இதற்கு யார் காரணம் ?
வயது முதிர்ந்த கணவன் மனைவி உச்சி வெயிலில் தங்களின்
வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்தனர். “நாம்
பெற்று வளர்த்தது ஒரே மகன் என்று எவ்வளவு செல்லமாக பார்த்து பார்த்து எப்படி
எல்லாம் அவனை நாம் வளர்த்தோம். ஒரு
நிமிஷத்தில் நம்மை தூக்கி எறிந்து விட்டானே’’, என்று கண்ணீர் முகத்தில் வடிய அதை துடைக்க கூட மறந்த
நிலையில் மிகுந்த வேதனையோடு தளு தளுத்த குரலில் பேசிய தனது மனைவியின் வார்த்தையை
கேட்ட முதியவர், “இன்னுமா நீ அதையே நினைச்சுகிட்டு வருகிறாய், என்ன செய்ய நம்முடைய
நடுத்தர வயதை மகனை வளர்ப்பதற்க்காகவே செலவு செய்து பாடு பட்டோம். அவன் வளர்ந்து
நம்மை பார்த்துக்கொள்வான் என்று நினைத்தோம். ஆனால் அவனோ, நம்மை நாயை விட கேவலமாக
துரத்தி விட்டான். பரவாயில்லை, மீதி நாட்களில் நமக்காக பாடுபட்டு, நம்முடைய
வாழ்க்கையை ஓட்டுவோம்’’ என்று கண்களில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை கண்களை தாண்டி வரவிடாமல்
சமாளித்துக்கொண்டே முதியவர் பேசினார்.
“இந்த பூமியில் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டும் என்று
கடவுள் வைத்திருக்கிறார். இன்னும் என்ன என்ன கஷ்டங்களை பட வேண்டுமோ’’ என்று சொல்லிக்கொண்டே,
பெருமூச்சு விட, “இதெல்லாம் ஆதியில் இருந்து வந்தவைகள்தான். அன்று ஆதாம் ஏவாள்
கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து இருந்திருந்தால் மனு குலத்திற்கு பாவம்
வந்திருக்காது, பாவம் வராமல் இருந்திருந்தால் இத்தனை பாடுகள் நாம் படவேண்டிய
அவசியம் இல்லை. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த ஆதாம், ஏவாள் செய்த
பாவம்தான்’’ என்று பெரியவர் மிகுந்த
ஆவேசமாக பேசினார்.
இவர்கள் பேசிக்கொண்டு வந்ததை எல்லாம்
ஆரம்பம் முதல் இவர்களுக்கு பின்னால் வந்த மனிதன் கேட்டுக்கொண்டே வந்தான்.
இவர்களின் பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொண்ட அந்த மனிதன், சற்று வேகமாக நடந்து
முதியவரின் அருகில் வந்து, “ஐயா உங்களுக்கு பின்னால்தான் நான் இவ்வளவு நேரமும்
வந்தேன். நீங்கள் பேசிக்கொண்டு வந்தது என் காதில் விழுந்தது, நீங்கள் இப்பொழுது
எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரிகிறது, நீங்கள்
உங்களின் மகனால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள், இந்த வயதில் நீங்கள் என்ன
வேலை செய்து எப்படி தனியாக இருப்பீர்கள். என்னுடைய வீடு அருகாமையில்தான்
இருக்கிறது, எனக்கு தாய் தகப்பன் இல்லை, உங்களை தாய் தகப்பனாக என்னோடு கூட
வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். என்னோடு கூட வாருங்கள்’’ என்று வருந்தி
அழைத்தான்.
அவன் அப்படி கூப்பிட்டதும் இருவருக்கும்
ஒன்றும் புரிய வில்லை, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “ ஏன் தயங்குகிறீர்கள்,
தயவு செய்து என்னோடு வாருங்கள், என் தகப்பன் தாயைப்போல நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று மறுபடியும்
அவன் அழைக்க “ இல்லப்பா உனக்கு ஏன் வீண் சிரமம். இந்த காலத்தில் பெத்த பிள்ளையே,
பெத்தவங்கள பார்த்துக்கொள்ளாத போது, நீ யார் பெத்த பிள்ளையோ, நீ கேட்டதே போதும்பா,
நீ நல்லா இருப்பாய். எங்க வாழ்க்கை இன்னும் கொஞ்ச காலம்தான். அது இப்படியே போகட்டும்’’ என்று முதியவர்
சொன்னார்.
“அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை, நீங்க
என்னோடு வரவில்லை என்றால்தான் எனக்கு சிரமம். அதனால் நீங்க இப்பொழுதே என்னோடு கூட
வரவேண்டும்’’ என்று அன்பு கட்டளையோடு அழைக்க மறுபடியும் அவர்களால்
மறுத்து பேச முடியாமல் இருவரும் அந்த மனிதனோடு கூட செல்ல ஆரம்பித்தனர்.
பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர். வீட்டை
பார்த்ததும் முதியவர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர். “அப்பா எவ்ளோ பெரிய வீடு,
இதிலேயா நாங்க தங்க போகிறோம்’’ என்று இருவரும் ஒரே நேரத்தில் இணைந்து பேசினார்கள். அந்த
மனிதன் சிரித்துக்கொண்டே, உள்ளே வாருங்கள்’’ என்று அழைக்க இருவரும் அவனோடு
வீட்டுக்குள் சென்றனர்.
மிகுந்த அன்போடு அவர்களை உபசரித்து,
அவர்கள் தங்குவதற்கான அறையை ஆயத்தப்படுத்தி, “இனி இது உங்கள் வீடு, இதில்
எல்லாவற்றையும் அனுபவிக்க உங்களுக்கு உரிமை உண்டு, எந்த தயக்கமும் இல்லாமல்
உங்களின் மகன் வீட்டில் இருப்பது போல நீங்கள் இருக்கலாம்’’ என்று சொல்லி
அவர்களுக்கு தேவையான எல்லா பொருள்களையும் வாங்கி கொடுத்தான்.
“எங்க கஷ்டங்களைப் பார்த்து தேவன்தான்
உன்னை எங்களுக்கு மகனாக கொடுத்திருக்கிறார்’’ என்று முதியவர் ஆனந்த கண்ணீருடன்
சொன்னார். “இனிமேல் பழைய விஷயங்களை நினைத்து கவலைப்படாமல், சந்தோஷமாக இருங்கள்.
நமது தேவன் சமாதானத்தின் தேவன் ஒருவரையும் அவர் கைவிடமாட்டார்’’ என்று சொல்லி
“வாருங்கள் சாப்பிடலாம்’’ என்று உணவை எடுத்து வைத்தான்.
மிகுந்த சந்தோஷத்துடன் நாட்கள் செல்ல ஆரம்பித்தன. “அப்பா, அம்மா மகன்
என்று ஒரே குடும்பமாக மகிழ்ச்சியுடன் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தி வாழ்ந்து
வந்தனர்.
ஒரு நாள் “அப்பா, அம்மா’’ என்று
கூப்பிட்டான். “என்னப்பா கூப்பிட்டாயா?’’ என்று இருவரும் வந்தார்கள்.
“ஆமா அப்பா, நான் வேலை விஷயமாக வெளியூர்
செல்ல வேண்டியது இருக்கிறது. எனவே, நீங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன்’’ என்று சொல்லி
அவர்கள் கையில் ஒரு டப்பாவை கொடுத்து, “இதை மட்டும் பத்திரமாக
பார்த்துக்கொள்ளுங்கள். இதை திறந்து பார்க்க வேண்டாம். நான் வந்தபின்
உங்களிடம் வாங்கி கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, புறப்பட்டு சென்றான்.
சில நாட்கள் சென்றன. ஊருக்கு சென்ற மகன்
திரும்பி வந்தான். தாய், தகப்பனாகிய அந்த முதியவர்கள் அவனை அன்போடு வரவேற்று, “என்னப்பா
இத்தனை நாள் ஆகி விட்டது, உன்னை பார்க்காமல் எங்களுக்கு கஷ்டமாக இருந்தது’’ என்று அம்மா
சொல்ல, ஆமாம் என்று ஆமோதிப்பது போல் அப்பா தலையை அசைத்துக்கொண்டிருந்தார்.
“எனக்கும் அப்படித்தான் இருந்தது’’ என்று மகன் சொன்னான்.
சிறிது நேரம் கழித்து, “அம்மா, அப்பா
நான் ஊருக்கு போகும் நேரம் உங்களிடம் ஒரு டப்பாவை கொடுத்து பத்திரமாக வைத்திருங்கள்
என்று சொல்லி கொடுத்து சென்றேனே அதை கொண்டுவாருங்கள்’’ என்று மகன்
கேட்டதும், அம்மாவும், அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்து, திகைத்த படியே சென்று
அந்த டப்பாவை கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அதை வாங்கி, திறந்து பார்த்த மகனின்
முகம் கோபத்தால் நிறைந்தது. “நான் போகும் போது, என்ன சொல்லி சென்றேன், இந்த
டப்பாவை திறக்க கூடாது என்று சொல்லி இருந்தேன். ஏன் திறந்தீர்கள்’’ என்று கேட்டதும்
என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் உறைந்து நின்றனர்.
