அறுவடையின் நாட்கள்
நம்முடைய வாழ்க்கையிலே எவ்வளவோ
விதமான எதிர் பார்ப்புக்கள் உண்டு, எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை இல்லை,நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
விதமான எதிர் பார்ப்புக்கள் உண்டு.
சில நேரங்களில் நாம் எதிர்
பார்த்தவைகள் உடனடியாக நடந்துவிடும், சில சமயம் தாமதமாகும். தாமதமாகும் பொழுது,சோர்ந்து போகிறோம்,
கலங்கி போகிறோம்.
வாழ்க்கையே அவ்வளவுதான் எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்ளுகிறோம்.
ஆனால் வேதம் கூறுகிறது ``நீங்கள் எதிர்பார்த்திருக்கும்
முடிவை உங்களுக்குக்கொடுக்கும் படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற
நினைவுகளைஅறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்''(எரே 29:11).
நாம் பல நேரங்களில் கர்த்தர்
என்னை மறந்தார் ஆகையால் தான் நான் நினைக்கிற, எதிர்பார்க்கிற எதுவும் உடனடியாக
நடக்கவில்லை என்று விரக்தியடைகிறோம்.ஆனால் கர்த்தர் ஒருபோதும் நம்மை மறக்கிறவரல்ல.
நம்முடைய எதிர்பார்ப்புக்களும்,ஏக்கங்களும் நம்முடையதாக
இருந்தாலும் அவைகளை நிறைவேற்றிக் கொடுக்கிறவர் கர்த்தர் என்பதை ஒருநாளும் நாம்
மறந்து போகக்கூடாது ஏனென்றால் கர்த்தர் எப்போதும் நமது நினைவாகவே இருக்கிறார் ``கர்த்தர் நம்மை
நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்'' (சங்115:12).
ஆனால் அதற்கு கர்த்தர்
காலத்தையும் நேரத்தையும் வைத்திருக்கிறார், அவைகளுக்கு நாம் காத்திருக்கும்
பொழுது நிச்சயமாக தேவன் நாம் எதிர்பார்த்திருக்கிறவைகளை நமது வாழ்க்கையில் கொடுக்கிறார் அவைகளை நாம்
பெற்றுக்கொள்ளுகிறோம்.
விரும்பியது கிடைக்கும்
``நெடுங்காலமாய்க் காத்திருக்குதல்
இருதயத்தை இளைக்கப் பண்ணும் விரும்பினது வரும் போதோ ஜீவ விருட்சம் போல் இருக்கும்''
(நீதி 13:12).
இவ்வளவு நாட்கள்
நீங்கள் காத்திருந்தது உங்களுக்கு இளைப்பையும், வேதனையையும் கொடுத்திருக்கலாம்.
தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்
காலத்தை ஏற்கனவே நிச்சயத்திருக்கிறார். ``நிச்சயமாக உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னை
பெருகவே பெருக பண்ணுவேன்''(எபி 7;14)என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆனால் அதற்குரிய காலம்
வருவதற்குள்ளாக நாம் படும் அவஸ்தை நமக்குத்தான் தெரியும் அல்லவா? அதையே வேதமும்
ஆமோதிக்கிறது ``காலம் வரும் முன்னே அவர்கள் வாடிப்போவார்கள்''(யோபு 22:16).
இவ்விதமாகத்தான் நாமும் வாடிப்போன
நாட்கள் உண்டு,ஆனாலும் ``சர்வ வல்லவருக்கு காலங்கள் மறைக்கப் படாதிருக்க அவரை அறிந்தவர்கள் அவர்
நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
(யோபு 24:1).தேவன் நமக்கென்று
நியமித்தவைகள் நமக்குத்தான், அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை அவரை அறிந்தவர்கள் என்று
நாம் சொல்லுவோமானால் அவர் உள்ளம் நம்மையே
எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்து செயல்படுவோம்.
இதுவரைக்கும் நீங்கள்
காத்திருக்கும் காலமாக உங்கள் வாழ்க்கையில் இருந்திருக்கும், ஆனால் இது முதற்கொண்டு
பெற்றுக்கொள்ளும் காலமாக உங்கள் வாழ்க்கையில் இருக்கபோகிறது.இதுவரை நீங்கள்
செய்தவைகள் எல்லாம் வாய்க்காமல் இருந்திருக்கலாம், இனி நீங்கள் செய்கிற
எல்லாவற்றையும் தேவன் வாய்க்கப் பண்ணபோகிறார் கர்த்தரை துதியுங்கள்.
