இந்திய தேசத்தின் மக்கள் கிறிஸ்துவுக்குள்ளாக
மனந்திரும்ப வேண்டும் என்ற எண்ணங்கொண்டு இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் எழுப்புதல்
வாஞ்சையுடைய அநேகரை அவர்கள் பேசுவதிலிருந்து கண்டு கொள்ள முடிகிறது.
“கிறிஸ்துவை அறியாத மக்கள் எப்படியாவது அவரை அறிந்து
இரட்சிக்கப்பட வேண்டுமென்ற வாஞ்சையும், பிரயாசமும் கொண்ட இப்படிப்பட்டவர்களைத்தான் தேவன் விரும்புகிறார்., தேடுகிறார்.
அதே வேளையில் தேவனுக்காக தங்களை
முற்றிலுமாக அர்ப்பணித்து எழுப்புதலின் பணிக்கு தேவன் பயன்படுத்திய தேவ
மனிதர்களின் வாழ்க்கை சரித்திரத்தை தேவனே எழுதுகிறார் என்பது வரலாற்று உண்மை.
இவ்விதமாக வாழ்க்கையில் தேவனுக்கு பயன்பெற்றவர்களை
பார்க்கும் போது நாமும் அவர்களை போல தேவனுக்கு பயன்படும் பாத்திரமாக மாற வேண்டும்
என்று உள்ளத்தில் ஏக்கம் கொள்வது இயற்கையே.
அதே வேளையில் அவர்களின் மூலம் ஏற்பட்ட
எழுப்புதலின் இரகசியம் என்னவென்று அறிந்து கொண்டு, செயல்படுவது நமக்கு பிரயோஜனமாய் இருக்கும்.
எழுப்புதல் நடந்துள்ள கூட்டங்களிலும், தேசங்களிலும் தேவனால் பயன்படுத்தப்பட்ட
பிரசங்கியாரின் பிரசங்கத்தால் ஜனங்கள் மனம் உடைக்கப்பட்டு உள்ளான மனிதனில் கதறி
அழுது மனந்திரும்பினார்கள் என்பதும் தன்னை வெறுமையாக்கி தேவனிடத்தில்
கூட்டங்கூட்டமாக ஒப்புக்கொடுத்ததும், தேவனுக்காக உண்மையாக ஜீவித்ததும் சரித்திர உண்மை!
ஆனால் இன்றைய எழுப்புதலுக்கு பயன்பட
வேண்டிய கிறிஸ்தவ சமுதாயமோ, மாய்மாலத்திலும், பணமயக்கத்திலும் மற்றவர்களுக்கு முன்
மாதிரியாக இருந்து கொண்டு, எழுப்புதல்
வாஞ்சையோடு தங்களை எழுப்புதல் பிரசங்கியார் என்றும், தங்கள் பிரசங்கம் எழுப்புதல் பிரசங்கம் என்றும்
கூறிக் கொள்கிறார்கள். எப்படி எழுப்புதலை காண முடியும்?
வாழ்க்கையில் திண்டாட்டம், போராட்டம் பற்றாக்குறைகள், போட்டிகள். இதன் மத்தியில் எப்படியாவது ‘வாழ்ந்தால்’ போதும் ஜெபிக்க நேரமில்லை. வேதம் வாசிக்க நேரமில்லை. எப்படியோ
கஷடப்பட்டு, தேவனுக்காக
வாரத்தில் ஒரு நாள் இரண்டு மணி நேரமாவது ஒதுக்கி தேவ வார்த்தையை கேட்கலாம் என்று
சென்று அமர்ந்தால் “ஆயத்தமில்லாமல், தேவ சமூகத்தில் அமர்ந்து வேத வசனத்தை
தியானிக்காமல் வந்து எதை எதையோ பேசி ‘சுய புராணம் ஓட்டும் பிரசங்கியார்”. கொட்டாவி மேல் கொட்டாவி விட்டு விட்டு வீட்டிற்கு
வந்து பழைய நிலையையே தொடர்ந்து கொள்ளும் இக்கால சில விசுவாசிகள்.
