மரணத்தை காணாத மனிதன்
இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்த
மாலை வேளை, ஏவாள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். நடையில் ஒரு பதட்டம்.
ஒரு இடத்தில் நிற்க முடியாதபடிக்கு கூடாரத்திற்கு உள்ளே போகிறதும் வெளியே வருவதுமாக படபடப்புடன் காணப்பட்டாள். தூரத்தில் ஆதாம் வருவது
தெரிந்ததும் வேகமாக ஓடினாள்.
ஏவாள் ஓடிவருவதை கண்ட ஆதாம் “
என்ன ஏவாள் ஏன் பதட்டமாக ஓடிவருகிறாய்?’’ என்று கேட்டான். மூச்சு இரைத்தபடியே “ காயீனையும், ஆபேலையும்
காணவில்லை. காலையில் வெளியே சென்றவர்கள் இன்னும் வரவில்லை’’. என்று படபடப்புடன் சொன்னாள். “என்ன காலையில் சென்றவர்கள் இன்னும் வரவில்லையா?
எங்கு செல்வதாக சொன்னார்கள்’’ என்று ஆதாமும் சற்று பயந்தபடியே கேட்டான். “என்னிடத்தில்
ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து பார்க்கும் போது,
காயின்தான் ஆபேலை தன்னுடைய வயல்வெளிக்கு அழைத்துச்சென்றான்’’ என்று ஏவாள்
சொன்னதும் “சரி நீ இங்கேயே இரு நான் சென்று பார்த்து வருகிறேன்’’ என்று சொல்லி
ஆதாம் ஓட்டமும் நடையுமாக வேக வேகமாக காயீனின் வயல்வெளியை நோக்கி சென்றான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் வயல்வெளியை
அடைந்தான் ஆதாம். சூரியன் மறைந்து இருட்டுகிற நேரம் சரியான வெளிச்சம் இல்லாததால் தூரத்தில் உள்ளவைகள்
ஒன்றும் தெரியவில்லை. “காயீன், ஆபேல்’’ என்று கூப்பிட்டபடியே சென்றான். பதில் ஒன்றும் வரவில்லை
சற்று நேரம் ஆக ஆக மிகுந்த படபடப்புடன் வயல்வெளி முழுவதும் சுற்றி வந்து விட்டான் எந்த
ஒரு பதிலும் இல்லை. நடை தளர்ந்து சோர்ந்து
போய், தன் கூடாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அப்பொழுது கால் தட்டி கீழே
விழப்பார்த்தான். எது தட்டியது என்று கீழே குனிந்து பார்த்தவன் உறைந்து இரத்த
வெள்ளத்தில் கிடந்த ஆபேலை பார்த்து “ஆபேல், ஆபேல்’’ என்று கூப்பிட்டான். அவனிடமிருந்து
பதில் இல்லை. “ஜயோ, ஆபேல் உனக்கு என்ன ஆச்சு ’’ என்று சொல்லி கதறி அழுதுகொண்டே.
சுற்றும் முற்றும் காயீன் இருக்கிறானா என்று பார்த்தான். ஒன்றும் அவன் கண்களுக்கு தெரியாததால்,
அழுதபடியே தனது தோள்மேல் ஆபேலை தூக்கிக்கொண்டு, கூடாரத்தை நோக்கி நடக்க
ஆரம்பித்தான்.
அதுவரை கூடார வாசலிலேயே அமர்ந்திருந்த
ஏவாள். ஆதாம் வருவதை கண்டு ஓடினாள். அருகில் சென்றதும் ஒரு கனம் திகைத்து,
“என்னங்க, என்னங்க ஆச்சு ஆபேலுக்கு, காயீன் எங்கே?’’ என்று தேடினாள்
கூடாரத்திற்குள் வந்து, உயிறற்ற சடலமாக இருந்த ஆபேலை படுக்கவைத்தான். ஆபேல் இறந்து
விட்டான் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. மறுநாள் வரை அப்படியே ஆபேல் கிடப்பதை
பார்த்து, “சாகவே சாவாய்’’ என்று கர்த்தர் சொன்ன வார்த்தை
அவர்களுக்கு ஞாபகம் வந்தது. அப்பொழுதுதான் ஆபேல் மரித்துப்போனான் என்று அறிந்ததும்
முதல் மரணத்தை பார்த்தவர்கள் முன்பிலும் அதிகமாக அழுதார்கள். காயீன் அது வரை
வராததை கண்டு, காயீன்தான் ஆபேலை கொலை செய்து விட்டு ஓடி விட்டான் என்று உறுதி
செய்தனர்.