யோசேப்பினுடைய வாழ்க்கையில்
தரிசனங்களாலும், சொப்பனங்களினாலும் அவன் எப்படிப்பட்ட ஆசீர்வாதங்களுக்கு உள்ளானவன் என்று தேவன்
காண்பித்திருந்தாலும், அவைகள் நிறைவேறும் காலம் வரைக்கும் எத்தனையோ விதமான எதிர்ப்புகளும்
ஏமாற்றங்களும் அவன் வாழ்க்கையில் வந்தது.ஆனாலும் அவன் தேவன் தனக்கு கொடுத்திருந்த
வாக்குத்தத்தத்தை சிறிதளவும் சந்தேகப்படாமல் அதை எப்போதும் எதிர்பார்த்தவனாக
இருந்தான். எந்த சூழ்நிலையும் அவனுடைய எதிர்பார்ப்பை அழிக்கமுடியவில்லை, காரணம் அவனுக்குள்ளாக ``தேவன் எனக்கு சொன்னதை என்
வாழ்க்கையில் நிறைவேற்றுவார்'' என்று உறுதியாக விசுவாசித்திருந்தான்.
அவனுடைய விசுவாசத்தையும்
எதிர்பார்ப்பையும், பொறாமை கொண்ட அவன் சகோதரர்களோ, அவனை பாவத்திற்குள்ளாக தள்ள நினைத்த போத்திபாரின் மனைவியோ,
அவனை மறந்துபோன
பானபாத்திரக்காரனோ தடுக்கமுடியவில்லை. காரணம் கர்த்தர் அவனோடே இருந்தார்,அதை அவன் நன்றாக
அறிந்திருந்தான். ஆகையால் சோர்ந்து போகாமல் தேவன் சொன்னவைகளை எதிர் பார்த்து
காத்திருந்து பெற்றுக் கொண்டான். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் தான் தேவன்
சொன்னவைகளை பெற்றுக் கொள்ளுவதற்கு முன் எத்தனை வேதனை எவ்வளவு கண்ணீர், எவ்வளவு புலம்பல் எவ்வளவு
விரக்தியான பேச்சு இதற்கெல்லாம் என்ன காரணம் விசுவாச குறைவு.அப்படி இருந்தும் கூட தேவன் நமக்கு
தருணம் கொடுத்து, நமது விசுவாசத்தை வர்த்திக்கச் செய்து தாம் சொன்னவைகளை நமக்கு கொடுக்கிறார்
அவ்விதமாகவே நம்முடைய எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் தேவன் நிறைவேற்றப் போகிறார்
அது ஜீவ விருட்சம் போல் இருக்கும்.
தேவன் நமக்காக செய்வேன் என்று சொன்னவைகளை
நிறைவேற்றும்வரை அவர் சும்மா இருப்பதும் இல்லை, அதை குறித்து மறந்து போவதுமில்லை
எப்போதும் நமது நினைவாகவே இருக்கிறார்.
நீங்கள் விரும்பினவைகளை காலம்
கடந்து விட்டது என்று நீங்கள் மறந்திருக்கலாம், ஆனால் உங்கள் உள்ளத்தை அறிந்த
தேவன் உங்களுடைய விருப்பத்தை மறக்கவில்லை நீங்கள் விரும்பினதையே கொடுக்கப்
போகிறார். இஸ்ரவேல் ஜனங்களின் பெருமூச்சைக் கேட்டு தனது உடன் படிக்கையை நினைவு
கூர்ந்த தேவன் (யாத் 2:24) உங்களுடைய உள்ளத்தின் ஏக்கத்தை எப்படி மறந்து போவார்?
நீங்கள் விரும்பி
எதிர்பார்த்தவைகளை கர்த்தர் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்க செய்வார்.
செய்வதெல்லாம் வாய்க்கும்
``கர்த்தருக்குச் சித்தமானது அவர்
கையினால் வாய்க்கும்''(ஏசா 53:10). கர்த்தர் நமக்கென்று எவைகளை நியமித்து வைத்திருக்கிறாரோ அவைகள் அவருடைய
கையினாலே வாய்க்கும், அது தாமதித்தாலும் எப்படியும் நிறைவேறும்.