இது மட்டுமா? சபைகளில்தான் எத்தனை பிரிவுகள். பிரிவுகளில் தான்
எத்தனை குழப்பங்கள். கூட்டத்தை சேர்த்துக் கொண்டு“எங்கள் இடத்திற்குதான் எண்ணிக்கை அதிகம் நாங்கள் தான்
உண்மையானவர்கள். எங்களை தான் தேவன் பயன்படுத்துகிறார்” என்று கூறிக்கொண்டு இருக்கும் ஒரு
கூட்டத்தார்.
“எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ‘தரத்தில்’ நாங்கள் உயர்ந்தவர்கள்” என தங்களை,
தாங்களே
உயர்த்திக் கொள்ளும் உலகமகா பொய்யர் கூட்டம்.
தாங்கள் செய்வது என்னவென்றே தெரியாமல், எதையாவது செய்து கொண்டு மற்றவர்களுக்கு
நாங்களும் சளைத்தவர்கள் அல்லவென்று இருக்கும் மற்றொரு கூட்டம்.
எங்களிடம் தான் பரலோகத்தின் சாவி
கொடுக்கப்பட்டுள்ளது. நாங்களே“தாய்” பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் என்று
அனலும், குளிரும்
இல்லாத எந்த கூட்டத்தையும் சேராத, சேர்க்க முடியாத உலகமுழுவதும் உள்ள மிக பெரிய கூட்டம்.
பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என உறுதியோடு
தங்களது ஸ்தாபனத்தை மிக அழகாக கட்டிக் காக்கும் இன்னொரு கூட்டத்தார்.
இன்னும் எங்கள் பிரிவு தான் உயர்ந்தது.
நாங்கள் தான் உண்மையென்று கூறிக் கொள்ளும் அநேக கூட்டத்தார்கள்.
இப்படிப்பட்ட நாம் (கிறிஸ்தவத்தால்) இந்த
கடைசி காலத்தில் என்ன செய்ய போகிறோம்? இதை படிக்கும் போது சிலருக்கு கோபம் கோபமாக வரலாம்.
ஆனால் உண்மையாக நமக்குள்ளும்
(கிறிஸ்தவத்திற்குள்) சமுதாயத்திலும், உலகமெங்கிலும் எழுப்புதலுண்டாக வேண்டுமென்றால் முதலாவது நம்மை
சோதித்தறிந்து, நமக்குள்
இருக்கும் தேவனுக்கு பிரியமில்லாத காரியத்தை கண்டறிந்து அதை எடுத்துப் போட
வேண்டும்.
“கர்த்தர் நமது நடுவில் அற்புதங்களை செய்ய வேண்டுமானால் நம்மை
பரிசுத்தம் பண்ண வேண்டும்” (யோசு 3:5)
உலகம் காட்டும் வழியில் சென்று
கொண்டிருக்கும் மனிதர்களை கிறிஸ்துவின் வழியில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே
தேவன் நம்மை தெரிந்து கொண்டு நமக்கு பொறுப்புக்களை கொடுத்து தமது ஸ்தானாதிபதிகளாய்
நியமித்திருக்கிறார். ஆனால் நாமோ உலக மனிதர்களை கிறிஸ்துவின் வழியில் கொண்டு
வருவதற்கு பதிலாக நாமே உலக வழியில் சென்று கொண்டிருப்பது சரியா? இப்படி இருந்தால் நமது நடுவில் தேவன்
அற்புதம் (எழுப்புதல்) செய்வது எப்படி? நம்முடைய வீண் வைராக்கியங்களோ, சொந்த முயற்சிகளோ எவ்விதத்திலும் எழுப்புதலுக்கு பயன் கொடுக்காது. அது
தேவனுக்கு தேவையும் இல்லை.
ஆனால் இன்றைய எழுப்புதல் எண்ணங்
கொண்டிருப்பவர்களின் எண்ணமெல்லாம் எப்படியுள்ளதென்றால் உலகமெங்கும், தேசமெங்கும் கிறிஸ்தவ சதவீதம் அதிகமாக
வேண்டுமென்றே விரும்புகிறார்கள்.
அதினாலே தான், எழுப்புதல் வந்த இடங்களிலும், அது தொடராமல் அந்த தலைமுறை சென்றதும் கூடவே சென்றுவிட்டது.
