Bread of Life Church India

இழந்ததை திரும்ப பெறுவாய்


பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (யோவேல் 2:25). உங்கள் பிரயாசத்துக்கு தக்க பலனை பெற்றுக் கொள்ளாமலும்,  உங்கள் உழைப்பின் பயனை உண்ணாமலும், வீணான விரயமும், தேவையில்லாத மன உளைச்சலும் அடைந்து நீங்கள் வேதனைப்பட்டு கலங்கிப் போயிருக்கலாம்.

                இனி உங்களின் வாழ்வில் இதுவரை உங்களைவிட்டு சென்ற ஆசீர்வாதத்தின் பலனை பெற்றுக் கொள்ளும் படியாக தேவன் அவைகளை திரும்பக் கொடுக்கப் போகிறார்.
                எத்தனையோ விதமான நிந்தையினாலும், அவமானத்தினாலும் கூனிக்குறுகி ``தேவன் ஏன் என்னுடைய வாழ்விலே இப்படிப்பட்ட காரியங்களை அனுமதித்தார்? உண்மையாக கிடைக்க வேண்டிய உயர்வும், மதிப்பும் கூட எனக்குக் கிடைக்கவில்லையே'' என்று மனம் சோர்ந்து போன நிலையில் நீங்கள் இருக்கலாம்.
                ஆனால், இதுவரை அழிந்துபோன தொலைந்து போன யாவையும் திரும்ப கொடுக்கவும், மேலும் இனி வரும் நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள், பிரயாசங்கள் உழைப்புகள் அவைகளின் நிறைவும் சிந்தாமல் சிதறாமல் நூறு சதவீதம் அப்படியே பெற்றுக் கொள்ளும் படியாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்குக் கொடுக்கப் போகிறார். பயப்படாதிருங்கள் உண்மையாக தேவனை பற்றிக் கொண்டிருக்கும் யாவருக்கும் தேவன் நன்மைகளை நிச்சயமாகக் கொடுப்பார்.
                தேவன் ஆசீர்வதிக்க தீர்மானித்து விட்டாரானால் அதற்கு விரோதமாக எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் அவைகளை நீக்கி, தாம் சொன்ன வார்த்தைகளை நிலைநிறுத்துவார்.
                தேவனே எனக்கு நன்மை செய்யும் என்று தேவனையே சார்ந்து கொண்டு, விசுவாச வாழ்வில் ஒவ்வொரு நாளும் மேல் நோக்கி செல்லுங்கள்.
                தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து, உண்மையான அன்பிலும், நீதியிலும், பரிசுத்தத்திலும் உங்களை காத்துக் கொண்டு, திடமனதாய் இருங்கள் உங்களுக்கு விரோதமாக இருந்த எல்லா தீமைகளையும் முற்றிலுமாக உங்கள் வாழ்வில் இருந்து நீக்கி, மெய்யான சமாதானத்திலும், சந்தோஷத்திலும் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிரப்புவார். இதுவரை  நீங்கள் இழந்து போனதை தேவன் எவ்விதமாக திரும்பக் கொடுக்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.
தேடி வரும்படி செய்வார்
``நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்''  (உபா 28:8).
                எவ்வளவுதான் உழைத்தாலும் தேவன் ஆசீர்வாதத்தைக் கொடுக்கவில்லை என்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
                ``கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்'' (நீதி 10:22). பிரயாசங்கள் நம்முடையதாக இருக்க வேண்டும், காரியங்களை வாய்க்கப் பண்ணுகிறவர் கர்த்தர். எல்லாம் என்னாலே ஆயிற்று என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை ஏனென்றால் ``ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை நமக்குக் கொடுக்கிறவர்'' (உபா 8:18)  தேவன் என்பதை மறந்து போகக்கூடாது. வேதம் கூறுகிறது ``என் சாமர்த்தியமும் என் கைப் பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக   (உபா 8: 17,18)
                இவ்விதமாக கர்த்தரையே சார்ந்து நிற்கும் பொழுது, சூழ்நிலைகள் சாதகமாக இல்லாமல் இருந்தாலும், எதிர்க்கிறவர்கள் சூழ்ந்து நின்றாலும், நம் உழைப்பினை பிசாசானவன் பட்சிக்க நினைத்து செயல்பட்டாலும், தேவன் நம்மோடு இருந்து நம்மை விட்டு சென்றவைகளைத் தேடி வரும்படி செய்வார். நமக்கு விரோதமாக எழும்பி, நமக்குள்ளதை பறித்துக் கொண்டவர்களையும் நமக்கு சமீபமாக கொண்டு வருவார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு பிறந்த ஈசாக்கின் வாழ்க்கையில், கேராரின் பள்ளத்தாக்கிலே அவன் இருக்கும் பொழுது, தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப் போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின் படியே அவைகளுக்குப் பேரிட்டான் (ஆதி 26:18).