சாலொமோன் ராஜா தேவனுக்கென்று
ஆலயத்தைக் கட்டிமுடித்தவுடன் தேவ சமுகத்திலிருந்து இஸ்ரவேல் சபையாருக்கு
சொல்லுகிறார்``என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால்
நிறைவேற்றினார்'' 2 நாளா 6:4).
நம்முடைய வாழ்க்கையிலும்
தேவனுக்கு சித்தமானபடியெல்லாம் நடக்க வேண்டுமென்று நாம் நம்மை அர்ப்பணித்து
நடக்கும் பொழுது, தேவன் தம்முடைய சித்தத்தின் படியாக எல்லாவற்றையும் நமக்கு நிறைவேற்றிக்
கொடுக்கிறார்.
தேவசித்தத்திற்கு விரோதமாக எந்த
ஒரு தடையும் வரமுடியாது. இஸ்ரவேல் ஜனங்களுடைய வாழ்க்கையில் பார்க்கும்பொழுது தேவன்
தமது சித்தத்தை நிறைவேற்ற இயற்கையிலேயே கை வைக்கிறார். எப்படியெனில் செங்கடல்
இரண்டாக பிளக்கிறது, எரிகோ மதில் உடைக்கப் படுகிறது. அது போல நம்முடைய வாழ்க்கையிலும் தேவைப் பட்டால் எந்த ஒரு அதிசயத்தையும் தேவன்
நொடி பொழுதில் செய்து, நமக்காக செயல்பட ஆரம்பிக்கிறார்.
நாம் தான் மற்றவர்களையே பார்த்து
பார்த்து ``எனக்கு மட்டும் எதுவும் உடனடியாக நடக்கவில்லையே நான் செய்வது மட்டும் வாய்க்கவில்லையே''
என்று கலங்கி
போகிறோம், இன்னும்
ஒரு படிமேலே சென்று புலம்ப ஆரம்பிக்கிறோம் முறு முறுக்கவும் செய்கிறோம். ``நான் தேவனைத் தானே
நம்பியிருக்கிறேன், பின்பு ஏன் நான் செய்வது வாய்க்கவில்லை? என்னுடைய வாழ்க்கையில் மட்டும்
ஏன் எதுவும் நலமாக நடக்க வில்லை'' என்று வேதனைப் படுகிறோம்.
இதே போலதான் எரேமியா தீர்க்க
தரிசியும் ``ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? (எரே12:1) என்று தன் மனவேதனையை வெளிப்படுத்துகிறார் அவருடைய எண்ணமும்
என்ன? நான்
தேவனை அறிந்திருக்கிறேன்,நீதியோடும் நடக்க பிரயாசப் படுகிறேன் ஆனால் எனக்கு மட்டும்
பல விதங்களில் பிரச்சனை, நெருக்கம் ஆனால் தேவனை அறியாதவர்கள், நீதிக்கு தூரமானவர்களாக அநீதி
செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் சுகித்திருக்கிறார்கள்,அவர்கள் செய்வதெல்லாம்
வாய்க்கிறது செழிப்போடு வாழ்கிறார்கள் அது எப்படி? என்று குழப்பத்தோடு கேட்கிறார் .
அவருடைய நிலைமைதான் இன்றைக்கும் நம்மில் அநேகருக்குள்ளாக இருக்கிறது.
நாம் எந்த நிலையிலும்
குழப்பத்திற்கும், கவலைக்கும் இடம் கொடுக்கவே வேண்டாம், ஆகாதவர்களின் வழி வாய்க்கிறது போல இருந்தாலும் அநீதி
என்றுமே ஜெயித்ததில்லை, சத்தியம் என்றுமே தோற்றதுமில்லை.
நம்முடைய தேவன் ``சத்தியம்'' சத்தியமுள்ள தேவனைப் பின்
பற்றும் நாமும் சத்தியவான்களாக, சத்தியத்திற்கு நம்மை அர்பணித்தவர்களாக நம்முடைய
வாழ்க்கையில் செயல்படும்பொழுது,சத்திய தேவனாகிய இயேசு கிறிஸ்து நமக்காக
செயல்படுகிறார்.நாம் செய்யவேண்டியவைகளை எந்த முறு முறுப்பும் வேதனையும் இல்லாமல்
செய்வோம்.