சரித்திரத்தில் பார்க்கும் போது எழுப்புதல் அடைந்து பரவிய சபைகளும், தேசங்களும் இக்கால சூழ்நிலையில் பார்க்கும்
போது பாரம்பரியங்களிலும் குளிர்ந்த நிலைகளிலும் இருப்பதைத்தான் கண் கூடாக காண
முடிகிறது.
ஆகவே இப்பொழுதுள்ள சூழ்நிலையில்
எழுப்புதலடைந்த தேசங்களும், எழுப்புதலடைந்த
சபைகளும் மற்றுமொரு எழுப்புதலடைய வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார்.
ஏனென்றால் அவர்கள் பெயரளவில் தான் இப்பொழுது
கிறிஸ்தவர்கள் இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால். எழுப்புதல் ஏற்பட்ட பொழுது
இருந்த மக்கள் இப்பொழுது இல்லை அவர்கள் சந்ததிகளே இப்பொழுது இருக்கிறது. தேவனோடு
அவர்கள் கொண்ட உறவும், நெருக்கமும்
அவர்கள் பிள்ளைகளிடம் இல்லை.
கிறிஸ்தவம் என்பது பரம்பரை சொத்தல்ல தாய், தகப்பன் தேவனோடு ஐக்கியமாக இருந்ததால்.
பிள்ளைகளுக்கும் அது தொடரும் என்று சொல்வதற்கு. ஆகவே, பிள்ளைகளும் தேவனை எந்த அளவுக்கு உண்மையாக
பற்றிப் பிடிக்கிறார்களோ ! அந்த அளவுக்கே அந்த நெருக்கமும் தொடரும்.
இரட்சிப்பு என்பது பரம்பரையாக தானாகவே
நீடிக்காது. ஒவ்வொரு மனிதனும்“நான் ஒரு பாவி
எனக்கொரு இரட்சகர் தேவை நான் அவரை விசுவாசிக்க வேண்டு”மென்று தன் சொந்த அறிவினால் இயேசு
கிறிஸ்துவை நோக்கி பார்க்கும் போது மட்டுமே அவன் இரட்சிக்கப்படுகிறான். இது
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் தான்.
கிறிஸ்தவ எழுப்புதல் என்பது ஒரு மனிதனோ ஒரு
நகரமோ. ஒரு தேசமோ தங்களை கிறிஸ்தவர்கள் என சொல்லி சதவீத அடிப்படையில் உயர்வதால்
ஏற்படுவதல்ல. அப்படிப்பட்ட எழுப்புதலை தேவன் விரும்புவதுமில்லை.
அந்த வகையில் பார்க்கும் போது, முதலாவது, இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்துக்குள்ளேயே எழுப்புதல் உண்டாக
வேண்டும். கிறிஸ்தவ ஆலயங்கள் அதிக அளவில் நிரப்பப்படுவதாலோ அதிக அளவில் ஆலயங்கள்
உருவாக்கப்படுவதாலோ எழுப்புதல் ஏற்பட்டு (விடும்) விட்டது என எண்ணிவிடக்கூடாது.
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் சுவிஷேசத்திற்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாமல்
எப்பொழுது தேவசித்தம் செய்கிறார்களோ அதுவே உண்மையான தேவன் விரும்பும் எழுப்புதல்.
சரித்திரத்தில் பார்க்கும் போது
சடங்காச்சாரத்தில் செத்து கிடந்த சபைக்கு உயிர் மீட்சி ஏற்படுத்தும் விதமாக தேவன்
மார்டீன் லூத்தரை பயன்படுத்தினார். அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும்
அளவிற்கு அன்றைய மத வெறியர்கள் செயல்பட்டதாக சரித்திரம் கூறுகிறது. அப்படி
இருந்தும் சத்தியத்துக்காக நின்று உயிர் மீட்சியோடு எழுந்த லூத்தரன் சபைகளின்
இன்றைய நிலை என்ன? உண்மையாக கூற
முடியுமா.“நாங்கள்
எழுப்புதலோடு தான்இருக்கிறோம்”என்று?