                ஆனால் அதை கேராரூர் மேய்ப்பர் வந்து தங்களுடையது என்று வாக்குவாதம் பண்ணி, அதை அபகரித்துக் கொண்டனர். அதை ஈசாக்கும் அவன் வேலைக்காரர்களும் விட்டுவிட்டு வேறொரு துரவை வெட்டினார்கள். அங்கேயும் வந்து வாக்குவாதம் பண்ணி பறித்துக் கொண்டனர்.
                மறுபடியுமாக, அவ்விடம் விட்டே பெயர்ந்து போய் வேறொரு துரவை வெட்டினான். அபகரித்துக் கொள்கிறவர்கள் பின் தொடர்ந்தாலும், இவன் செல்லும் இடமெல்லாம் கர்த்தர் கூட இருந்து அவனை ஆசீர்வதித்தார்.
                மறுபடியும் அவன் தோண்டிய துரவில் தண்ணீர் வரச்செய்து, ``தேவன் அவனைப் பலுகப் பண்ணினார்'' (ஆதி 26:22). மென்மேலும் ஆசீர்வதித்தார். பிறகு கேராரிலிருந்து அவனுக்கு விரோதமாக இருந்தவர்களும் அவனோடே சமாதானமாகும்படி வந்து நிற்கிறார்கள், அதுமாத்திரமல்ல!'' நிச்சயமாய் கர்த்தர் உம்மோடே கூட இருக்கிறார் என்றும், நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப் பட்டவராமே என்றும், அவனோடே உடன்படிக்கை பண்ணிக் கொள்ள வந்தார்கள் (ஆதி 26:28,29)
                பிரியமானவர்களே; கடந்த மாதங்களிலே கடந்த வருடங்களிலே, உங்களை பகைத்து, உங்களுக்கு விரோதமாக உங்களுக்குள்ளதை அநியாயமாய் அபகரித்துக் கொண்டவர்களையும், உங்களிடமிருந்து பறித்துக் கொண்டவர்களையும். தேவன் உங்களோடு கூட உடன்படிக்கை பண்ணும்படியாக உங்களை ஆசீர்வதித்துப் பலுகப் பண்ணப் போகிறார்.
                கர்த்தரிடத்திலே முழு இருதயத்தையும் ஊற்றி ஜெபியுங்கள். இயேசு கிறிஸ்து இனிவரும் நாட்களிலிருந்து உங்கள் வாழ்வில் கொடுக்கப்போகும் நன்மைகளுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் கர்த்தரை துதியுங்கள்.
                இதுவரைக்கும் உங்களோடு போராடி உங்களை மேற்கொண்டவர்களை, உங்களுக்கு சமீபமாக கர்த்தர் கொண்டு வரப்போகிறார்.
                ``உங்கள் கையின் பிரயாசத்தை அப்படியே நீங்கள் சாப்பிடுவீர்கள்'' (சங் 128:2)
                இதுவரைக்கும் ஒரு வேளை ``என்னுடைய உழைப்புக்கு ஏற்ற வருமானம் எனக்கு இல்லையே, என்னுடைய பிரயாசத்துக்கு ஏற்ப எனக்கு உயர்வு இல்லையே, குடும்பத்தில் சமாதானமும், ஒரு மனமும் இல்லையே'' என்று வேதனையோடு நீங்கள் இருந்திருக்கலாம்.