அநீதி நிறைந்த உலகம்
இவ்வுலகத்திலே நீதியோடு வாழமுடியாது என்று நீதிமான்கள் ஒதுங்கிக்கொண்டால்
நீதிக்கும், சத்தியத்திற்கும் சாட்சிகள் யார்? அநீதி செய்கிறவர்களே தைரியமாய் செய்யும்பொழுது,
நீதிசெய்கிற,
சத்தியத்தின்படி
நடக்கிற நம்முடைய தைரியம் எங்கே? தைரியமாய் நாம் நீதியோடும், சத்தியத்தோடும் செயல்பட
ஆரம்பித்தால் நாம் செய்கிறவைகளை இயேசுவானவர் வாய்க்கச் செய்வார். தேவனுடைய ராஜ்யம்
நம் மூலமாய் விரிவடையும்.
நேர்மையாகவும், நீதியாகவும் நமக்கு
கிடைக்கவேண்டிய நன்மைகள் நம்மை தேடிவரும். நம்முடைய கையின் பிரயாசங்கள்
ஆசீர்வதிக்கப்படும். எனவே நீதிக்கும், சத்தியத்திற்கும் பயப்படுவோம். அநீதிக்கும்
அராஜகத்திற்கும் அடக்குமுறைக்கும் பயந்து நாம் சத்தியத்தின்படி வாழாது ஒளிந்து
கொள்ளும் பொழுது தேவன் நம்மூலமாக செயல்படுவதெப்படி? தேவகிருபையுடன் தேவ பெலன் கொண்டு,நாம் செயல்படுவோம்.
கர்த்தர் காரியத்தை வாய்க்கப் பண்ணுவார், நாம் காரியசித்தியுள்ளவர்களாக இருப்போம்.
இதை மற்றவர்கள் பார்க்கும் பொழுது
நம்மோடு இணைந்து கொள்ள நம்மை தேடி வருவார்கள், இதுவரைக்கும் உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் உங்களையே நொந்துகொண்டு, ``நான் ராசியில்லாதவன், ராசியில்லாதவள், நான் செய்கிற எதுவுமே
வாய்க்கவில்லை'' என்று விரக்தியோடு வாழ்ந்து வருகிறீர்களா? கவலைப்படாதிருங்கள் இனி நீங்கள்
செய்யப்போகிறவைகளையெல்லாம் கர்த்தர் வாய்க்கச் செய்து, உங்கள் வாழ்வைமாற்றி உங்களை
உயர்த்தப் போகிறார். கர்த்தருக்கு நன்றி சொல்லி, அவருடைய நாமத்தை உயர்த்துங்கள்.
எதிர்ப்புக்கள் நீங்கும்
காரணமே இல்லாமல் நீங்கள்
மற்றவர்களால் பகைக்கப்பட்டு, எதிர்ப்புகள் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா?
ஒவ்வொருநாளும்
முட்களுக்கு நடுவிலே நான் இருக்கிறேனே என்று மனம் நொந்துகொண்டு இருக்கிறீர்களா?
உங்கள்
வாழ்க்கையில் காணப்படும் எதிர்ப்புக்களை கர்த்தர் நீங்க செய்கிறார். உங்களுக்கு
விரோதமாக எழும்பி பொய்யாய் குற்றம்சாட்டி, உங்களுக்கு எதிர்த்து நிற்கிறவர்களை கர்த்தர் இருந்த
இடம் தெரியாமல் போகசெய்வார்.
உங்கள் குடும்பத்தை
கெடுக்கும்படியாக, குடும்பநபர்களை வைத்தே உங்களுக்கு விரோதமாக தூண்டிவிட்டு, எதிர்த்து நிற்கும்படியாக
செய்து கொண்டிருப்பவர்களை துரத்திவிடுவார். உங்களை இதுவரை புரிந்து கொள்ளாமல் இருந்த உங்கள்
குடும்பத்தினரும், நண்பர்களும், நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்கள் மேல் அதிகாரிகளும் உங்களை நன்றாக
புரிந்து கொள்ளும்படியாக கர்த்தர் செய்வார்.
யாரெல்லாம் உங்களுக்கு விரோதமாக
எதிர்த்து நின்றார்களோ அவர்களை தேவன் சந்திப்பார் ``ஜாதிகள் உன் நீதியையும்,சகல ராஜாக்களும் உன்
மகிமையையும் காண்பார்கள்'' (ஏசா 62:2).எதிர்த்து நின்ற சத்துருக்களையெல்லாம் கர்த்தர் நீங்க
செய்கிறார்.
``உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக்
கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப் படும்படி ஒப்புக்கொடுப்பார்; ``ஒருவழியாய் உனக்கு
எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்''(உபா 28:7). உங்கள் வாழ்க்கையில்
உயர்வுக்கு தடையாகவும். முன்னேற்றத்திற்கு எதிர்ப்பாகவும் இருக்கும் சத்துருக்களை
கர்த்தர் உங்களுக்கு முன்பாக முறிந்து விழும்படியாக ஒப்புக் கொடுப்பார்.
இதுவரை உங்களை விழும்படியாக
செய்து, உங்களைப்
பார்த்து நகைத்தவர்களையும், இனி எழுந்திருக்கவே முடியாது என்று உங்களை வசைபாடிக்
கொண்டிருந்தவர்களையும், உங்களை கண்ணீர் விடவைத்து, கை கொட்டி
சிரித்துக்கொண்டிருந்தவர்களையும் உங்கள் சமீபமாக கர்த்தர் கொண்டுவருவார்.
``உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ
குற்றப் படுத்துவாய்'' (ஏசா 54:17).உங்களுக்கு விரோதமாய் செயல்பட்டவர்கள் சோர்ந்து போவார்கள்,
ஏனெனில் இனி
அவர்கள் உங்களுக்கு விரோதமாய் செய்கிற எதுவும் வாய்க்கப் போவதில்லை உங்களுக்கு
விரோதமாய் போராடி போராடி பார்த்தும் உங்களை ஒன்றுமே செய்ய முடியாது என்று அறிந்து
உங்களை விட்டு ஓடப்போகிறார்கள்.
தேவனால் உயர்த்தப்பட்ட தானியேல்
பிரதானிகளுக்கும், தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாக இருந்தபடியால், தானியேலுக்கு விரோதமாக
ராஜ்யத்தின் விசாரிப்பிலே குற்றப்படுத்தும்படி காரணத்தை தேடியும் ஒரு காரணத்தையும்
கண்டுபிடிக்க அவர்களால் முடியவில்லை (தானி 6:4).
அப்பொழுது அவர்கள் நாம் இந்த
தானியேலை அவனுடைய தேவனைப் பற்றிய வேத விஷயத்திலே குற்றப்படுத்தும் காரணத்தை
கண்டுபிடித்தாலொழிய அவனை வேறோன்றிலும் குற்றப்படுத்த முடியாது என்று அறிந்து (தானி
6:5) தந்திரமாக
அவனைக் குற்றப்படுத்தி சிங்கங்களின் கெபியிலே போடவைத்தார்கள். ஆனால் இயற்கைக்கு
அப்பாற்பட்டு, சிங்கங்கள் தானியேலை ஒன்றும் செய்யாதபடிக்கு சிங்கங்களின் வாயை தேவன் கட்டி
ஒருசேதமும் இல்லாதபடிக்கு காப்பாற்றி அதிசயத்தை செய்தார்.
ஆனால் தானியேலுக்கு விரோதமாக
எதிர்த்து நின்றவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் கூட சேர்த்து சிங்ககெபியிலே
போடப்பட்டார்கள் ``சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்
போட்டது'' (தானி 6:24).தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக
எதிர்த்து நிற்பவர்கள் வெகு காலங்கள் அப்படி இருக்க முடியாது. தேவன் எதிர்ப்பை
நீக்குகிறவர் மட்டுமல்ல, எதிர்க்கிறவர்களையே இல்லாமல் செய்து விடுவார்.
இதுவரை நீங்கள் உங்கள்
வாழ்க்கையில் எதிர்ப்புக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கலாம் ``எனக்கு விரோதமாக
இருக்கும் இந்த எதிர்ப்புகள் எல்லாம் எப்போது நீங்கும்'' என்று வேதனையோடு
எதிர்பார்த்திருந்திருக்கலாம், நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உங்கள் செயலுக்கு தேவன்
பதில் கொடுத்து எல்லா எதிர்ப்புகளையும் நீக்கி உங்களை ஆசீர்வதிப்பார்.
நீங்கள் எதிர்பார்த்திருந்து வெகு
நாட்களாய் காத்திருந்து விரும்பினவைகளை வாய்க்கச் செய்து, எதிர்ப்புகளை கர்த்தர்
நீக்குவார். இவ்வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் நிறைவேற முழுவதுமாக விசுவாசித்து,
அர்ப்பணித்து
ஜெபியுங்கள் கர்த்தர் உங்களோடிருப்பார்.
0 comments:
Post a Comment