முதியவர்கள் இருவரும் மிகுந்த பாடுகள்
மத்தியில் மனவருத்தத்தில் இருந்த போது, “ஆதாம் ஏவாள் கடவுளின் வார்த்தைக்கு
கீழ்ப்படிந்து இருந்திருந்தால் மனு குலத்திற்கு பாவம் வந்திருக்காது, பாவம் வராமல்
இருந்திருந்தால் இத்தனை பாடுகள் நாம் படவேண்டிய அவசியம் இல்லை. எல்லாவற்றிற்கும்
காரணம் அந்த ஆதாம், ஏவாள் செய்த பாவம்தான்’’ என்று பேசியது
நினைவுக்கு வந்ததால், இப்போது இவர்கள் சந்தோஷமாக ஒரு குறையும் இல்லாமல்
இருக்கிறார்கள். இவர்களுக்கு சிறிய பரீட்சை வைக்கலாம்’’ என்று நினைத்து,
வெளியூருக்கு செல்வதற்கு முன்பு, “தன்னுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறார்களா?
இல்லையா? என்று அறிந்து கொள்வதற்காக ஒரு டப்பாவுக்குள், இரண்டு சுண்டெலிகளை
போட்டு, பக்க வாட்டில் காற்று போகும் படியாக செய்து, மூடி அவர்களிடம் கொடுத்து
சென்றான்.
அவன் ஊருக்கு சென்ற சிறிது நேரத்திற்குள்
இருவருக்குமே “அந்த டப்பாவிற்குள் என்ன இருக்கும், ஏன் அதை இவ்வளவு பாதுகாப்பாக
வைத்திருக்கும் படி கொடுத்து சென்றிருக்கிறான். திறந்து பார்க்கலாம் என்றால்,
திறக்க கூடாது என்று வேறு சொல்லி விட்டான். என்ன செய்வது’’ என்று
இருவருக்கும் மிகுந்த மனப்போராட்டம்.
நேரம் ஆக ஆக இன்னும் அதை பார்த்து விட
வேண்டும் என்ற ஆவல் அதிகமாக, “திறந்து பார்த்து மூடி வைத்து விடலாம், நாம்
திறப்பது தெரியவா போகிறது’’ என்று சொல்லிக்கொண்டே திறந்து பார்க்க, டப்பாவிற்கு உள்ளே இருந்த எலிகள்
வெளியே குதித்து ஓடியது. டப்பாவிற்குள் வேறு எதுவும் இல்லாமல் “இதையா இவ்வளவு
பாதுகாப்பாக வைத்திருக்க சொன்னான்’’ என்று நினைத்து அதை மூடி வைத்தனர்.
தன்னுடைய வார்த்தையை மதிக்காத முதியோரை
பார்த்து, “அன்றைக்கு ஆதாம் ஏவாள் செய்த பாவத்தினால்தான் நாம் இப்படி
கஷ்டப்படுகிறோம் என்று சொன்னீர்களே, உங்களுக்கு இந்த வீட்டில் எல்லா வசதிகளையும்
செய்து கொடுத்து, உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்துச் சென்றும்,
ஒன்றுமில்லாத அந்த டப்பாவை திறந்து பார்க்க வேண்டும் என்று என் வார்த்தையை மீறி
விட்டீர்களே, இப்படித்தான் பாவம் செய்த மனிதனை விடுவிக்க தம்முடைய ஒரே பேரான
குமாரன் இயேசு கிறிஸ்துவை தேவன் இந்த பூமிக்கு அனுப்பினார்.
அவர் மனிதனின் பாவங்களை சுமந்து,
மனிதர்களுக்காக பாடு பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில்
உயிரோடு எழுந்ததினால், அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு பாவங்களை மன்னித்து, புதிய
வாழ்க்கையை கொடுத்து, சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் வாழவைத்து, நித்திய ஜீவனை
கொடுக்கிறார்.
ஆனால் மனிதர்களோ, உங்களைப் போலவே அந்த
நல்ல தெய்வத்தின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் அவர் வேண்டாம் என்று சொன்ன ஒன்றுமில்லாத
உலகத்தின் இச்சைகளுக்கு அடிமையாகி, அவருடைய மனதை வேதனைப் படுத்துகிறார்கள்.
இனிமேலாவது இயேசு கிறிஸ்துவுக்கும், உங்களை நம்புகிறவர்களுக்கும் உண்மையாக
கீழ்ப்படிந்திருங்கள்’’ என்று சொல்ல சொல்ல, முதியோர்களான தாய், தகப்பன்
தலைகவிழ்ந்து நின்றனர்.
"அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும்
மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.அவைகளில் நீங்கள் முற்காலத்திலே
இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில்
இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும்
நடந்துகொண்டீர்கள்.
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும்
முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும்
மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக்
கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்
நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த
நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்'' ( எபேசியர் 2: 1-5).
"இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத்
தரித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும்
காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே
பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்'' (1 பேதுரு 4:1,2).
The philanthropist chastises me too. I learn a lesson and get challenged to obey
ReplyDelete