துக்கத்துடனே, ஆபேலுக்கு இறுதி
காரியங்கள் செய்து முடித்தார்கள். “ஆபேல் மரித்து போனான். காயீன் என்ன ஆனான்
என்று தெரியவல்லை, எல்லா இடமும் தேடி பார்த்து விட்டோம்’’ என்று பேசிக்கொண்டனர். நாட்கள் செல்ல ஆரம்பித்தது. வெகு நாட்கள் சென்ற பிறகு
அந்த துக்கத்தில் இருந்து விடுபட ஆரம்பித்தார்கள்.
சில வருடங்கள் சென்றது. ஏவாள் கருவுற்று
ஆண்பிள்ளையை பெற்றெடுத்தாள். ஆதாமும் ஏவாளும் தங்கள் துக்கம் மறைந்து” காயீன் கொலை
செய்த ஆபேலுக்கு பதிலாக கடவுள் எனக்கு வேறொரு மகனை கொடுத்தார்’’ என்று சொல்லி
“பதிலாக கொடுக்கப்பட்டது’’ என்று அர்த்தம் தரும் “சேத்’’ என்னும் பெயரிட்டனர்.
நாட்கள் கடந்தோடின ஆதாமுக்கும்
ஏவாளுக்கும் இன்னும் அதிகமான பிள்ளைகள் பிறந்து சந்ததிகள் பெருகின. ஆதாம் தனது
பிள்ளைகளுக்கு கடவுளைக் குறித்து சொல்லிக்கொடுத்து பயபக்தியுடன்
பிள்ளைகளை வளர்த்தான். சேத் நூற்றைந்து வயதான போது ஒரு மகனை பெற்றான். மனுக்குலம்
அழிவுள்ளது என்பதை உணர்த்தும் படியாக சேத் தன் மகனுக்கு, “அழிவுள்ளது’’ என்று அர்த்தம்
தரக்கூடிய “ஏனோஸ்’’ என்று பெயரிட்டான். அப்பொழுது மனிதர் கர்த்தருடைய நாமத்தை
தொழுதுகொள்ள ஆரம்பித்தனர்.
காலங்களும் தலைமுறைகளும் உருண்டோட ஆரம்பித்தது. மக்கள்
கூட்டம் பூமியில் பெருக ஆரம்பித்தது.
ஆதாமின் ஆறாம் தலைமுறையான யாரேத் என்பவருக்கு, முதல் குழந்தையாக
ஒரு மகன் பிறந்த பொழுது, “இவன் கர்த்தருக்கு பிரியமானதை “கற்றுக்கொள்பவன்’’ என்று அர்த்தம் தரும் “ஏனோக்’’ என்ற பெயரை சூட்டி மிகவும்
மகிழ்ச்சியடைந்தான்.
ஏனோக் வளர ஆரம்பித்தான். அவனுடைய
பெயருக்கு ஏற்றார் போலவே எல்லாவற்றையும் கற்றுக்கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டினான். அவனுடைய
செயல்களைப்பார்த்து அவனுடைய பெற்றோர் சந்தோஷப்பட்டார்கள்.
கடவுள் மீது மிகுந்த பயபக்தி உடையவனாக
ஏனோக் இருந்தான். அவன் தனது கொள்ளு தாத்தா ஆதாமிடம்தான் அதிக நெருக்கமாக இருந்து வந்தான். மிகவும் முதிர்ந்த வயதில் இருந்த ஆதாமும். தனது கொள்ளுப்பேரனிடம்
அன்பாக இருந்தார்.