                இனி அப்படி இல்லாது உங்கள் உழைப்புக்கும், பிரயாசத்துக்கும் தக்க பலனையும், குடும்ப வாழ்வில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், இதுவரை இழந்து போனவைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படியாக தேவன் கட்டளையிடப் போகிறார்.
                விசுவாசத்தோடு இன்னும் அதிகமாக கர்த்தரை சார்ந்து கொள்ளுங்கள். முன்பு இருந்த உற்சாகத்தைவிட அதிக உற்சாகத்தோடு செயல்படுங்கள், உண்மையோடும் நேர்மையோடும் கர்த்தருக்கு பயந்து கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியுங்கள்.
இரட்டிப்பாக திரும்பத் தருவார்
                ``இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்'' (சகரியா 9:12). செல்வச் சீமானாய் இருந்த யோபுவின் வாழ்க்கையில், அவனுடைய ஐசுவரியம், கனம், பிள்ளைகள், சரீர சுகம், மகிழ்ச்சி, சமாதானம் என்று எல்லாவற்றையும் சாத்தான் பட்சித்துப் போட்டான். ஏன் இப்படி நடந்தது என்று யோசித்துப் பார்ப்பதற்குள், அடுத்தடுத்து ஒவ்வொன்றாய் அவனை விட்டு போயிற்று.
                மனிதரில் எவரும் சகித்துக் கொள்ளக் கூடாத பாடுகள், வேதனைகள், நெருக்கங்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட யோபு பொறுமையாக இருந்தான் என்று வேதத்தில் பார்க்கிறோம் (யாக் 5:11).
                அப்படிப்பட்ட நிலையிலும் அவன் பாவஞ்செய்யவில்லை, தேவனைப்பற்றிக் குறையும் சொல்லவில்லை (யோபு 1:22). அப்படிப்பட்ட யோபுவின் வாழ்க்கையை தேவன் அப்படியே விட்டுவிடவில்லை. வேதம் கூறுகிறது: ``கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள் கர்த்தர் மிகந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே (யாக் 5:11).
                யோபுவின் வாழ்க்கையில் எவைகளையெல்லாம் இழந்து போனானோ, எவைகள் எல்லாம் அவனுடைய வாழ்க்கையில் பட்சிக்கப்பட்டு போனதோ, அவைகள் எல்லாவற்றிற்கும் தக்க பலனை தேவன் கொடுத்தார் என்று பார்க்கிறோம்.
                ``கர்த்தர் யோபின் முன்னிலையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார் (யோபு 42:12). இழந்து போன யாவற்றையும் இரண்டு மடங்கு திரும்பப் பெற்றுக் கொண்டான்.
                இதே நிலையிலே உங்கள் வாழ்க்கையில், கடந்த நாட்களில் என்ன காரணம் என்று அறிந்துகொள்ளக்கூட முடியாதபடி உங்களுக்கு வேதனை உண்டாக்கும் விஷயங்கள் நடந்திருக்கலாம்.
                உங்கள் சமாதானம், சந்தோஷம், கனம் ஐசுவரியம் பறிக்கப்பட்டு இருந்திருக்கலாம். ஆனால் இனிவரும் நாட்களில், நீங்கள் எல்லாவற்றையும் இரண்டு மடங்கு திரும்பப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள். ``கர்த்தர் என் வாழ்வில் நன்மையை தரமாட்டாரா? எனக்கு விரோதமாக மாறின சத்துருக்களை ஒடுக்க மாட்டாரா? என் வாழ்வில் மாற்றம் உண்டாகாதா?'' என்று ஏங்கி நீங்கள் தவித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
                கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமும் உள்ளவராயிருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் இதுவரை பட்டபாடுகள் போதும் வேதனைகள் போதும், கவலைகள் போதும், கண்ணீர் போதும், இவைகள் எல்லாவற்றிலுமிருந்து விடுதலையைக் கொடுத்து, இரட்டிப்பாக திரும்பப் பெற்றுக் கொள்ளும் படியாக தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
முழுமையாகத் திரும்பத் தருவார்
                தேவரீர் எங்களைச் சிறுமைப் படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும் (சங் 90:15).
