது வண்டியில் ஏற்றிக்கொண்டார்.
    இருவரும் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தனர். கொஞ்சத் தூரம் வந்ததும் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தவர் யதார்த்தமாக திரும்பிப் பார்த்தார் பார்த்தவருக்கு அதிர்ச்சி, ஏனென்றால், வண்டியில் உட்கார்ந்திருக்கும் நபர் தனது தலையிலேயே அந்த கனமான சுமையை சுமந்து கொண்டு வருகிறார்.
    உடனே வண்டி ஓட்டிக்கொண்டு வருபவர்   ``நீங்கள் கஷ்டப்பட்டு இந்த கனமான சுமையை சுமக்க முடியாமல் சுமந்து வருகிறீர்கள் என்றுதான் நான் உங்களை எனது வண்டியில் ஏற்றிக்கொண்டேன். ஆனால் நீங்களோ இன்னமும் அந்த சுமையை இறக்கி வைக்காமல் நீங்களே சுமந்து வருகிறீர்களே ஏன்''? என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் ``ஏற்கனவே வண்டியையும், நாம் இருவரையும் அந்த மாடு சுமந்து கொண்டு செல்கிறது. மேலும் அதற்கு கஷ்டம் கொடுப்பது போல் இந்த சுமையையும் வண்டியில் வைக்க வேண்டாம் என்றுதான் நானே எனது தலையில் வைத்து சுமந்து வருகிறேன்''. என்று பதில் சொன்னார். அதைக் கேட்டு வண்டி ஓட்டிச்செல்லும் மனிதர் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப் போனார்.
    அப்படியாகத்தான் நாமும் சில நேரங்களில் இருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்து, உன் துக்கநாட்கள் முடிந்து போனது என்று சொல்லியும், நாம் துக்கம் நிறைந்தவர்களாகத்தான் இருக்கிறோம்.
    அன்பு சகோதரனே, சகோதரியே நீங்கள் துக்கமுகமாய் இருப்பது கர்த்தருக்கு பிரியமில்லை. உங்கள் வாழ்வில் துக்கப்படுவதைப்போல சூழ்நிலைகளை சத்துரு கொண்டு வந்தாலும், கர்த்தருக்குள் நான் எப்போதும் சந்தோஷமாக இருப்பேன் (பிலி 4:4)  என்று, உங்கள் கவலைகள் அனைத்தையும் இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்துவிட்டு, (1 பேதுரு 5:7). எப்போதும் கர்த்தரைத் துதித்துக் கொண்டிருங்கள். (1தெச 5:18) ``உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்'' (யோவான் 16:20).         இனிமேல் உங்களைப் பார்த்து துக்கம்தான் துக்கப் படவேண்டும். ஏனென்றால், நீங்கள் துக்கமுகத்துடன் இல்லையே.
    நீங்கள் சிரிப்பை தொலைத்தவர்களைப்போல இருந்தது போதும்.
     உங்கள்வாழ்வில் துக்கம் முடிந்தது, சந்தோஷம் பொங்கட்டும்
    எப்போதும், எல்லா நேரமும், எந்நாளும் இயேசுகிறிஸ்துவை முன்பாக வைத்து செயல்படுங்கள். விசுவாசத்திலே உறுதியாக இருங்கள்,கர்த்தர் உங்களை நடத்துவார்.


0 comments:

Post a Comment