வாலிப வயதை அடைந்த ஏனோக் முன்பிலும்
அதிகமாக கடவுளைக்குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எப்போதும் ஆதாமோடே
இருந்தான். அப்படியிருக்கையில் ஒரு நாள், ஆதாம் ஏனோக்கைப் பார்த்து “ஏனோக், கர்த்தர் மிகவும்
அன்பானவர். அவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார். நாம்தான் அவருடைய வார்த்தைகளுக்கு
கீழ்ப்படிந்து நடக்காமல் அவரை விட்டு விலகி வாழ ஆரம்பிக்கிறோம். பார் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாக நடந்து கடவுளுக்கு
விரோதமாக நடந்து வருகின்றனர். ஆனால் நீ மற்றவர்களைப்போல இருக்க கூடாது’’ என்று கண்ணீரோடு
கூட ஏதேனில் தானும் தனது மனைவி ஏவாளும் கடவுளோடு கூட உலாவியதை நினைவு கூர்ந்து
சொல்லுவார்.
எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பான் ஏனோக். அது முதல் “நானும்
கடவுளிடம் பேசவேண்டும். அவரோடு நடக்கவேண்டும், கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையின்படியாக கடவுளுக்கு பிரியமானவனாக வாழ வேண்டும்’’ என்று தன்னுடைய
மனதில் தீர்மானம் எடுத்தான். அதன் படியாகவே ஏனோக்கின் செயல்பாடுகள் இருந்தன. தன்னுடைய வேலை நேரத்திலும், போகும் போதும் வரும்போதும் எல்லா நேரமும் கடவுளை குறித்த எண்ணமே ஏனோக்கின் சிந்தை
முழுவதும் நிறைந்திருந்தது. எப்போதும் யாரிடத்தில் பேசினாலும் கடவுளைக் குறித்தும், அவருடைய அன்பைக் குறித்தும், கடவுளின் சித்தத்தைக் குறித்துமே பேசுவான். அவபக்தியாக வாழ்ந்தவர்கள் ஏனோக்கை
வெறுத்தார்கள். அவனுடைய பேச்சைக்
காரணம் காட்டி அவனை அவமானப்படுத்தினார்கள்.
அப்படிப்பட்ட நேரத்தில்
அவபக்தியுள்ளவர்கள் செய்து வந்த அவபக்தியின் செயல்களின் நிமித்தமும், தமக்கு
விரோதமாக அவபக்தி உள்ளவர்கள் பேசின கடின வார்த்தைகள் எல்லாவற்றின்
நிமித்தமும் “இதோ எல்லாருக்கும்
நியாயத்தீர்ப்புக் கொடுப்பதற்கும், அவபக்தியாய்
நடப்பவர்களைக் கண்டிப்பதற்கும், ஆயிரமாயிரமான
தமது பரிசுத்தவான்களோடு கூடக் கர்த்தர் வருகிறார்’’ என்று முன் அறிவித்து எச்சரித்து
பேசுவான்.
ஆனால் அப்பொழுதும் அவனுடைய பேச்சை சிலர்
கேலி பேசி அவனை அவமரியாதை செய்தனர். ஆனாலும் நாளுக்கு நாள் ஏனோக்கின் செயல்கள்
கடவுளோடு நெருங்கி கொண்டே இருந்தன. தனிமையான நேரத்தில் எல்லாம் எப்போதும் கடவுளோடு ஜெபத்தில்
பேசுகிறவனாகவே இருந்தான்.
திருமண வயதை ஏனோக் எட்டிவிட்டான் என்று
அறிந்த அவனுடைய பெற்றோர், பெண்பார்த்து திருமணம் செய்து வைத்தனர். திருமண
வாழ்க்கையிலும் தனது மனைவியை அதிகமாக நேசித்து, அன்பு கூர்ந்தான்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு,
குழந்தைகளும் பிறந்தனர். தனது குடும்பம் பிள்ளைகளை கவனித்துக்கொண்டு, கடவுளுக்கு
அதிகமான முக்கியத்துவம் கொடுத்து தினம் தோறும் கடவுளிடம் பேசுகிறவனாக ஏனோக்
இருந்து வந்தான். ஆனாலும் அவனுக்கு இருந்த மிகப்பெரிய மனக்குறை என்னவென்றால்
“கடவுள் என்னோடு பேசுகிறார். கடவுளின் சத்தத்தை மட்டும் என்னால் கேட்க முடிகிறது. கடவுளை நேரடியாக பார்க்க முடியவில்லையே’’ என்று வேதனையுடன்
இருந்து வந்தான்.