                இஸ்ரேல் ஜனங்கள் எகிப்தில் 400 ஆண்டுகள் அடிமைகளாய் இருந்த பொழுது, கஷ்டப்பட்டு அவர்கள் உழைத்தார்கள், ஒரு நாள் கூட ஓய்வு எடுத்துக்கொள்ளக் கூடாதபடிக்கு கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அவ்விதமாக உழைத்தாலும் அவர்களின் உழைப்பின் பலனை அவர்கள் அனுபவிக்க முடியாதபடிக்கு எகிப்தியர்கள் அவைகளை பட்சித்தார்கள்.
                மிகவும் வேதனையிலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வந்த மக்களுக்கு, தேவன் மோசேயின் மூலமாக விடுதலையைக் கொடுத்து, அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வரும் பொழுது, அதுவரைக்கும் அவர்கள் சம்பாதித்த அத்தனையையும் எடுத்துக் கொண்டார்கள் என்று வேதத்திலே பார்க்கிறோம். மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னு டைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.
                கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்;  (யாத் 12:35,36). பல வருடங்களாக பட்சிக்கப்பட்ட தங்கள் உழைப்பின் பலன்களை, இஸ்ரேல் ஜனங்கள் ஒரே நாளில் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படியாக தேவன் அவர்களோடு கூட இருந்து பலத்த காரியங்களைச் செய்தார்.
                எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டார்களோ, அதற்கும் மேலாக பலத்த ஜனங்களாக மற்றவர்கள் கேள்விப்பட்டு கலங்கிப் போகும் நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். துன்பத்தை அனுபவித்த வருடங்களுக்கு சரிநிகராய் தேவனால் தேற்றப்பட்டார்கள். தேவனுடைய நேரடி பராமரிப்புக்குள்ளாக, அவருடைய ஆளுகைக்குள்ளாக வந்து அவருடைய சொந்த ஜனங்களாக்கப்பட்டார்கள்.
                இந்நாட்களிலும் கூட யார் இப்படிப்பட்ட சிறுமையோடும், துன்பத்தோடும் இருக்கிறார்களோ, அவர்களையும் தேவன் சிறந்திருக்கும் படியாகச் செய்வார். ``எவரையும் மேன்மைப் படுத்தவும் பலப்படுத்தவும் தேவனுடைய கரத்தினாலே ஆகும்''         (1 நாளா 29:12). ``அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்''          (1 சாமு 2:8). சிறுமையும் எளிமையுமானவனை தூக்கிவிடுகிறார். ஒடுக்கப்பட்டவர்களுக்கும் திக்கற்றவர்களுக்கும் அடைக்கலமாயிருக்கிறார்.
                ``சிறு வயதிலிருந்தே என் வாழ்வில் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லையே'' என்று ஏங்குகின்றவர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆசீர்வாதத்தின் மழையை தேவன் வருஷிக்கப் போகிறார்.
                உங்கள் வாழ்வில் பட்சிக்கப் பட்டவைகள் உங்களை தேடிவரும், இரட்டிப்பாகவும், முழுமையாகவும் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள். இவ்விதமான ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியவைகளெல்லாம் மற்றவர்களை கனம் பண்ணுகிறதிலே முந்திக் கொள்ளுங்கள், மற்றவர்களையும் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுங்கள். வீண் கசப்புகளுக்கும் பொல்லாத வைராக்கியங்களுக்கும் விலகி, தேவ அன்பிலும், ஐக்கியத்திலும் உறுதியாயிருங்கள்.
                கன்மலையின் மேல் கட்டப்பட்டு, எவ்வளவு பிரச்சனைகள் தொல்லைகள் வந்தாலும், அசையாமல் உறுதியாக  இருக்கும் கட்டிடத்தைப் போல உங்கள் வாழ்விலும் உறுதியாகவும், ஸ்திரமாகவும், சந்தோஷத்தோடும், சமாதானத்தோடும் எல்லாவிதமான ஆசீர்வாதத்தோடும் நிறைந்திருக்கும் படியாக தேவன் உங்களை நடத்துவார்.

0 comments:

Post a Comment