குளிர்ந்து போய் அனலற்றுப் போயிருந்த
இங்கிலாந்து சபையின் ஆவிக்குரிய நிலை தான். ஜான் வெஸ்ஸியை வெளி கூட்டங்களை ஏற்பாடு
செய்ய தூண்டி அதன் மூலம் ஜனங்களிடத்தில் எழுப்புதல் தீ பற்றியெரியும்படியாகச்
செய்து. இங்கிலாந்து, அயர்லாந்து
முழுவதும் பிரசங்கம் செய்து ஆவிக்குரிய குழுக்களை ஏற்படுத்தி அநேக தேசங்களில்
திருசபைகள் வளர்ந்து பெருகினதால், இவர் மூலம் கிறிஸ்துவை பின்பற்றினவர்கள். ‘மெதடிஸ்ட்’ என
அழைக்கப்பட்டனர். இன்றைய மெதடிஸ்ட் சபைகள்“தாங்கள் எழுப்புதலின் அனலோடு தான் இருக்கிறோம்” என்று கூற முடியுமா?
ஆவியானவரின் பொழிவை பெற்று. பின்மாறி
ஊற்றப்பட்ட‘பெந்தெகொஸ்தே” சபைகள் என ஆவியானவரின் நிறைவோடு எழுப்புதல்
கண்ட இன்றைய பெந்தெகொஸ்தே சபைகள் கூற முடியுமா.?“அதே எழுப்புதலின் வல்லமையோடு இருக்கிறோம்” என்று.
இந்த நிலையில் இப்படிப்பட்ட சபைகள்
தேசத்தில் எப்படிப்பட்ட எழுப்புதலை வாஞ்சிக்கிறது.
தங்களுடைய வாழ்க்கையில் எந்தவித கனியும்
இல்லாமல் தங்களின் போதனையில் எந்த ஒரு பொருளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டும், போதித்துக் கொண்டும் வந்த யூதர்களை பாôத்து இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தையை
நினைவுக் கூறுவோம்.
‘மாயக்காரராகிய வேத பாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ; ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும் படி
சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானான
போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் (மத் 23:15) என்று அப்படிப்பட்ட
கிறிஸ்தவ சமுதாயமாய் இன்றைய தலைமுறை இருந்தது என சரித்திரத்தில் நாம் இடம்
பெற்றுவிடக் கூடாது.
தேவன் விரும்பும் உண்மையான எழுப்புதல், மனிதர்களை எச்சரிப்போடு
மனந்திரும்புதலுக்கு அழைப்பதாகும். அப்படிப்பட்ட மனந்திரும்புதன் கனியோடு இருந்து, தேவன் கொடுக்கிற செய்தியை தேவனுடைய வாயாக
இருந்து செயல்பட்டால், எழுப்புதல்
தீ.இக்காலத்திலும் பற்றியெறியும், இந்து தேசம், இன்பர்
இயேசுவின் தேசமாக மாறும்.
இதற்கு உதாரணமாக, துன்மார்க்கம் மற்றும் ஒழுக்கக்கேடான
வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்கள் நிறைந்த தேசமாக விளங்கியது நினிவே. இதில் உள்ள
ஜனங்களுக்கு பாவத்தினிமித்தமாக வரும் தேவனுடைய தண்டனையைக் குறித்து எச்சரிக்க
தேவன் யோனாவை அனுப்பினார் (யோனா 1:2)முதலில் தடுமாறி தயங்கிய யோனா பின்பு தேவனுடைய வார்த்தையை
பிரசங்கிக்கத் தன்னை ஒப்புக்கொடுத்து சென்றான்.
‘நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப்
பிரசங்கி” (யோனா 3:2)
‘யோனா எழுந்து கர்த்தருடைய வார்த்தையின் படியே நினிவேக்குப்
போனான்”(யோனா 3:3) நினிவேயின் மக்கள்
ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்
கொள்ளாவிட்டாலும் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பது யோனாவின் கடமையாக இருந்தது.
அதை சரியானபடி யோனா செய்தபடியினால்
நினிவேயின் மக்கள் யாவரும் தாங்கள் மனந்திரும்பாவிட்டால் அழிந்து விடுவோம் என்று
தேவ பயத்தால் உடனடியாக‘தேவனை
விசுவாசித்து” (யோனா 3:5) தேவ இரக்கத்தை
பெறும்படியாக பெரியோர்முதல் சிறியோர் வரை உபவாசம் செய்தார்கள்.