ஆதாம் ஏவாளோடு கடவுள் நேரடியாக பேசிப் பழகி அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளைக் கொடுத்து நடத்தி வந்ததையும், அவர்கள் கடவுளுடைய வார்த்தையை
மீறி பாவம் செய்ததால் அதற்கு பின்பு அவர்களாலும் அவர்களுடைய சந்ததிகளாலும் கடவுளை
நேரடியாக காணமுடியாதபடி இருக்கிறது என்று ஏற்கனவே ஆதாம் ஏனோக்கிடம் சொன்னவைகளை
எல்லாம் அவ்வப்போது நினைத்துப்பார்ப்பான்.
நாட்கள் கடந்தன ஒரு நாள் ஏனோக் தேவனோடு பேசிக்கொண்டிருந்த
வேளையில், கடவுள் நேரடியாக ஏனோக்கிற்கு தன்னை வெளிப்படுத்தி
காண்பித்தார். அதற்காகவே வெகு நாட்கள் காத்திருந்த ஏனோக் ஒருகனம் மகிழ்ச்சியில்
திகைத்து நின்றான். “ஏனோக் நீ எனக்கு பிரியமானவன், உன்னுடைய விசுவாசமும் உன்னுடைய
பக்தியுமே நீ என்னை காணும் படியாக செய்தது’’ என்று கடவுள் ஏனோக்கிடம் பேசினார். அதிர்ச்சியில் இருந்த
ஏனோக் 'நான் காண்பது கனவா? அல்லது நிஜமா? அல்லது தரிசனத்தில் கடவுளை நான் காண்கிறேனா?'என்று யோசித்து
மறுபடியுமாக தன்னை பார்க்கிறான். 'இல்லை இல்லை இது கனவோ, தரிசனமோ அல்ல,
நான் கடவுளை நேரடியாகத்தான் பார்க்கிறேன்' என்று உறுதி படுத்திக்கொண்டவனாக கடவுளோடு பேச
ஆரம்பித்தான்.
கடவுள் ஏனோக்கோடு கூட அநேக காரியங்களைப் பேசினார். உலகத்தின் ஆரம்பத்தையும் முதல் மனிதர்களின்
பாவத்தினால் ஏற்பட்ட சாபத்தையும், அதற்கு பின்பும் மனிதர்களின் பொல்லாத
நடக்கைகளையும் பற்றி விரிவாக பேசி” இந்த உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும்
சில நாட்களில் பூமி தண்ணீரினால் அழிக்கப்படும்’’ என்று கடவுள் சொன்னார். அதற்கு ஏனோக்
“அழிவில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லையா?’’ என்று கேட்டான். அதற்கு கர்த்தர் “விசுவாசத்தோடு என்னுடைய
வார்த்தைகளுக்கு கீழ்ப்படிகிறவர்கள் அந்த அழிவில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்’’ என்றார். இப்படியாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
இவ்விதமாக கடவுள் வருவதும் ஏனோக்கோடு
பேசுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் வேறு ஒருவராலும் கடவுளை நேரடியாக
காணமுடியாமல் இருந்ததால் ஏனோக் “நான் கடவுளிடம் நேரடியாக பேசினேன்’’ என்று சொன்ன
பொழுது, ஒருவரும் அவனுடைய வார்த்தைகளை நம்பவில்லை.
கடவுளுடைய வார்த்தையின்படி தனது
வாழ்க்கையில் செயல்பட்டு வந்த ஏனோக் எல்லாவற்றிலும் கடவுளுக்கு கீழ்ப்படிந்து,
உண்மையும் நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்து வந்தான். அது மட்டுமல்ல கடவுளுடைய
வார்த்தைகளை பெற்று, மக்களுக்கு அந்த வார்த்தைகளை போதித்து வந்தான். ஒரு சிலர் அவனுடைய வார்த்தைகளை கேட்டு, அதன்படி நடந்து
வந்தார்கள். சிலர் அவனை இகழ்ந்து அவனை பரியாசம் செய்தனர். ஆனாலும் அவைகளை ஏனோக்
ஒரு பொருட்டாக எண்ணாமல், தன்னுடைய வேலையில் முழு கவனமுடன் இருந்தான்.
ஒரு நாள் அவன் கடவுளோடு நேரடியாக
பேசிக்கொண்டிருந்த நேரத்தில், கடவுள் ஏனோக்கிடம் “மனிதர்கள் மரித்த பின், மறு
ரூபமாகி தன்னிடத்தில் வருவார்கள்’’ என்று சொன்னார். அதை கேட்ட ஏனோக்கிற்கு விளங்கி கொள்ள
முடியவில்லை. ஆகையால் “நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை, அது என்ன மரித்தபின்
மறுரூபம் அடைவது அப்படி என்றால் என்ன? ‘’ என்று
சந்தேகத்துடன் கேட்டான்.
கடவுளும் அவனுடைய கேள்விக்கு விளக்கமாக
பதில் கொடுத்தார். “மறுரூபம் என்பது மனிதர்கள் பூமியில் வாழ்கிற வரையில்
சரீரத்துடனும் இரத்தத்துடனும் வாழ்கிறார்கள், ஆனால் அவர்கள் மரித்தபின் சரீரம்
மண்ணுக்கு சென்றுவிடுகிறது. பிறகு நான் அவர்களுக்கு மகிமையான வேறு ஒரு சரீரம் கொடுத்து எழும்ப
செய்வேன். அதற்கென்று நாட்களையும், காலங்களையும் நியமித்திருக்கிறேன்’’ என்று கடவுள்
தனது திட்டத்தை எல்லாம் நண்பனிடம் பேசுவது போல ஏனோக்கிடம் விவரித்து சொன்னார்.
அதைக்கேட்ட ஏனோக் கடவுளிடம் “நான் மரணம் அடையாமல் மறுரூபம் ஆகவேண்டும்’’ என்று தனது ஆசையை
கடவுளிடம் சொன்னான். நீ கேட்கிற காரியம்
கடைசி நாட்களில் நடக்க கூடிய சம்பவம் நீ அதை முன்பதாகவே கேட்கிறாயே’’ என்று சொல்லி
விட்டு, “சரி மனிதர்கள் எல்லோரும் மறுரூபமாவர்கள் என்று அனைவரும் அறிந்து கொள்ளும்
விதமாக நீ மரணம் அடைவதற்கு முன், உன்னை மறுரூபமாக என்னோடு எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார்.
அதை கேட்டதும் ஏனோக் மிகுந்த சந்தோஷமும், மகிழ்ச்சியும்
அடைந்தான். அதற்கான நாளை எதிர்பார்த்து காத்திருந்தான். நாட்கள் கடந்தன ஏனோக்
தன்னுடைய 365ம் வயதில் ஒரு நாள் கடவுளோடு பேசிக்கொண்டிருக்கும் போதே கடவுள் அவனை
மறுரூபமாக்கி தன்னோடு கூட பரலோகத்திற்கு
அழைத்துச் சென்றார்.
ஏனோக்கை காணாமல் அவனுடைய
குடும்பத்தினரும், உறவினர்களும் அவனை தேடிபார்த்தார்கள். எங்கு தேடியும் அவன்
காணப்படவில்லை, “ஒரு நாளிலே நான் மறுரூபமாக கடவுள் என்னை அழைத்து செல்வார்’’ என்று ஏனோக்
அடிக்கடி சொல்லி வந்ததை நினைவு கூர்ந்து “கடவுள் அவனை மறுரூபமாக்கி
எடுத்துக்கொண்டார்’’ என்பதை அறிந்து கொண்டனர்.
ஏனோக்கின் மூத்தமகன் மெத்தூசலா மற்றும்
அநேக மகன்களும் மகள்களையும் ஏனோக் கடவுளுக்கு பிரியமாகவே வளர்த்திருந்தான்.
அவனுடைய பிள்ளைகள் பக்தியுடனும், கடவுளுக்கு பயந்து உண்மையோடும், நேர்மையோடும்
வாழ்ந்து வந்தனர். மெத்தூசலாவிற்கு முதல் மகன் பிறந்தான். அவனுக்கு லாமேக்கு என்று
பெயர் சூட்டி மகிழ்ந்தான். லாமேக்கிற்கு ஒரு மகன் பிறந்தான் அப்பொழுது இவன் “நம்மை
தேற்றுவான்’’ என்று சொல்லி அந்த
பிள்ளைக்கு “நோவா’’ என்று பெயர் சூட்டினான்.
ஆதியாகமம் 5ம் அதிகாரத்தில் இருந்து.... கதை வடிவில்...
0 comments:
Post a Comment