யோனா தேவனுடைய இரக்கத்தையும் அவருடைய
கோபத்தையும். அவரது மன்னிப்பையும், தண்டனையையும் மிகவும் சரியான விதத்தில் தேவனிடத்தில் கேட்டு பிரசங்கித்த
படியால் நகரத்தில் இருந்த ஒரு லட்சத்து இருபதினாயிரம் பேருக்கும் அதிகமான மக்கள்
தேவனுடைய தண்டனையிலிருந்து காக்கப்பட்டனர்.
மக்கள் பாவத்திலிருந்து
மனந்திரும்புதலுக்கேற்ற முறையில் ஒரு பிரசங்கியார் பிரசங்கிக்க வேண்டும். அதில்
எள்ளளவும் கலப்படமாக இருந்தால் அதினால் கேட்பவர்கள் தேவனிடம் கதறி அழுது வருவதற்கு
வலு இல்லாது போய் விடும். அப்படியில்லாது தேவ வார்த்தையை கலப்படமில்லாது கூறும்
போது பல வேளைகளில் ஜனங்களின் முகத்தை பார்க்காது உள்ளத்தை பார்த்து பேச நேரிடும்.
அவ்வித மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கிக்க தேவனால் அனுப்பப்பட்டிருந்த
தேவமனிதன் யோவான் ஸ்நானன்.
அவன் பிரசங்கித்த ஒவ்வொரு வார்த்தைகளும்“நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தால் மட்டும்
போதும்” என்றிராமல்
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனியை கொடுங்கள் (மத் 3:8) என்பதாகவே இருந்தது இவ்விதமாகவே இயேசு
கிறிஸ்துவின் பிரசங்கங்களும்,
அப்போஸ்தலர்களின்
பிரசங்கங்களும் சரித்திரத்தில் மற்ற எழுப்புதல் பிரசங்கியார்களும், ஜனங்களை தேவனுடைய தண்டனையிருந்து பாவமன்னிப்பை பெற்றக் கொள்ள இயேசு
கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும் படியாகவே திருப்பி விடப்பட்டனர்.
இது தானாக நடக்கிற காரியமல்ல இவை தேவனால்
நடக்கிறபடியாக இருப்பதால், தேவ அழைப்பை
பெற்று, தேவனால்
அபிஷேகிக்கப்பட்டிருக்கும் தேவ ஊழியர்கள் பரிசுத்த ஆவியானவரை சார்ந்து தேவ
வார்த்தையை பிரசங்கிக்க வேண்டும். சரித்திரத்தில் அப்படியாகவே செயல்பட்ட தேவ
மனிதர்களின் மூலமாக அக்காலத்தில் எழுப்புதல் தீ பற்றியெரிந்தது அநேகர்
மனந்திரும்பி உயிரோடு வாழ்ந்த நாளெல்லாம் உண்மையாக வாழ்ந்தனர்.
அப்படிப்பட்ட எழுப்புதல் நமது இந்திய
தேசத்திலும் உலகமெங்கிலும் ஏற்பட்டு உண்மையாக ஜனங்களிடம் மனந்திரும்புதல் உண்டாக
வேண்டுமானால், ஜனங்களின்
பாவநிலை உணர்த்தப்பட வேண்டும். அதினால் வரும் தேவ தண்டனையை கூறி எச்சரிக்க
வேண்டும். அதிலிருந்து விடுபட தேவனுடைய அன்பின் பரிசாக இயேசு கிறிஸ்துவே இரட்சகர்
என காட்ட வேண்டும். இயேசுவையே சார்ந்து வாழ கற்றுக் கொடுக்க வேண்டும். இதில்
கொஞ்சம் கூட மாறுதல் இல்லாமல் செயல்பட்டால் கேட்பவர்கள் கதறுவார்கள். தேவையை
உணர்வார்கள். இயேசுவை தேடுவார்கள் இரட்சிப்பை பெறுவார்கள். எழுப்புதல் தீ
தேசத்தில் பற்றியெறிய ஆரம்பிக்கும் அதை தடுப்பவன் யார்?
நண்பர்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
0 comments:
Post a Comment